செரா படோலி பகுதியில் ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் வெப்பம் நிலவக்கூடிய ஓர்  மதியப்பொழுது அது. அங்குள்ள சாலை ஏறத்தாழ பாலைவனம் போல் காட்சியளிக்கின்றது. அங்கிருந்து கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் தொலைவில் சரயு ஆற்றின் மீதுள்ள பாலமானது உத்தரகண்ட் மாநிலத்தின்  அல்மோரா மற்றும் பிதோராகர்க் மாவட்டங்களின் எல்லைப்பகுதியாக திகழ்கிறது. அங்கு சூரிய ஒளியில் மின்னக்கூடிய சிவப்பு நிற தபால் பெட்டியை நாங்கள் கண்டோம்.

அந்த சிவப்பு நிற தபால் பெட்டி இந்த பகுதியில் உள்ள ஒரே ஒரு தபால் பெட்டியாகும். அது வேறு எங்கும் கவனிக்கப்படாமல் இருக்கலாம். ஆனால்,இங்குள்ள இந்த  தபால் பெட்டி மிகப்பெரும் மைல் கல்லாகும்.  செரா படோலி பகுதியின் புதிய கிளை அஞ்சல் அலுவலகம் முதலில் குமாவேனின் பகுதியாக  கடந்த ஜூன் 23, 2016 அன்று தொடங்கப்பட்டது. இது தற்போது பனோலி சேரா குந்த், சேரா (உர்ஃப்) படோலி, சௌனபடல், நைலி, படோலி சேரா குந்த் மற்றும் சர்டோலா ஆகிய ஆறு கிராமங்களில் சேவை வழங்கி வருகிறது. இந்த கிராமத்தைச் சேர்ந்த பெரும்பாலான மக்கள் விவசாயிகளாகும்.

இந்த பகுதியில் அஞ்சல் அலுவலகம் இல்லாததால் மக்கள் சந்தித்து வந்த பிரச்சனைகள் குறித்த ‘கடிதங்கள் கடக்க மறந்த கிராமம்’ என்ற எனது கட்டுரை பாரியில் (PARI)  வெளியாகிய இரண்டு நாட்களுக்குப் பின்னர் இந்த நிகழ்வு நடந்தேறியுள்ளது. இந்நிலையில், செரா படோலி பகுதி தற்போது 262532 என்னும் அஞ்சல் குறியீட்டினை பெருமையுடன் தாங்கி நிற்கிறது.

கங்கோலிஹாட் தொகுதியின் பிதோராகர்க் பகுதியில் இந்த ஆறு கிராமங்களும் அமைந்துள்ளன. ஆனால், இந்த ஊர்களுக்கான அஞ்சல் நிலையம் பாலத்தின் எதிர்பக்கத்தில்  ஐந்து கிலோமீட்டருக்கு அப்பால் அல்மோரா மாவட்டத்தின் பாசியாச்சனா தொகுதியில் அமைந்துள்ளது. “இது ஒரு முரண்”, என்று முதல் தடவை இந்தப் பகுதியை பார்வையிட்ட போது பானொலி குந்த் கிராமத்தைச் சேர்ந்த மதன் சிங் இது குறித்து தெரிவித்திருந்தார். மேலும், “அவர்கள் தற்போது வரை எங்களை பிதோராகர்க் மாவட்டத்தின் பகுதியாக ஏற்றுக்கொள்ளவில்லை. இது எப்படி இருக்கிறதென்றால் நாங்கள் பிதோராகர்க் மாவட்டத்தில் இருக்கிறோம் . ஆனால் எங்கள் முகவரி அல்மோரா மாவட்டத்தில் உள்ளது போன்று  உள்ளது” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் பி.எ.ஆர்.அய்(PARI) யில் கட்டுரை வெளியாகி சில வாரங்கள் கழித்து, புதிய அஞ்சல் நிலையத்தைப் பார்ப்பதற்காக அங்கு திரும்பிச் சென்றிருந்தேன். முன்னர் அருகில் உள்ள பாசியாச்சனா அஞ்சல் நிலையத்திலிருந்து  கடிதம் வருவதற்கு 10 நாட்கள் காத்திருக்க வேண்டும். அவர்களின் சொந்த மாவட்டமான பிதோராகர்க் நகரில் உள்ள தலைமையகத்தில் இருந்து பணவிடையோ அல்லது கடிதமோ வருவதற்கு கூட கிட்டத்தட்ட ஒரு மாத காலம் காத்திருக்க வேண்டும். இந்த காலதாமதத்தின் காரணமாக முக்கியமான உரையாடல்கள் மற்றும் நிகழ்வுகளையும் அவர்கள் தவறவிட நேர்ந்தது. சில சமயம் முக்கியமான கடிதங்களை நேரில் சென்று  பெற அல்மோராவில் உள்ள  அஞ்சல் நிலையம் செல்வதற்கு 70 கிலோமீட்டர் வரை அவர்கள் பயணிக்க வேண்டி இருந்தது. தற்போது அந்த கிராமத்தினர் மத்தியில் எவ்வளவு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது

