போலீசார் மிக மோசமாக லத்தியில் அடிக்காமல் இருந்திருந்தால், உத்ரபிரதேசத்தின் பாக்பட் மாவட்டத்தில் போராடி வந்த விவசாயிகள் ஜனவரி 27ம் தேதி தங்கள் போராட்ட களத்தில் இருந்து விலகியிருக்க மாட்டார்கள். “40 நாட்களாக போராட்டம் தொடர்ந்து நடந்துகொண்டிருந்தது“ என்று பிரிஜ்பால் சிங் கூறுகிறார். அவர் போராட்டம் நடந்த பராவுட் நகரைச் சேர்ந்த 52 வயதான கரும்பு விவசாயி.
“அது சாலைமறியல் போன்ற போராட்டம் கூட இல்லை, எங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்ட நாங்கள் அமைதியாக போராடிக்கொண்டிருந்தோம். ஜனவரி 27ம் தேதி இரவு, திடீரென போலீசார் எங்கள் மீது தாக்குதல் நடத்த துவங்கினர். எங்கள் கூடாரங்களை கிழித்து, எங்களின் பாத்திரங்கள் மற்றும் துணிமணிகளை எடுத்துக்கொண்டனர். அவர்கள் முதியவர்கள், குழந்தைகள் என்றும் பாராமல் அனைத்தையும் செய்தனர்“ என்று பிரிஜ்பால் மேலும் கூறினார். அவருக்கு பாரவுட்டில் சொந்தமாக 5 ஏக்கர் நிலம் உள்ளது.
அன்று இரவு வரை, மாவட்டம் முழுதிலிருந்தும் வந்திருந்த 200க்கும் மேற்பட்ட விவசாயிகள், புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து பாக்பட்- ஷஹாரன்பூரில் உள்ள பாரவுட்டில், போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். மத்திய அரசு கடந்தாண்டு செப்டம்பர் மாதம், அறிமுகப்படுத்திய புதிய வேளாண் திருத்த சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதிலும் போராட்டத்தில் ஈடுபட்ட லட்சக்கணக்கான விவசாயிகளுள் இவர்களும் அடங்குவர்.
பாக்பட் மற்றும் உத்ரபிரதேசத்தின் மேற்கு பகுதிகளிலிருந்து வந்திருந்த விவசாயிகள், விவசாயிகளுக்கான தங்களது ஆதரவை தெரிவித்து அமைதி போராட்டத்தில் ஈடுபட்டனர். புதிய வேளாண் திருத்த சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி, கடந்தாண்டு நவம்பர் 26ம் தேதி முதல் டெல்லியின் எல்லைகளில் போராடி வரும் விவசாயிகளுக்கு குறிப்பாக பஞ்சாப் – ஹரியானா விவசாயிகளுக்கு தங்களின் ஆதரவை தெரிவித்து இங்கு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
“எங்களுக்கு அச்சுறுத்தும் தொலைபேசி அழைப்புகள் வந்தது“ என்று பிரிஜ்பால் கூறுகிறார். அவர், பாக்பட் மண்டலத்தில் உள்ள தோமர் குலத்தில் உள்ள அனைத்து ஆண் கூட்டமைப்பின் உள்ளூர் தலைவர். “மாவட்ட நிர்வாகம் எங்களின் வயல் முழுவதிலும் தண்ணீர் நிரப்புவதாக அச்சுறுத்தியது. அதற்கு நாங்கள் அஞ்சாதபோது, நாங்கள் தூங்கிக்கொண்டிருந்த இரவு வேளையில் எங்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். நாங்கள் எதிர்பாராதவிதமாக மாட்டிக்கொண்டோம்“ என்று அவர் கூறுகிறார்.




