“வெயிலின் நாளோடு நான் உன்னை ஒப்பிட்டு பார்க்கவா?“ என்று 19 வயதான பைசா அன்சாரி மிகவும் மெல்லிய குரலில் கிசுகிசுக்கிறார். நாங்கள் மும்ராவில் உள்ள ஒரே ஒரு பெண்கள் நூலகமான ரெஹ்னுமா நூலக மையத்தின் டைல்ஸ்கள் பதிக்கப்பட்ட தரையில் சம்மணமிட்டு அமர்ந்திருக்கிறோம்.
நூலகமாக மாறிய இரண்டு அறைகள் கொண்ட அடுக்ககத்திற்கு பல பெண்கள் வந்து செல்கிறார்கள். சிதிலமடைந்த இதன் முதல் தளம் தாருல் பாலா மசூதிக்கு அருகில் உள்ளது. அங்கு வரும் பெண்கள் தாங்கள் அணிந்து வரும் புர்காக்களை அங்கு பயனின்றி கிடக்கும் பிளாஸ்டிக் நாற்காலியில் வைக்கிறார்கள். குளுமையாக பரந்துவிரிந்துள்ள தரையில் அமர்கிறார்கள். அங்கு வெளியே 36 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவுகிறது. இது மும்பைக்கு வடகிழக்கில் 35 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள புறநகர் பகுதியாகும்.
ஷேக்ஸ்பியரின் சொனட் 18ஐ பைசா நினைவு கூர்ந்து, நான் அதை அதிகம் கேட்க விரும்புகிறேன் என்கிறார். அங்கு அமர்ந்திருக்கும் பைசாவின் சகோதரி ரஷியாவுடன் சேர்ந்து அனைவரின் கண்களும் பைசாவின் பக்கம் திரும்புகின்றன. பைசா, ரோமியோ மற்றும் ஜீலியட்டில் இருந்து “ஒரு அழகிய முகத்தைவிட ஒரு அழகிய மனம் சிறந்தது" என்ற வரியை கூறுகிறார். ரஷியா தனது சகோதரியை குறுகுறுப்புடன் பார்க்கிறார். மற்ற பெண்கள் ஒருவரையொருவர் முழங்கையால் இடித்து கூச்சல் போட்டு வெட்கத்துடன் சிரிக்கின்றனர். என்ன நகைச்சுவை என்று அவரவர் யூகித்துக்கொள்ளலாம்.
ரஷியா அன்சாரி அதிகம் வெட்கப்படும் குணம் கொண்டவராக தெரியவில்லை. அவர் வாசித்த ஷேக்ஸ்பியரின் கதை ஒன்றின் புதிரான சுருக்கத்தை என்னிடம் கூறுகிறார். “ஷேக்ஸ்பியரின் டிவெல்வ்த் நைட் என்ற கதை இந்தி படம் போல் உள்ளது. அதில் வயோலாவிற்கு இரட்டை வேடம்“ என்று வயோலா சிசாரியோவாக மாறுவேடம் போடுவதை கூறுகிறார். ரஷியா தனது ஆங்கில மொழித்திறனை வளர்த்துக்கொள்ளும் முயற்சியாக நூலகத்தில் உள்ள ஆங்கில பேச்சுத்திறன் பயிற்சி வகுப்பில் சேர்ந்துள்ளார். அந்த வகுப்புகள் காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை ஒரு மணி நேர வகுப்புகளாக எண்ணற்ற வகுப்புகள் நடைபெறுகின்றன.
