தமிழ்ச் சினிமாவில் சூப்பர் ஸ்டார் அறிமுகமாவது போல இருந்தது அந்தக் காட்சி. அதற்கு ஐந்து நிமிடம் முன்பு, காட்சியில் இருந்த ஆறு ஆண்களும், பலாப்பழ வணிகத்தின் சிரமங்களைச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். பலாப்பழத்தின் அதிக எடை, அதைத் தூக்கி வண்டியிலேற்றி அனுப்புவதில் உள்ள சிரமங்கள், வணிகத்தில் உள்ள ஆபத்துகள் இவற்றையெல்லாம் சொல்லி, இந்த வணிகத்தில் பெண்கள் வரவே முடியாது என அடித்துச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.. அப்போதுதான் லக்ஷ்மி கடைக்குள் நுழைந்தார். மஞ்சள் நிறத்தில் சேலை கட்டியிருந்தார். காதிலும் மூக்கிலும் தங்கம் டாலடித்தது. நரைத்த கூந்தலை வாரியள்ளி பண் கொண்டை போட்டிருந்தார்
`இந்த வியாபாரத்தில இந்தம்மாதான் முக்கியப் புள்ளி`, என்றார் ஒரு விவசாயி மிக்க மரியாதையுடன்.’
` எங்க பலாப்பழத்துக்கு இவங்கதான் வெலை வைப்பாங்க`.
65 வயதான லக்ஷ்மி, பண்ருட்டி பலாப்பழ வணிகத்தின் ஒரே பெண் வியாபாரி. இந்திய வேளாண் வணிகத்தின் மிக மூத்த பெண் வணிகர்களுள் ஒருவர்.
தமிழகத்தின் பண்ருட்டி நகரம், பலாப்பழ வணிகத்துக்குப் பெயர் பெற்றது. பலாப்பழ சீசனில், நூற்றுக்கணக்கான டன்கள் பலாப்பழம் இங்கே வாங்கி விற்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், 22 கடைகள் கொண்ட பண்ருட்டி சந்தையில், ஆயிரக்கணக்கான கிலோ பலாப்பழங்களுக்கான விலையை முடிவு செய்பவர் லக்ஷ்மி. இந்தச் சேவைக்கு, ரூபாய் 1000த்துக்கு 50 என லக்ஷ்மிக்கு வாங்குபரிடம் இருந்து தரகு கிடைக்கிறது. பலாப்பழ உற்பத்தியாளர்கள் அவர்கள் விருப்பப்படி ஒரு சிறு தொகை தருகிறார்கள். பலாப்பழ சீசனில், தினசரி 1000-2000 வரை சம்பாதிக்கிறார் லக்ஷ்மி.
இந்தப் பணத்தை ஈட்ட அவர் 12 மணிநேரம் உழைக்கிறார். அவரது நாள் அதிகாலை 1 மணிக்குத் தொடங்குகிறது. `சரக்கு நெறய வந்துருச்சின்னா, வியாபாரிங்க வீட்டுக்கே வந்து கூட்டிட்டு வந்துருவாங்க`, என விளக்குகிறார். இல்லையெனில், அதிகாலை 3 மணி வாக்கில் ஒரு ஆட்டோ பிடித்து சந்தையை அடைவார் லக்ஷ்மி. மதியம் 1 மணி வரை வேலை இருக்கும்.. அதன் பின் வீட்டுக்குச் சென்று மதிய உணவு சாப்பிட்டுவிட்டு, ஓய்வெடுப்பார். மீண்டும் அடுத்த நாள் அதிகாலை அவரது பயணம் தொடங்கும்..
`எனக்கு பலாப்பழ உற்பத்தி பத்தி பெரிசா எதுவும் தெரியாது` என்கிறார் லக்ஷ்மி தன் கரகரத்த குரலில். பல மணி நேரங்கள் சந்தையில் விலை நிர்ணயம், வணிகம் என உரத்துப் பேசிப்பேசி அவர் குரல் கரகரத்துப் போயிருக்கிறது. இந்த வணிகத்தில் கடந்த 30 ஆண்டுகளாக இருக்கிறார். அதற்கு முன்பு 20 வருடங்கள், பயணிகள் ரயிலில் பலாச்சுளைகள் விற்றுவந்தார்.
பலாப்பழத்துடனான அவரது வாழ்க்கைப் பயணம் அவரது 12 ஆவது வயதில் தொடங்கியது. தாவணி கட்டிய இளம்பெண்ணாக, பலாப்பழங்களை நீராவி ரயில் எஞ்சின்கள் இழுத்துச் செல்லும் பயணிகள் ரயிலில் எடுத்துச் சென்று, விற்கத் தொடங்கிய அவர் இன்று, 65 வயதில், `லக்ஷ்மி விலாஸ்`, எனப் பெயரிடப்பட்ட தன் சொந்த வீட்டில் வசிக்கிறார்.
*****
பலாப்பழ சீசன் ஜனவரி / ஃபிப்ரவரியில் தொடங்கி அடுத்த ஆறுமாதம் வரை நீடிக்கிறது. 2021 ஆம் ஆண்டு மிக அதீதமாகவும், காலம் தவறியும் பெய்த வடகிழக்குப் பருவமழையின் காரணமாக, பலாப்பழ சீசன் 8 வாரங்கள் தள்ளிப் போனது. ஏப்ரல் மாதத்தில்தான் பழங்கள் பண்ருட்டி மண்டிகளுக்கு வரத் தொடங்கின. ஆகஸ்டு மாதத்தில் சீசன் முடிந்து விட்டது.
