தங்களது மாட்டுவண்டியை ஓட்டிக்கொண்டு விகாஷ் யாதவும் லட்சுமன் சிங்கும் கமலா மார்க்கெட்டுக்கு வந்தபோது நண்பகல் தாண்டியிருந்தது. சப்ஸி மண்டி ரயில் நிலையத்திற்கு சற்று தொலைவிலுள்ள வடக்கு-மத்திய டெல்லியின் பிரதாப் நகரிலிருந்து சரக்குகளை எடுத்து வரும் இவர்கள், புதுடெல்லி ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள இரைச்சலான போக்குவரத்து மையத்தில் அதை பட்டுவாடா செய்கிறார்கள்.
லூதியானாவிலிருந்து வரும் சைக்கிள் பாகங்கள், ஆக்ராவிலிருந்து வரும் ஷூக்கள், மத்தியபிரதேசம் மற்றும் பஞ்சாப்பிலிருந்து வரும் கோதுமை, தென் இந்தியாவிலிருந்து வரும் மோட்டார் பாகங்கள் போன்ற பொருட்களை ரயில்களிலும் லாரிகளிலும் கொண்டு வரும் டிரான்ஸ்போர்டர்ஸ், அவைகளை குறுகிய தூரங்களுக்கு எடுத்துச்செல்ல மாட்டுவண்டிகளை வாடகைக்கு எடுக்கிறார்கள்.
சரக்குகளை ஏற்றுவது மற்றும் இறக்குவது போன்ற சேவைகளையும் வழங்குகிறார்கள் மாட்டுவண்டி ஓட்டுனர்கள். “டெம்போவில் ஒருமுறை சரக்கு ஏற்றிச் செல்ல 1000 ரூபாய் செலவாகும். ஆனால் மாட்டுவண்டி மலிவானது. இல்லையென்றால் எங்களை தேடி யாரும் வரமாட்டார்கள். தினமும் இரண்டு முறை செல்லும் எங்களுக்கு ஒரு நாளைக்கு எப்படியும் 800-900 ரூபாய் கிடைக்கும்” என்கிறார் 23 வயதான விகாஷ்.
தங்கள் குடோனில் இருந்து அருகிலுள்ள கடைகளுக்கு சரக்குகளை எடுத்துச் செல்ல மாட்டுவண்டிகளை வாடகைக்கு எடுக்கிறார்கள் டிரான்ஸ்போர்டர்ஸ். நகரத்தின் மற்ற பகுதிகளுக்கு தங்கள் பொருட்களை அனுப்புவதற்கும் பல கடைக்காரர்கள் மாட்டுவண்டிகளை நாடுகிறார்கள்.
குறிப்பிட்ட நேரத்தில் சில பகுதிகளுக்கு மட்டுமே மாட்டுவண்டிகள் செல்ல வேண்டும் என டெல்லி போக்குவரத்து காவல்துறை விதிகளில் தடை இருந்தாலும், வேறு எந்த கடுமையான விதிகளும் கூறப்படவில்லை என்கிறார் 27 வயதான லட்சுமன். அவர் கூறுகையில், “நாங்கள் யாரிடமும் அனுமதி வாங்க வேண்டியதில்லை. போக்குவரத்து காவலுருக்கு நாங்கள் அபராதமும் செலுத்துவதில்லை. அதனால்தான் நாங்கள் இதை பயன்படுத்துகிறோம்” என்கிறார்
கமலா மார்க்கெட்டில் இருந்து நான்கு கிமீ தொலைவிலுள்ள மக்கள் நெருக்கம் மிகுந்த மோதியா கானில் லட்சுமன் மற்றும் விகாஷுக்கு (மேலேயுள்ள முகப்பு படத்தில் இருப்பவர்கள்) சொந்தமான மாடுகளும் மற்றவர்களின் மாடுகளும் குறுகலான தெருக்களில் நிற்கின்றன. மத்திய டெல்லியில் உள்ள பஹர் காஞ்ச் பகுதியில் பல மாட்டுவண்டி உரிமையாளர்கள் வாழ்ந்து வருகிறார்கள். நகரத்திற்கு சரக்கு ஏற்றப் போகாத வண்டிகள் நடைபாதை ஓரத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. அதன் ஓட்டுனர்கள் சத்தமாக அரட்டையடித்துக் கொண்டும் தங்கள் மாடுகளுக்கு உணவளித்து கொண்டும் இருக்கிறார்கள்.