ஜார்கண்ட் மாநிலம் டம்கா மாவட்டத்தில் உள்ள அசன்சால் கிராமத்திலிருந்து பைசா மற்றும் ரஷியாவின் குடும்பத்தினர் மும்ராவிற்கு 18 மாதங்களுக்கு முன்னர் வந்துவிட்டனர். அவர்களுக்கு மும்ரா பிடிக்கவில்லை. “எங்கும் குப்பையாக கிடக்கிறது“ என்று ரஷியா கூறுகிறார். பைசா அதை அமோதிக்கிறார். “புத்தகக் கடைகளைவிட எண்ணற்ற உணவகங்களே உள்ளன“ என்று மேலும் கூறுகின்றனர். கிராமத்தில் அவர்கள் புர்கா அணிந்துகொள்ள வேண்டும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. “எங்களுக்கு கிராமத்தில் நிறைய சுதந்திரம் இருந்தது. மீண்டும் அங்கு செல்ல வேண்டும்“ என்று ரஷியா கூறுகிறார். “ஆனால் இங்கு சுற்றுப்புறமே சுத்தமாக இல்லை என்று எங்கள் அம்மா கூறுகிறார்“ என்று பைசா தொடர்ந்து பேசுகிறார்.
அவர்களின் தந்தை அசன்சாலில் சொந்தமாக மளிகை மொத்த வியாபாரக்கடை வைத்திருந்தார். அவர்களின் பாட்டி மற்றும் உறவினர் ஏற்கனவே வசிக்கும் மும்பைக்கு வருவதற்கு முடிவெடுத்துவிட்டனர். “அதிக பணம் சம்பாதிப்பதற்காகவும், குழந்தைகளுக்கு நல்ல கல்வி கொடுப்பதற்காகவும்“ அவர்கள் இம்முடிவை எடுத்ததாக ரஷியா கூறுகிறார். அவர்கள் தங்கள் வீட்டுக்கு அருகே மளிகை கடையை அமைத்துக்கொண்டனர்.
இந்த சகோதரிகள் ஒரு நாளின் பெரும்பாலான நேரத்தை அருகில் உள்ள ஏ.இ.கலாசேகர் பட்ட கல்லூரியில் செலவழிக்கின்றனர். அவர்கள் இருவரும் அங்கு இளங்கலை முறையே முதல் மற்றும் இரண்டாமாண்டு படிக்கின்றனர். ரெஹ்னுமா நூலகம் அவர்கள் வீட்டிலிருந்து நடந்து வரும் தொலைவில் உள்ளது. “அந்நூலகம் அவர்கள் கிராமத்தில் உள்ள வீட்டை நினைவுபடுத்துவதாக உள்ளது“ என்று ரஷியா கூறுகிறார்.
உத்ரபிரதேச மாநிலம் ஹரய்யா தாலுகா பாப்னான் கிராமத்தில் இருந்து வரும் பஷீராஷாவுக்கு அவர் வீடு குறித்த நினைவு வராத இடமாக இந்த நூலகம் உள்ளது. பஷீராவுக்கு 14 வயதாகும்போது திருமணமானது. அவர் தனது கணவர் வீடான கோண்டா நகருக்கு அருகில் உள்ள அசோக்பூர் கிராமத்திற்கு வந்தார். அவரது கணவர் சவுதி அரேபியாவில் தொழிலாளியாக இருந்தார். தற்போது 36 வயதான அவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன் கணவரை இழந்தார். தனது தாய், 4 குழந்தைகள் மற்றும் இரு சகோதரிகளுடன் மும்ராவில் வசிக்கிறார்.
அவரது பெற்றோர்கள் 2000மாவது ஆண்டில் இங்கு குடியேறினர், ஆனால், அவரது தந்தை 2017ம் ஆண்டு இறந்துவிட்டார். மஸ்ஜித் பந்தரில் உலர் பழங்கள் விற்பனையகத்தை நடத்தி வந்தார். அவர் இறந்த பின்னர் அதை குத்தகைக்கு கொடுத்துவிட்டனர். பஷீராவின் 15 மற்றும் 16 வயது மகன்கள் பள்ளி செல்லாமல் இடையில் நிறுத்திவிட்டனர். ஆனால், மதக்கல்வி பெறும் பஷீரா, மூன்றாம் வகுப்பு வரை உருது படித்துள்ளார். மேலும் படிப்பதற்கு முடிவெடுத்துள்ளார். “ஷம்ஷிர் மற்றும் ஷிபா இருவருடனும் ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்பது எனது லட்சியம்“ என்று அவர் கூறுகிறார். ஷம்ஷிர் (12), அவரது இளைய மகன் மற்றும் ஷிபா (9) அவரது மகள். இருவரும் மும்பை பொதுப்பள்ளியில் ஆங்கில வழியில் படிக்கின்றனர்.
