மல்யுத்த போட்டிகளுக்கு தொடர்ந்து 12 மணி நேரம் வர்ணனை செய்து “நேரலை வர்ணனைக்கு” புதிய அர்தத்தை கொடுத்துள்ளார். அதுவும் பொது ஒலிபரப்பி அமைப்பு மூலம், நீங்கள் நினைப்பது போல் ரேடியோவிலோ அல்லது தொலைக்காட்சியிலோ அல்ல. தற்போது நடைமுறையில் உள்ள குஸ்தி வர்ணனை வடிவத்தை சங்கர்ராவ் பூஜாரி தான் கண்டுபிடித்தார். சில சமயங்களில் இவரின் வசதிக்காக நிகழ்ச்சியின் தேதியை கூட மாற்றியமைப்பார்கள் போட்டி ஒருங்கிணைப்பாளர்கள். கூடியிருக்கும் கூட்டத்திடம் வெறுமனே பேசாமல், அவர்களை ஆட்டத்திற்குள் உள்ளிழுக்க உதவி செய்கிறார்.
“மோசமான நிலையிலிருந்த மல்யுத்தத்தை புதுப்பிக்க சங்கர் பூஜாரியின் வர்ணனை உதவி செய்துள்ளதாக” கூறுகிறார் பெனாபூரில் உள்ள சங்கிலியில் வசிக்கும் முன்னாள் மல்யுத்த வீரரும் ஆசிரியருமான ராஜேந்திர ஷிண்டே. அவரது விவரணையும் விளக்கம் அளிக்கும் விதமும் மக்கள் கூட்டத்தை கவர்ந்துள்ளது. “இது பல விஷயங்களுக்கு தூண்டுதலாக அமைந்துள்ளது. இப்போது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது கூட மல்யுத்த போட்டிகளை மக்கள் நடத்த ஆரம்பித்துள்ளார்கள். நிக்ழ்ச்சிகள் அதிகமாக, அதிகமாக, மல்யுத்த வீரர்களும் அதிகமாகிறார்கள்”.
துரதிஷ்டவசமாக, இவரது வர்ணனையை கேட்க வேண்டுமானால் போட்டி நடைபெறும் மைதானத்தில் பார்வையாளராக நீங்கள் இருக்க வேண்டும். இதற்காக மைதானத்தை சுற்றிலும் பல ஒலிபெருக்கிகள் வைத்திருப்பார்கள். ஏன் அவர் ரேடியோவில் பேசுவதில்லை? “அது கொஞ்சம் சிரமமானது” என்கிறார் பூஜாரி. “எங்கள் அமைப்பும் வடிவமும் அதற்கு ஒத்து வராது, குறிப்பாக கிராம அளவில். நாங்கள் வர்ணனை செய்யும்போது, அவ்வப்போது முக்கிய விருந்தினர்கள் – பிரபலமான முன்னாள் மல்யுத்த வீரர்கள் அல்லது அந்த தொகுதியின் எம்எல்ஏ - வருகை குறித்து அறிவிப்போம். இதனால் அடிக்கடி குறுக்கீடு ஏற்படும். மேலும் இது பல மணி நேரங்களுக்கு நீளக்கூடியது”.
வரானாநகரில் நடந்த போட்டியில் 12 மணி நேரத்திற்கும் மேலாக பெரும் கூட்டத்தை தக்கவைத்ததற்கு தான் உதவியதை நினைத்து பெருமிதம் கொள்கிறார். பாகிஸ்தானிலிருந்து போட்டியாளர்கள் தாமதமாக வந்தது பெரும் சவாலாக இருந்தது. மல்யுத்த வரலாறு மற்றும் கலாச்சாரம் குறித்த தகவல் களஞ்சியமாகவும், ஆட்டத்தை பகுப்பாய்வு செய்யும் வித்தகராகவும் இருக்கிறார் பூஜாரி. அவரும் ஒரு மல்யுத்த வீரர் என்பதால் ஆட்டத்தின் உத்திகளை கணிப்பதில் நியுணராக இருக்கிறார். “8 வயதாக இருக்கும்போது குஸ்தி விளையாட ஆரம்பித்தேன். ஆனால் 1972-ம் ஆண்டு வந்த பெரும் பஞ்சத்தால் விவசாயம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. அதன்பிறகு விளையாடுவதை கைவிட்டேன். விவசாயம் பிரச்சனைக்குள்ளாகும் போது, அது குஸ்திக்கும் பிரச்சனையாக இருக்கும்” என்கிறார் பூஜாரி.