பலா மேற்குத் தொடர்ச்சி மலையில் தோன்றிய ஒரு மரம். ஜாக் என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்தச் சொல்லின் வேர், ` சக்க `, என்னும் மலையாளச் சொல்லாகும். இதன் அறிவியற் பெயர் வாயில் எளிதாக நுழையாது – ஆர்ட்டோகார்ப்பஸ் ஹெடிரோஃபைலஸ்.
2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், பலாப்பழ வணிகர்களையும், வணிகர்களையும், `பரி`, யின் சார்பில் சந்திக்க பண்ருட்டி சென்றிருந்தோம். பலாப்பழ உற்பத்தியாளரும், வணிகருமான 40 வயதான ஆர்.விஜயக்குமார், நம்மை அவரது கடைக்கு வரவேற்றார். கெட்டியான மண் தரையும், ஓலைக்கூரையுமாக, அவரது கடை மிகவும் எளிமையானதாக இருந்தது. வாடகை வருடம் 50 ஆயிரம் ரூபாய். ஒரு பெஞ்சும், சில சேர்களுமே அங்கிருந்த ஆடம்பரப் பொருட்கள்.
என்றோ நிகழ்ந்து முடிந்திருந்த கொண்டாட்டத்தின் எச்சமாக சரங்கள் தொங்கிக் கொண்டிருந்தன. மாலையிடப்பட்ட விஜயகுமாரின் தந்தையின் புகைப்படம் தொங்கிக் கொண்டிருந்தது. ஒருபுரத்தில் மேசையும் கடை நிறையப் பலாப்பழங்களும் இருந்தன. வாயிலில் இருந்த பலாப்பழக் குவியலில் மொத்தம் 100 பழங்கள் இருந்தன. அவை பார்ப்பதற்கு, பசுமையான குன்று போலக் காட்சியளித்தன.
`இதோட மதிப்பு 25 ஆயிரம்`, என்கிறார் விஜயக்குமார். இதற்கு முந்தைய குவியலில் 60 பழங்கள் இருந்தன. சென்னை அடையாறுக்குப் பயணப்பட வேண்டிய அந்தக் குவியல் கிட்டத்தட்ட 18 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
பலாப்பழங்கள், 185 கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் சென்னைக்கு, செய்தித்தாள் கொண்டுவரும் வேன்களில் அனுப்பப்படுகின்றன. `அதுக்கும் வடக்கே கொண்டு போகனும்னா, டாட்டா ட்ரக்குல அனுப்புவோம்.. சீஸன்ல நாள் முழுக்க வேல இருக்கும்.. காலைல 3-4 மணிக்கு ஆரம்பிச்சா, நைட் பத்துமணி வரைக்கும்`, என்கிறார் விஜயக்குமார். `இதுக்கு நல்ல டிமாண்ட் இருக்கு.. எல்லோரும் சாப்பிடுவாங்க.. சக்கர வியாதிக்காரங்க கூட நாலு சுளை சாப்பிடுவாங்க.. என்ன.. எங்களுக்குத்தான் சாப்பிட்டு, சாப்பிட்டு அலுத்துப் போச்சு!`, எனச் சிரிக்கிறார் விஜயக்குமார்.
பண்ருட்டியில், 22 மொத்த வணிகக்கடைகள் உள்ளன.. விஜயக்குமாரின் தந்தை, இதே இடத்தில் 25 வருஷமாகத் தொழில் செய்துவந்தார். விஜயக்குமார், கடந்த 15 வருஷங்களாகத் தொழில் செய்து வருகிறார். சராசரியாக, ஒரு கடை தினசரி 10 டன்கள் வரை பலாப்பழ வணிகம் செய்கிறது.. `மொத்தத் தமிழ்நாட்டிலேயே, பண்ருட்டி வட்டாரத்துலதான் பலாப்பழம் ஜாஸ்தி`, என்கிறார் விஜயக்குமார். அவரது கடை பெஞ்சில் அமர்ந்து, வணிகர்களுக்காகக் காத்திருக்கும் உற்பத்தியாளர்களும், தலையை ஆட்டி, அதை ஆமோதித்து, உரையாடலில் கலந்து கொள்கிறார்கள்.
சுற்றியுள்ள ஆண்கள் அனைவருமே லுங்கி அல்லது வேஷ்டி அணிந்திருக்கிறார்கள். உரத்த குரலில் பேசுகிறார்கள்.. அவர்களது மொபைல் ஃபோன்களில் ரிங்டோன்கள் அதைவிடச் சத்தமாக இருக்கின்றன.. சாலையில் செல்லும் வாகனங்களின் சத்தம் இரண்டையும் விடப் பலமாக இருக்கிறது.. அவ்வாகனங்களின் ஹாரன் சத்தம் வேறு காதுகளைத் துளைக்கிறது
47 வயதான கே.பட்டுசாமி, பலாப்பழ உற்பத்தி அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார். பண்ருட்டி தாலூக்கா, காட்டாண்டிக் குப்பம் கிராமத்தைச் சேர்ந்த அவருக்கு 50 பலா மரங்கள் உள்ளன. கூடுதலாக 600 மரங்களைக் குத்தகைக்கு எடுத்திருக்கிறார். 100 மரங்களுக்கு 1.25 லட்சம் குத்தகை என்பது தற்போதைய குத்தகை ரேட். `25 வருஷமா இந்தத் தொழில்ல இருக்கேன்..இதுல ரொம்பப் பிரச்சினைகள், ஆபத்துகள் இருக்கு`, என்கிறார்.
நெறயப் பழங்கள் இருந்தாலும், `10 அழுகிப்போகும், 10 பொளந்துக்கும், 10 கீழே விழுந்துரும்.. இன்னும் பத்த ஏதாவது மிருகம் சாப்பிட்டுட்டுப் போயிரும்`, என விளக்குகிறார்.