2003-ம் ஆண்டில் ரெஹ்னுமா நூலகம் துவங்கப்பட்டது. ரெஹ்னுமா என்றால் உருது மற்றும் இந்தியில் ‘வழிகாட்டி‘ என்று பொருள். இங்கு நாள் முழுவதும் பெண்கள் பேசுவதற்கு, சிரிப்பதற்கு, ஓய்வெடுப்பதற்கு மற்றும் புத்தகங்கள் படிப்பதற்கு வருவார்கள். இந்த நூலகம் நன்கொடைகள் மற்றும் ஆவாஸ் இ நிஸ்வான் என்ற பிரசாரத்தின் மூலம் பல்வேறு நபர்களிடம் இருந்து பெரும் நிதி ஆகியவற்றால் துவங்கப்பட்டு, நடத்தப்பட்டு வருகிறது. இது ஒரு அரசு சாரா அமைப்பு ஆகும். இந்த இடமும் அரசு சாரா அமைப்பின் மும்ரா மையமாகும். இங்கு அவர்கள் பெண்களுக்கு கல்வி மற்றும் சட்ட உதவி வழங்குவதில் கவனம் செலுத்துகிறார்கள். பெரும்பாலான பெண்கள், விவாகரத்து, பலதாரமணம் மற்றும் குடும்ப வன்முறை போன்ற பிரச்னைகளுடன் இங்கு வருகிறார்கள்.
இங்கு இஸ்லாமியர்கள் அதிகம் வசிப்பதால் இந்த இடம் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆவாஸ் இ நிஸ்வானின் மும்ரா ஒருங்கிணைப்பாளர் யாஸ்மீன் ஆகா கூறுகையில், “பெண்களுக்கு அவர்கள் புர்காவை வைப்பதற்கு, ஒருவருடன் ஒருவர் அமர்ந்து பேசுவதற்கு, ஓய்வெடுப்பதற்கு போதிய இடவசதி இல்லை“ என்கிறார். இந்த நூலகத்திற்கு முதலில் பள்ளி செல்லும் பெண் குழந்தைகள் மற்றும் அவர்களின் அம்மாக்களிடம் சொல்வதன் மூலம் உறுப்பினர்கள் கிடைத்தார்கள். ஆனால், கல்லூரி மாணவிகளுக்கு தெரிந்த பின்னர் அவர்களும் சேர்ந்துகொள்ள வந்தார்கள்.
இந்த நூலகத்தின் 350 புரவலர்களும் பெண்கள், பெரும்பாலும் குடும்பப்பெண்கள். பல்வேறு கிராமங்களில் இருந்து மும்பைக்கு இடம்பெயர்ந்தவர்கள். ஒவ்வொரு ஆண்டும் ரூ.100 ஆண்டு சந்தா செலுத்தி தங்களின் உறுப்பினர் உரிமத்தை புதுப்பித்துக் கொள்கின்றனர். வீடுகளுக்கு புத்தகங்கள் அல்லது மாத இதழ்களை எடுத்துச்சென்று படிக்கின்றனர். எப்போதாவது, புத்தகச் சங்க கூட்டங்கள் மற்றும் பயிற்சி பட்டறைகளில் கலந்துகொள்கின்றனர்.