அவர்களில் ஒருவர்தான் போலு சிங். இவர் தனது 12 வயதிலிருந்து மோதியா கான் பகுதியில் மாட்டுவண்டி ஓட்டி வருகிறார். “நான் பள்ளிகூடத்திற்கு சென்றதேயில்லை. நானாக வண்டியை ஓடுவதற்கு முன் என் அப்பாவோடு செல்வேன். ஒருநாள், சதார் பஜாருக்கு சில பொருட்களை ஏற்றி வருமாறு என் அப்பா கூறினார். அன்றிலிருந்து நான் நிறுத்தவே இல்லை” என்கிறார். இவர் தற்போது மூன்று மாட்டுவண்டிகள், மூன்று காளைகள் மற்றும் ஒரு பசுவை சொந்தமாக வைத்துள்ளார்.
மோதியா கானில் பிறந்த போலு கானிற்கு தற்போது 64 வயதாகிறது. என் தந்தைக்கு 12 வயதாக இருக்கும்போது, என்னுடைய தாத்தா-பாட்டிகள் ராஜஸ்தானின் சித்தார்காரிலிருந்து டெல்லிக்கு வந்ததாக அவர் நினைவுகூர்கிறார். போலுவின் தாத்தா, தன்னிடம் உள்ள சில சொத்துக்களை விற்று, அந்த பணத்தில் மாட்டுவண்டி வாங்கி, பிழைப்பை தேடி அந்த வண்டியிலேயே டெல்லிக்கு வந்துள்ளார்.
விகாஷ் மற்றும் லட்சுமன் போல், போலு சிங்கும் ஒரு நாளைக்கு இரண்டு முறை மத்திய டெல்லியைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு தனது வண்டியில் சரக்கு ஏற்றிச் செல்கிறார். போக்குவரத்து நெரிசலை பொறுத்து, ஒரு தடவை செல்ல 45 முதல் 60 நிமிடங்கள் ஆகும். இவரும் ஒரு நாளைக்கு 800-900 ரூபாய் சம்பாதிக்கிறார். குளிர் காலங்களில் அவ்வுளவு எளிதில் மாடுகள் சோர்வடையாததால், இரண்டு முறை சரக்கு ஏற்றி செல்கிறார். இதன் மூலம் 300-600 ரூபாய் அதிகமாக கிடைக்கிறது. “ஆனால் என்னால் ஒரு பைசாவை கூட சேமிக்க முடியவில்லை. மாட்டை கவனிக்கவே பாதி தொகை செலவாகிறது. மீதி இருப்பது தினசரி தேவைகளுக்கு பயன்படுகிறது” என்கிறார் போலு சிங்.
மோதியா கானில் போலு சிங்கிற்கு சொந்தமாக வீடு உள்ளது. தனது 30 வருட சேமிப்பிலிருந்து இந்த வீட்டை அவர் கட்டியுள்ளார். ஆனாலும் தனது மாட்டிற்கு அருகில் இருக்க வேண்டும் என நடைபாதையில் தார்ப்பாய் கொண்டு அமைக்கப்பட்ட சிறிய அறையில் வசிக்கிறார். மாடுகளை கவனித்து கொள்வதற்காக அவரது மனைவி கமலா பாயும் அங்கேயே தங்கியுள்ளார். முப்பது வயதை கடந்த இவர்களின் மூன்று மகன்களும், அதிகமான வருமானத்தை ஈட்டுவதற்காக திருமணமான பிறகு மாட்டுவண்டி ஓட்டுவதை நிறுத்திவிட்டனர். இப்போது கட்டுமான இடங்களில் தினசரி கூலி வேலைக்கும், பஹர் காஞ்ச் மற்றும் ஷாதாரா பகுதியில் இருக்கும் மறுசுழற்சி தொழிற்சாலைகளுக்கும், மூட்டை சுமக்கவும் செல்கிறார்கள். இவர்கள் தங்கள் குடும்பத்தோடு போலு சிங் கட்டிய வீட்டில் வசித்து வருகிறார்கள்.
மோதியா கானில் வசிக்கும் பல இளைஞர்களும் தங்கள் தந்தையின் பாதையை பின்தொடர்கிறார்கள். மூன்றாம் தலைமுறை வண்டி ஓட்டுனரான கல்லு குமார், 18, பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டு மாட்டுவண்டி ஓட்டிக் கொண்டிருக்கிறார். பத்தாம் வகுப்பில் தேர்வாக முடியாததால் பள்ளி செல்வதை நிறுத்திவிட்டார் கல்லு. “நான் பள்ளியில் படிக்கும் போது, சரக்குகளை ஒப்படைக்க என் அப்பாவோடு செல்வேன். மாடுகளையும் கவனித்து கொள்வேன். என்னை பள்ளிக்கு அனுப்ப என் குடும்பத்திடம் போதிய பணம் இல்லாததால், எனது அப்பாவின் வண்டியை ஓட்ட ஆரம்பித்தேன்” என்கிறார் கல்லு குமார்.
