ஹசன் அலியின் வாழ்க்கை அவர் வாழும் நதித் தீவைப்போல பலவீனமானது. பொதுவாக பிரம்மபுத்திரா நதி, தங்களது நிலத்தை அரித்தால் நதியின் தீவில் வசிப்பவர்கள் நதிக்கரையோரம் அல்லது அதற்கு அப்பாற்பட்டு இடம்பெயர்வார்கள். ஆனால், ஹசன் அலி கரையோரத்திலுள்ள பனிகைடி கிராமத்திலிருந்து நதித் தீவுக்கு இடம்பெயர்ந்தார்.
அசாமிலுள்ள கம்ருப் மாவட்டத்தில் மடோலி பஞ்சாயத்துக்குள்பட்ட கிராமம்தான் பனிகைடி.
"மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளமும், மண் அரிப்பும் எங்கள் வீட்டை அடித்துச் சென்றன. இதனால், இந்த நதித் தீவுக்கு வந்தேன். இங்கு தலைக்கு மேல் குறைந்தபட்சம் மேற்கூரையாவது என்னால் எழுப்ப முடியும்" என்றார் அலி.
அலியிடம் 81 ஆயிரம் சதுர அடி விவசாய நிலம் இருந்தது. ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளில் நில அரிப்பால் மொத்த நிலமும் அழிந்துபோனது. தொடர்ச்சியாக நிலஅரிப்பு நிகழும்போது, அடுத்து எங்கு இடம்பெயருவது என்பது பற்றி அவருக்கு எந்த யோசனையும் இருக்காது.
அசாமின் கிழக்கு மேற்கில் 728 கி.மீ. நீளத்திற்குச் செல்லும் அழகான பிரம்மபுத்திரா நதியால் சிறிய மணல் தீவுகள் உருவாகியிருந்தன. இது மாநிலத்தின் மொத்த நிலப்பரப்பில் 5 சதவிகிதம். இவை 14 மாவட்டங்கள் மற்றும் 55 வட்டங்களில் பரவியுள்ளன.
நதி மற்றும் துணை நதிகளின் ஆற்று நடைமுறைகளில் நதித் தீவுகள் முக்கிய அங்கம் வகிப்பதாக 2014மம் ஆண்டின் அசாம் மனித மேம்பாட்டு அறிக்கை குறிப்பிடுகிறது. வெள்ளத்தின்போது துகள்கள் மற்றும் கரையிலுள்ளவை இணைந்து பாதாம் வடிவிலான இந்த அமைப்புகளை உருவாக்குகின்றன. இதன் வளமையான வண்டல் மண் கடுகு, கரும்பு, எள், கருப்பு உளுந்து, உருளை மற்றும் பிற காய்கள் விளைவதற்கு உகந்தது. ஆனால் நதித் தீவுகள் என்பதால் வெள்ளத்தில் அழிவதற்கான ஆபத்திலேயே இவை இருக்கும்.
பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கில் 2,251 நதித் தீவு கிராமங்கள் உள்ளன. இவை 24 லட்சத்துக்கும் மேலான மக்கள்தொகையைக் கொண்டுள்ளன. இதில் 90 சதவிகிதத்தினர் முன்பு கிழக்கு வங்காளத்திலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம் குடும்பங்கள் என அசாம் அரசால் வெளியிடப்பட்ட சமூகப் பொருளாதார ஆய்வறிக்கை (2002-03; சமீபத்திய மக்கள்தொகை தரவுகளின்படி) கூறுகிறது.
காலனிய பிரிட்டிஷ் அரசாங்கம் விவசாய நிலங்களிலிருந்து வருவாயைத் திரட்டும் முயற்சியில், கிழக்கு வங்காளத்திலிருந்த ஏழை விவசாயிகளை இடம்பெயரச் செய்து இந்த நதித் தீவுகளில் பயிரிடச் செய்தது. இந்த இடத்தில் வளர்ந்த தலைமுறையினர் அசாம் மொழியுடன் வங்காளப் பேச்சு வழக்கும் பேசுவார்கள். மக்கள்தொகை கணக்கெடுப்பில் இவர்கள் அசாம் மொழி பேசுபவர்கள் எனப் பட்டியலிடப்பட்டுள்ளனர்.