அதீதமாகப் பழுத்த பழங்கள, எருமை மாட்டுக்குத் திங்கத்தான் குடுக்க வேண்டியிருக்கும்.. எப்படியும், 5-10% பழங்கள் வீணாயிப் போயிரும். ஒவ்வொரு கடைக்கும், சீஸன்ல, 1-1.5 டன் பழம் வேஸ்டாகும். அதெல்லாம் மாடுகள் திங்கத்தான் லாயக்கு என்கிறார்கள் உற்பத்தியாளர்கள்.
மாடுகளைப் போல, பலா மரங்களையும் உற்பத்தியாளர்கள் ஒரு முதலீடாகத்தான் பார்க்கிறார்கள். வயது ஆக ஆக, பலாமரங்களின் மதிப்பு கூடுகிறது. நல்ல விலை கிடைக்கையில், விற்றுவிடுகிறார்கள். `8 கை அகலமும், 7-9 அடி உயரமும் இருக்கற பலாமரத்தோட, டிம்பர் மட்டுமே 50 ஆயிரம் வரை விலை போகும்`, என்கிறார்கள் விஜயக்குமாரும், அவரது நண்பர்களும்.
`முடிஞ்ச அளவுக்கு மரத்த வெட்டாமத்தான் விவசாயி பாத்துக்குவார்.. நெறய மரம் இருந்தாத்தானே நல்லது.. ஆனால், திடீர்னு பண முடைன்னுன் வந்துருச்சுன்னா, வீட்ல யாருக்காவது ஒடம்பு சரியில்ல.. இல்ல வீட்ல குழந்தைகளுக்குக் கல்யாணம்னு வந்துருச்சுன்னா, இருக்கறதுல பெரிய மரமாப் பாத்து, டிம்பருக்கு வெட்டி விட்ருவோம்`, என்கிறார் பட்டுசாமி. வித்த, விவசாயிக்கு ஒன்னு ரெண்டு லட்சம் பணம் கிடைக்கும்.. அத வச்சு செலவைச் சமாளிச்சுக்க முடியும்.
`இங்க வாங்க`. எனப் பட்டுசாமி நம்மைப் பலாப்பழக்கடைக்கு பின்புறம் அழைத்துச் செல்கிறார்.. `இங்கே 10-12 பெரிய பலா மரங்கள் இருந்துச்சு`, என நம்மிடம் சொல்கிறார்.. நாம் பார்க்கையில், அங்கே மிகச் சிறிய பலா மரங்களே இருந்தன.. பெரிய மரங்களை வெட்டி விற்ற பின்னர், விவசாயி அதே இடத்தில் மீண்டும் பலாக்கன்றுகளை நட்டிருக்கிறார். அந்தக் கன்றுகளைச் சுட்டி, `இத வெச்சி ரெண்டு வருஷமாச்சி.. இன்னும் 2-3 வருஷம் ஆனாத்தான் காய்க்க ஆரம்பிக்கும்`, என்கிறார் நம்மிடம்
`ஒவ்வொரு வருஷமும், மொதல்ல வர்ற காய்கள, குரங்குகள் தின்னுரும்.. அனில்களுக்கும் பலாப்பழம் பிடிக்கும்`
பலாப்பழக் குத்தகைங்கறது எல்லாருக்கும் பொருத்தமான ஒரு ஏற்பாடு என்கிறார் பட்டுசாமி.. `விவசாயிக்கு மொத்தமாப் பணம் கெடைச்சிருது.. அங்கொண்ணும், இங்கொண்ணுமா காய்க்கற பழத்தை அறுவடை பண்ண ஓட வேண்டாம்.. குத்தகைக்காரரா எனக்கு, ஒரே சமயத்துல பல மரங்கள்ல இருந்தது 100-200 காய் கிடைச்சிரும்.. ஒரு வண்டியப் புடிச்சு, மண்டிக்குக் கொண்டு வந்துர முடியும்`. `நல்ல படியா மழ பேஞ்சு, நல்ல படியாக் காய்புடிச்சா எல்லோருக்கும் நல்லதுதான்..`.
துரதிருஷ்டவசமாக, அவையெல்லாமே நன்றாக நடந்தாலும், விவசாயிக்குப் பல சமயம் நல்ல விலை கிடைப்பதில்லை. அப்படிக் கிடைப்பதாக இருந்தால், சந்தையில் விலை வேறுபாடுகளே இருக்காது.. எடுத்துக்காட்டாக, 2022 ஆம் ஆண்டு, பலாப்பழ விலை டன்னுக்கும் 10 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை ஊசலாடியது.
`விலை அதிகமாக இருக்கறப்ப, நெறயப்பணம் கிடைக்கற மாதிரி இருக்கும்;, என்கிறார் விஜயக்குமார், தன் மேசை ட்ராயரைச் சுட்டியபடி. வாங்குபவர், விற்பவர் என இருவரிடம் இருந்தும், தலா 5% கமிஷனாக விஜயக்குமாருக்குக் கிடைக்கிறது.. `ஆனா, ஒரு வியாபாரி ஏமாத்திட்டான்னாக் கூடப் போச்சு.. நாமதான் கைக்காசப் போட்டு விவசாயிக்குக் குடுக்கனும்.. நமக்கும் இதுல பொறுப்பு இருக்கில்ல?`.