பள்ளியிலிருந்து இடைநின்றதை நினைத்து கல்லு வருந்தவில்லை. அவர் கூறுகையில், “நான் சம்பாதிப்பதால் என் குடும்பமும் சந்தோஷமாக உள்ளது. என் தந்தையின் பாதையை பின்பற்றி நானும் மாட்டுவண்டி ஓட்டுகிறேன்”. கல்லுவின் மூத்த சகோதரர் சுரேஷும், 22, மாட்டுவண்டி ஓட்டுகிறார். எட்டாம் வகுப்பு படிக்கும் இவர்களின் தம்பி சந்தன், 14, அவ்வப்போது இவர்களோடு சரக்கு ஏற்றிச் செல்வான்.
கல்லுவின் வீட்டிற்கு அருகிலேயே வசிக்கும் விஜய் குமார் சிங்கிடம் இரண்டு மாட்டுவண்டிகள் மற்றும் இரண்டு காளைகள் சொந்தமாக உள்ளன. தனது மகனுக்கு அதிகமான வசதி வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என அவர் விரும்புகிறார். தனது 11 வயது மகன் ராஜேஷை பார்த்தபடியே பேசும் விஜய், “அவனை பள்ளிக்கு அனுப்பி, அவனது படிப்பிற்காக எல்லாவற்றையும் செய்து கொடுக்க தயாராக இருக்கிறேன். என் தந்தை வசதியாக இல்லை. ஆனால் வண்டி ஓட்டியாவது என் மகனுக்கு செலவு செய்வேன்” என்கிறார். ராஜேஷூம் அவனது எட்டு வயது தம்பி சுரேஷும் பஹர் காஞ்சில் உள்ள அரசாங்க பள்ளியில் படித்து வருகின்றனர்.
தற்போது 32 வயதாகும் விஜய், 12 வயதாக இருக்கும் போதே மாட்டுவண்டி ஓட்ட கற்றுக்கொண்டார். அவர் கூறுகையில், “நாங்கள் நகரத்தில் வாழ்ந்தாலும் இன்றும் பாரம்பரிய முறையில்தான் வருமானம் ஈட்டி வருகிறோம். எனது மாமா விவசாயத்திற்காக காளை மாடு வைத்திருந்தார். ஆனால் இப்போது அவரும் கூட டிராக்டரை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார். பாரம்பரிய முறையில் வாழ்ந்து வருவதற்காக கொடுக்கும் விலையை நாங்கள் தெரிந்து வைத்துள்ளோம். ஆனால் எங்கள் காளையை நாங்கள் நேசிக்கிறோம். அதுவும் எங்கள் குடும்பத்தில் ஒன்றுதான்”.
விஜயும் அவரது மனைவி சுமன், 30, இருவரும் சேர்ந்து தங்கள் மாட்டை கவனித்து கொள்கிறார்கள். தினமும் காலை, மதியம், மாலை என மூன்று வேளைகளிலும் மாடுகளுக்கு கோதுமை அல்லது அரிசி தவிடும், வைக்கோலும் கடலைப்பருப்பும் கொடுக்கப்படுகிறது. வெயில் காலத்தில், மாடுகளின் சூட்டை தணிக்கவும், இழந்த சக்தியை பெறவும் வெல்லம், பால், வெண்ணெய் மற்றும் நெல்லிக்காய் சூரணம் (பதப்படுத்திய) ஆகியவைகளை உணவில் சேர்த்து கொடுக்கப்படுகிறது.
சில சமயங்களில் கோயில் அறக்கட்டளை அல்லது மத அமைப்புகள் நடத்தும் கோசாலை மூலம் மாடுகளுக்கான உணவு அல்லது மருந்துகளை தந்து உதவுவார்கள் என மாட்டுவண்டி உரிமையாளர்கள் கூறுகின்றனர். எனினும், பசுக்களுக்கு மட்டுமே அவர்கள் இடம் தருகிறார்கள். அதனால் 17 அல்லது 18 வயதை அடைந்த காளை மாடுகளை ஹர்யானா, உத்தரபிரதேச தெருக்களில் விட்டுவிடுகின்றனர் வண்டி உரிமையாளர்கள். இப்படி தெருக்களில் அலைந்து திரியும் மாடுகளை கசாப்பு கடைக்காரர்கள் பிடித்து செல்கின்றனர்.