கடந்த புத்தக சங்க சந்திப்பில் 12 இளம்பெண்கள், மிர்ஸா காலிப் மற்றும் பையாஸ் அகமது பையாஸ் ஆகியோரின் கவிதைகள் குறித்து கலந்துரையாடினர். நூலகர் பைசா கான் கூறுகையில், “வாசகர்கள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு கவிஞரின் சிறப்பு அம்சங்களாக அவர்கள் ரசித்ததை மற்றவர்களை ஏற்றுக்கொள்ள வைக்க வேண்டும். பைசா, காலிப்பின் குழுவில் இருந்தாலும், சரியான நடுநிலை வகிப்பதில் உறுதியாக இருந்தார்.
பைசாவுக்கு தற்போது 28 வயதாகிறது. ரெஹ்னுமாவிற்கு 19 வயதாகும்போது வரத் தொடங்கினார். அவர் மும்ராவில் பிறந்து வளர்ந்தவர். மேலாண்மை படிப்பில் பட்டம் பெற்றுள்ளார். 2014ம் ஆண்டு அவருக்கு இந்த நூலகர் வேலை கிடைத்தது. “பொது இடங்கள் ஆண்களால் ஆதிக்கம் செலுத்தப்படுகிறது. பெண்கள் வீடுகளில் பூட்டி வைக்கப் படுகிறார்கள்“ என்று அவர் கூறுகிறார். “ஆனால், பெண்களுக்கான இந்த நூலகத்தில் அவர்கள் ஆண்களைப்போல் அமர்ந்து பேசலாம்“ என்று அவர் மேலும் கூறுகிறார்.
அவர் நூலகத்தின் சாவியை மட்டும் வைத்துக்கொண்டிருக்கவில்லை. நூலகத்திற்கு வருபவர்களை உறுப்பினர்களாக மாற்றுகிறார். அவர்களின் வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்துகிறார். “இங்கு உருது புத்தகங்களே அதிகம் உள்ளன. நூலகத்தின் 5 மர அலமாரிகளில் உள்ள 6 ஆயிரம் புத்தகங்களில் அவைதான் அதிகம் உள்ளன“ என்று அவர் கூறுகிறார்.
புகழ்பெற்ற சில புத்தகங்கள் பாகிஸ்தான் எழுத்தாளர்களால் எழுதப்பட்டது. அவை நீண்ட பயணங்கள் குறித்தது. இபின் இ ஷபியின், இம்ரான் மற்றும் ஜசூசி துணியாவின் தொடர்கள் உள்ள பக்கங்கள், மிகவும் பிரபலமான, உளவு நாவல்கள் மஞ்சள் நிறமாக மாறிவிட்டன. நூலகத்தில் 72 இபின் இ ஷபியின் நாவல்கள் உள்ளன.
உமேரா அகமதுவின் நாவல் பக்கங்கள் (நூலகத்தில் அதிகம் வாசிக்கப்படும் எழுத்தாளர்) பைசாவுக்கு திகைப்பை ஏற்படுத்தக்கூடியவை. அதன் ஓரத்தில் அதிகம் குறிப்புகள் எடுக்கப்பட்டிருக்கும். ரஷியா பட், இஸ்மாட் சுங்டாய், முன்ஷி பிரேம்சந்த், சதாத் ஹசன் மான்டோ, ஷேக்ஸ்பியரின் உருது மொழிபெயர்ப்பு ஆகிய புத்தகங்கள் உள்ளன. ஹாரி பாட்டர் மற்றும் சேத்தன் பகத்தின் புத்தகங்களும் உள்ளன.
