சுனில் குப்தா வீட்டிலிருந்து வேலை பார்க்க முடியாது. அவரின் அலுவலகமான ‘இந்தியாவின் நுழைவாயில்’ பொது முடக்கத்தினால் கடந்த 15 மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டிருக்கிறது.
“இதுதான் எங்களுக்கு அலுவலகம். இப்போது நாங்கள் எங்கே போவது?” என தெற்கு மும்பையிலிருக்கும் நினைவுச்சின்னத்துக்கு அருகே இருக்கும் காம்ப்ளக்ஸ்ஸை காட்டி கேட்கிறார்.
பொதுமுடக்கம் தொடங்குவதற்கு முன், காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை சுனில் அந்த சுற்றுலா தளத்தில் காத்திருப்பார். பரிசோதனை மையங்களை கடந்து மக்கள் நுழைவாயிலை நோக்கி வரும்போது அவரும் பிற புகைப்படக் கலைஞர்களும் சென்று அவர்களை வரவேற்பார்கள். கையில் புகைப்பட ஆல்பம் ஒன்று வைத்திருப்பார்கள். வருபவர்களை நோக்கி, ‘ஒரு போட்டோ ப்ளீஸ். வெறும் 30 ரூபாய்தான்’ என்பார்கள்.
இந்த வருடத்தின் ஏப்ரல் மாதத்தின் நடுவே கோவிட் பாதிப்புகள் அதிகரிக்கத் தொடங்கி மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதும் அவர்களுக்கு மீண்டும் வேலை இல்லாமல் போனது. “காலையில் இங்கு வந்தபோது முகத்தில் அடிப்பது போல் ‘அனுமதி இல்லை’ என எழுதியிருந்தது,” என ஏப்ரல் மாதத்தில் கூறினார் 39 வயது சுனில். “வருமானம் ஈட்டவே நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம். இப்போது வருமானமே இல்லாமலாகிக் கொண்டிருக்கிறோம். இன்னும் நஷ்டத்தை தாங்கும் அளவுக்கு எனக்கு சக்தி இல்லை.”
அவர்களின் அலுவலகத்தில் வேலை இருந்தபோது சுனிலும் பிற புகைப்படக் கலைஞர்களும் (எல்லாமே ஆண்கள்) ’டிப் டாப்’ உடை அணிந்திருப்பார்கள். இஸ்திரி போட்ட வெள்ளை சட்டைகள், கறுப்பு காற்சட்டைகள், கறுப்பு ஷுக்கள் அணிந்திருப்பர். ஒவ்வொருவரின் கழுத்திலும் கேமரா தொங்கும். முதுகில் ஒரு பை தொங்கும். சிலர் கண்ணுக்கு மாட்டும் கண்ணாடிகளை தன் சட்டைகளில் தொங்க விட்டிருப்பார்கள். கண்ணாடி அணிந்து புகைப்படம் எடுக்க விரும்புவோரை ஈர்ப்பதற்கான உத்தி அது. நினைவுச்சின்னத்துக்கு வந்து சென்ற மக்களின் புன்னகைக்கும் முகங்கள் நிறைந்த புகைப்பட ஆல்பம் கைகளில் இருக்கும்.
“இப்போது நீங்கள் எங்களைதான் (புகைப்படக் கலைஞர்கள்) அதிகம் பார்ப்பீர்கள். மக்கள் குறைவாக தட்டுப்படுவார்கள்,” என்கிறார் சுனில். மார்ச் 2020ல் முதல் பொதுமுடக்கம் தொடங்குவதற்கு முன் கிட்டத்தட்ட 300 புகைப்படக் கலைஞர்கள் நுழைவாயிலில் பணிபுரிந்ததாக அவரும் பிறரும் அனுமானிக்கிறார்கள். பிறகு அந்த எண்ணிக்கை 100க்கும் கீழாக குறைந்தது. பலர் வேறு வேலைகளுக்கும் சொந்த ஊர்களுக்கும் சென்றுவிட்டனர்.
