“டெல்லியின் எல்லையை அவர்கள் மூடினார்கள்,” என்கிறார் புட்டர் சாரிங் கிராமத்தின் பிட்டு மலன். “இப்போது பஞ்சாப் கிராமங்களின் கதவுகள் அவர்களை நுழைய விடாமல் மூடப்பட்டிருக்கின்றன.”
ஸ்ரீ முக்சார் சாஹிப் மாவட்டத்தின் மலன் கிராமத்தில் ஐந்து ஏக்கர் நிலத்தை கொண்ட விவசாயி, பிட்டு மலன். ‘அவர்கள்’ என அவர் குறிப்பிடுவது ஒன்றியத்தில் ஆளும் பாஜக கட்சியை. பஞ்சாபின் தேர்தலில் தனியாக போட்டி போடுகிறது அக்கட்சி.’நாங்கள்’ என குறிப்பிடுவது, டெல்லி நோக்கி நவம்பர் 2020-ல் பேரணி செல்ல அனுமதி மறுக்கப்பட்ட லட்சக்கணக்கான விவசாயிகளை.
விவசாயப் போராட்டம், தேசியத் தலைநகரின் எல்லையில் அமைக்கப்பட்ட தளங்கள் பற்றிய நினைவுகள் பஞ்சாபில் நிறைந்திருக்கிறது. இம்மாநிலத்தின் லட்சக்கணக்கான விவசாயிகள், மூன்று கோடைக்காலங்களுக்கு முன்பு, எதிர்ப்பும் நம்பிக்கையும் நிறைந்த பேரணியைத் தொடங்கினர். பல நூறு மைல்கள் ட்ராக்டர்களிலும் ட்ரெயிலர்களிலும் பயணித்து அவர்கள் தலைநகரில் குவிந்தது ஒரு கோரிக்கைக்காகத்தான். அவர்களின் வாழ்வாதாரங்களை அச்சுறுத்திய மூன்று வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்பட வேண்டுமென்பதே அக்கோரிக்கை.
டெல்லியின் எல்லையை அடைந்ததும், அவர்களது கோரிக்கைகளின்பால் அரசாங்கம் எழுப்பியிருந்த பெரும் அலட்சியத்தை எதிர்கொண்டனர். கிட்டத்தட்ட ஒரு வருடம், அவர்களின் இரவுகள் தனிமையாலும் அநீதியின் வெப்பத்தாலும் நிறைந்திருந்ததாக அவர்கள் கூறுகின்றனர். தெர்மாமீட்டரில் பதிவான அளவு ஒரு பொருட்டாக அவர்களுக்கு இருக்கவில்லை. இரும்பு ட்ரெயிலர் வாகனங்களே அவர்களின் வசிப்பிடங்களாக மாறின.
358 நாட்களின் ஓட்டத்தில், 700 விவசாயிகள் உயிரிழந்த நிலையில் அனைவரும் பஞ்சாபுக்கு திரும்பினர். ஒவ்வொருவரும் அப்போராட்ட நினைவுக்கான சாட்சியாக இருந்தனர். ஆனால் போராட்டம் தோல்வியடைந்து விடவில்லை. அவர்களின் தியாகமும் பெரியளவிலான போராட்டமும், ஒரு வருடத்துக்கு பிறகு அரசாங்கத்தை அடிபணிய வைத்தது. நவம்பர் 19, 2021 அன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதாக அறிவித்தார் பிரதமர்.
இப்போது பஞ்சாபுக்கு பதிலடி கொடுக்கும் நேரம். பிட்டு மலனும் அவரைப் போன்ற பல விவசாயிகளும் டெல்லியில் பெற்ற அனுபவத்தை திரும்பக் கொடுக்கும் மனநிலையில் இருக்கின்றனர். உயிரிழந்த ஒவ்வொரு விவசாயிக்குமான நியாயத்தை கேட்க வேண்டும் என்பதை கடமையாகக் கருதிய பிட்டு, ஏப்ரல் 23-ம் தேதி அன்று, புட்டார் சாரின் கிராமத்துக்கு வாக்கு சேகரிக்க வந்த பாஜக வேட்பாளர் ஹன்ஸ் ராஜ் ஹன்ஸை தைரியமாக எதிர்க்கொண்டார்.







