1960களில் நடந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வந்ததும் திலாவர் ஷிகால்கர் புன்னகைத்தார். பட்டறையில் யாரோ ஒருவர் இரும்புத்துண்டை சுத்தியல் கொண்டு அடித்திருக்கிறார். அதிலிருந்து பறந்த இரும்புத் துகள்கள் அவருடைய இடது ஆட்காட்டி விரலை காயப்படுத்தியிருக்கிறது. ஐம்பதாண்டு காலம் ஓடி விட்டது. ஆனால் தழும்பு அடையாளமாக தங்கி விட்டது. புன்னகையுடன் அவர், “என் உள்ளங்கைகளை பாருங்கள். காய்ந்து போயிருக்கிறது,” என்றார்.
68 வயதாகும் திலாவர் அந்த ஐம்பது வருட காலத்தில் இரும்பை பொறி பறக்க ஒரு நாளுக்கு 500 தடவையாவது சுத்தியலால் அடித்திருப்பார். ஐந்து கிலோ சுத்தியலை கொண்டு உலோகத்தை அந்த காலத்தில் 80 லட்சம் முறையாவது அடித்திருப்பார்.
சங்க்லி மாவட்டத்தின் வல்வா தாலுகாவின் பகானி கிராமத்தில் இருக்கும் ஷிக்கால்கர் குடும்பம் இரும்புக்கொல்லர் வேலையை நூற்றாண்டுக்கும் அதிக காலத்துக்கு செய்து கொண்டிருக்கிறது. வீடுகளிலும் நிலத்திலும் பயன்படுத்தும் இரும்புக் கருவிகளை செய்யும் தொழில் செய்கின்றனர். குறிப்பாக இடுக்கிகளை மிக நுணுக்கமாக நல்ல வடிவத்துடனும் கூர்மையுடனும் செய்வதற்கு பெயர் பெற்றவர்கள்.
இடுக்கிகளில் பல வகை இருக்கிறது. நான்கு அங்குலம் தொடங்கி இரண்டு அடி வரை பல அளவுகளில் இருக்கின்றன. சின்ன இடுக்கிகள் கொட்டை பாக்கு வெட்டவும் காய்ந்த தேங்காய்கள் மற்றும் முறுக்கு கயிறுகளை வெட்டவும் பயன்படுபவை. பெரிய இடுக்கிகள் தங்கம், வெள்ளி போன்ற உலோகங்களை (நகை செய்பவர்கள் பயன்படுத்துவர்) வெட்டவும் பெரிய வகை பாக்குகளை வெட்டவும் பயன்படும்.
ஷிகால்கர் குடும்பம் செய்யும் இடுக்கிகள் பிரபலமானவை. வெளியூரிலிருந்து பகானிக்கு வந்து வாங்கிச் செல்லுமளவுக்கு புகழ் வாய்ந்தவை. அக்லுஜ், கொல்ஹாப்பூர், ஒஸ்மனாபாத், சங்கோல், மகாராஷ்டிராவின் சங்க்லி, கர்நாடகாவின் அத்னி, பிஜாப்பூ, ராய்பக் போன்ற இடங்களிலிருந்து வந்து வாங்குவார்கள்.
“எத்தனை இடுக்கிகள் செய்தேன் என்ற எண்ணிக்கை தெரியாது,” என்கிறார் திலாவர். சிறு அரிவாள், அரிவாள், அரிவாள் மனை, கோடரி, செடி வெட்டும் கத்தரிக்கோல், தகரம் வெட்டும் இடுக்கிகள், மீன் கொல்ல பயன்படுத்தும் கருவி போன்றவற்றையும் அவர் செய்திருக்கிறார்.
பகானியில் இருக்கும் முதிய இரும்புக் கொல்லர்களிலேயே வயதானவர் திலாவர்தான். 41 வயது மகன் சலீமுடன் தொடர்ந்து வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். (மற்ற இருவரும் சலீமின் உறவினர்களான ஹரூன் மற்றும் சமீர் ஷிகால்கர்). 50களிலும் 60களிலும் 10, 15 பேர் ஊரில் இந்த வேலை செய்ததாக சொல்கிறார் திலாவர். சிலர் இறந்துவிட்டனர். இன்னும் சிலர் இடுக்கிகளுக்கு தேவை குறைந்ததால், விவசாயக் கருவிகள் செய்வதோடு நின்று விட்டனர். பொறுமையும் நேரமும் தேவைப்படும் வேலை அந்தளவுக்கு வருமானத்தை ஈட்டிக் கொடுக்காது என்கிறார் திலாவர். “நிறைய திறமையும் கடின உழைப்பும் தேவைப்படும் வேலை இது.”