கடந்த வருட ஆகஸ்ட் மாதத்தில் சுனில் மீண்டும் வேலையை தொடங்கினார். “காலையும் இரவும் மழைநேரத்திலும் கூட ஒரு வாடிக்கையாளரேனும் கிடைத்துவிட மாட்டாரா என கால் கடுக்க நின்று கொண்டிருந்தோம். தீபாவளிக்கு (நவம்பரில் வந்தது) என் குழந்தைகளுக்கு கொடுக்கவென இனிப்புகள் வாங்கக் கூட என்னிடம் பணமில்லை,” என்கிறார் அவர். பிறகு அவருக்கு அதிர்ஷ்டம் அடித்தது. பண்டிகை நாளில் 130 ரூபாய் பணம் ஈட்ட முடிந்தது. அந்த சமயத்தில் அவ்வப்போது புகைப்படக் கலைஞர்களுக்கு பண உதவியை சில தனிநபர்களும் உணவுப் பொருட்களை சில அமைப்புகளை சார்ந்தோரும் கொடுத்தனர்.
2008ம் ஆண்டில் வேலை பார்க்கத் தொடங்கியதிலிருந்தே சுனிலின் வருமானம் நாளுக்கு 400-1000 ரூபாய் தொடங்கி (பெரிய விழாக்களின் நேரத்தில் பத்து பேரிடம் சேர்த்து 1500 ரூபாய் வரை சம்பாதித்திருக்கிறார்) 200-600 ரூபாய் வரை ஏற்ற இறக்கமாகதான் இருந்திருக்கிறது. குறிப்பாக கேமராவுடன் வந்த ஸ்மார்ட்போன்கள் அவரின் பிழைப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தியது.
கடந்த வருடத்தின் பொது முடக்கம் தொடங்கிய பிறகு, அந்த வருமானமும் குறைந்து ஒரு நாளுக்கு 60-100 ரூபாய் என்றானது.
“போனி (முதல் விற்பனை மற்றும் நாளின் வருமானம்) ஏதுமின்றி திரும்புவதே எங்களின் விதியாக மாறிவிட்டது. எங்களின் வருமானம் ஏற்கனவே பல வருடங்களாக மிகக் குறைவாகதான் இருந்தது. இப்போது இந்த வருமானமில்லாத நாட்களும் வந்துவிட்டன,” என்கிறார் சுனில். அவரின் மனைவி சிந்து வீட்டில் இருக்கிறார். எப்போதேனும் தையற்கலை ஆசிரியையாக பணிபுரிவார். மூன்று குழந்தைகளுடன் தெற்கு மும்பையின் கஃப்ஃபே பரேட் பகுதியிலுள்ள குப்பத்தில் வசிக்கின்றனர்.
1991ம் ஆண்டில் மாமாவுடன் உத்தரப்பிரதேசத்தின் ஃபர்சாரா குர்த் கிராமத்திலிருந்து சுனில் நகரத்துக்கு வந்தார். கண்டு சமூகத்தை (பிற பிற்படுத்தப்பட்ட சாதிகள்) சேர்ந்தவர்கள். அவரின் தந்தை மாவ் மாவட்டத்திலிருக்கும் கிராமத்தில் மஞ்சள், மிளகாய் தூள் மற்றும் பிறவற்றை விற்றுக் கொண்டிருந்தார். “என் மாமாவும் நானும் நுழைவாயிலில் ஒரு கைவண்டி போட்டு பேல் பூரி அல்லது பாப் கார்னோ ஐஸ்க்ரீமோ விற்றுக் கொண்டிருந்தோம். சில புகைப்படக் கலைஞர்கள் அங்கு வேலை பார்ப்பதை பார்த்தோம். எனக்கு அந்த தொழிலில் ஆர்வம் பிறந்தது,” என்கிறார் சுனில்.
கொஞ்ச காலம் பணம் சேமித்து பிறகு நண்பர்களிடமும் குடும்பத்திடமும் கொஞ்சம் கடன் வாங்கி 2008ம் ஆண்டில் ஒரு சாதாரண SLR கேமராவும் பிரிண்டரும் அருகே இருந்த போரா பஜார் மார்க்கெட்டில் அவர் வாங்கினார். (2019ம் ஆண்டில் அவர் விலை அதிகமான நிகான் D7200 கேமராவை கடனுக்கு வாங்கிய பணத்தில் வாங்கினார். அந்த கடனை இன்னும் அடைத்துக் கொண்டிருக்கிறார்).