அண்மையில், (ஏப்ரல், 20022) பலாப்பழ உற்பத்தியாளர்கள் இணைந்து ஒரு சங்கம் (கமிட்டி) தொடங்கியுள்ளார்கள். விஜயக்குமார்தான் அதன் செயலாளர். `பத்து நாள்தான் ஆச்சு.. இன்னும் பதிவு செய்யலே`, என்கிறார். அதன் மீது பெரும் நம்பிக்கையை வைத்திருக்கிறார்கள். `பலாப்பழத்துக்கான சரியான விலையை நிர்ணயம் பண்ணனும். கலெக்டரப் பாத்து, விவசாயிகளுக்கு உதவிகள் வேணும்னு கேக்கப்போறோம்.. உற்பத்தியாளர்களுக்கு மானியம், குளிர்சாதனக் கிடங்கு வசதி முதலியவை வேணும். விவசாயிகள் ஒன்னு சேந்தாத்தான இதையெல்லாம் அரசாங்கத்துகிட்ட கேக்க முடியும்? இல்லையா?`.
தற்போதைக்கு, பலாப்பழத்தை ஐந்து நாட்கள் வரை கெடாமால் வைத்திருக்க முடியும்.. `இன்னும் கொஞ்ச நாள் கெடாம வச்சிக்க வழிகளக் கண்டுபிடிக்க வேண்டும்`, என்கிறார் லக்ஷ்மி நம்பிக்கையுடன்.. ஆறுமாசம் வரை வச்சிருக்க முடிஞ்சா அருமையாக இருக்கும் என லக்ஷ்மி நினைக்கிறார்.. மூணு மாசம் வரைக்கும் வச்சிருக்க முடிந்தாலே நல்லா இருக்கும் என்பது விஜயக்குமாரின் கருத்து. `ஒரு நாள்ல விக்க முடியலன்னா, மொத்த வியாபாரிங்க என்ன விலை சொல்றாங்களோ அதுக்கு வித்துடறாங்க.. இல்லன்னா, ரோட்ல இருக்கற சில்லறை வியாபரிகளுக்கு வித்துட்டுப் போற நெலமைதான் இருக்கு`.
*****
`பலாப்பழத்துக்குக் குளிர்பதனக் கிடங்கு என்பது இப்போதைக்கு ஒரு ஐடியா மட்டும்தான்.. உருளைக்கிழங்கு, ஆப்பிள் மாதிரி ஐட்டத்தையெல்லாம் குளிர்பதனக் கிடங்குல நீண்ட நாட்கள் வச்சிருக்கலாம். ஆனா, இதுவரை, யாரும் பலாப்பழத்தைக் குளிர்பதனக் கிடங்குல வச்சிருந்ததாத் தெரியல.. பலாப்பழச் சிப்ஸ் வேணாப் பண்ணலாம்.. அதுவும், சீஸன் முடிஞ்சு ரெண்டு மாசம் கழிச்சுத் தான் கிடைக்கும்`, என்கிறார் ஸ்ரீபத்ரே என்னும் பத்திரிக்கையாளர். இவர், அடிகே பத்ரிகே என்னும் பாக்கு தொடர்பான கன்னடப் பத்திரிக்கையின் ஆசிரியர்.
`வருஷம் முழுக்க பலாப்பழத்தில் செஞ்ச பொருட்கள் கிடைக்கற மாதிரி இருந்தா, இந்த பிசினஸ்ஸே மொத்தமா மாறிடும்`, என்கிறார் மேலும்.
தொலைபேசி வழியே பத்திரிக்கையாசிரியர் பத்ரே, பலாப்பழ உற்பத்தியின் பல முக்கியான புள்ளிகளை நம்மிடம் பகிர்ந்து கொண்டார். அவர் வாதங்களில் முதன்மையானது, பலாப்பழம் பற்றிய புள்ளி விவரங்கள் நம்மிடம் இல்லை என்பது. `பலாப்பழம் பற்றிய புள்ளி விவரங்கள் கிடைப்பது மிகவும் கஷ்டம். இருக்கும் புள்ளி விவரங்கள் நம்மைக் குழப்பி விடும். பத்து வருடங்கள் முன்பு வரைகூட, இந்தப் பழத்தைப் பற்றி யாரும் கண்டுகொள்ளவில்லை. பண்ருட்டி மட்டும் பெரும் விதிவிலக்கு`.
இந்தியாதான் உலகின் மிகப் பெரும் பலாப்பழ உற்பத்தியாளர்.. பலாப்பழம் பல இடங்களில் உள்ளது. ஆனால், அது பற்றிய தரவுகள் ஒன்று திரட்டப்படாமல், உலகுக்கு இது பற்றிய தகவல்கள் தெரியாமல் உள்ளது.. இந்தியாவில், கேரளா, கர்நாடகா, மஹராஷ்ட்ரா மாநிலங்கள், பலாப்பழ மதிப்புக்கூட்டல் நடவடிகைகளை மேற்கொள்கின்றன.. ஆனால், இன்னுமே அவையெல்லாம் சிறுதொழிலாகத்தான் இருக்கிறது`.
இது அவமானகரமான விஷயம் என்னும் பத்ரே, பலாப்பழம் என்பது ஒரு பன்முகப்பயன் தரும் பழம் என்கிறார். `இது பற்றி இதுவரை சரியாக ஆராய்ச்சிகள் செய்யப்பட்டதில்லை. ஒரு பெரும் மரம், 1-3 டன் வரை காய்களை உற்பத்தி செய்யும். இதில் மொத்தம் 5 பொருட்கள் உருவாகின்றன. பிஞ்சுப் பலா.. கொஞ்சம் முற்றி, சமையலில் பயன்படுத்தப்படும் இளம் பலா.. மூன்றாவது பப்படமும், சிப்ஸும் செய்யப்பயன்படும் முற்றாத பலா, நான்காவது பழுத்த பலாச் சுளை.. ஐந்தாவது அதன் கொட்டை.
