“போராட்டக்காரர்கள் ஒரு சாலையை மறித்தாலோ அதற்கு பாதிப்பு ஏற்படுத்தினாலோ குற்றவாளிகள் என முத்திரை குத்தப்படுகின்றனர். அதையே அரசு செய்தால் என்ன செய்வது? அதே முத்திரையை அவர்களுக்கும் கொடுக்கலாம் இல்லையா?” என கேட்கிறார் 70 வயது ஹரிந்தர் சிங் லகா. பஞ்சாபின் மெஹ்னா கிராமத்தை சேர்ந்த விவசாயி அவர்.
பஞ்சாப் விவசாயிகளின் பேரணி தில்லிக்குள் நுழைவதை தடுக்க அதிகாரிகள் தோண்டிய பத்தடி குழிகளைத்தான் லக்கா குறிப்பிடுகிறார். 1 லட்சத்துக்கும் மேலான பஞ்சாப் விவசாயிகள் உத்தரப்பிரதேசம் மற்றும் ஹரியானா விவசாயிகளுடன் சேர்ந்து நாட்டின் தலைநகருக்குள் நுழையும் உரிமைக்காக காவல்துறை மற்றும் பிற அதிகாரங்களுடன் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
மூன்று நாட்கள் தொடர் போராட்டத்துக்கு பிறகு தில்லி காவல்துறை ஒருவ்ழியாய் விவசாயிகளின் நுழைவுக்கு இசைவளித்தும் கூட, ஹரியானா அரசு மாநில எல்லைகள் போராட்டக்காரர்கள் கடப்பதை இன்னும் தடுத்துக் கொண்டிருக்கிறது. தலைநகருக்குள் நுழைய பெயரளவுக்குதான் அனுமதி கொடுக்கப்பட்டது. களத்தில் மத்திய அரசு விவசாயிகள் தில்லி நுழைவதை கடினமாக ஆக்கிக் கொண்டிருக்கிறது. மறுக்கப்படும் அனுமதி, குழிகள், முள்வேலிகள், காவல்தடுப்புகள் எல்லாவற்றையும் தாண்டி விவசாயிகள் அங்கேயேதான் இருக்கிறார்கள். கண்ணீர் புகைக் குண்டுகளும் தண்ணீர் பீய்ச்சும் வாகனங்களும் அழிவின் தடத்தை அங்கு விட்டுச் சென்றிருக்கிறது.
செப்டம்பர் மாதத்தில் மத்திய அரசு மூன்று வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. விவசாயப் பொருட்களுக்கான சந்தை கமிட்டிக்கு தொடர்பான சட்டம், விவசாயிகளுக்கு உதவிய மண்டி முறையை அழிக்கும் என்கின்றனர் விவசாயிகள். குறைந்தபட்ச ஆதார விலை அமைப்பையும் அது அழித்துவிடும். பெரிய நிறுவனங்களும் பன்னாட்டு நிறுவனங்களும் விலையை தீர்மானிக்கும் நிலையை உருவாக்கும். இந்த விஷயம் விவசாயிகளுக்கு தெரியும். மற்ற இரண்டு சட்டங்களும் குறைந்தபட்ச ஆதார விலையை கட்டாயமாக்கவில்லை. மேலும் சுவாமிநாதன் (தேசிய விவசாயிகள் ஆணையம்) அறிக்கைகளை குறிப்பிடக் கூட இல்லை. ஒப்பந்தங்களை பற்றி பேசும் விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் தனியார் வணிகர்களுக்கும் பெருநிறுவனங்களுக்கும் ஏதுவாக உருவாக்கப்பட்டிருக்கிறது. மேலும் அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் பெருநிறுவனங்களுக்கு வாய்ப்புகள் வழங்குகிறது. பதுக்கலை ஊக்குவிக்கிறது. விலை பேசும் உரிமையை விவசாயிகளிடமிருந்து பறிக்கிறது.
போராட்டக்காரர்கள் இந்த மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும் என்கின்றனர்.