மல்யுத்த வர்ணனை எப்படியிருக்கும் என்று எங்களுக்கு “நேரலை விளக்கம்” கொடுத்தார். அது போட்டியையே நேரில் பார்ப்பது போல் இருந்தது. அவருக்கு ஒலிபரப்பாளர்களுக்கான நல்ல குரல் வளம் உள்ளது. “எனது குரு பாபாசாகேப் ராதேயிடமிருந்து இதை நான் கற்றுக் கொண்டேன்” என்று கூறும் பூஜாரி, போகப் போக வர்ணனையில் தனக்கென்று தனித்துவ வடிவத்தையும் உள்ளடகத்தையும் உருவாக்கி கொண்டார். “மல்யுத்தம் என்றால் என்ன என்ற விழிப்புணர்வை பார்வையாளர்களீடம் ஏற்படுத்த வேண்டும். வெறும் தகவல்களை மட்ட்டும் கூறாமல், விளியயாட்டின் வரலாறு, அதன் சமூக மற்றும் கலாச்சார இடம் குறித்தும் பேச வேண்டும். வீரர்கள் கையாளும் உத்திகள், தந்திரங்கள் மற்றும் நுட்பங்கள் பற்றி பார்வையாளர்களுக்கு வர்ணனையாளர்கள் தெரிவிக்க வேண்டும்” என தனது தனித்துவ வர்ணனை குறித்து கூறுகிறார் பூஜாரி.
மல்யுத்த வீரர்களுக்கு வர்ணனையாளர்கள் அவசியம் கூற வேண்டியது: “உங்கள் வலிமையை தவறாக பயன்படுத்தாதீர்கள். ஒருவேளை வலிமையானவர்களை வசதிபடைத்தவர்கள் பயன்படுத்தினால், அது ஆபத்தில் போய் முடியும். ஆகவே ஒழுக்கமாகவும் மற்றவர்களை மரியாதையோடு நடத்த வேண்டும் என்றும் வீரர்களுக்கு அறிவுறுத்துவது மிகவும் முக்கியம்”. மேலும், ஜாம்பவான் காமா பயில்வான் போன்றோர்களின் கதைகளையும் அழுத்தமாக கூறுகிறார் பூஜாரி.
1985-ம் ஆண்டு மல்யுத்த போட்டிகளுக்கு வர்ணனை செய்ய தொடங்கினார் பூஜாரி. “கிரிக்கெட் வர்ணனையை கேட்டபோது எனக்கு இந்த யோசனை பிறந்தது. நாம் ஏன் போட்டியை காண வரும் பெரும் கூட்டத்திற்கு முன் வர்ணனை செய்து குஸ்தியை மேலும் பிரபலபடுத்த கூடாது? ஆட்டத்தின் நுணுக்கங்கள், விதிகள் மற்றும் அதன் வரலாறு குறித்து நாம் ஏன் விளக்கம் கொடுக்க கூடாது? இதனால் நிறைய மக்கள் போட்டியை காண வருவதோடு அதிகமான இளைஞர்கள் குஸ்தி மீது ஆர்வம் கொள்வார்கள்”.
1985-களின் ஆரம்ப நாட்களில் போட்டிகளுக்கு இலவசமாகவே வர்ணனை செய்து வந்தார் பூஜாரி. தற்போது வருடத்திற்கு 150 போட்டிகளுக்கு வர்ணனை செய்கிறார். “இதில் கிடைக்கும் வருமானம் நான் வாழ்வதற்கு போதுமானதாக இருக்கிறது” என்கிறார் பூஜாரி. 2000-ம் ஆண்டு சங்கிலியில் நடைபெற்ற போட்டியே இவரது முதல் பெரிய நிகழ்வாகும்.
கடந்த வருடம் தண்ணீர் பிரச்சனை காரணமாக மல்யுத்த போட்டிகள் ஒழுங்காக நடைபெறாத நிலையில், வர்ணனையின் போது அரசியல் தலைவர்களை நோக்கி பூஜாரி பேசியது: “கால்நடைகளை காப்பதற்காக தீவனக் கிடங்குகளை நீங்கள் திறந்துள்ளீர்கள். நல்லது, எங்கள் நண்றியை தெரிவித்து கொள்கிறோம். அப்படியே பயில்வான்களை காப்பதற்காகவும் சில முகாம்களையும் நிகழ்ச்சிகளையும் தயவுசெய்து நீங்கள் திறப்பீர்களா? அவர்களும் விவசாயத்தையும் மழையையும் நம்பியே உள்ளார்கள்”.
இந்த கட்டுரை முதன்முதலில் http://psainath.org/kushtis-voice-of-social-commentary/ வெளியானது.
தமிழில்: வி. கோபி மாவடிராஜா