வடமேற்கு மகாராஷ்டிராவின் சத்புதா மலைகளுக்கு மத்தியில் இருக்கும் பலாய் கிராமத்திலுள்ள ஒரு குடிசை வீட்டுக்குள், எட்டு வயது ஷர்மிளா பவ்ரா பெரிய கத்திரிக்கோல்கள், துணி, ஊசி மற்றும் நூல் ஆகியவற்றுடன் ஒரு மேஜைக்கு முன் அமர்ந்திருக்கிறார்
மேஜையின் மீது தையல் இயந்திரம். முந்தைய நாள் இரவு, தந்தை மிச்சம் விட்டுப் போயிருந்த துணி அதில் இருந்தது. அதன் ஒவ்வொரு மடிப்புக்கும் மெருகேற்றி அவருக்கிருந்த திறன் கொண்டு தைத்துக் கொண்டிருந்தார்.
மார்ச் 2020ல் தொற்றால் ஊரடங்கு தொடங்கி பள்ளி மூடப்பட்டப் பிறகு நந்துர்பார் மாவட்டத்தின் டோரன்மல் பகுதியின் கிராமத்திலுள்ள அவர் வீட்டின் இந்த மேஜைதான் கற்பதற்கான இடமாக இருக்கிறது. “அப்பாவும் அம்மாவும் தைத்ததைப் பார்த்து இந்த இயந்திரத்தை இயக்க நானாகக் கற்றுக் கொண்டேன்,” என்கிறார் அவர்.
பள்ளியில் ஷர்மிளா படித்தவை 18 மாத இடைவெளியில் மறந்தே போய்விட்டது.
பலாயில் பள்ளிக்கூடம் இல்லை. குழந்தைகளுக்கு கல்விக் கிடைக்க வேண்டுமென்பதற்காக 140 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் அடல் பிகாரி வாஜ்பாயி சர்வதேசப் பள்ளியில் ஷர்மிளாவை ஜூன் 2019ல் பெற்றோர் சேர்த்து விட்டனர். மகாராஷ்டிராவின் சர்வதேச கல்வி வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்டு, மாவட்ட சபையால் நடத்தப்படும் 60 ஆசிரமசாலைகளில் (பட்டியல் பழங்குடி குழந்தைகளுக்கென நடத்தப்படும் சிறப்புப் பள்ளிகள்) அந்தப் பள்ளியும் ஒன்று. 2018ம் ஆண்டில் சர்வதேச தரத்திலான கல்வியை வழங்கும் பொருட்டு உள்ளூரில் வடிவமைக்கப்பட்ட மராத்தி வழிக் கல்வி வழங்கவென உருவாக்கப்பட்ட வாரியம். (அதற்குப் பிறகு வாரியம் கலைக்கப்பட்டு விட்டதால், அப்பள்ளிகள் தற்போது மாநிலக் கல்வி வாரியத்தின் கீழ் இயங்குகின்றன.)
பள்ளிக்குச் செல்லத் தொடங்கிய பிறகு, மராத்தி ஷர்மிளாவுக்கு புது மொழியாக இருந்தது. அவர் பவ்ரா சமூகத்தைச் சேர்ந்தவர். வீட்டில் பேசும் மொழி பவ்ரி. மராத்தி வார்த்தைகளை என்னுடைய நோட்டுப் புத்தகத்தில் பார்த்ததும் அவர் கற்ற சில எழுத்துகளை நினைவுகூர்ந்தார். பிறகு இந்தியில், “எனக்கு சுத்தமாக நினைவில்லை…” என்கிறார்.
பள்ளியில் 10 மாதங்கள்தான் அவர் இருந்தார். பள்ளி மூடப்படும்போது 1ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். பள்ளியில் படித்த 476 மாணவர்களும் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். “மீண்டும் எப்போது பள்ளி தொடங்கும் என எனக்குத் தெரியவில்லை,” என்கிறார் அவர்.
அவரது பள்ளி நாட்கள் எப்போதும் பிரார்த்தனை மற்றும் தேசிய கீதம் ஆகியவற்றுடன் தொடங்கும். ஆனால் வீட்டில் வேலைத்திட்டம் வேறு.”முதலில் நான் ஆழ்துளைக் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுக்க வேண்டும். பிறகு அம்மா சமைத்து முடிக்கும் வரை ரிங்குவை (ஒரு வயது தங்கை) பார்த்துக் கொள்ள வேண்டும். அவளுக்குச் சுற்றிக் காட்டிக் கொண்டிருப்பேன்.” அவரின் பெற்றோர் இயந்திரத்தின் அருகே இல்லாத போதெல்லாம் அவர் தன்னுடைய ‘சுய கல்வியைத்’ தொடங்கி விடுவார். தையல் பாடங்கள்.