அவருடைய மகன் சலீம் குடும்பத் தொழிலை தொடருவாரென உறுதிபடுத்துகிறார் அவர். ஷிகால்கர்களின் ஆறாம் தலைமுறையும் உலோகக்கலையை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றனர். “இப்போது எங்கே வேலைகள் இருக்கின்றன?” என கேட்கிறார். “திறமை வீண் போகாது. வேலை கிடைக்கவில்லை என்றால் நீங்கள் என்ன செய்வீர்கள்?”
13 வயதில் அப்பா மக்பூலுடன் சேர்ந்து முதன்முதலாக இடுக்கி செய்யத் தொடங்கினார் திலாவர். மக்பூலுக்கு உதவிக்கு ஆள் தேவைப்பட்டது. திலாவர் வேறு வழியின்றி எட்டாம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டு குடும்பத் தொழிலில் இணைந்தார். அந்த காலத்திலெல்லாம் ஒரு இடுக்கி நான்கு ரூபாய். “இரண்டு ரூபாயில் சங்க்லி நகரத்துக்கு சென்று ஒரு படமே பார்த்துவிட்டு வர முடியும்,” என நினைவுகூருகிறார்.
காலமான அவர் தந்தை சொன்ன ஒரு கதையையும் அவர் நினைவுகூர்ந்தார்: ஷிக்கால்கர் இடுக்கி செய்யும் கலையை பார்த்து ஆச்சரியப்பட்ட பிரிட்டிஷ் அதிகாரிகள் (சங்க்லி மாகாணத்தின்) எல்லா கைவினைஞர்களையும் அழைத்து மிராஜ்ஜில் (பகானியிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவு) ஒரு கண்காட்சி நடத்தினர். “என்னுடைய முப்பாட்டன் இமாம் ஷிகால்கரையும் அவர்கள் அழைத்திருந்தனர். அவர் செய்த இடுக்கியை பார்த்துவிட்டு இயந்திரங்களை கொண்டு அதை செய்தாரா என அவர்கள் கேட்டனர்.” இமாம் இல்லை என்றார். சில நாட்கள் கழித்து அதிகாரிகள் மீண்டும் அவரை அழைத்தனர். அவர் செய்த இடுக்கியை திரும்ப அவர்கள் பார்க்க விரும்பினர். “தேவையான பொருட்களை கொடுத்தால் அவர்களின் பார்வையில் அவரால் இடுக்கி செய்ய முடியுமா என கேட்டார்கள்”. அவரும் உடனே ஒப்புக் கொண்டிருக்கிறார்.
“அந்த கண்காட்சிக்கு இன்னொருவரும் இடுக்கிகளுடன் சென்றார். பிரிட்டிஷ் அதிகாரிகள் அவரிடமும் அதே கேள்வியை கேட்டார்கள். இயந்திரங்களை கொண்டுதான் இடுக்கி செய்ததாக சொல்லிவிட்டு அவர் ஓடிவிட்டார். பிரிட்டிஷார் அந்தளவுக்கு புத்திசாலித்தனமாக இருந்தனர்,” என்கிறார் திலாவர் சிரித்தபடி. ”அவர்களுக்கு இந்த கலை எத்தனை முக்கியமென தெரியும்.”
“1972ம் ஆண்டு அமெரிக்காவிலிருந்து கிராமங்களில் இருக்கும் பஞ்சத்தை ஆராய்வதற்காக சில ஆய்வாளர்கள் வந்தனர். ஒரு மொழிபெயர்ப்பாளரும் கூட வந்தார்.” அருகே இருந்த நகவொன் என்கிற கிராமத்திலிருந்த ஒரு விவசாயியை அவர்கள் சந்தித்ததாக சொல்கிறார் திலாவர். “அவர்களுக்கு தேநீர் கொடுத்துவிட்டு ஒரு இடுக்கியை எடுத்து பாக்கை வெட்டத் துவங்கினார். அதை பார்த்து ஆர்வமடைந்த அவர்கள் விசாரித்திருக்கிறார்கள். ஷிக்கால்கரின் பட்டறையில் உருவாக்கப்பட்டது என்பதை கேள்விப்பட்டு, அங்கு சென்று சேர்ந்தார்கள். “பத்து இடுக்கிகள் என்னை செய்ய சொன்னார்கள்,” என்கிறார் திலாவர். “ஒரு மாதத்தில் செய்து முடித்து 150 ரூபாய் விலை சொன்னேன். பாராட்டும் விதத்தில் 100 ரூபாய் அதிகமாக கொடுத்தார்கள்,” என்கிறார் புன்னகையுடன்.