`இதை ஒரு சூப்பர் உணவு என அழைக்கிறார்கள்.. அதிலொன்றும் வியப்பில்லை.. ஆனாலும் கூட, இந்தப் பயிருக்கென ஒரு ஆராய்ச்சி நிறுவனமோ, பயிற்சிப்பள்ளிகளோ இல்லை.. வாழை மற்றும் உருளைக்கிழங்குப் பயிர்களுக்கென இருப்பது போன்ற தனித்துவமான விஞ்ஞானிகளும், ஆலோசகர்களும் இல்லை`, என்கிறார் பத்ரே
பலாப்பழ ஆர்வலராக, மேற்சொன்ன `இல்லாமைகளை`, க் குறைக்க பத்ரே பல முயற்சிகளை எடுத்துவருகிறார். `பலாப்பழத்தைப் பற்றி, அதை வளர்ப்பவர்களைப் பற்றிய செய்திகளை கடந்த 15 வருடங்களாக எழுதி வருகிறேன்.. எங்கள் பத்திரிக்கை வந்துள்ள 34 ஆண்டுகளில், 34 க்கும் அதிகமாக பலாப்பழம் பற்றிய கவர் ஸ்டோரிகளை வெளியிட்டுள்ளோம்`, என்கிறார் பத்ரே
பத்ரே பலாப்பழம் தொடர்பான பல நேர்நிலைச் செய்திகளைச் (ருசியான பலாப்பழ ஐஸ்க்ரீம் உள்பட) சொன்னாலும், பிரச்சினைகளையும் மறைக்காமல் சொல்கிறார். `இந்தத் துறை வெற்றி பெற வேண்டுமானால், பலாப்பழங்களைச் சேமித்து வைக்கும் குளிர்பதன முறையை உருவாக்க வேண்டும். பழுத்த பலாப்பழத்தை உறைநிலைக்குக் கொண்டு சென்று, அது வருடம் முழுவதும் கிடைக்கும் வழி செய்ய வேண்டும். இது ஒன்றும் ராக்கெட் விஞ்ஞானமல்ல.. ஆனால், நாம் இன்னும் அது பற்றி யோசிக்கவே தொடங்கவில்லை`, என்கிறார் பத்ரே.
பலாப்பழத்துக்கு என தனித்துவமான பிரச்சினை ஒன்று உண்டு. பழத்தை வெளியில் இருந்தது பார்த்து அதன் தரத்தைக் கணிக்க முடியாது. பண்ருட்டி சந்தையுடன் தொடர்பு கொண்ட ஒரு வணிக நகரமாதலால், இங்கே, பலாப்பழம் மிகக் கவனமாக அறுவடை செய்யப்படுகிறது. மற்ற இடங்களில், பலாப்பழத்துக்கென நல்ல சந்தை உருவாகாமல் இருப்பதாலும், சந்தைத் தொடர்புகள் இல்லாமல் இருப்பதாலும், பழங்கள் வீணாகிப் போகின்றன
`பலாப்பழம் வீணாகிப் போவதைத் தடுக்க நாம் என்ன செய்திருக்கிறோம்? அதுவும் உணவுதானே? அரிசி, கோதுமைக்கு மட்டும் ஏன் இவ்வளவு முக்கியத்துவம் அளிக்கப் படுகிறது`, எனக் கேள்விகளை அடுக்குகிறார் பத்ரே
`பலாப்பழ வியாபாரம் நல்ல வரணும்னா, பலாப்பழம் இந்தியா முழுக்கப் போகணும்.. விளம்பரப்படுத்தப்படனும்.. அப்பதான், அதுக்கு நல்ல டிமாண்ட் உருவாகி, நல்ல விலை கிடைக்கும்`, என்கிறார் விஜயக்குமார்.
சென்னை கோயம்பேட்டில் அமைந்திருக்கும் அண்ணா பேரங்காடியில் இருக்கும் பலாப்பழ வணிகர்களும் இதைத்தான் சொல்கிறார்கள். குளிர்பதன வசதி கொண்ட சேமிப்புக் கிடங்கு. இங்குள்ள வணிகர்களின் பிரதிநிதியான சி.ஆர்.குமரவேல், பலாப்பழத்தின் விலை தாறுமாறாக மாறும் என்கிறார்.. ரூபாய் 100 முதல் 400 வரை.
‘இங்கே கோயம்பேடு மார்க்கெட்ல பலாப்பழத்தை ஏலம் விடும் போது, நிறைய பழ வரத்து இருந்துச்சுன்னா, விலை இறங்கிடும்.. இங்கியும் 5-10% வரைப் பழங்கள் வீணாகிப் போகுது.. பழங்கள் சேதம் ஆகாம வைக்க சேமிப்புக் கிடங்குகள் இருந்தா, அதில் வச்சிருந்து மெல்ல மெல்ல விக்கலாம். அப்ப நல்ல ரேட் கிடைக்கும்`, என்கிறார் குமரவேல். `வருஷத்தில 5 மாசம் சீஸன்.. அப்ப இங்கிருக்க 10 கடைகள்ல, தினமும் சராசரியா 50 ஆயிரம் வரைக்கும் வியாபாரம் ஆகும்`, என்கிறார் மேலும்
தமிழ்நாடு அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலன் மேம்பாட்டுத்துறையின் 2022-23 ஆம் ஆண்டுக்கான கொள்கை அறிக்கை, பலாப்ப்ழ உற்பத்தியாளர்களுக்குக் கொஞ்சம் நம்பிக்கையூட்டுவதாக உள்ளது. `பலாப்பழத்துக்கென, பண்ருட்டி தாலூக்காவில் உள்ள பணிக்கன் குப்பம் கிராமத்தில் ஒரு தனித்துவமான மையம் அமைக்கப்படும்`, என அரசின் திட்டக் குறிப்பு கூறுகிறது. பலாப்பழ உற்பத்தி மற்றும் பதப்படுத்துதல் தொடர்பான வாய்ப்புகளை உருவாக்கி மேம்படுத்தும் இம்முயற்சிக்கு அரசு 5 கோடி ரூபாய் நிதியையும் ஒதுக்கி உள்ளது.