அலியின் நதித் தீவுக்கு மூன்று வெவ்வேறு பெயர்கள் உள்ளன. பனிகைடி (அவர் வசிக்கும் கிழக்குப் பகுதி), லகிசார் (மத்தியப் பகுதி) மற்றும் மொரிஷாகண்டி (மேற்குப் பகுதி). இவை ஒவ்வொரு பகுதியும், வசிப்பவர்கள் எங்கிருந்து வந்தார்களோ அந்தக் கிராமங்களைக் குறிப்பவையாகும்.
ஆற்றங்கரையிலிருந்து நதித் தீவுக்குச் செல்ல இயந்திர நாட்டுப் படகில் சுமார் 25 நிமிடங்கள் ஆகும். இன்று நதித் தீவு மற்றும் கரைக்கு இடையே 3 கிலோ மீட்டர் அகலத்திற்கு ஆறு உள்ளது. கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு முன்பு நதிக் கரையிலிருந்து பிரிந்து உருவான இந்த நதித் தீவை பனிகைடி கிராமத்திலிருந்து பிரிப்பது பிரம்மபுத்திரா நதியின் ஒரு சிற்றாறுதான். இந்த நதித் தீவு சுமார் 2 கிலோ மீட்டர் அகலமும், 2 கிலோ மீட்டர் நீளமும் கொண்டுள்ளது. இங்கு 800 குடும்பங்களுக்கும் மேற்பட்டவர்கள் வசிப்பதாக இந்தப் பகுதியில் வசிப்பவர்கள் கணக்கிட்டுள்ளனர்.
வீட்டில் பெரியவர்கள், தாய்மார்கள் மற்றும் குழந்தைகளை மட்டும்தான் எங்களால் பார்க்க முடிந்தது. இளம்பெண்கள் வீட்டு வேலைகளுக்கு உதவுகின்றனர். 14 அல்லது 15 வயதில் திருமணம் செய்துகொள்கின்றனர். இளைஞர்கள் வேலைக்காக இடம்பெயர்ந்து செல்கின்றனர். அவர்கள் கவுகாத்தி மற்றும் வடகிழக்கிலுள்ள பிற நகரங்களுக்குச் செல்கின்றனர். அல்லது கட்டுமானத் தொழிலாளர்களாக, பாதுகாவலர்களாக, தொழிற்சாலைகளில் தொழிலாளர்களாக அல்லது விடுதியில் பணியாற்றுவதற்காக தில்லி, மும்பை, சென்னை என வெகுதூரம் செல்வார்கள். இவர்கள் அனைவரும் ஒரே மாதிரியான இடம்பெயரும் கதையைச் சொல்கின்றனர். அலியின் மூத்த மகன் மேல்நிலைப் படிப்பை முடித்த பிறகு கவுகாத்திக்கு தினக்கூலியாக சென்றுள்ளார்.
ஒப்பந்ததாரர்களால் வேலைக்குக் கருதப்பட மாட்டார்கள் என்பதால் வயதானவர்கள் வழக்கமாக இடம்பெயரமாட்டார்கள். சொந்த நிலத்தில் வேலை செய்வார்கள் அல்லது மற்றவரது வேளாண் நிலத்தில் விவசாயத் தொழிலாளர்களாகப் பணியாற்றுவார்கள். 60 வயது அலி தற்போது இங்கேயே இருந்துவிட்டார். மீன்பிடிப்பது மூலம் மாதத்திற்கு அரிதாகவே ரூ. 1,500 சம்பாதிக்கிறார். அவரது மகன் குடும்ப உதவிக்காக மற்றொரு 1,500 ரூபாயை அனுப்புகிறார். அலிக்கு 7 குழந்தைகள் உள்ளன. 4 பெண் குழந்தைகளுக்கு 18 வயதை எட்டுவதற்கு முன்பே திருமணமாகிவிட்டது. 5-வது பெண் குழந்தைக்கு தற்போது 13 வயதாகிறது. அந்தக் குழந்தைக்கும் விரைவில் திருமணமாகவுள்ளது.