ஆறு கிராம மக்களுக்கு சேவை புரிய உள்ள அந்த  புதிய அஞ்சல் நிலையத்தின் திறப்பு விழாவினை  இனிப்பு வழங்கி கொண்டாட உள்ளதாக அவர்கள் என்னிடம் தெரிவித்தனர். இதுகுறித்து தெரிவித்த செரா படோலி பகுதியைச் சார்ந்த  மோகன் சந்திர ஜோஷி, “நாங்கள், புதிய தபால் பெட்டியின் வரவைக் கொண்டாடுகிறோம். பிற இடங்களில் புதிய கடிதங்களையும், பணி ஆணைகளையும் மக்கள் கொண்டாடுகின்றனர்.!. இனி எங்கள் வாழ்வு முன்பிருந்தது போலவே இருக்காது” என்று சிரித்தபடி அவர் கூறினார்.

மேசை போடப்பட்டுள்ள சிறிய அறை, நான்கு நாற்காலிகள், இரும்பு அலமாரி இதுவே  புதிய அஞ்சல் நிலையமாக மாறியுள்ளது. இந்த அஞ்சல் நிலையத்தின் ஒரே அலுவலராக கைலாஷ் சந்திர உபாத்யாய் உள்ளார். இவர் அஞ்சலக அதிகாரி, தபால்காரர் ஆகிய இருவேலைகளையும் மேற்கொள்கிறார். இவர் செராபடோலி பகுதியிலிருந்து சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள  கனை அஞ்சல் நிலையத்திற்கு அலுவலராக நியமிக்கப்பட்டிருக்கிறார். எனினும், புதிய அஞ்சல் நிலையத்திற்கு அலுவலர் நியமிக்கப்படும் இந்த அலுவலகத்தை கவனித்துக் கொள்ள வேண்டுமென கூறப்பட்டுள்ளார். “ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்குள்ளாக அஞ்சலக அதிகாரி மற்றும் தபால் காரர்  இருவரும் நியமிக்கப்படுவார்கள் என்று அஞ்சல் துறை தெரிவித்துள்ளது” என அவர் கூறினார். ஒவ்வொரு காலைப்பொழுதும் கனை பகுதியிலிருந்து தபால்களை சேகரித்து கொண்டு செரா படோலி அஞ்சல் நிலையம் செல்லும் வழியில் வழங்குகிறார்.

PHOTO • Arpita Chakrabarty

கைலாஷ் சந்திர உபாத்யாய் அஞ்சலகத்தில் நியமிக்கப்பட்டுள்ள ஒரே ஒரு அதிகாரியாகும், இவர் அஞ்சலக அதிகாரி,தபால் காரர் ஆகிய இருவேலைகளையும் மேற்கொள்கிறார்