இந்தத் திட்டக் குறிப்பு மேலும், `பண்ருட்டி பலாப்பழத்து`க்கான புவிசார் குறியீட்டைப் பெறுவது பற்றியும் பேசுகிறது. அது பலாப்பழத்துக்கான விற்பனை மதிப்பைக் கூட்டும் எனவும் சொல்லப்படுகிறது.
பண்ருட்டி எங்கே இருக்குன்னே நெறயப் பேருக்குத் தெரியறதில்லை என ஆச்சர்யப்படுகிறார் லக்ஷ்மி.. 2002 ஆம் வருஷம் வந்த, `சொல்ல மறந்த கதை`,சினிமாவுக்கு அப்புறம்தான், பண்ருட்டி பேரு ஃபேமஸா ஆச்சு.. டைரக்டர் தங்கர் பச்சான் இந்த ஊருக்காரர்தான்.. நானும் அந்தப் படத்தில வந்திருக்கேன்`, என்கிறார் பெருமையாக.. `படம் புடிக்கறப்போ ரொம்போ வெயிலு.. ஆனாலும் ஜாலியா இருந்துச்சு`, என்கிறார்
*****
சீஸனின் போது, லக்ஷ்மிக்கு பெரும் டிமாண்ட் இருக்கும்.. பலாப்பழப் ப்ரியர்கள் அவரோட நெம்பரை ஸ்பீட் டயலில் வைத்திருக்கிறார்கள்.. லக்ஷ்மி அவர்களுக்கு நல்ல பலாப்பழத்தை வாங்கித்தருவார் என்பது அவர்களுக்குத் தெரியும்.
அது லக்ஷ்மியால் முடிகிற காரியம்தான்.. பண்ருட்டியில் இருக்கும் 20 மண்டிகளுடனும், பல பலாப்பழ உற்பத்தியாளர்களுடனும் நெருங்கிய தொடர்பில் இருப்பவர் அவர். எந்த உற்பத்தியாளரின் பழம் எப்போது அறுவடைக்குத் தயராகிவரும் என்பது வரை அவருக்குத் தெரியும்
இவ்வளவையும் அவர் எப்படி கண்காணிக்கிறார்? அவர் பதில் சொல்லவில்லை.. இத்தனை தசாப்தங்களாக அவர் இந்தத் தொழிலில் இருக்கிறார். தெரியும். அவ்வளவுதான்!
ஆண்கள் மட்டுமே இருக்கும் இந்தத் தொழிலில், அவர்கள் மேலாதிக்கத்தை எப்படிச் சமாளிக்கிறார்? இந்த முறை பதில் சொல்கிறார். `உங்கள மாதிரி இருக்கறவங்க, அவங்களுக்கு பழம் வாங்கித்தரச் சொல்றாங்க. நான், அவங்களுக்கு பழங்கள நல்ல விலைக்கு வாங்கித் தர்றேன்`. வியாபாரிகளையும் தேடிப் பிடிச்சித் தர்றேன் என்றும் மேலும் விளக்குகிறார். வியாபாரிகளும், உற்பத்தியாளர்களும், லக்ஷ்மியின் முடிவுகளை பெரிதும் மதிக்கிறார்கள். லக்ஷ்மிக்கு அங்கே பெரும் வரவேற்பு, மரியாதையும் உள்ளது.
லக்ஷ்மி வசிக்கும் பகுதியில் யாரைக் கேட்டாலும், லக்ஷ்மியின் வீட்டைக் காட்டுவார்கள். `நான் செய்யறது சில்லறை வியாபாரம்தான். மத்தவங்க கொண்டு வர்ற பலாப்பழத்துக்கு சரியான விலையைத் தீர்மானிச்சுச் சொல்றேன். அவ்ளவுதான்`, என்கிறார்.
பலாப்பழத்துக்கான விலையைத் தீர்மானம் செய்ய, மண்டிக்குள் வரும் ஒவ்வொரு பலாப்பழ வண்டியின் பழங்களின் தரத்தைச் சோதித்த பின்னரே, அவற்றுக்கான விலைகளை நிர்ணயம் செய்கிறார் லக்ஷ்மி. இதற்கு அவருக்குத் தேவை ஒரு கத்தி மட்டுமே.. அக்கத்தியால் பழத்தை சில தட்டுக்கள் தட்டி, காயா, பழமா.. எது அடுத்த நாள் வெட்டி சாப்பிடச் சரியாக இருக்கும் என்பதைக் கண்டுபிடித்துச் சொல்லிவிடுகிறார். சந்தேகமிருந்தால், கத்தியால் ஒரு சிறு துளை செய்து, பழத்தினுள்ளிருந்து ஒரு சுளையை எடுத்துப் பார்த்துக் கணித்துவிடுகிறார்ர். பழம் பழுத்திருக்கிறதா என்பதைக் கண்டுபிடிக்க இதுவே பிழையில்லாத வழி என்றாலும், மிக அரிதாகவே லக்ஷ்மி பழத்தைத் துளையிடுகிறார்.
`போன வருஷம் 120 ரூபாய்க்குப் போன ஸைஸ் பழத்துக்கு இன்னிக்கு விலை 250 ரூபாய்.. இந்த வாட்டி, மழையினால பயிர் சேதமாகிட்டதாலே விலை அதிகமாயிருச்சு`. இன்னும் 1-2 மாசத்துல, பலாப்பழ வரத்து அதிகமாயிரும்.. ஒவ்வொரு கடைக்கும் 15 டன் அளவுக்கு பழம் வந்துச்சுன்னா, விலை இறங்கும் என்கிறார் லக்ஷ்மி.