நாங்கள் சென்றபோது பேசுவதற்கு அவருக்கு கொஞ்சம் நேரம் இருந்தது. காரணம், அவர் வாரச் சந்தைக்குச் செல்லவில்லை. நதித் தீவிலுள்ள சுற்றத்தாரை சந்திப்பதற்கான இடமும் அதுதான். "எங்களது அன்றாட அத்தியாவசியப் பொருட்களுக்கு நாங்கள் இந்தச் சந்தையைதான் சார்ந்து இருக்கிறோம். சென்று வருவதற்கு ரூ. 20 ஆகும். என்னிடம் காசு இல்லை" என்றார் அலி. அரசுப்படகு சேவை இல்லாத நேரத்தில் தனியார் நடத்தும் இயந்திரப் படகு சேவை மட்டும்தான் இவர்களுக்கான ஒரே போக்குவரத்து.
நதித் தீவுகள் இயக்குநரகம் மாவட்ட நிர்வாகங்களுடன் இணைந்து நதித் தீவுகளுக்கு குறிப்பிட்ட வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. பனிகைடி நதித் தீவில் இரண்டு ஆரம்பப் பள்ளிகளை அரசு நடத்துகிறது. மேற்கொண்டு படிக்க எவரேனும் விரும்பினால், படகு மூலம் காசு கொடுத்து ஆற்றைக் கடக்க வேண்டும். இதுவே பள்ளிப் படிப்பை நிறுத்துவதற்கான முக்கியக் காரணமாக உள்ளது.
பனிகைடியில் மேற்கூரையில்லாமல் ஒரு துணை சுகாதார மையமும் உள்ளது. அதைச் சுற்றி செடிகள் வளர்வதால் தடை செய்யப்பட்ட பகுதியாகவே அது தோற்றமளிக்கும். நதித் தீவுக்கு ஒரு செவிலியர் எப்போதாவது வருவார். அவர் வந்தாலும் இந்த துணை சுகாதார மையத்திலிருப்பதற்குப் பதிலாக வேறு எவரேனும் வீட்டிலிருந்து பார்ப்பதற்கே விரும்புவார் என அங்குள்ள மக்கள் சொல்கின்றனர். அவசர மருத்துவ உதவிக்கு, இவர்கள் ஆற்றைக் கடந்து மேற்கொண்டு 3 கிலோ மீட்டருக்கு நடந்து சொந்தாலியிலுள்ள ஆரம்ப சுகாதார மையத்திற்குச் செல்ல வேண்டும். இதுதான் அருகிலுள்ள ஆரம்ப சுகாதார மையம்.
"2016 வெள்ளச் சேதத்திற்குப் பிறகு எந்தவொரு சுகாதாரத் துறை அதிகாரியும் வந்து எங்களைப் பார்க்கவில்லை. வெள்ள நிவாரணம் என்ற பெயரில் இரண்டு கிலோ கால்நடைத் தீவனங்களை மட்டும் நிர்வாகம் விநியோகித்தது" என்கிறார் அலி. சணல்-குச்சிகளால் ஆன சுவர்கள், வீடுகளை அவ்வப்போது மூழ்கடித்த வெள்ள நிலைகளின் அடையாளங்களைக் கொண்டுள்ளன.
திறந்தவெளிக் கழிப்பிடங்கள்தான் உள்ளன. குறிப்பாக வெள்ளத்துக்குப் பிறகு ஒவ்வொரு வீட்டிலும் வயிற்றுப்போக்கு இயல்பான ஒன்றாக உள்ளது. குடிநீருக்கு 10 குடும்பங்கள் ஒரு குழாய் மூலம் எடுக்கப்படும் கிணற்று நீரை சார்ந்து உள்ளன. அதையும் அவர்களது சொந்த செலவில்தான் பராமரித்து வருகின்றனர்.