இன்றும் கூட ஷிகால்கர் குடும்பம் 12 வகையான இடுக்கிகளை செய்கிறது. “தேவைக்கேற்ப கூட நாங்கள் வடிவமைத்துக் கொடுக்கிறோம்,” என்கிறார் சலீம். சங்க்லி மாவட்டத்திலுள்ள தொழிற்பயிற்சி நிறுவனத்தில் இயந்திரக் கருவிகள் பற்றிய படிப்பு படித்தவர் அவர். 2003ம் ஆண்டிலிருந்து தந்தைக்கு உதவத் தொடங்கினார். அவருடைய தம்பியான 38 வயது ஜாவித்துக்கு குடும்பத் தொழிலில் ஈடுபாடு இல்லை. லத்தூர் நகரப் பாசனத் துறையில் எழுத்தராக பணிபுரிகிறார்.
மேற்கு மகாராஷ்டிராவில் இரும்புக் கொல்லர்களாக பெண்களும் வேலை பார்ப்பார்களெனினும் பகானி கிராமத்தை பொறுத்தவரை, “ஆரம்பத்திலிருந்தே ஆண்கள் மட்டும்தான் இடுக்கிகளை செய்கிறார்கள்,” என்றார் திலாவர். அவரின் மனைவியான 61 வயது ஜைதுன்பியும் சலீமின் மனைவியான 35 வயது அஃப்சனாவும் வீட்டில்தான் இருக்கிறார்கள்.
இடுக்கியை செய்யும் வேலையை தொடங்கும்போது சலீம், “வெர்னியர் இடுக்கிகளை இங்கு நீங்கள் பார்க்க முடியாது. ஷிகால்கர்களும் எந்த அளவுகளையும் குறித்துக் கொள்வதில்லை,” என்றார். “எங்களுக்கு தேவையுமில்லை,” என்கிறார் திலாவர். “பார்த்தே எங்களால் அளவை சொல்லிவிட முடியும்.” இடுக்கியின் மேற்பகுதி இழுவை உலோகச் சுருளாலும் கீழ்பகுதி இரும்பாலும் செய்யப்படுகிறது. ஒரு கிலோ இழுவை உலோகச் சுருள் கிட்டத்தட்ட 80 ரூபாய் விலை. பகானி கிராமத்திலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் சங்க்லி அல்லது கொல்ஹாப்பூர் நகரத்தில்தான் கிடைக்கும். 1960களின் ஆரம்பத்தில் இழுவை உலோகச் சுருளை திலாவர் ஒரு கிலோ 50 பைசா என வாங்கியிருக்கிறார்.
தந்தைக்கும் மகனுக்குமான வேலைநாள் அதிகாலை 7 மணிக்கு தொடங்கி குறைந்தபட்சம் 10 மணி நேரங்கள் நீடிக்கும். உலோகத்தை உலையில் காய வைப்பதில் தொடங்கும் சலீம் பிறகு அதை ஆறப் போடுவார். சில கணங்கள் கழித்து உலோகத்தை இடுக்கிகள் கொண்டு வேகமாக தூக்கி இயந்திர சுத்தியலின் கீழ் வைப்பார். 2012ம் ஆண்டு ஒன்றரை லட்சம் கொடுத்து இந்த இயந்திரத்தை வாங்கி வருவதற்கு முன் வரை, ஷிகால்கர்கள் கை சுத்தியல் கொண்டுதான் அடிப்பார்கள். உடலும் எலும்புகளும் பாதிப்பு கொள்ளும்.
உலோகத்தை இயந்திர சுத்தியல் கொஞ்ச நேரத்துக்கு அடித்த பின், சலீம் அதை 50 கிலோ இரும்பின் மேல் வைப்பார். திலாவர் அதை கை சுத்தியல் கொண்டு துல்லியமாக அடிக்கத் தொடங்கி இடுக்கிக்கான வடிவத்துக்கு மாற்றுவார். “இயந்திரத்தில் சரியான வடிவத்தை கொடுக்க முடியாது,” என விளக்குகிறார் சலீம். இந்த வேலைகளுக்கு மட்டும் மொத்தமாக 90 நிமிடங்கள் பிடிக்கின்றன.
