பீப்பள்ஸ் ஆர்கைவ் ஆப் ரூரல் இந்தியாவிற்கு (PARI) இன்று வயது ஏழு. தொற்றுக்காலத்திலும் அதன் ஊரடங்குகளிலும் நாங்கள் பிழைத்திருந்ததோடு மட்டுமல்லாமல், எங்களது மிகச் சிறந்த படைப்புகளையும் தந்திருக்கிறோம்.
கடந்த வருட ஊரடங்கின் முதல் நாளிலேயே, அச்சு மற்றும் தொலைகாட்சி உள்ளிட்ட ஊடகங்களை, அத்தியாவசியச் சேவை என இந்திய அரசு அறிவித்தது. அது நல்ல விஷயம். இதழியல் மற்றும் ஊடகவியலாளர் தேவை, இந்திய மக்களுக்கு இந்தளவுக்கு முன்பு இருந்திருக்காது. மக்களின் வாழ்க்கைகள் மற்றும் வாழ்வாதாரங்கள் பற்றிய ஏராளமானச் செய்திகள் சொல்லப்படக் காத்திருந்தன. ஆனால் நாட்டின் பெரும் ஊடக நிறுவனங்களின் எதிர்வினை என்ன? 2,000லிருந்து 2,500 பத்திரிகையாளர்களையும் 10,000க்கும் மேலான ஊடகத் தொழிலாளர்களையும் பணிநீக்கம் செய்தன.
முக்கியமான செய்திகளை அவர்கள் எப்படி சொல்லப் போகிறார்கள்? சிறந்த செய்தியாளர்களைப் பணி நீக்கம் செய்தா? பணிநீக்கம் செய்யப்படாத பிற செய்தியாளர்களின் ஊதியம் 40லிருந்து 60 சதவிகிதம் வெட்டப்பட்டது. செய்தியாளர்கள் பயணிப்பது தடுக்கப்பட்டது. ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் எச்சரிக்கையுணர்வால் அல்ல, செலவுகளை கட்டுப்படுத்தும் விருப்பத்தால்தான் தடுக்கப்பட்டது. மார்ச் 25, 2020-க்கு இரண்டு வாரங்களுக்குப் பிறகு அப்படி வெளியான செய்திகளும் நகரங்களையும் சிறுநகரங்களையுமே அடிப்படையாகக் கொண்டிருந்தன.
ஏப்ரல் 2020க்குப் பிறகு PARI 11 பேரை கூடுதலாக பணிக்கு அமர்த்தியது. ஒரு பைசா கூட ஊதியத்தில் வெட்டப்படவில்லை. ஆகஸ்டு 2020-ல் கிட்டத்தட்ட எல்லா ஊழியர்களுக்கும் பதவி உயர்வுகளையும் ஊதிய உயர்வுகளையும் கொடுத்திருக்கிறது.
பிற வகை எழுத்துகள் வெளிவந்து கொண்டிருந்தபோதும் தொற்று தொடங்கியதிலிருந்து கிட்டத்தட்ட 270 (பெரும்பாலும் பல்லூடக) கட்டுரைகளையும் முக்கிய ஆவணங்களையும் ஊரடங்கு கால வாழ்க்கைகள் என்கிற அடிப்படையில் PARI பதிப்பித்தது. நாட்டின் எல்லாப் பிரதான பகுதிகளிலும் புலம்பெயர் தொழிலாளர்கள் திரும்பிய கிராமங்களிலிருந்தும் நாட்டின் 23 மாநிலங்களிலிருந்தும் இச்செய்திகளை, ஊரடங்கு காலத்தில் கிடைத்த போக்குவரத்துகளை பயன்படுத்தி நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்கள் பயணித்து நம் செய்தியாளர்கள் சேகரித்தனர். இந்தச் செய்திகளில் 65 வெவ்வேறு செய்தியாளர்களின் பெயர்களை நீங்கள் காண முடியும். புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றிய செய்திகளை PARI தொற்றுக்கு முன்பிருந்தே பல ஆண்டுகளாக எழுதி வருகிறது. எனவே அவர்களை மார்ச் 25, 2020ம் ஆண்டு புதிதாக கண்டுபிடிக்க வேண்டிய தேவை எங்களுக்கு இல்லை.
வாசகர்களுக்குத் தெரியும். தெரியாத பிறர், PARI-யை ஒரு இதழியல் தளமாகவும், சுவாசித்து உயிர்வாழும் ஒரு ஆவணக் காப்பகமாகவும் புரிந்துக் கொள்ளலாம். கிராமங்கள் பற்றியக் கட்டுரைகள், செய்திகள், அறிக்கைகள், நாட்டுப்புற இசை, பாடல்கள், புகைப்படங்கள் மற்றும் படங்கள் ஆகியவற்றைக் கொண்ட பெரும் களஞ்சியம் நாங்கள். உலகின் பெரிய கிராம வாழ்க்கைத் தகவல் களஞ்சியங்களில் PARI-யும் ஒன்று. அன்றாட மனிதர்களின் அன்றாட வாழ்க்கைகளைச் செய்திகளாகத் தருவதே PARI-ன் இதழியல். 83 கோடியே 30 லட்சத்து கிராமப்புற இந்தியர்களின் வாழ்க்கைகளை அவர்களின் அனுபவங்கள் மற்றும் குரல்களின் ஊடாக சொல்கிறோம்.