நான்கு குழந்தைகளில் மூத்தவர் ஷர்மிளாதான். சகோதரர் ராஜேஷ்ஷுக்கு ஐந்து வயது. ஊர்மிளாவுக்கு மூன்று வயது. பிறகு ரிங்கு. “கவிதைகள் ஒப்பிப்பாள். எழுதவும் (மராத்தி எழுத்துகளை) தெரிந்திருந்தது,” என்கிறார் தந்தையான 28 வயது ராகேஷ். பிற குழந்தைகளின் கல்வி பற்றியக் கவலையில் அவர் இருக்கிறார். ராஜேஷ்ஷையும் ஊர்மிளாவையும் ஆறு வயதாகும்போதுதான் பள்ளியில் சேர்க்க முடியும். “அவளுக்கு எழுதப் படிக்க தெரிந்திருந்தால், தங்கைகளுக்கும் தம்பிக்கும் அவளே கற்றுக் கொடுத்திருப்பாள்,” என்கிறார் அவர். “இந்த இரண்டு வருடங்களில் என் மகளின் வாழ்க்கை விளையாட்டாகி விட்டது,” என்கிறார் அவர், மகள் தையல் இயந்திரம் இயக்குவதை பார்த்தபடி.
“அவள் படித்தவளாக, ஒரு அதிகாரியாக வேண்டுமென விரும்புகிறோம். எங்களைப் போல் தையல்காரராக ஆக வேண்டாம். எழுதப் படிக்கத் தெரிந்தாலும் மக்கள் உங்களை மதிக்க மாட்டார்கள்,” என்கிறார் ஷர்மிளாவின் தாயாரான 25 வயது சர்ளா.
சர்ளாவும் ராகேஷ்ஷும் சேர்ந்து 5,000லிருந்து 6,000 வரை தையல் வேலையில் மாத வருமானம் ஈட்டுகின்றனர். சில வருடங்கள் முன் வரை கூலி வேலைக்காக ராகேஷ்ஷும் சர்ளாவும் குஜராத் அல்லது மத்தியப் பிரதேசம் போன்ற இடங்களுக்கும் இடம்பெயர்ந்து கொண்டிருந்தனர். “ஷர்மிளா பிறந்தபிறகு நாங்கள் இடம்பெயர்வதை நிறுத்திவிட்டோம். ஏனெனில் (இடம்பெயர்வதால்) அடிக்கடி அவளது உடம்புக்கு முடியாமல் போனது,” என்கிறார் அவர். “அது மட்டுமின்றி பள்ளிக்கு அவளை அனுப்ப நாங்கள் விரும்பினோம்.”
இளைஞராக அவர் தையல் வேலையை மாமா குலாபிடமிருந்து கற்றுக் கொண்டார். அவரும் அதே ஊரில்தான் வாழ்ந்தார் (2019ம் ஆண்டில் இறந்துவிட்டார்). அவரின் உதவியில் ராகேஷ் தையல் இயந்திரங்களை வாங்கினார். சர்ளாவுக்கும் கற்றுக் கொடுத்தார்.
“எங்களிடம் விவசாய நிலம் ஏதுமில்லை. எனவே இரண்டாம் பயன்பாட்டில் இரு தையல் இயந்திரங்களை 15,000 ரூபாய்க்கு 2012ம் ஆண்டில் வாங்கினோம்,” என்கிறார் சர்ளா. அதற்காக, மொத்த சேமிப்பையும் அவர்கள் செலவழித்தனர். கூடுதலாக, வாழ்க்கை முழுவதும் விவசாயக் கூலிகளாக பணிபுரிந்து, ராகேஷ்ஷின் பெற்றோர் சேமித்து வைத்ததிலும் கொஞ்சம் வாங்கினர். மாமா குலாப் தனக்கு வரும் சில வாடிக்கையாளர்களை ராகேஷ்ஷுக்கும் சர்ளாவுக்கும் அனுப்பி உதவினார்.