இடுக்கிக்கான அடிப்படை வடிவம் கிடைத்தவுடன், ஒரு இடுக்கி கொண்டு அந்த உலோகத்தை பிடித்துக் கொள்வார். அதில் நீட்டிக் கொண்டிருக்கும் சிறு இரும்புத் துகள்களை பலவிதக் கருவிகள் கொண்டு வெட்டித் தள்ளுவார்.
இடுக்கியின் வடிவத்தை பல முறை சரிபார்த்த பிறகு, அதை கூர் தீட்டத் தொடங்குவார். அவர் கூர் தீட்டும் தன்மைக்கு அடுத்த 10 வருடங்களுக்கு இடுக்கியை கூர்ப்படுத்த வேண்டிய அவசியம் எழாது எனக் குறிப்பிடுகிறார்.
ஒரு இடுக்கியை தயாரிக்க ஷிகால்கர்களுக்கு ஐந்து மணி நேரங்கள் பிடிக்கிறது. எல்லாவற்றையும் வெறும் கைகளில் செய்த காலத்தில் அவர்களுக்கு இந்த நேரத்திலிருந்து இரண்டு மடங்கு ஆகியிருக்கிறது. “வேகமாக வேலை பார்ப்பதற்காக எங்கள் வேலைகளை நாங்கள் பிரித்துக் கொள்கிறோம்,” என்கிறார் சலீம். உலோகத்தை உலையில் வைப்பது, அடிப்பது, வடிவம் கொடுப்பது முதலிய வேலைகளை சலீமும் அதை செதுக்கி கூர் தீட்டும் வேலையை அவரின் தந்தையும் பார்க்கிறார்கள்.
வடிவம் மற்றும் அளவுக்கு ஏற்ப இடுக்கி 500 ரூபாயிலிருந்து 1500 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இரண்டடி நீள இடுக்கி 4000 ரூபாயிலிருந்து 5000 ரூபாய் வரை விலை போகும். எத்தனை காலத்துக்கு இடுக்கி உழைக்கும்? “நீங்கள் வாழும் வரை அதுவும் உழைக்கும்,” எனச் சொல்லி சிரிக்கிறார் திலாவர்.
இந்த வலிமையான ஷிகால்கர் இடுக்கிகளை வாங்க இப்போது ஆட்கள் வருவதில்லை. ஒரு மாதத்துக்கு 30 இடுக்கிகள் விற்றுக் கொண்டிருந்த நிலை மாறி, இப்போது 5 அல்லது 7 இடுக்கிகள்தான் விற்கின்றன. “ஆரம்பத்தில் வெற்றிலை போடுபவர்கள் நிறைய பேர் இருந்தனர். அதற்கு பாக்கு வெட்ட அவர்களுக்கு தேவை இருந்தது,” என்கிறார் திலாவர். கிராமத்தில் இருக்கும் இளைஞர்கள் தற்போது அதிகம் வெற்றிலை சாப்பிடுவதில்லை என்கிறார் சலீம். “அவர்கள் குட்கா, பான் மசாலா போன்ற விஷயங்களை பயன்படுத்த தொடங்கி விட்டனர்”.
இடுக்கிகளை மட்டும் செய்து வருமானம் ஈட்ட முடியாதென்பதால், அவர்கள் அரிவாள்களையும் காய்கறி வெட்டும் கருவிகளையும் மாதத்துக்கு 40 செய்கிறார்கள். அரிவாள்களையும் கத்தரிக்கோல்களையும் திலாவர் கூர் தீட்டிக் கொடுத்து 30 மற்றும் 50 ரூபாய்களை விலையாக வாங்குகிறார். “இந்த வேலைகள்தாம் குடும்பத்துக்கு உணவளிக்கிறது,” என்கிறார் அவர். குடும்பத்தின் அரை ஏக்கர் நிலத்தை கரும்பு வளர்க்கும் விவசாயி ஒருவருக்கு குத்தகைக்கு விட்டும் கொஞ்சம் வருமானம் ஈட்டுகிறார்.