முதல் கேமரா வாங்கியபோது தொழில் அமோகமாக போகும் என நம்பினார் சுனில். கையளவு பிரிண்டரில் உடனே புகைப்படங்களை எடுத்து வாடிக்கையாளர்களிடம் கொடுக்க முடியுமென்பதால் சுனிலின் நம்பிக்கை வலுவாக இருந்தது. பிறகு ஸ்மார்ட்ஃபோன்கள் மலிவாக கிடைக்கத் தொடங்கின. புகைப்படங்களுக்கான தேவை சரிந்தது. கடந்த பத்து வருடங்களில் புதிய நபர் எவரும் இந்த தொழிலுக்கு வரவில்லை என்கிறார் அவர். கடைசியாக வந்த புகைப்படக் கலைஞர்களில் அவரும் ஒருவர்.
தற்போது கையடக்க பிரிண்டர்களை தாண்டி ஸ்மார்ட்ஃபோன்களின் போட்டியை சமாளிப்பதற்காக சில புகைப்படக் கலைஞர்கள் USB உபகரணம் வைத்திருக்கிறார்கள். புகைப்படம் எடுத்ததும் அதை வாடிக்கையாளரின் செல்பேசிக்கு உடனே மாற்றி தருகின்றனர். இச்சேவைக்கு 15 ரூபாய் கட்டணம் வசூலிக்கின்றனர். சில வாடிக்கையாளர்கள் செல்ஃபோன் பிரதி மற்றும் புகைப்படப் பிரதி என இருவகைகளையும் விரும்புகின்றனர். ஒரு உடனடி புகைப்படத்தின் விலை ரூ.30.
சுனில் தொழில் தொடங்குவதற்கு முன்பு ‘நுழைவாயிலில்’ இருந்த புகைப்படக் கலைஞர்களின் தலைமுறை போலராய்டுகள் பயன்படுத்தினர். ஆனால் அவை விலை அதிகம். பராமரிப்பதும் கஷ்டம். அவர்கள் எளிய புகைப்படக் கருவிகளுக்கு மாறிய பிறகு, புகைப்படங்களை வாடிக்கையாளர்களுக்கு தபால் மூலம் அனுப்பினர்.
போலராய்ட் பயன்படுத்திய தலைமுறையை சேர்ந்தவர் கங்காராம் சவுதரி. “ஒரு காலத்தில் மக்கள் எங்களிடம் வந்து புகைப்படம் எடுக்கச் சொல்லி கேட்டனர்,” என நினைவுகூர்கிறார். “இப்போது யாரும் எங்களை திரும்பி கூட பார்ப்பதில்லை. நாங்கள் இங்கு இல்லாததை போல நடந்து கொள்கின்றனர்.”
பதின்வயதுகளில் கங்காராம் இந்தியாவின் நுழைவாயிலில் வேலை செய்யத் தொடங்கினார். பிகாரின் தும்ரி கிராமத்திலிருந்து மும்பைக்கு வந்தவர் அவர். கேவட் சமூகத்தை (பிற பிற்படுத்தப்பட்ட சாதி) சேர்ந்தவர். முதலில் அவர் தந்தை ரிக்ஷா இழுத்து சம்பாதித்த கொல்கத்தாவுக்கு சென்றார். சமையற்காரருக்கு உதவியாக பணிபுரிந்து மாதத்துக்கு 50 ரூபாய் சம்பாதித்தார். ஒரு வருடத்துக்குள் அவரின் முதலாளி மும்பையிலுள்ள உறவினரின் வீட்டில் வேலை பார்க்க அவரை அனுப்பி வைத்தார்.
கொஞ்ச காலம் கழித்து தற்போது 50 வயதுகளில் இருக்கும் கங்காராம், ஓர் உறவினரை சந்தித்தார். அவர் ’நுழைவாயிலி’ல் புகைப்படக் கலைஞராக இருந்தவர். “இதையும் முயன்று பார்த்தால் என்ன என எனக்கு தோன்றியது” என்கிறார் அவர். அச்சமயத்தில் (1980களில்) பத்து பதினைந்து பேர்தான் நினைவுச்சின்னத்துக்கு அருகே இருந்ததாக நினைவுகூர்கிறார். சில மூத்த புகைப்படக் கலைஞர்கள் அவர்களின் போலராய்டுகளையோ பிற கேமராக்களையோ கமிஷன் வாங்கிக் கொண்டு புதியவர்களுக்கு கொடுப்பார்கள். கங்காராம் ஆல்பம்களை வைத்துக் கொண்டு வாடிக்கையாளர்களை ஈர்க்க வேண்டும். கொஞ்ச காலம் கழித்து அவருக்கும் கேமரா கொடுக்கப்பட்டது. அப்போது ஒரு புகைப்படத்தின் விலையாக வசூலித்த 20 ரூபாயில் இரண்டு அல்லது மூன்று ரூபாய் அவர் வைத்துக் கொள்ளலாம். அவரும் பிற சிலரும் நடைபாதையிலேயே இரவை கழித்தனர். அவர்களின் நாட்களை, புகைப்படம் எடுக்க விரும்பும் மக்களை தேடியே கழித்தனர்.
