பச்சை முதலை பாணியிlல் மேல்சட்டையும், அடர்த்தியான கம்பளி காலுறையும் அணிந்த ஹர்ஃபதே சிங், ராஜஸ்தான்-ஹரியானா எல்லையில், ஒரு பெரிய உருண்டையான பாத்திரத்தில் இருந்து பச்சை பட்டாணியை உரிக்க தனது தந்தைக்கு உதவ முயற்சிக்கிறார். டெல்லி-ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் ராஜஸ்தானின் ஆல்வார் மாவட்டத்திலுள்ள ஷாஜகான்பூரில் 18 மாதம் நிரம்பிய அவன், நிச்சயமாக இளம் போராட்டக்காரர்களில் ஒருவரே. விவசாயிகளின் போராட்டத்தில் ஹர்ஃபதேவின் பங்களிப்பு காய்கறிகளை உரிப்பதுதான்; முயற்சிப்பது என்றும் வைத்துக்கொள்ளலாம். அவனால் அதைச் சரியாகவோ திறமையாகவோ செய்ய முடியாமல் போகலாம், ஆனால் அது ஆர்வமின்மை அல்லது தான் முயற்சி செய்ய விரும்பவில்லை என்ற அர்த்தமில்லை.
டெல்லி மற்றும் ஹரியானாவின் வெவ்வேறு எல்லைகளில், பல மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்திற்கு அழிவு ஏற்படுத்தும் மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி திரண்டுள்ளனர். ஜூன் 5 ஆம் தேதி முதன்முதலில் அவசரச் சட்டமாக வெளியிடப்பட்ட இந்த சட்டங்கள் செப்டம்பர் 14ஆம் தேதி அன்று நாடாளுமன்றத்தில் மசோதாக்களாக அறிமுகப்படுத்தப்பட்டன. மேலும், அந்த மாதம் 20ஆம் தேதிக்குள் சட்டங்களாக மாறின.
டிசம்பர் 25ம் தேதியன்று, நான் ஹர்ஃபதேவைச் சந்தித்தபோது, மகாராஷ்டிராவைச் சேர்ந்த சுமார் ஆயிரம் விவசாயிகள் ஷாஜகான்பூரில் உள்ள போராட்ட இடத்தில், பஞ்சாப், ஹரியானா மற்றும் ராஜஸ்தானில் இருந்து பல விவசாயிகளுடன் ஒற்றுமையுடன் சேர்ந்துள்ளனர். இந்த விவசாயிகளும் விவசாயத் தொழிலாளர்களும் நாசிக்கிலிருந்து 1,200 கிலோமீட்டர் தூரத்திற்கு டெம்போக்கள், ஜீப் மற்றும் மினிவேன் போன்ற வாகனங்களில் பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் சகாக்களுடன் பல போராட்டத் தளங்களில் சேர இருந்தனர்.
மகாராஷ்டிரா விவசாயிகளை வரவேற்கும் குடும்பங்களில் ஹர்ஃபதேவின் குடும்பத்தினரும் இருந்தனர் - கிட்டத்தட்ட நூறு பேருக்கு உருளைக்கிழங்கு பட்டாணி மசாலா (ஒரு உருளைக்கிழங்கு மற்றும் பட்டாணி கொண்டு செய்யப்படும் உணவு) தயாரிக்கும் பணி அவர்களுக்கு இருந்தது. "எங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக மிகுந்த குளிர்காலத்தில் நாங்கள் இங்கு இருக்கிறோம். நாங்கள், விவசாயிகள் இன்று எதிர்ப்பு தெரிவிக்காவிட்டால், ஃபதேவுக்கு எதிர்காலம் இருக்காது ”, என்று குழந்தையின் 41 வயதான தந்தை ஜாக்ரூப் சிங் கூறுகிறார். அவர் ஹரியானாவின் குருக்ஷேத்ரா மாவட்டத்தில் உள்ள சாஜுபூர் கிராமத்தைச் சேர்ந்தவர்.