ஷிகால்கர்கள் உருவாக்கும் அரிவாள்கள், மலிவாக, தரம் குறைவாக தயாரிக்கப்படும் பிற அரிவாள்களுடனும் போட்டி போட வேண்டியிருக்கிறது என்கிறார் சலீம். அத்தகையானவை வெறும் 60 ரூபாய்க்கு கிடைக்கிறது. ஷிகால்கர்கள் உருவாக்கும் அரிவாள்களோ 180லிருந்து 200 ரூபாய் வரை ஆகும். “மக்கள் இன்று பொருட்களை பயன்படுத்தி தூக்கியெறியும் விதத்திலேயே பார்க்கிறார்கள். அதனால்தான் மலிவானவற்றை அவர்கள் விரும்புகிறார்கள்,” என்கிறார் அவர்.
“எல்லா இரும்புக்கொல்லர்களும் இடுக்கிகள் செய்ய முடியாது. அவற்றை தயாரிக்கும் திறன் உங்களுக்கு இருக்க வேண்டும்,” என்கிறார்.வேறு வகையான சவால்களும் இருக்கின்றன. காயங்களோ ஆரோக்கிய குறைபாடோ ஏற்படலாம். அவர்களின் குடும்ப மருத்துவர் புற்றுநோயைத் தடுக்க உலோக முகக்கவசம் அணிந்து வேலை பார்க்கச் சொல்கிறார். ஆனால் அவர்கள் வெறும் பருத்தி முகக் கவசத்தையும் சில நேரங்களில் மட்டும் கையுறைகளை அணிந்து மட்டும்தான் வேலை பார்க்கின்றனர். இதுவரை வேலையின் காரணமான நோய் குடும்பத்தில் எவருக்கும் ஏற்படவில்லை என்கிறார்கள். திலாவரின் பாதிக்கப்பட்ட ஆட்காட்டி விரல் மட்டும் எப்போதேனும் நேரக் கூடிய விபத்தின் ஆபத்தை உணர்த்துகிறது.
ஒவ்வொரு மாதமும் பட்டறை மின்சாரத்துக்கு 1000 ரூபாய் கட்டணம் செலுத்துகின்றனர். ஆனால் தினசரி 4லிருந்து 5 மணி நேரமாவது மின்சாரம் துண்டிக்கப்பட்டுவிடும். சுத்தியல் இயந்திரமும் கூர் தீட்டும் கருவியும் இயங்க முடியாது. உழைப்பு நேரமும் வருமானமும் இதனால் குறைகிறது. “மின்சாரம் துண்டிக்கவென குறிப்பிட்ட நேரம் எதுவும் இல்லை,” என்கிறார் சலீம். “மின்சாரம் இல்லாமல் ஒன்றுமே செய்ய முடியாது.”
எல்லாவற்றையும் தாண்டி என்ன செய்தாலும் அதில் உயர்ந்த தரத்தை கொண்டு வர வேண்டுமென்பதில் ஷிகால்கர்கள் முழு உழைப்பும் கொட்டுகின்றனர். அவர்களுக்கு இருக்கும் புகழ் அப்படி. “பகானி இடுக்கிகளுக்கென ஒரு பாரம்பரியம் இருக்கிறது,” என்கிறார் சலீம். நான்காம் வகுப்பில் படித்துக் கொண்டிருக்கும் அவரது 10 வயது மகன் ஜுனாய்த்தும் ஒருநாள் ஷிகால்கர் பாரம்பரியத்தை தொடர்வானென நம்புகிறார் அவர். “மக்கள் வெகுதூரத்திலிருந்து வருவார்கள். குறைந்த தரத்திலான இடுக்கிகள் செய்து கொடுத்து அவர்களை ஏமாற்ற விரும்பவில்லை. ஒருமுறை விற்றுவிட்டால், வாடிக்கையாளர் எவ்வித புகாருடனும் திரும்ப வரக் கூடாது.”
தேவை குறைந்து கொண்டிருந்தாலும் திலாவரும் தன்னுடைய தொழிலின் பாரம்பரிய பெருமையை விட்டுக் கொடுக்காமல் பேசுகிறார். “நீங்கள் மலைகளில் இருந்தாலும் இத்தகைய வேலைகளுக்கென, மக்கள் உங்களை தேடி வருவார்கள்,” என்கிறார். “நாங்கள் கொண்டிருக்கும் எல்லாமும் இடுக்கிகளால் கிடைத்தவைதான்.”
தமிழில்: ராஜசங்கீதன்