சர்தாப் ஷா (20), உத்ரபிரதேசத்தின் காஷிப்பூர் மாவட்டத்தில் உள்ள கிஷிர்பூர் அலி நகர் கிராமத்தைச் சேர்ந்தவர். உஜாலே கிதலாஷ் என்ற ஷாரத் பகாரேயின் அச்சமூட்டும் இந்தி புத்தகத்தை படித்துக்கொண்டிருக்கிறார். ஆனால், மர அலமாரியின் உயரத்தில் வைக்கப்பட்டுள்ள, என்சைக்ளோபீடியா புத்தகத்தை ஏக்கத்துடன் பார்த்து, “இந்த புத்தங்களை வீட்டிற்கு எடுத்துச்செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. எனக்கு இதில் உள்ள வரைபடங்களை பார்க்க வேண்டும். சுவிட்சர்லாந்தில் சென்று சாகசம் செய்ய வேண்டும் என்று கற்பனை செய்துகொள்வேன்“ என்று அவர் கூறுகிறார்.
ஷாவுக்கு பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் அவருக்கு முதுநிலை ஆங்கிலம் கற்க இடம் கிடைத்தது, அண்மையில் அவருக்கு கிடைத்த சாதனையாக அவர் கருதுகிறார். ஆனால், அவரின் பெற்றோர் அவரை அனுப்பவில்லை. அவரது தந்தை டிரக் ஓட்டுனராக உள்ளார். தாய் இல்லத்தரசி. “அவர்களுக்கு என்னை விடுதிக்கு அனுப்புவதில் விருப்பமில்லை“ என்று அவர் கூறுகிறார். அதற்கு பதில் அவர்கள், ஷர்தாபை, கிராமத்தில் படிக்கும் காலத்தில் அவர் தங்கியிருந்த அவர் மாமாவின் வீட்டிலிருந்து அவர்களுடனே மும்ராவுக்கு அனுப்பிவிட்டனர். அவர் தற்போது மும்பை கல்லூரியில் சேர்வதற்காக முயற்சித்துக் கொண்டிருக்கிறார். அவர் வசிக்கும் கட்டிடத்தில் ஒருவர் ரெஹ்னுமா குறித்து கூறியவுடனே, அவர் உடனே இங்கு வந்து சேர்ந்துகொண்டார்.
“நான் கிராமத்தில் எனது நேரத்தை வீணாக்கிக்கொண்டிருந்தேன். இங்கு குறைந்தபட்சம் நான் படிக்கவும், கற்றுக்கொள்ளவுமாவது செய்கிறேன்“ என்று அவர் கூறுகிறார். மும்ராவுக்கு பழகிக்கொள்வதற்கு அவருக்கு சிறிது காலம் தேவைப்பட்டது. ஆனாலும், அவர் தனது கிராமத்தையும் இழக்கவில்லை. “அங்கு பெரிய வாய்ப்புகள் கிடைக்காது. குழந்தையாக அந்த கிராமம் உங்களுக்கு பிடிக்கும். ஆனால் வளர்ந்தவுடன் அங்கு வாய்ப்புகள் கிடையாது“ என்று அவர் கூறுகிறார். அவர் ரெஹ்னுமா நூலகத்துடன் மிக நெருக்கமாகிவிட்டார் என்பது உறுதியாக தெரிகிறது. “இதுதான் நான் விரும்பும் சாகசம்“ என்று அவர் கூறுகிறார்.
1992ம் ஆண்டு பம்பாயில் ஏற்பட்ட கலவரத்திற்கு பின்னர் பெருமளவிலான இஸ்லாமிய குடும்பங்கள் மும்ராவுக்கு இடம் பெயர்ந்தன. தென் மும்பையில் உள்ள வொர்லியில் இருந்து கலக்கத்துடன் ஆனால், உடல் ரீதியான பாதிப்பின்றி அந்த நேரத்தில் இங்கு வந்தவர்கள்தான் ஷபியா ஷெய்க்கின் குடும்பத்தினர். அவரது கணவரிடம் இருந்து விவகாரத்து வேண்டிதான் முதல் முறையாக ஷபியா ரெஹ்னுமா வந்தார். அவரது கணவர், கர்ப்பமான ஷபியாவை திருமணமான 8 மாதத்தில் கைவிட்டார். ஆனால் இங்கு ஒரு நூலகத்தை பார்த்த அவர் குழப்பமடைந்தார். “இந்த சமூகத்தில் பெண்களுக்கு எட்டாமல் நிறைய விஷயங்கள் இருப்பதுபோல், புத்தகங்களும் உள்ளது என்று நான் நினைக்கிறேன்“ என்று அவர் கூறுகிறார்.