“எங்களிடம் குடும்ப அட்டை இல்லை. 3000-4000 ரூபாய் வரை உணவுப் பொருட்கள் வாங்கவே செலவாகி விடுகிறது,” என்கிறார் ராகேஷ். அவர்களுக்கு தேவையான பொருட்களை சர்ளா பட்டியலிடுகிறார் - கோதுமை மாவு, அரிசி, பருப்பு, உப்பு, மிளகாய்த் தூள்… “அவர்கள் வளரும் குழந்தைகள். உணவுக்கு பற்றாக்குறை வந்துவிடக் கூடாது,” என்கிறார் அவர்.
குழந்தைகளின் கல்விக்கு பணம் சேர்ப்பது அவர்களுக்கு முடியாத காரியம். ஆசிரமசாலைகளுக்கு அவர்கள் நன்றி தெரிவிக்கிறார்கள். “அங்கே குழந்தைகள் படிக்கவும் உண்ணவும் முடிகிறது,” என்கிறார் சர்ளா. ஆனால் 1 முதல் 7ம் வகுப்புகள் நடக்கவில்லை.
இணையவழிக் கல்வி என்பது இங்கு எவரும் அறிந்திராத விஷயம். ஆசிரமச்சாலைகளின் 476 மாணவர்களில், 190 பேரை ஆசிரியர்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை. அதில் ஷர்மிளாவும் ஒருவர். அவர்கள் அனைவரும் முறையான கல்வியிலிருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்டிருக்கின்றனர்.
“பெற்றோர்களில் 90 சதவிகித பேரிடம் சாதாரண கைபேசி கூட கிடையாது,” என்கிறார் 44 வயது சுரேஷ் பாடவி. நந்துர்பாரைச் சேர்ந்த ஆசிரமச்சாலை ஆசிரியர் அவர். பள்ளியிலிருந்து அக்ரானி கிராமங்களுக்கு மாணவர்களை தேடி வரும் ஒன்பது ஆசிரியர்களில் அவரும் ஒருவர். தொற்று தொடங்கியதிலிருந்து நேராகவே வந்து கல்வி புகட்டுகின்றனர்.
“இங்கு நாங்கள் (வாரத்துக்கு) மூன்று நாட்கள் வருகிறோம். கிராமத்தினர் வீடுகளில் தங்குகிறோம்,” என்கிறார் சுரேஷ். ஒவ்வொரு முறை வரும்போது 1-லிருந்து 10ம் வகுப்பு வரையிலான 10, 12 மாணவர்களை ஆசிரியர்கள் சேர்த்திட முடிகிறது. “ஒரு குழந்தை 1ம் வகுப்பாக இருப்பார். இன்னொருவர் 7ம் வகுப்பாக இருப்பார். அவர்கள் அனைவருக்கும் நாங்கள் ஒன்றாகதான் பாடம் நடத்த வேண்டும்,” என்கிறார் அவர்.
அவரின் ஆசிரியர் குழு, ஷர்மிளாவை இன்னும் கண்டடையவில்லை. “பல குழந்தைகள் தூரமான இடங்களில் தொலைத்தொடர்போ சாலை வசதியோ இல்லாத நிலைகளில் வசிக்கின்றனர். அவர்களைக் கண்டுபிடிப்பது கஷ்டம்,” என்கிறார் சுரேஷ்.
பலாயிலுள்ள ஷர்மிளாவின் வீட்டுக்கு செல்வது கஷ்டம். குறைவான தூரம் கொண்ட பாதையில் ஒரு மலையேற வேண்டும். ஓர் ஆற்றைக் கடக்க வேண்டும். இன்னொரு வழி சகதிப்பாதை. அதிக நேரம் எடுக்கும். “எங்களின் வீடு உள்ளே இருக்கிறது,” என்கிறார் ராகேஷ். “ஆசிரியர்கள் இந்தப் பக்கம் வந்ததே இல்லை.”
ஷர்மிளாவைப் போலவே இன்னும் பல மாணவர்கள் பள்ளி மூடப்பட்ட பிறகு கல்வியிலிருந்து துண்டிக்கப்பட்டிருக்கின்றனர் என்பதே இதன் அர்த்தம். ஜனவரி 2021-ல் வெளியான ஓர் ஆய்வின்படி தொற்றினால் மூடப்பட்ட பள்ளிகள், 92 சதவிகித குழந்தைகள் குறைந்தபட்சம் ஒரு திறனையேனும் - ஒரு படத்தை விளக்கும் திறனோ அனுபவங்களை விவரிக்கும் திறனோ, தெரிந்த வார்த்தைகளை வாசிக்கும் திறனோ அல்லது எளிய வாக்கியங்களை எழுதும் திறனோ - இழந்திருக்கின்றனர்.
