கோதுமை பயிர்களுக்கு நீர்பாய்ச்சும் நேரம் வந்துவிட்டது. தனது நிலத்தின் முக்கியமான இத்தருணத்தை சபரன் சிங் தவறவிட விரும்பவில்லை. எனவே அவர் ஹரியானா - டெல்லி எல்லையில் உள்ள சிங்குவிலிருந்து டிசம்பர் முதல் வாரம் பஞ்சாபில் உள்ள தனது கிராமத்திற்குத் திரும்பினார்.
நவம்பர் 26 தொடங்கி அங்கேயே பிடிவாதமாக தங்கியிருந்தவர், போராட்ட களத்தை விட்டு நிரந்தரமாக வெளியேற தயாராக இல்லை. 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கந்த் கிராமத்தில் 12 ஏக்கர் விளைநிலத்திலிருந்து சில நாட்களில் மீண்டும் அவர் சிங்குவிற்குத் திரும்பினார். “நான் மட்டும் இப்படி செய்யவில்லை,” என்கிறார் இந்த 70 வயது விவசாயி. “இங்கு பலரும் சுழற்சி முறையில் போராட்டக் களத்திற்கும், தங்கள் கிராமத்திற்கும் சென்று வருகின்றனர்.”
சிங்குவில் தங்களின் வலுவான எண்ணிக்கையை காட்டுவதற்காகவே இந்த சுழற்சி முறையை விவசாயிகள் வகுத்துள்ளனர், அதேசமயம் தங்கள் நிலத்தின் வெள்ளாமை வீடு வந்து சேர்வதிலும் மெத்தனம் காட்டவில்லை.
“கோதுமைப் பயிர்களை பயிரிடுவதற்கு இதுவே உகந்த நேரம்,” என்று நவம்பர்-டிசம்பர் மாதங்களை குறிப்பிட்டு சொல்கிறார் சபரன். “நான் கிளம்பிச் சென்றபோது எங்கள் கிராமத்தின் சில நண்பர்கள் எனக்குப் பதிலாக சிங்குவில் இருந்தனர்.”
போராளிகள் பலரும் இந்த சுழற்சி முறையைப் பின்பற்றி வருகின்றனர். “பலரிடமும் நான்கு சக்கர வண்டிகள் உள்ளன,” என்று சொல்லும் சபரன் முன்னாள் இராணுவ வீரர். “இங்கிருந்து எங்கள் கிராமத்திற்குச் செல்வதும், வருவதுமாக இருக்கிறோம். ஆனால் கார்கள் காலியாக இருப்பதில்லை. கிராமத்திற்கு நான்கு பேர் திரும்பினால் அங்கிருந்து அதே காரில் வேறு நான்கு பேர் வருகின்றனர்.”







