ஒரு வருடத்துக்கும் மேலாக ஜக்காம்புடி கிராமத்திலிருந்து விஜயவாடா நகரத்தின் புன்னமி படித்துறைக்கு தினமும் ஆறு கிலோமீட்டர் தூரம் நடந்து வருகிறார் கொல்லட்டி நாராயணா. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அங்கு இருப்பவர்களுடன் சேர்ந்து, மீன் பிடித்து கரையோரத்தில் விற்கும் வேலையைச் செய்து வருகிறார் அவர்.
27 வயது நாராயணாவுக்கு பார்வைத் திறன் குறைவு. தினமும் வீட்டுக்கு இன்னொரு ஆறு கிலோமீட்டர் நடக்கிறார். “ஆட்டோவுக்கு 40 ரூபாய் செலவழிக்க முடியாததால் நான் நடக்கிறேன்,” என்கிறார் அவர். “ஒருநாளில் 50-100 ரூபாய் கிடைப்பது கூட சிரமம்.” நான்கு மற்றும் இரண்டு வயதுகளில் இருக்கும் அவரின் இரு மகள்களும் கூட பார்வைத் திறன் குறைந்தவர்கள்தான்.
2016ம் ஆண்டின் நடுவே புன்னாமி படித்துறையில் நாராயணா வாழ்ந்து வந்த வீடு இடிக்கப்பட்ட பிறகு, 12 கிலோமீட்டர் தொலைவு தினமும் நடக்கும் நிலைக்கு அவர் ஆளாகியிருக்கிறார். அவர் அப்போது வசித்த சிறிய வீடு அவரின் சகோதரருக்கு சொந்தமானது. அவ்வப்போது வாடகையின் சிறு பகுதியைக் கொடுப்பார். இப்போது அவர் ஜக்காம்புடியின் ஒய்எஸ்ஆர் காலனி வீட்டில் வசிக்கிறார். 1,000 ரூபாய் வாடகைக் கொடுக்கிறார். (அவரின் சகோதரரும் வீடு இடிக்கப்பட்ட பிறகு இடம்பெயர்ந்து விட்டார். ஆனால் அவரின் சிறிய வீட்டில் நாராயணாவின் குடும்பத்துக்கு இடம் இருக்காது.)
2016ம் ஆண்டின் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் பெரும்பாலும் மீனவத் தொழிலாளர்கள் வசித்த 2,000 வீடுகள் விஜயவாடாவில் இடிக்கப்பட்டன. அவர்களின் இடத்தில், 12 வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் கிருஷ்ண புஷ்கரலு விழாவுக்கு வரும் பக்தர்களுக்காக 18 படித்துறைகளுக்கும் மேல் புதிதாகக் கட்டப்பட்டன. பழைய புன்னாமி படித்துறையும் பக்தர்களுக்காக பெரியளவில் விரிவாக்கப்பட்டது. அது முக்கியஸ்தர்களுக்கான ‘விஐபி’ படித்துறையாக ஆக்கப்பட்டிருக்கிறது.
வீடுகள் அகற்றப்பட்ட இடம் கிட்டத்தட்ட 20 கிலோமீட்டர்களுக்கு ஆற்றங்கரையோரத்தில் அமைந்திருக்கிறது. ஆந்திராவின் முதல்வராக இருந்த சந்திரபாபு நாயுடு, குறைந்தபட்சம் 1,000 கோடி ரூபாய் (செய்தித்தாள்களின் அறிக்கைகளின் அடிப்படையில்) மக்கள் பணத்தை விழாவுக்காக செலவிட்டார்.
விழா முடிந்த ஒரு வருடத்தில், படித்துறை வெற்றிடம் ஆனது. ஒய்எஸ்ஆர் காலனியில் நாராயணாவின் பக்கத்து வீட்டுக்காரரான 60 வயது லங்கே மகேஷ்வரி புன்னாமி படித்துறையில் மீன் சுத்தப்படுத்தும் வேலையில் இருந்தார். அவர் சொல்கையில், “70 வருடங்களாக இது மீன் சந்தையாக (மற்றும் மீனவச் சமூகத்தின் வசிப்பிடமாகவும்) இருந்தது. ஆனால் அந்த நாளன்று புல்டோசர்கள் எங்கள் வீடுகளின் சுவர்களை தரைமட்டமாக்கின. செங்கற்களும் தூசும் எங்களின் உணவுத் தட்டுகளில் விழுந்தன. ஒரு சிறு கோவிலும் ஓய்வெடுக்கவும் மழை வந்தால் காத்துக்கொள்ளவும் ஒரு சிறு கொட்டகையும் இருந்தன. அவர்கள் எல்லாவற்றையும் அகற்றி விட்டார்கள்.”