“அந்த வயதில் சம்பாதிப்பதற்காக பல்வேறு இடங்களுக்கு செல்வது உங்களுக்கு சந்தோஷமாக இருக்கும்,” என்கிறார் கங்காராம் புன்னகைத்தபடி. “தொடக்கத்தில் நான் எடுத்த புகைப்படங்கள் சரியாக இல்லை. ஆனால் வேலை செய்கையில் நாளடைவில் தொழில் கைவந்துவிடும்.”
ஒவ்வொரு புகைப்படச் சுருளும் விலைமதிப்பற்றது. 36 புகைப்படங்கள் எடுக்கக்கூடிய படச்சுருள் 35 ரூபாயிலிருந்து 40 ரூபாய் வரை விலை. “நாங்கள் பொத்தானை அழுத்திக் கொண்டே இருக்க முடியாது. ஒவ்வொரு புகைப்படத்தையும் யோசித்து கவனமாக எடுக்க வேண்டும். இப்போதோ உங்கள் விருப்பத்துக்கு (டிஜிட்டல்) புகைப்படங்கள் எடுத்துக் கொள்ளலாம்,” என்கிறார் கங்காராம். சூரியன் மறைந்தபிறகு ஒளிக்கருவி இல்லாமல் கேமராக்களை பயன்படுத்த முடியாதென்றும் நினைவுகூர்கிறார்.
அருகே இருந்த கோட்டை பகுதியில் 1980களிலிருந்த சிறு புகைப்பட ஸ்டுடியோக்களில் புகைப்படங்கள் அச்சிட ஒரு முழு நாள் ஆகும். ஒரு படச்சுருளை புகைப்படமாக்க ரூ.15ம் ஒரு 4x5 அங்குல வண்ண புகைப்படம் உருவாக்க ரூ.1.50ம் ஆகும்.
“ஆனால் இப்போது இவை அனைத்தையும் நாங்கள் சுமக்க வேண்டியிருக்கிறது,” என்கிறார் கங்காராம். புகைப்படக் கலைஞர்களின் 6-7 கிலோ எடை கொண்ட பையில் கேமரா, பிரிண்டர், ஆல்பம், காகிதங்கள் (50 காகிதங்களின் விலை ரூ.110. கார்ட்ரிட்ஜ்ஜின் விலையும் உண்டு) ஆகியவை இருக்கின்றன. “நாள் முழுக்க இங்கு நின்று புகைப்படம் எடுக்க மக்களை ஒப்புக் கொள்ள வைக்க வேண்டும். என்னுடைய முதுகு கடுமையாக வலிக்கிறது,” என்கிறார் கங்காராம். நரிமன் பாய்ண்ட் குப்பத்தில் மனைவி குசும் மற்றும் மூன்று குழந்தைகளுடன் அவர் வாழ்ந்து வருகிறார்.
நுழைவாயிலில் இருந்த ஆரம்ப காலங்களில், ஆன்மிக பயணமாக மும்பைக்கு வரும் குடும்பங்கள் சில சமயம் புகைப்படக் கலைஞர்களை பிற இடங்களுக்கும் புகைப்படம் எடுக்க அழைத்துப் போவதுண்டு. பிறகு அந்த புகைப்படங்கள் வாடிக்கையாளருக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன. படங்கள் சரியாக எடுக்கப்படவில்லை எனில், புகைப்படக் கலைஞர்கள் பணத்தை ஒரு கவரில் வைத்து மன்னிப்பு கடிதத்துடன் வாடிக்கையாளருக்கு அனுப்பினர்.