"எங்களுடைய நதித் தீவு தென்கரையில் போகோ மற்றும் வடகரையில் செங்கா என இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகளாக சரிசமமாகப் பிரிக்கப்பட்டுள்ளன. சில அதிகாரிகளின் முரண்பாடுகள் காரணமாக, செங்கா தொகுதியில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்குக் கொடுக்கப்படும் ரேஷன் பொருள்கள் நீண்டகாலமாக வழங்கப்படுவதில்லை" என்றார் அலி. போகோ தொகுதியில் இருக்கிறார் அலி. அவருக்கு அரிசி தவிர்த்து வேறு எந்தப் பலன்களும் கிடைக்கவில்லை.
மின்சாரம் என்பது இவர்களுக்கு வெகுதூரக் கனவு. எந்தவொரு குடும்பத்திடமும் சூரிய விளக்கு இல்லை. இதற்குப் பதிலாக அவர்கள் மண்ணெண்ணையையே சார்ந்துள்ளனர். இதன் விலை ஒரு லிட்டர் ரூ. 35. அலியின் குடும்பத்துக்கு ஒரு மாதத்துக்கு 5 முதல் 7 லிட்டர் வரை தேவைப்படுகிறது. வானொலியே இங்கு ஆடம்பரப் பொருளாகத்தான் உள்ளது.
"நதித் தீவு குறைந்தபட்சம் 20 வருடங்களுக்குத் தாக்குப்பிடித்தால், வாழ்க்கை கொஞ்சம் நன்றாக இருக்கும். ஆனால், நதித் தீவின் ஆயுட்காலம் 10 ஆண்டுகள்தான். ஒப்பீட்டளவில் நிலையான வாழ்க்கைக்குத் தேவையான ஏதேனும் சம்பாதிக்கும் நேரத்தினுள் மீண்டும் மண் அரிப்பு வந்துவிடும். நாங்கள் இடம்பெயரும் நிலைக்குத் தள்ளப்படுவோம்" என்றார் அலி.
"இதுதான் எங்கள் கதை. நதித் தீவில் உள்ள அனைவரது கதையும் இதுதான். இருந்தாலும், எனது கதை இத்துடன் முடிந்துவிடாது" என்றார் அலி. இதைத் தொடர்ந்து, தனது இரண்டாவது மகன் குறித்துப் பேசத் தொடங்குகிறார் அலி. அவருக்கு 18 வயது. 12-ம் வகுப்பு அறிவியல் மாணவரான அவர் பார்பேடா மாவட்டத்திலுள்ள கல்லூரியில் படிக்கிறார் . மருத்துவ நுழைவுத் தேர்வுக்காக அவர் தயாராகி வருகிறார். அலியால், மூத்த மகனுக்கு உயர்கல்வியை வழங்க முடியவில்லை. ஆனால், ஆசிரியர்களின் உதவியால் அவரது இரண்டாவது மகன் அனைத்துக் கஷ்டங்களுக்கும் மத்தியில் மேல்நிலைத் தேர்வில் 83 சதவிகிதம் மதிப்பெண் பெற்றார்.
"மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கு அவர் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறார்" என்றார் அலி. மேலும், "அவரது ஆசிரியர்கள் படிப்பை முடிப்பதற்கு ரூ. 30 லட்சம் செலவாகும் என்றனர். நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றாலும் அவர் எப்படி படிப்பை முடிக்கப் போகிறார் என்று எனக்குத் தெரியவில்லை" என்றார் அவர்.
ஆனால், வாழ்க்கை ஒருநாள் புதிய திருப்பத்தை அடையும் என்ற நம்பிக்கையில் இருப்பதை அவரது கண்கள் கூறுகின்றன.
தமிழில்: அன்பில் ராம்