இடிக்கப்பட்ட வீடுகள் பலவற்றுக்கு பட்டா கிடையாது. அரசு அவற்றை நஷ்ட ஈடு கொடுக்கத் தேவையற்ற ஆக்கிரமிப்புகளாக பார்த்தது. ஆனால் வீடுகள் இடிக்கப்பட்ட இடத்தில் குடும்பங்களும் மக்கள் அமைப்புகளும் தொடர் போராட்டங்கள் நடத்தின. அருகே இருந்த தேசிய நெடுஞ்சாலையும் போராட்டக்காரர்களால் மறிக்கப்பட்டது. எனவே செப்டம்பர் 2016-ல் வருவாய்த்துறையாலும் ஆட்சியராலும் ஒவ்வொரு குடும்பத்திடமும் 66,000 ரூபாய் கேட்கப்பட்டது. ஒய்எஸ்ஆர் காலனியில் வீடு ஒதுக்கப்படவே அந்தத் தொகை. பணம் கொடுக்க முடிந்தவர்கள் கொடுத்தனர். நாராயணாவைப் போன்ற பிறர், அவர்களுக்குக் கட்டுபடியாகாத அளவுக்கான வாடகையைக் கொடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
ஒய்எஸ்ஆர் காலனியை மாநில அரசாங்கம்,
ஜவஹர்லால் நேரு தேசிய நகர புதுப்பிப்புத் திட்டத்தின் கீழ் கட்டியது. விஜயவாடாவிலும்
அதைச் சுற்றியும் அறிவிக்கப்பட்டிருந்த பல உள்கட்டமைப்புத் திட்டங்களால் அப்புறப்படுத்தப்பட்ட
வெவ்வேறு சமூகங்கள் இங்கு அனுப்பப்பட்டனர். காலனியின் உள்கட்டமைப்போ மிக மோசமாக இருக்கிறது.
நகரத்துக்கு பேருந்துகள் எப்போதாவதுதான் வரும். மோசமான சுகாதாரம். அரசு மருத்துவமனைகளோ
பள்ளிகளோ அருகே கிடையாது.
கிருஷ்ணா நதியின் இடதுக் கரையில் விஜயவாடாவைப் போல், வலது கரையிலும் சமூகங்கள் அப்புறப்படுத்தப்படுகின்றன. அரசாங்கம் புதிதாக காட்சிப்படுத்தவிருக்கும் நதியோரத் தலைநகரமான அமராவதி வலது கரையில் இருக்கிறது. 10 மீன்பிடித்துறைகளில் இருக்கும் 4,000 மீனவப் பணியாளர்களின் குடும்பங்களும் அங்கிருந்து அப்புறப்படுத்தப்படலாம். மீன்பிடித்துறைகள் இருக்கும் 10 கிராமங்களில் 50,000 பேர் (தலைநகரப் பகுதி மேம்பாட்டு ஆணையத்தின் ஆவணங்கள்படி) வசிக்கின்றனர்.
10 மீன்பிடித்துறைகளில் பொலகம்படும் ஒன்று. 2017ம் ஆண்டின் தொடக்கத்தில், - ‘சர்வதேச தரத்திலான’ புதிய நகரத்தின் வாயிலாக தற்போது இருக்கும் - இந்த மீன்பிடித்துறையின் மீனவப் பணியாளர்கள், கொண்டாவீட்டி கால்வாய் வெள்ள நீர் வெளியேற்றும் திட்டத்துக்காக அப்புறப்படுத்தப்படுவதை எதிர்த்து 108 நாட்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். தெற்கு அமராவதியின் 230 கோடி ரூபாய் மதிப்பு வாய்ந்தத் திட்டம், தலைநகரப் பகுதி வெள்ளத்தால் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக உருவாக்கப்பட்டது. இப்பகுதி கொண்டாவீட்டி கால்வாயிலிருந்து கிருஷ்ணா நதிக்கரை வரை நீளும் பகுதி ஆகும்.
“வெள்ளம் ஏற்படும் பகுதியில் தலைநகரை அமைக்க முயலுவதும் அதைச் சரிகட்டவென கொண்டு வரப்படும் கொண்டாவீட்டித் திட்டமும் அரசாங்கத்தின் முட்டாள்தனத்தையேக் காட்டுகிறது,” என்கிறார் 55 வயது ரவுலா மகாலஷ்மி. பொலகம்படு மீன்பிடித்துறையில் மீன் சுத்தப்படுத்தும் வேலை செய்பவர் அவர்.