“அவை எல்லாவற்றுக்கும் நம்பிக்கை அடிப்படையாக இருந்தது. அது ஒரு பொற்காலம். பல மாநிலங்களில் இருந்து மக்கள் வந்தனர். அந்த புகைப்படங்களை அவர்கள் மதித்தனர். அவர்களை பொறுத்தவரை அந்த புகைப்படங்கள் தங்களின் குடும்பத்தினருக்கு காட்டுவதற்கான ஒரு முக்கியமான நினைவுபகிர்வு. எங்களையும் எங்களின் புகைப்படக் கலையையும் அவர்கள் நம்பினர். நீங்கள் ‘நுழைவாயிலின்’ உச்சியையோ தாஜ் ஹோட்டலின் உச்சியையோ தொடுவது போல் புகைப்படம் எடுப்பது எங்களின் தனித்திறமை,” என்கிறார் கங்காராம்.
நன்றாக வேலை கிடைத்துக் கொண்டிருந்த காலத்திலும் அவர்களுக்கு பிரச்சினை இருந்ததாக கூறுகிறார். கோபமான ஒரு வாடிக்கையாளர் புகார் கொடுத்தால் புகைப்படக் கலைஞர்கள் காவல்நிலையத்துக்கு அழைக்கப்படுவார்கள். அல்லது நுழைவாயிலுக்கு மீண்டும் வந்து புகைப்படங்கள் அனுப்பாமல் தாங்கள் ஏமாற்றப்பட்டுவிட்டதாக கத்துபவர்களும் இருந்தனர். “ஒரு கட்டத்துக்கு மேல் அருகே இருந்த தபால் நிலையத்தின் ஸ்டாம்புகளுடனான ஒரு பதிவேடை ஆதாரமாக நாங்கள் வைத்துக் கொள்ளத் தொடங்கினோம்,”என்கிறார் கங்காராம்.
சில நேரங்களில் புகைப்படப் பிரதிகளுக்கான பணம் இல்லாமல் சிலர் இருப்பார்கள். தபால் மூலம் அவர்கள் பணம் அனுப்புவார்கள் என நம்பி புகைப்படங்களை கொடுத்து அனுப்பியிருக்கிறார்கள் புகைப்படக் கலைஞர்கள்.
2008 நவம்பர் 26ம் தேதி நடந்த தீவிரவாதி தாக்குதலுக்கு பிறகு சில நாட்களுக்கு வேலை நின்றது என்றும் பிறகு மெல்ல மீண்டும் தேவை அதிகரித்தது என்றும் கங்காராம் நினைவுகூர்கிறார். “மக்கள் வந்து தாஜ் ஹோட்டலுக்கு (இந்தியாவின் நுழைவாயிலுக்கு எதிரில்) அருகேயும் ஓபராய் ஹோட்டல் (தாக்குதல் நடந்த இரு இடங்கள்) அருகேயும் நின்று படம் எடுத்துக் கொண்டனர். அந்த கட்டடங்கள் சொல்வதற்கு ஒரு கதை இருந்தது,” என்கிறார் அவர்.
பல வருடங்களாக புகைப்பட கலைஞராக பணியாற்றும் இன்னொருவர் பைஜ்நாத் சவுதரி. நுழைவாயிலிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் நரிமண் பாயிண்ட்டின் ஓபராய் (ட்ரைடெண்ட்) ஹோட்டலுக்கு வெளியே இருக்கும் நடைபாதையில் வேலை பார்க்கிறார் அவர். 57 வயது பைஜ்நாத் நாற்பது வருடங்களாக புகைப்படக் கலைஞராக வேலை பார்க்கிறார். அவருடன் வேலை பார்த்த பலர் வேறு தொழிலுக்கு சென்று விட்டனர்.
பிகாரின் தும்ரி கிராமத்திலிருந்து 15 வயதில் மும்பையின் நடைபாதையில் பைனாகுலர் விற்கும் ஓர் உறவினருடன் மும்பைக்கு வந்தார். விவசாயத் தொழிலாளர்களாக இருந்த அவரின் பெற்றோர் கிராமத்திலேயே இருந்துவிட்டனர்.
கங்காராமின் தூரத்து உறவினரான பைஜ்நாத்தும் தொடங்கும்போது போலராய்டு கருவி பயன்படுத்தி பிறகு எளிய கேமராவுக்கு மாறினார். அவரும் சக புகைப்படக் கலைஞர்களும் தாஜ் ஹோட்டலுக்கு அருகே இருந்த ஒரு கடைக்காரரிடம் அந்த காலகட்டத்தில் புகைப்படக் கருவிகளை பாதுகாப்பாக கொடுத்துவிட்டு நடைபாதையில் உறங்குவார்கள்.