இந்த அஞ்சலகம் திறக்கப்பட்டதற்கு பின்னர் நடந்த மிகப்பெரும் மாற்றம்,  ஆதார் அட்டை சரியான முகவரிக்கு கிடைத்தது தான் என அந்தக் கிராமத்தினர் தெரிவித்தனர். முன்னர் இந்த அட்டைகள் அல்மோரா மாவட்டத்தில் உள்ள, பாசியாச்சனா அஞ்சல் நிலையத்தின் முகவரியைத் தாங்கி வந்துள்ளது. இதுகுறித்து தெரிவித்த படோலி செரா குந்த் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் சந்திரா “ஆனால், நாங்கள் அல்மோரா மாவட்டத்தில் வசிக்கவில்லை, பித்தோராகர்க் மாவட்டத்தில் வசிக்கிறோம்” என்று தெரிவித்தார். மேற்கொண்டு கூறுகையில், “எப்போது நாங்கள் ஆதார் அட்டையில் உள்ள முகவரியை பிழைதிருத்தக் கோருகிறோமோ, அப்போது ஆதார் அட்டைகள் கனை அஞ்சல் நிலையத்திற்குச் சென்று விடும்.   மேலும், எந்த தபால்காரரும் கனை அஞ்சல் நிலையத்திலிருந்து இங்கு வருவதில்லை, அதனை நேரில் சென்று தான் நாங்கள் பெற வேண்டும். ஆனால், தற்போது அனைத்து ஆதார் அட்டைகளும் சரியான முகவரிக்கு அனுப்பப்படுகிறது. மேலும் வீட்டிற்கே வந்து கொடுக்கப்படுகிறது”. என்று கூறினார்.

மேலும், செரா படோலி பகுதியின் புதிய அஞ்சலகத்தில் சேமிப்புக் கணக்குகள் மற்றும் நீண்ட கால வைப்பு சேவைகளும் வழங்கத் தொடங்கியுள்ளனர். இதனைத் தொடர்ந்து இருபத்து ஐந்து சேமிப்புக் கணக்குகளும், ஐந்து நீண்ட கால வைப்புக் கணக்குகளும் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து தெரிவித்த கைலாஷ் சந்திரா, “கணக்குதாரர்கள் பற்று வைத்த பணத்தை வைப்பதற்கு என்னிடம் பாதுகாப்பான இடமில்லை. எனவே, அதை என்னுடனே வைத்துக் கொள்கிறேன்” என்றார்.

அதுமட்டுமின்றி, ஓய்வூதியத்தின் நிதி கூட கடிதத்தின் வழியாக  தெரிவிக்கப்பட்டு அட்டைகள் மூலமே பரிவர்த்தனைச் செய்யப்படுகிறது எனவும் கைலாஷ் சந்திரா நம்மிடம் தெரிவித்தார்.  பார்வதி தேவி போன்ற மூத்த குடிமக்கள் கனை அஞ்சல் நிலையம் வரை பயணித்து தங்கள் ஒய்வூதியத்தைப் பெற்று வருகின்றனர்.

இதுபோன்ற காரணங்களின் காரணமாக அஞ்சல் நிலையம் முழுமையாக செயல்படுவதற்கு சிறிது காலம் எடுக்கும் என்பது தெள்ளத் தெளிவாகிறது.

