“குறைந்தபட்ச ஆதரவு விலை கிடையாது, வேளாண் விளைபொருள் சந்தை அங்காடிகளும் படிப்படியாக மூடப்படும்“ என்று கர்நாடகாவின் சிவமோகாவைச் சேர்ந்த விவசாயி டி.மல்லிகார்ஜீனப்பா கலக்கத்துடன் கூறினார்.
மல்லிகார்ஜீனப்பா (61), அவரது கிராமமான ஹீலுங்கினகொப்பா கிராமத்தில் இருந்து விவசாயிகளின் குடியரசு தினவிழா டிராக்டர் பேரணியில் கலந்துகொள்வதற்காக ஜனவரி 25ம் தேதி பெங்களூருவுக்கு வந்திருந்தார். அவர், ஷிகார்பூர் தாலுகாவில் இருந்து 350 கிலோ மீட்டர் தொலைவு பயணம் செய்து வந்திருந்தார். “மத்திய அரசு பெரு நிறுவனங்களுக்கு ஆதரவளிப்பதை விட, வேளாண் விளைபொருள் சந்தை கமிஷன்களை சீரமைத்தாலே விவசாயிகளுக்கு சரியான விலை கிடைக்கும்“ என்று அவர் கூறினார்.
புதிய வேளாண் சட்டங்கள் அவரது கவலைகளை மேலும் கூட்டிவிட்டன. அவர்கள் குறைந்தபட்ச ஆதரவு விலையை குறைத்து, வேளாண் விளைபொருள் சந்தை கமிஷனை மூடிவிடுவார்கள். அதுதான் வேளாண் விளைபொருள்களின் முதலுக்கு உறுதியளித்து வந்தது.
தனது 12 ஏக்கர் நிலத்தில், 3 முதல் 4 ஏக்கரில் மல்லிகார்ஜீனப்பா, நெல் பயிரிடுவார். எஞ்சிய நிலத்தில் பாக்கு சாகுபடி செய்வார். “பாக்கு சாகுபடி கடந்தாண்டு மிகவும் மோசமாக இருந்தது. அதிகளவில் நெல்லும் கிடைக்கவில்லை“ என்று அவர் கூறினார். “ நான் ரூ.12 லட்சம் கடனை திருப்பிச்செலுத்த வேண்டும். மாநில அரசு கடன் தள்ளுபடி செய்வதாக கூறியது. ஆனால், வங்கியிலிருந்து எனக்கு இன்னும் கடனை திருப்பி செலுத்தக்கூறும் அறிவிப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. அவை அபராதம் குறித்து எச்சரிக்கின்றன. இதையெல்லாம் எண்ணி எனக்கு வருத்தமாக உள்ளது“ என்று குரலில் கோபம் கூட சொல்கிறார்.
மல்லிகார்ஜீனப்பா போன்ற தொலைதூர மாவட்டங்களில் இருந்து வரும் விவசாயிகள், பெங்களுருவு பேரணிக்கு முதல் நாளே வந்திருந்தனர். ஆனால், மண்டியா, ராம்நகரா, டும்கூர் போன்ற மற்ற அருகில் உள்ள மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள், பெங்களூர் நகரை, டிராக்டர், கார் மற்றும் பஸ்களில் ஜனவரி 26ம் தேதி காலை 9 மணிக்கு வந்தடைந்தனர். டெல்லியின் எல்லைகளில் நடக்கும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, அவர்கள் மத்திய பெங்களுருவின் காந்தி நகரில் உள்ள சுதந்திர பூங்காவை மதியவேளையில் அடைந்தார்கள். தலைநகரில் நடைபெறும் குடியரசு தின விழா பேரணிக்கு, மூன்று வேளாண் புதிய சட்டங்களையும் எதிர்த்து, நவம்பர் 26ம் தேதி முதல் போராடி வரும் விவசாயிகள் ஏற்பாடு செய்திருந்தார்கள்.