தொடக்க காலத்தில் 6-லிருந்து 8 வாடிக்கையாளர்கள் கிடைத்தால் பைஜ்நாத்துக்கு ஒரு நாளில் 100லிருந்து 200 ரூபாய் வரை கிடைக்கும். பிறகு அது ரூ.300-900 ஆக உயர்ந்தது. ஸ்மார்ட்ஃபோன்களின் வருகைக்கு பிறகு ரூ.100-300 ஆக அது சரிந்தது. பொதுமுடக்கத்துக்கு பிறகு அதிகபட்சமாக ரூ.100ம் குறைந்தபட்சமாக ரூ.30ம் ஒருநாளில் கிடைத்திருக்கிறது. பல நேரங்களில் ஒன்றும் கிடைத்ததில்லை.
2009ம் ஆண்டு வரை சாண்டாக்ரூஸ் பகுதியிலிருக்கும் விடுதிகளில் புகைப்படக் கலைஞராக பணியாற்றினார். ஒரு புகைப்படத்துக்கு 50 ரூபாய் கட்டணம். “காலை முதல் இரவு 9 அல்லது 10 மணி வரை இங்கு (நரிமன் பாயிண்ட்) ஓடிக் கொண்டிருப்பேன். இரவு உணவுக்கு பிறகு விடுதிக்கு சென்றுவிடுவேன்,” என்கிறார் பைஜ்நாத். அவரின் மூத்த மகனான 31 வயது விஜயும் இந்தியாவின் நுழைவாயிலில் புகைப்படக் கலைஞராக பணியாற்றுகிறார்.
பைஜ்நாத்தும் பிற புகைப்படக் கலைஞர்களும் ஆரம்பத்தில் எந்த அனுமதியும் பெற வேண்டியிருக்கவில்லை. 2014ம் ஆண்டில் மகாராஷ்டிராவின் சுற்றுலா மேம்பாட்டு வாரியம் உள்ளிட்ட சில அமைப்புகள் வந்து அவர்களுக்கு அடையாள அட்டைகள் கொடுத்தன. அதற்கான விதிகளின்படி குறிப்பிட்ட ஆடை அணிய வேண்டும். கேட்பாரற்று கிடக்கும் பைகளை பற்றி தகவல் அளிக்க வேண்டும். சரியான நடத்தை பின்பற்ற வேண்டும். பெண்கள் அச்சுறுத்தப்பட்டால் தகவல் கொடுக்க வேண்டும். (செய்தியாளர் இந்த தகவல்களை உறுதிபடுத்த முடியவில்லை.)
அதற்கு முன்னால், மாநகராட்சி ஊழியர்கள் அல்லது காவலர்கள் அவர்களிடம் அபராதம் வசூலிப்பார்கள் அல்லது அவர்களின் வேலையை தடுப்பார்கள் என்கின்றனர். இப்பிரச்சினைகளை எதிர்கொள்ளவென 1990களில் புகைப்படக் கலைஞர்கள் நலச் சங்கம் ஒன்று உருவாக்கப்பட்டதாக பைஜ்நாத்தும் கங்காராமும் நினைவுகூர்கின்றனர். “எங்களின் வேலைகளுக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டுமென விரும்பினோம். எங்களின் உரிமைகளுக்காக போராடினோம்,” என்கிறார் பைஜ்நாத். 2001ம் ஆண்டில் 60-70 புகைப்படக் கலைஞர்கள் ஆசாத் மைதானில் போராட்டம் நடத்தியதாக நினைவுகூர்கிறார் அவர். பல கோரிக்கைகளுடன் எந்தவித கட்டுப்பாடுமின்றி நீட்டிக்கப்பட்ட கால அளவுக்கு வேலை செய்ய அனுமதிக்கப்பட வேண்டுமென்கிற கோரிக்கையையும் முன் வைத்து போராடியதாக குறிப்பிடுகிறார். 2000மாம் வருடத்தில் அவர்களில் சிலர் இந்தியாவின் நுழைவாயில் புகைப்படக் கலைஞர்கள் சங்கம் தொடங்கியதாக சொல்லும் பைஜ்நாத், சட்டமன்ற உறுப்பினரையும் சந்தித்து தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கேட்டுக் கொண்டதாக கூறுகிறார். இம்முயற்சிகள் சிறு ஆசுவாசத்தை ஏற்படுத்திக் கொடுத்தன. மாநகராட்சி மற்றும் காவலர் தலையீடு இல்லாமல் வேலை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.