*****
“என் பெயரை எழுத, பென்சிலை வைத்துக் கொண்டு பள்ளியில் நான் கற்க வேண்டியிருந்தது,” என்கிறார் எட்டு வயது சுனிதா. அவர், ஷர்மிளாவின் பக்கத்து வீட்டுக்காரரும் விளையாட்டுத் தோழியும் பள்ளித் தோழியும் ஆவார்.
“இந்த உடையை நான் பள்ளிக்கு அணிந்திருக்கிறேன். சில நேரங்களில் வீட்டிலும் அணிகிறேன்,” என்கிறார் அவர் உற்சாகத்துடன் அவருடைய சீருடையைச் சுட்டிக் காட்டி. “பாய் (ஆசிரியர்) (பட) புத்தகத்திலிருக்கும் பழங்களைக் காட்டுவார். நிறம் கொண்ட பழங்கள். சிவப்பு நிறம். எனக்கு பெயர் தெரியவில்லை,” என்கிறார் அவர் நினைவுகூர கடுமையாக முயன்றபடி. மறந்து கொண்டிருக்கும் நினைவுகளின் ஒரு பகுதியாக பள்ளி அவருக்கு மாறிக் கொண்டிருக்கிறது.
சுனிதா இப்போது நோட்டுப்புத்தகத்தில் எழுதுவதோ வரைவதோ இல்லை. ஒரு வெள்ளைக் கல்லைக் கொண்டு தார் சாலையில் சில கட்டங்களை வரைகிறார். ஷர்மிளாவுடன் விளையாடத் தயாராகிறார். அவருடன் பிறந்தவர்கள் மூவர். ஆறு வயது திலீப், ஐந்து வயது அமிதா, நான்கு வயது தீபக். எட்டு வயது சுனிதாதான் மூத்தவர். பள்ளிக்குச் செல்பவர். பிற குழந்தைகளையும் பள்ளியில் சேர்க்கும் விருப்பத்தில் அவரின் பெற்றோர் இருக்கின்றனர்.
அவரின் பெற்றோர் மழைக்காலங்களில் ஒரு ஏக்கர் மலைச்சரிவில் விவசாயம் பார்த்து 2, 3 குவிண்டால் சோளத்தை குடும்பத் தேவைக்கு விளைவித்துக் கொள்கின்றனர். “இதில் மட்டுமே பிழைப்பது முடியாத காரியம். எனவே வெளியே சென்று வேலை பார்க்கிறோம்,” என்கிறார் 35 வயது கீதா.
ஒவ்வொரு வருடத்தின் அக்டோபர் மாதத்திலும் அவர்கள் குஜராத்துக்கு இடம்பெயர்கின்றனர். பருத்தி நிலங்களில் 200லிருந்து 300 ரூபாய் வரையிலான தினக்கூலிக்கு கிட்டத்தட்ட 200 நாட்கள் பணிபுரிகின்றனர். “குழந்தைகளை எங்களுடன் அழைத்துச் சென்றால் அவர்களும் எங்களைப் போலாகி விடுவார்கள். நாங்கள் செல்லும் இடத்தில் பள்ளி இல்லை,” என்கிறார் 42 வயது பகிராம்.
“ஆசிரமச்சாலைகளில் குழந்தைகளால் தங்கவும் முடிகிறது. உணவுக்கும் பிரச்சினை இல்லை,” என்கிறார் கீதா. “அந்தப் பள்ளிகளை அரசு மீண்டும் திறக்க வேண்டும்.”
ஜுலை 15, 2021-ன் அரசு தீர்மானம், “கோவிட் தொற்றில்லா பகுதிகளில் இருக்கும் அரசு உதவி பெறும் விடுதி மற்றும் ஏகலாவ்ய விடுதிப் பள்ளிகளில் 2021ம் ஆண்டின் ஆகஸ்டு 2ம் தேதியிலிருந்து 8 முதல் 12ம் வகுப்பு வரை நடத்திக் கொள்ளலாம்,” என அனுமதி கொடுத்தது.