ஷபியாவும், அவரது தாய் ஹசீனா பனோவும் விரைவிலே நூலகத்தில் உறுப்பினாரானார்கள். ஷபியாவுக்கு தற்போது 27 வயதாகிறது. அவரது 4 வயது மகள் மிஸ்பா பாத்திமாவுக்காக சில புத்தகங்களை வாசித்தும் காட்டுகிறார். அவர் தற்போது நூலகத்தில் உள்ள புத்தகங்களை ஆர்வத்துடன் வாசிக்கும் பழக்கம் உள்ளவர். அவர்கள் வாரத்திற்கு 2 அல்லது 3 புத்தகங்கள் மற்றும் 2 அல்லது 3 மாத இதழ்கள் எடுத்துச்சென்று படித்துவிட்டு வருவர். மற்றவர்கள் இரண்டு மாதத்திற்கே ஒரு புத்தகம்தான் படித்து, திருப்பிக்கொடுப்பார்கள்.
ஷபியா தற்போது நேம்ரா அகமதின் ஜானட் கி பாட்டே வாசித்துக்கொண்டிருக்கிறார். பலரும் பாராட்டக்கூடிய பாகிஸ்தானின் நாவல் எழுத்தாளர். அது ஒரு பெண்ணுக்கு எதிராக நடைபெறும் பாலியல் வன்முறை குறித்த கதை. கதையில் ஆண் கதாபாத்திரம் அந்தப்பெண்ணை பாதுகாக்காது. “எல்லோரையும் காப்பாற்ற எப்போதும் ஹீரோ வருவார் என்பது உண்மை கிடையாது“ என்று அவர் கூறுகிறார்.
வாசகர்களை கவரும் வகையில் புத்தகங்கள் வைத்திருப்பது மட்டுமன்றி, நூலகம் பெண்களை ஒன்றிணைத்து அவர்கள் சேர்ந்து மகிழ்ந்திருக்கும் இடமாக மாற்றியுள்ளது. “இங்கு எங்கு வேண்டுமானாலும் நாங்கள் அமர்ந்து பேசி, சிரித்து, விளையாடி மகிழ்ந்திருக்க முடியும். எங்களுக்கு இங்கு கிடைக்கும் சுதந்திரம் வீட்டில் கிடைக்காது. தற்போது நாங்கள் விவாதிக்கும் விஷயம் ஜீ (zee) டிவியின் புகழ்பெற்ற இஸ்க் சுபான் அல்லா என்ற முத்தலாக் குறித்த நிகழ்ச்சியாகும்.
நூலகர் பைசா, விருப்பமின்றி ஏற்றுக்கொண்ட வேலையாக இருந்தபோதும், அவர் இளம் பெண்களுக்கு முன்னுதாரணமாக உள்ளார். இப்போது அவராகவே முன்வந்து பெண்களை ஒன்றுதிரட்டி, அவர்கள் தங்களால் படித்துக்கொள்ள முடியாத புத்தகங்கள் குறித்து கலந்துரையாடுகிறார். அவர் கலந்துரையாடல் நடத்திய கடைசி புத்தகம் ராணா அயூப்பின் குஜராத் பைல்ஸ். இது 2002-ல் குஜராத் மாநிலத்தில் நடந்த கலவரங்கள் குறித்த புலனாய்வு புத்தகம். ஆனால், காலிப் – பயாஸ் கலந்துரையாடல் போலன்றி, இது முற்றிலும் மந்தமாக நடைபெற்றது.
தமிழில்: பிரியதர்சினி. R.