டிசம்பர் 2020ல் வாரத்தின் ஒரு நாளின் நான்கு மணி நேரங்களை, உத்தரப்பிரதேசம் மற்றும் தில்லி எல்லையில் இருக்கும் காசிப்பூரில் போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு உணவு சமைக்கவென சுரேந்திர குமார் ஒதுக்குகிறார். மெல்ல எட்டு மணி நேரங்களுக்கு அந்த நேர அளவு உயர்ந்தது. தற்போது சுரேந்திரா 12 மணி நேரம் போராட்டக்காரர்களுக்கு உணவு சமைக்கிறார்.
மேற்கு உத்தரப்பிரதேசத்திலிருந்து காசிப்பூர் போராட்டத்தில் கலந்து கொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதை சுட்டிக்காட்டி, “ஒவ்வொரு நாளும் இந்தளவுக்கு நான் சமைக்க வேண்டியிருக்கும்,” என்கிறார் 58 வயது சுரேந்திரா.
சுரேந்திரா, முசாஃபர் நகர் மாவட்டத்தின் ஷாவோரான் கிராமத்தில் இனிப்புக் கடை வைத்திருக்கிறார். “இங்கு (கிராமத்தில்) உணவு சமைத்து ட்ராக்டர்களிலும் கார்களிலும் எல்லைக்கு அனுப்புகிறோம்,” என்கிறார் அவர். வாரத்துக்கு ஒருமுறை கிராமத்துவாசிகள் காசிப்பூருக்கு உணவு அனுப்புகின்றனர்.
“ஆரம்பத்தில் மேற்கு உத்தரப்பிரதேசத்தின் விவசாயிகள் அதிக எண்ணிக்கையில் இல்லை. எனவே என் கடையை நான் பார்த்துக் கொள்ள முடிந்தது. ஒவ்வொரு வாரமும் சில மணி நேரங்கள் மட்டும் சமைத்தேன். ஆனால் ஒவ்வொரு நாளும் கடக்க கடக்க எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது,” என்கிறார் சுரேந்திரா.
நவம்பர் 26, 2020 அன்று தில்லியின் எல்லைகளில் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து தொடங்கிய விவசாயப் போராட்டங்கள், மூன்று முக்கியப் பகுதிகளில் நடக்கின்றன. அவற்றில் ஒன்று காசிப்பூர். ஷாவோரனிலிருந்து 95 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. பாரதிய கிசான் சங்கத் தலைவர் ராகேஷ் திகெய்த்தின் கோரிக்கையை ஏற்று, ஜனவரி மாத பிற்பகுதியிலிருந்து நிறைய மேற்கு உத்தரப்பிரதேச விவசாயிகள் போராட்டக் களத்துக்கு வரத் தொடங்கினர்.