தற்போது கூட வேலைக்கானக் கடிதங்கள் மிகவும் காலம் தாழ்த்திக் கிடைப்பதால் மக்கள் வேலைக்கான நேர்காணல் தேதிகளை தவற விடுகின்ற சூழல் நிலவுகிறது. “எனது பக்கத்து வீட்டுக்காரரின் மகன் அரசு உதவி பெறும் பள்ளி வேலையினை தவற விட்டிருந்தார்; அந்த வேலைக்கான நேர்காணலோ ஜூன் 29 அன்று, ஆனால் கடிதம் கிடைக்கப்பெற்றதோ ஜூலை 3 அன்று,” என படோலி செரா குந்த் பகுதியைச் சார்ந்த பத்மா தத்தா நியுலியா தெரிவித்தார்.  மேற்கொண்டு அவர் கூறுகையில், “பலருக்கு எங்கள் முகவரி மாறிவிட்டதே தெரியவில்லை. அவர்கள் எங்கள் பழைய முகவரிக்கே பாசியாச்சனா அஞ்சல் குறியீடு எண்ணைக் குறிப்பிட்டே கடிதம் எழுதிக் கொண்டிருக்கின்றனர். எனவே, அந்தக் கடிதங்கள் கிடைக்க கிட்டத்தட்ட ஒரு மாதமாகிறது. அஞ்சல் துறை பழைய முகவரிக்கு வரும் கடிதங்களை புதிய அஞ்சல் நிலையத்திற்கு அனுப்பிவைக்கும் என கிராமத்தினர் கருதுகின்றனர். ஆனால், அதுவும் நடந்தேறவில்லை. மாற்றம் (அஞ்சல் குறியீட்டு எண்) நிகழ்ந்தது குறித்து கூட  அஞ்சல் துறை விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லை.  நாங்களே தான் கிராமத்தினருக்கு இதுகுறித்து தெரிவித்தோம்” என பத்மா தத்தா நியுலியா கூறினார்.

இதேவேளையில், பாசியாச்சனா பகுதியின் தபால்காரர் மேஹெர்பான் சிங் கூறுகையில்: ”ஒவ்வொரு நாளும் அந்த ஆறு கிராமத்திற்கு ஏறத்தாழ ஐந்து அல்லது ஆறு கடிதங்கள் வரும். என் செரா படோலியில் புதிய தபால் நிலையம் தொடங்கப்பட்டதற்கு பின்னரும் கூட, பாசியாச்சனா தபால் நிலையத்திற்கு மக்கள் கடிதங்களை அனுப்புகின்றனர்.  கடிதத்தின் எண்ணிக்கை ஐந்து அல்லது பதினைந்தாக இருந்தாலும், நான் ஒவ்வொரு கிராமம் கிராமமாக நடந்து சென்று கொடுக்க வேண்டும். நாங்கள் இந்த மலைகளின் கழுதைகள்” என  உறுமியவாறு தெரிவித்தார்.

எவ்வாறாயினும், தற்போது நிறைய மாற்றம் நிகழ்ந்துள்ளது. முன்னர் பிதோராகர்க் பகுதியில் இருந்து செரா படோலி பகுதிக்கு கடிதம் கிடைக்க 20 நாட்கள் ஆனது மாறி தற்போது நான்கு நாட்களில் கிடைத்து விடுகிறது. கடந்த ஜூன் 21 பி.எ.ஆர்.அய் யில் கட்டுரை வெளியானதற்கு பலரும் ஆர்வத்தை வெளிப்படுத்தி இருந்தனர். அதை படித்த பலரும் அவர்களின் ட்விட்டர் கணக்கில் அதை பகிர்ந்திருந்தனர். மேலும், தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழிற்நுட்பத் துறை அமைச்சர் ரவி ஷங்கர் பிரசாத் கூட இந்தக் கிராமத்தில்  தொலைதொடர்பு சேவைகள் கிடைக்கப்பெறும் எனக் கூறியிருந்தார். அதுமட்டுமின்றி, மோகனைப் போன்ற இளம் தலைமுறையினரும் கூட புதிய கிளை அஞ்சல்  நிலையம் கனையுடன் இணைக்கப்படும் என்றும், இதர அஞ்சல் நிலையங்களுடன் இணையதொடர்பின் வழியாக இணைக்கப்படும் என்றும் நம்பிக்கைக் கொண்டுள்ளனர்.

படங்கள்: அர்பிதா சக்கரபர்த்தி

தமிழில்: பிரதீப் இளங்கோவன்.

Arpita Chakrabarty

अर्पिता चक्रवर्ती, कुमाऊं स्थित स्वतंत्र पत्रकार हैं और साल 2017 की पारी फ़ेलो हैं.

की अन्य स्टोरी Arpita Chakrabarty
Translator : Pradeep Elangovan

Pradeep Elangovan is a translator who holds a postgraduate degree in Geology. He is interested in independent cinema and currently works as a translator for a news portal.

की अन्य स्टोरी Pradeep Elangovan