“வாரநாளில் 50 ரூபாயும் ஞாயிற்றுக் கிழமைகளில் 150 ரூபாயும் சம்பாதிக்கிறேன்,” என்கிறார் அவர். “ஆனால் இப்போது ஆற்றில் மீன்கள் அதிகம் (மாசுபடுத்தும் தொழிற்சாலைகளால்) கிடைப்பதில்லை…” மகாலஷ்மிக்கு இரண்டு மகள்கள். ஒருவருக்கு திருமணம் ஆகவில்லை. இன்னொருவர் விவாகரத்து ஆனவர். புதிய தலைநகரத்தின் பகுதியாக, நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுக் குடியிருப்புக் கட்டடங்கள் கடந்த இரண்டு வருடங்களில் கட்டப்பட்டதால், விவசாயத் தொழிலாளர்களாக இருந்த அவர்களின் வாழ்வாதாரமும் அழிக்கப்பட்டுவிட்டது. “கடந்த காலத்தில் நிறைய மீன்களை அண்டை வீட்டாரோடு நாங்கள் பகிர்ந்திருக்கிறோம். இப்போது அதைச் செய்ய முடிவதில்லை. எல்லா மீன்களையும் விற்றுவிடுகிறோம். அப்போதும் கூட போதுமான அளவுக்கு வருமானம் கிடைப்பதில்லை,” என்கிறார் மகாலஷ்மி.
“கொண்டாவீட்டி கால்வாய்த் திட்டத்துக்கான உண்மையானக் காரணம், கோட் சூட் போட்டு கார்களில் உலா வரும் மக்கள் வாழப் போகும் உலகத்தர நகரத்தின் நுழைவாயிலில் தொழிலாளர்கள் (மற்றும் மீனவர்கள்) வாழக்கூடாது என்பதுதான். எங்களை விரட்ட முதல்வர் விரும்புகிறார். இந்தத் திட்டம் ஒரு சாக்குதான்,” என்கிறார் பொலகம்படு மீனவக் கூட்டுறவு சங்கத் தலைவரான வெங்கட நாராயணா. குண்டூர் மாவட்டத்தின் தடெபள்ளி, உண்டவல்லி மற்றும் சீதாநகரம் ஆகிய கிராமங்களின் 400 மீனவக் குடும்பங்கள் இச்சங்கத்தில் உறுப்பினர்களாக இருக்கின்றனர். இப்பகுதியில் இருக்கும் 10 மீனவச் சங்கங்களில் இது ஒன்று.
கொண்டாவீட்டி கால்வாய்த் திட்டத்தின் ஒரு பகுதியாக, செழிப்புடன் இயங்கிக் கொண்டிருந்த இரண்டு ஏக்கர் மீன்பிடித்துறையும் 10 கொட்டகைகளுடன் கூடியச் சந்தையும் ஜனவரி மாதத்தில் இடிக்கப்பட்டது. அங்கிருந்த மீனவப் பணியாளர்களுக்கான தங்குமிடம் மற்றும் நஷ்ட ஈடு பற்றி எந்தவித அரசு முறையான திட்டம் கூட அப்போது இருக்கவில்லை. அப்புறப்படுத்தப்பட்ட குடும்பங்களின் போராட்டங்களுக்குப் பிறகு மாநில அரசு நஷ்ட ஈடுக்கு உறுதியளித்தது. ஒரு படகுக்கு ரூ.50,000மும் மீன் சுத்தப்படுத்தி வருமானம் ஈட்டிய ஒவ்வொரு பெண்ணுக்கும் ரூ.25,000 நஷ்ட ஈடென கூறப்பட்டது. ஆனால் இதுவரை ஒன்றும் கிடைக்கவில்லை.
200 மீட்டர் தள்ளி, பொலகம்படு மீன்பிடித்துறை மற்றும் சந்தைக்கென ஒரு ஏக்கர் நிலத்தையும் அரசாங்கம் ஒதுக்கியிருக்கிறது. ஆனால் அதில் ஒரு பகுதி ஒரு அரசியல் தலைவரால் ஆக்கிரமிக்கப்பட்டு வேலியடைக்கப்பட்டிருக்கிறது. ஒரே ஒரு கொட்டகையைத் தவிர, மீனவச் சமூகத்தின் அன்றாட வாழ்க்கைகளுக்கான எந்தவித உள்கட்டமைப்பும் புதிய இடத்தில் இல்லை.
அமராவதிக்கான பிற திட்டங்களும் செயல்பாட்டில் இருக்கின்றன. நதிக்கரை நீர்ப் பூங்காக்களும் வார இறுதிநாள் விடுதிகளும் அவற்றில் அடக்கம். இவற்றுக்கிடையில், மீனவப் பணியாளர்களுக்கான பிரதான வருமானமாக இருக்கும் ஆற்று மீன்களும் குறைந்து கொண்டு வருகிறது. “எங்களின் சங்கத்திலுள்ள 400 மீனவர்களில், 100 பேர்தான் மீன்பிடித் தொழிலில் இருக்கின்றனர்,” என்கிறார் வெங்கடா. “மிச்ச பேர் விஜயவாடாவிலும் குண்டூரிலும் தினக்கூலித் தொழிலாளர்களாக பணிபுரிகின்றனர்.” அவர்களின் வாழ்க்கைகளை அழித்த அதே இடங்களாகவும் அவை இருக்கக் கூடும்.
தமிழில் : ராஜசங்கீதன்