சாலையில் நான்கு நாட்கள் கழித்து 750 கிலோமீட்டர் தூரத்தை கடந்து, டெம்போஸ் மற்றும் ஜீப்புகளின் கூண்டுவண்டி, ராஜஸ்தானின் கோட்டாவில் உள்ள ஒரு குருத்வாராவில் மதிய உணவிற்காக நிறுத்தப்பட்டுள்ளது. டிசம்பர் 24ம் தேதியன்று மதியம் குளிர்ச்சியாக இருக்கிறது. பயணிகள் - மகாராஷ்டிராவைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் - இரவு நேர பயணத்திற்குப் பிறகு சோர்வாக இருக்கின்றனர். ஆனால், அவர்கள் குருத்வாராவின் சமுதாய சமையலறையின் உணவுக்காகக் காத்திருக்கும்போது, சவிதா குஞ்சலின் பாடல்கள் அவர்களின் மனநிலையை உற்சாகப்படுத்துக்கின்றது. கம்கார் ச்யா கஷ்டனா நடவ்லா ஜகலா, ஜீவன் நஹி பொட்டாலா, கப்டா நஹி நேசெய்லா ('தொழிலாளர்களின் உழைப்பு உலகை அழகாக ஆக்குகிறது, ஆனால் அவர்களுக்கு சாப்பிட ரொட்டியும் இல்லை’; அணிய ஆடைகளும் இல்லை).
“நான் இங்கு பாட வந்திருக்கிறேன்”, அடர் சிவப்பு சட்டை மற்றும் நீல நிற ஜீன்ஸ் உடையணிந்த 16 வயதான பில் ஆதிவாசி பாடகர் கூறுகிறார். "விவசாயிகளுக்கு அவர்களின் உரிமைகள் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த விரும்புகிறேன். எங்கள் நிலை குறித்து நான் உலகுக்கு சொல்ல விரும்புகிறேன், ”என்கிறார் நாசிக் மாவட்டம் சந்த்வாட் தாலுகாவில் உள்ள சந்த்வாட் கிராமத்தைச் சேர்ந்த சவிதா. டெல்லியின் எல்லையில் நடக்கும் போராட்டங்களில் சேர அவர் டிசம்பர் 21ம் தேதி விவசாயிகளின் வாகனமான ’ஜாதா’வில் நாசிக்கிலிருந்து புறப்பட்டார். மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக லட்சக்கணக்கான விவசாயிகள் போராட்டம் நடந்தி வருகின்றனர், முதலில் 2020ம் ஆண்டு ஜூன் 5 ஆம் தேதி அவசர சட்டமாக நிறைவேற்றப்பட்டு, பின்னர் செப்டம்பர் 14ம் தேதி நாடாளுமன்றத்தில் வேளாண் மசோதாக்களாக அறிமுகப்படுத்தப்பட்டு, அம்மாதம் 20 ஆம் தேதிக்குள் சட்டங்களாக மாறியன.
தனது கிராமத்தில், சவிதா வார இறுதி நாட்களிலும், விடுமுறை நாட்களிலும் விவசாயத் தொழிலாளியாக வேலை செய்கிறார், நாள் ஒன்றுக்கு 150-200 ரூபாய் சம்பாதிக்கிறார். "வேலை இருந்தால் நான் வயலுக்கு செல்ல வேண்டும்," என்று அவர் கூறுகிறார். கோவிட் -19 ஊரடங்கின் போது, அவர் சந்த்வாட்டில் உள்ள விவசாய நிலங்களில் வேலை செய்வதில் அதிக நேரத்தை செலவிட்டார். “ஊரடங்கு காலத்தில் மிகவும் குறைந்த வேலையே இருந்தது. என்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு வேலைகளை எடுத்துக்கொண்டு, முடிந்த அளவு சம்பாதித்தேன்,”என்று அவர் கூறுகிறார். அவர் இந்த ஆண்டு (2020) உயர்நிலைப் பள்ளியை முடித்தார், ஆனால், தொற்றுக்காலம் காரணமாக கல்லூரிப்படிப்பைத் தொடங்க முடியவில்லை.