அதே மாநிலங்களில் இருந்தும் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்தும் இளம் காளைகளை வாங்குகிறார்கள் மாட்டுவண்டி உரிமையாளர்கள். மாட்டின் வயது, அதன் வகைகள் பொறுத்து விலை வேறுபடும். வயதான மாடுகளை 15,000 ரூபாய்க்கும், ஏழு வயது மாடுகள் – இந்த வயதில்தான் காளைகள் அதிக திறனோடு இருக்கும் – 40,000 முதல் 45,000 ரூபாய்களுக்கும் கிடைக்கும். தங்கள் சேமிப்பில் இருந்தோ அல்லது டிரான்ஸ்போர்டர்ஸ்களிடம் கடன் வாங்கியோ மாட்டை வாங்குகிறார்கள். இதற்கு அவர்கள் மாதத்திற்கு 1.5 முதல் 2.5 சதவிகித வட்டி வசூலிக்கிறார்கள்.
புதிய மாட்டுவண்டியை வாங்குவதற்கு ரூ.50,000 முதல் ரூ.60,000 வரை செலவாகும். மா, வேம்பு அல்லது கருவேல மரங்களின் கட்டைகளிலிருந்து பார வண்டியை உள்ளூர் தச்சர்கள் உருவாக்குகிறார்கள். இவர்களோடு சேர்ந்து பணி செய்யும் இரும்பு கொல்லர்களுக்கு வண்டி உரிமையாளர்கள் கமிஷன் கொடுக்கிறார்கள். சீஷம் மரத்தின் கட்டையிலிருந்து செய்யப்படும் மாட்டுவண்டிகளின் விலை சற்று அதிகம். வண்டி அச்சு மற்றும் தாங்கு உருளைகளை மலிவாக இரும்பிலோ அல்லது எஃகு அல்லது அலுமினியத்தால் செய்யலாம். சிலசமயங்களில், ஹர்யானா அல்லது ராஜஸ்தானில் குறைந்த விலைக்கு மாட்டுவண்டிகளை வாங்குகிறார்கள்.
450 முதல் 500 மாட்டுவண்டிகள் வரை தலைநகரத்தில் ஓடும் என போலுவும் விகாஷும் மதிப்பிடுகின்றனர். ஆனால் இந்த வண்டிகள் பதிவு செய்யப்படுவதில்லை என்பதால் டெல்லி போக்குவரத்து காவல்துறையிடம் இதுகுறித்து எந்த ஆவணமும் இல்லை.
மோட்டார் வாகனங்கள் அதிகமானதன் காரணமாக மாட்டுவண்டி உரிமையாளர்களின் வருமானம் முன்பை விட குறைந்துள்ளது. “முன்பு சரக்குகளை ஏற்றிக் கொண்டு 550கிமீ தள்ளியுள்ள பதேஃபூர் (உத்தரபிரதேசம்) வரை செல்வேன். ஆனால் இப்போது இவ்வுளவு தொலைவு செல்வதற்கு மினி லாரியை பயன்படுத்துகிறார்கள். 4-5கிமீ தூரம் செல்வதற்கு கூட, மூன்று சக்கர வாகனத்தில் சரக்குகளை ஏற்றுகின்றனர்” என்கிறார் கோலு.
1990-களில் ஒரு நாளைக்கு வெறும் 70 ரூபாய்தான் எனக்கு வருமானம் கிடைக்கும். ஆனாலும் வேறு வேலை தேடி எங்கும் செல்ல மாட்டேன் என போலு நினைவுகூர்கிறார். அப்போது நகரத்தின் தெருக்களில் எந்த தடையுமின்றி மாட்டுவண்டியில் சுற்றி வந்துள்ளார். “அப்போதெல்லாம் நான் மகிழ்ச்சியாக இருந்தேன். தினமும் வேலைகள் இருக்கும். ஆனால் இப்போது சிலநேரங்களில் வீட்டில் சும்மா இருக்க வேண்டியுள்ளது” என்கிறார்.
மாலை ஆனதும், விஜயும் கல்லுவும் தங்கள் மாடுகளை கட்டிவிட்டு, வண்டியில் அமர்ந்து மற்ற இரண்டு ஓட்டுனர்களோடு சேர்ந்து கொள்கிறார்கள். பீடியை பற்ற வைக்கும் போலு, தன் நினைவு அடுக்குகளிலிருந்து ஒன்றை கூறுகிறார்: “என்னைச் சுற்றிலும் மாட்டுவண்டிகள் நிற்பதை பார்த்துதான் நான் வளர்ந்தேன். குறைந்தபட்சம் இந்த வண்டிகளையாவது என் பேரக்குழந்தைகள் பார்க்க வேண்டும் என விரும்புகிறேன்”. அங்கிருந்த மற்றவர்கள் இதை அமைதியாக ஆமோதிக்கின்றனர்.
தமிழில்: வி கோபி மாவடிராஜா