தான் பலாப்பழ வியாபாரம் செய்ய வந்த காலத்திலிருந்து இன்னிக்கு வரை வியாபாரம் ரொம்ப வளர்ந்திருச்சு என்கிறார் லக்ஷ்மி. பலாப்பழ உற்பத்தி அதிகமாகி, வியாபாரமும் அதிகமாயிருச்சு என்கிறார் மேலும். உற்பத்தியாளர்கள் பெரும்பாலும், ஒரே கமிஷன் ஏஜெண்டிடம் தான் தங்கள் பழங்களை விற்பனைக்குக் கொண்டு வருகிறார்கள். இது வணிகர் மீதான நம்பிக்கை என்றாலும், வணிகர்கள் உற்பத்தியாளர்களுக்குக் கொடுக்கும் கடனும் முக்கியமான காரணம். உற்பத்தியாளர்கள் 10 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை கடன் வாங்குகிறார்கள். அக்கடனை, பலாப்பழ விற்பனையில் கிடைக்கும் தொகையில் கழித்துக் கொள்வார்கள் என விளக்குகிறார் லக்ஷ்மி.
`நிறையப் பலாமரங்கள் வைத்திருக்கும் விவசாயிகள், பழமாக விற்காமல், மதிப்புக் கூட்டி விற்கும் வழிகளில் ஈடுபடுகிறார்கள்.. பலாப்பழத்தில், சிப்ஸ், ஜாம் போன்ற பொருட்களை உற்பத்தி செய்கிறார்கள். மேலும் பழுக்காத பலாக்காய் சமைக்கவும் உபயோகப்படுகிறது. அது கறி போலச் சுவையாக இருக்கும்`, என மேலும் விளக்குகிறார் லக்ஷ்மியின் மகன் ரகுநாத்.
`சில இடங்கள்ல தொழிற்சாலைகளில், பலாச்சுளைகளைகளை உலர வைத்துப் பொடியாக்குகிறார்கள்.. அந்தப் பொடியில் இருந்து சுவையான கஞ்சி காய்ச்ச முடியும்.. ஆனால், அதெல்லாம் இன்னும் பெரிசாப் பிரபலமாகல.. ஆனா, வருங்காலத்துல அது ஆகும்னு தொழிற்சாலை வச்சிருக்கவுங்க சொல்றாங்க`, என்கிறார் ரகுநாத் மேலும்.
பண்ருட்டியில் அவர் கட்டியுள்ள வீடு, பலாப்பழ வணிகத்தில் வந்த வருமானத்தை மட்டுமே வைத்துக் கட்டப்பட்டது.
`இருவது வருஷம் ஆச்சி;, என்கிறார் வீட்டின் தரையைத் தட்டி. ஆனா, வீடு கட்டி முடிப்பதற்கு முன்பேயே அவர் கணவர் இறந்து விட்டார். லக்ஷ்மி தன் கணவரை, பண்ருட்டியில் இருந்து கடலூர் ரயிலில் சென்று பலாப்பழம் விற்ற காலத்தில் சந்தித்தார். அப்போது அவர் டீக்கடை வைத்திருந்தார்.
அவரது திருமணம் காதல் திருமணம்.. அவரது கணவர் மீது லக்ஷ்மி வைத்திருக்கும் காதல் இன்னும் உயிர்ப்போடு இருக்கிறது. பண்ருட்டியின் ஓவியர் ஒருவருக்கு ரூபாய் 7 ஆயிரம் கொடுத்து வரைந்து வாங்கிய அவரது கணவரின் ஓவியமே அதற்குச் சாட்சி. லக்ஷ்மியும் அவர் கணவரும் இருக்கும் இன்னொரு ஓவியத்திற்கு ரூபாய் 6 ஆயிரம் கொடுத்திருக்கிறார். என்னிடம் அவர் பல கதைகள் சொல்கிறார். கரகரப்பான குரலில் மேலும் பல கதைகளை உற்சாகமாகச் சொல்கிறார். அவரது நாயைப் பற்றிய கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது.. `அது ரொம்ப புத்திசாலி.. என் மேல ரொம்பப் பிரியம்.. எப்பவும் அது நெனைப்பாகவே இருக்கும்`, என்கிறார்.
மதியம் மணி 2 ஆகிறது. ஆனால், லக்ஷ்மி இன்னும் மதிய உணவை உண்டிருக்கவில்லை.. `இதோ சாப்பிடறேன்`, என்கிறார். ஆனால், பேசிக் கொண்டே இருக்கிறார். பலாபழ சீஸனில் அவருக்கு வீட்டு வேலைகளைச் செய்ய நேரம் கிடைப்பதில்லை.. அவரது மருமகள் கயல்விழி வீட்டு வேலைகளைக் கவனித்துக் கொள்கிறார்.
இருவரும் எனக்கு, பலாப்பழத்தை வைத்து என்னவெல்லாம் சமைக்கலாம் என எனக்குச் சொல்லித்தருகிறார்கள்.. `பலாக்கொட்டய வச்சி உப்புமா செய்யலாம்.. பழுக்காத பலாச்சுளையை மஞ்சளோடு சேர்த்து வேகவைத்து, அம்மியில் அரைத்து, கொஞ்சம் உளுத்தம் பருப்பையும், துருவின தேங்காயையும் சேத்து, என்ணையில வதக்கி, மிளகாப்பொடி சேத்து சாப்பிலாம்.. பலாக்கொட்டையை வச்சி சாம்பார் செய்யலாம்.. பலாக்காய வச்சி பிரியாணி செய்யலாம்.. பலாப்பழத்த வச்சி எந்த ஐட்டம் செஞ்சாலும், அருமையா, ருசியா இருக்கும்`, என்கிறார் லக்ஷ்மி.