“நந்துர்பாரில் கிட்டத்தட்ட 139 அரசு விடுதிப் பள்ளிகள் இருக்கின்றன. அவற்றில் 22,000 மாணவர்கள் இருக்கின்றனர்,” என்கிறார் நந்துர்பாரின் மாவட்ட சபை உறுப்பினரான கணேஷ் பராத்கே. இப்பள்ளிகளின் பெரும்பாலான மாணவர்கள் அக்ரானி தாலுகாவின் மலைகளையும் காட்டுப் பகுதிகளையும் சேர்ந்தவர்கள். “பலருக்கு படிப்பில் ஆர்வம் போய்விட்டது. பெண் குழந்தைகள் திருமணம் செய்து கொடுக்கப்பட்டு விட்டனர்,” என்கிறார் அவர்.
*****
ஷர்மிளாவின் வீட்டிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் சிந்திதிகர் கிராமத்தருகே 12 வயது ரகிதாஸ் பவ்ராவும் இரண்டு நண்பர்களும் 12 ஆடுகளையும் ஐந்து மாடுகளையும் மேய்த்துக் கொண்டிருக்கின்றனர். “நாங்கள் இங்கே நின்று நேரம் கழிப்போம். எங்களுக்கு இங்கே பிடித்திருக்கிறது. மலைகள், கிராமங்கள் வானம் எல்லாவற்றையும் இங்கிருந்து உங்களால் பார்க்க முடியும்,” என்கிறார் ரகிதாஸ். 150 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் கை டி.ஜெ.கொகானி ஆதிவாசி சத்ராலயா ஷ்ரவானி திறந்திருந்தால் ஆறாம் வகுப்பில் வரலாறோ கணக்கோ பூகோளமோ அவர் கற்றுக் கொண்டிருப்பார். ஆனால் கடந்த வருடம் பள்ளி மூடப்பட்டுவிட்டது.
ரகிதாஸின் தந்தையான 36 வயது ப்யானேவும் தாய் 32 வயது ஷீலாவும் சோளம் மற்றும் கம்பு ஆகியவற்றை அவர்களின் இரண்டு ஏக்கர் நிலத்தில் விளைவிக்கின்றனர். “என் அண்ணன் ராம்தாஸ் நிலத்தில் அவர்களுக்கு உதவுவான்,” என்கிறார் ரகிதாஸ்.
வருடாந்திர அறுவடைக்குப் பிறகு ப்யானேவும் ஷீலாவும் நான்காம் வகுப்பு வரை படித்த 19 வயது ராம்தாஸும் குஜராத்திலிருக்கும் நவ்சாரி மாவட்டத்தின் கரும்பு நிலங்களுக்கு இடம்பெயர்வார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் 250 ரூபாய் தினக்கூலிக்கு டிசம்பர் முதல் மே மாதம் வரை கிட்டத்தட்ட 180 நாட்கள் வேலை செய்கின்றனர்.
”கடந்த வருடம் கொரோனா அச்சத்தால் அவர்கள் போகவில்லை. இந்த வருடம் அவர்களுடன் நானும் செல்கிறேன்,” என்கிறார் ரகிதாஸ். குடும்பத்தின் கால்நடைகளில் வருமானம் கிடையாது. ஆடுகளின் பால் குடும்பப் பயன்பாட்டுக்குதான். சில நேரங்களில் ஆடுகளை கசாப்புக்கடைக்கு 5,000லிருந்து 10,000 ரூபாய் வரை அவர்கள் விற்பதுண்டு. ஆனால் இது மிகவும் அரிதாகதான் நடக்கும். பெரும் பணத்தேவை ஏற்படும்போது மட்டுமே நடக்கும்.
கால்நடைகளை மேய்க்கும் மூவரும் நண்பர்கள். ஒரே பள்ளியில் ஒரே வகுப்பில் படிப்பவர்கள். “முன்பு கூட (தொற்றுக்கு முன்) நாங்கள், கோடை மற்றும் தீபாவளி விடுமுறைகளுக்கு வந்தபோது கால்நடை மேய்த்திருக்கிறோம்,” என்கிறார் ரகிதாஸ். “எங்களுக்கு ஒன்றும் புதிதில்லை.”
அவருடைய உறுதி குறைந்திருப்பதுதான் புதிய விஷயம். ”திரும்பப் பள்ளிக்கு போக விரும்பவில்லை,” என்கிறார் அவர். பள்ளி மீண்டும் திறக்கப்படும் செய்தி அவர்களுக்கு உற்சாகத்தை அளிக்கவில்லை. “எனக்கு எதுவும் ஞாபகத்திலும் இல்லை,” என்கிறார் ரகிதாஸ். “அவர்கள் அதை மூடிவிட்டாலென்ன?”
தமிழில் : ராஜசங்கீதன்