பைஜ்நாத், அவரின் புகைப்படக் கலை மதிக்கப்பட்ட அந்த காலத்தை நினைவுகூர்கிறார். “இன்று அனைவரும் புகைப்படம் எடுப்பதை பார்க்கிறேன்,” என்கிறார் அவர். “ஆனால் நான் பல வருடங்களாக இங்கு நின்று தொடர்ந்து புகைப்படங்கள் எடுத்ததன் வழியாக என் கலையை கூர்மைப்படுத்திக் கொண்டேன். எங்களுக்கு ஒரு க்ளிக் போதும். உங்களை போன்ற இளைஞர்களோ ஒரு சரியான புகைப்படம் கிடைக்க பல புகைப்படங்கள் எடுக்கின்றனர். பிறகு அந்த சரியான புகைப்படத்தையும் எடிட்டிங்கால் இன்னும் அழகாக்குகிறீர்கள்,” என்றபடி ஒரு குழு வருவதை கண்டு நடைபாதையிலிருந்து எழுகிறார். அவர்களை ஒப்புக் கொள்ள வைக்க முயலுகிறார். ஆனால் அவர்கள் ஆர்வம் காட்டவில்லை. அவர்களில் ஒருவர் பாக்கெட்டில் இருந்து செல்பேசியை எடுத்து செல்ஃபி எடுக்கத் தொடங்குகிறார்.
இந்தியாவின் நுழைவாயிலில், சுனிலும் சில புகைப்படக் கலைஞர்களும் ஜூன் மாதத்தின் நடுவிலிருந்து ‘அலுவலக’த்துக்கு மீண்டும் போகத் தொடங்கி விட்டனர். நினைவுச்சின்னத்துக்குள் அவர்கள் அனுமதிக்கப்படவில்லை. எனவே தாஜ் ஹோட்டல் பகுதிக்கருகே நின்று கொண்டு வாடிக்கையாளர்களை ஈர்த்துக் கொண்டிருக்கின்றனர். “மழை நேரத்தில் எங்களை நீங்கள் பார்க்க வேண்டும்,” என்கிறார் சுனில். “கேமராவையும் பிரிண்டரையும் காகிதங்களையும் நாங்கள் பாதுகாக்க வேண்டும். அதற்கு மேல் ஒரு குடையையும் பிடிக்க வேண்டும். இவை எல்லாவற்றையும் சுமந்து கொண்டு நாங்களும் சரியாக நின்றுகொண்டு மிகச் சரியாக புகைப்படமும் எடுக்க வேண்டும்.”
ஆனால் அவரின் வருமானத்தை இந்த செல்ஃபி மற்றும் பொதுமுடக்க காலத்தில் சரியாக பார்த்துக் கொள்வதுதான் பெரிய சவாலாக இருக்கிறது.
பையில் குழந்தைகளுக்கு கட்டணம் கட்டிய ரசீதுகளை சுனில் வைத்திருக்கிறார் (மூன்று குழந்தைகளும் தனியார் பள்ளியில் படிக்கின்றனர்). “கொஞ்சம் அவகாசம் கொடுக்கும்படி (கட்டணம் கட்ட) பள்ளியில் நான் கேட்டுக் கொண்டிருக்கிறேன்,” என்கிறார் அவர். கடந்த வருடத்தில் ஒரு சிறு ஸ்மார்ட்ஃபோனை சுனில் வாங்கினார். அவரின் குழந்தைகள் அதில்தான் இணையவழி கல்வி பயிலுகின்றன. “எங்களுடைய வாழ்க்கை முடிந்துவிட்டது. குறைந்தபட்சம் அவர்களாவது எங்களை போல் வெயிலில் நின்று கஷ்டப்படாமல் இருக்க வேண்டும். குளிர்சாதன அலுவலகத்தில் அவர்கள் வேலை பார்க்க வேண்டும்,” என்கிறார் அவர். “ஒவ்வொரு நாளும் யாரோ ஒருவருக்கு ஒரு நினைவை உருவாக்கி என் குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலத்தை வழங்க விரும்புகிறேன்.”
தமிழில் : ராஜசங்கீதன்