லக்ஷ்மிக்கு சாப்பாட்டின் மீது பெரிய ஆர்வமில்லை.. டீக்குடித்தோ அல்லது அருகிலுள்ள கடையிலோ சாப்பிட்டோ சமாளித்துக் கொள்கிறார். `கொஞ்சம் பிரஷரும், சுகரும் இருக்கு.. அதனால நேரத்துக்குச் சாப்பிட்டுக்கணும்.. இல்லனா, தல சுத்திரும்`, என்கிறார். அன்று காலையில் தலை சுற்றல் காரணமாக, வணிகர் விஜயக்குமாரின் கடையில் இருந்தது சீக்கிரம் கிளம்பி விட்டார். நீண்ட நேரம் வேலை செய்வதோ, இரவில் சீக்கிரம் எழுந்து கொள்ள வேண்டியிருப்பதோ அவரைத் தொந்தரவு செய்வதில்லை.. `அதெல்லாம் பிரச்சினையில்லை`, என்கிறார்.
30 ஆண்டுகளுக்கு முன்பு, அவர் ரயிலில் பலாப்பழம் விற்ற காலத்தில், அதன் விலை 10 ரூபாயாக இருந்தது. இன்று போல அன்று ரயில் பெட்டிகளில் இணைப்பு இல்லை. எழுதப்படாத விதி என்னவெனில், ஒரு கம்பார்ட்மெண்டில், ஒரு பலாப்பழ வணிகர்தான் ஏற வேண்டும். அவர் இறங்கிய பின்னரே இன்னொருவர் ஏற முடியும். ` அப்பல்லாம் டிக்கட் இன்ஸ்பெக்டர்கள் டிக்கட் வாங்கச் சொல்ல மாட்டாங்க.. `, என்னும் லக்ஷ்மி, கொஞ்சம் குரலைக் குறைத்து, `அவங்களுக்குக் கொஞ்சம் பலாச்சுளைகளைக் கொடுத்திருவோம்`, என்கிறார்
அவர் வணிகம் செய்தது உள்ளூர் பாசெஞ்சர் வண்டிகள்.. ஒவ்வொரு ஸ்டேஷனிலும் நின்று செல்லும். பயணிகள் பலரும் பலாப்பழம் வாங்கிச் செல்வார்கள்.. வருமானம் மிகக் குறைவாகத்தான் கிடைத்தது.. எவ்வளவு எனச் சரியாக நினைவில்லை என்னும் லக்ஷ்மி. `100 ரூபாய் அன்னிக்குப் பெரும் பணம்`, என்கிறார்.
`நான் பள்ளிக்கூடமே போனதில்லை.. எங்கப்பா, அம்மாவெல்லாம், நான் சின்னப் புள்ளய இருக்கறப்பவே செத்துட்டாங்க.. பிழைப்புக்காக பலாப்பழம் விற்க சிதம்பரம், கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரம் எனப் பல ஊர்களுக்கும் போயிருக்கிறார்.. `ரயில்வே கேண்டீன்ல தயிர் சாதம் புளிசாதம்னு சாப்பிட வாங்கிக்குவேன்.. தேவைப்பட்டா கம்பார்ட்மெண்ட் கழிவறையை உபயோகிச்சுக்குவேன்.. ரொம்பக் கஷ்டமான பொழப்புதான்.. வேற வழி?`.
ஆனால், இன்று அவருக்கு வேறு வழிகள் உள்ளன.. பலாப்பழ சீஸன் முடிந்ததும், வீட்டில் தங்கி ஓய்வெடுத்துக் கொள்கிறார். `ஒரு வாரம் ரெண்டு வாரம் மெட்ராஸுக்கு சொந்தக்காரவுங்க வீட்டுக்கு போய்த் தங்கிட்டு வருவேன்.. மத்த நேரமெல்லாம் பேரன் சர்வேஷ் கூடத்தான்`, என அருகில் விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவனைக் காட்டிச் சிரிக்கிறார்.
`அவங்க சொந்தக்காரங்களுக்கு ரொம்ப உதவி செய்வாங்க.. நகையெல்லாம் கூட வாங்கிக் கொடுப்பாங்க.. உதவின்னு கேட்டு வந்தவுங்களுக்கு இல்லன்னு சொல்ல மாட்டாங்க`. என அவரது மருமகள் கயல்விழி மேலும் தகவல்கள் தருகிறார்.
தன் சொந்த வாழ்க்கையில் `இல்லை`, என்ற பதிலை பல காலம் கேட்டவர் லக்ஷ்மி. அதனால், தன்னிடம் உதவி கேட்டு வருபவர்களுக்கு அவர், `இல்லை`, என்று சொல்லுவதில்லை.. தன் வாழ்க்கையை, தன் உழைப்பால் செதுக்கிக் கொண்டவர் லக்ஷ்மி.. அவரது கதையைக் கேட்பது கூட, பலாப்பழம் சாப்பிடுவது போலத்தான்.. சாப்பிடும் வரை, பழம் அவ்வளவு சுவையாக இருக்குமென நாம் நினைப்பதில்லை.. ஆனால், சாப்பிட்ட பின்னர், அச்சுவையை ஒருபோதும் மறக்க முடிவதில்லை.
இந்த ஆராய்ச்சிக் கட்டுரை, அஸின் ப்ரேம்ஜி பல்கலைக்கழகத்தின் 2020 ஆண்டுத் திட்ட நிதிநல்கையின் உதவியோடு எழுதப்பட்டது.
அட்டைப்படம்: எம்.பழனிக்குமார்
தமிழில் : பாலசுப்ரமணியம் முத்துசாமி