“அவர்கள் யானைகளை கொண்டு வந்து எங்கள் வீடுகளை நாசம் செய்ய வந்தால், நாங்கள் எங்கள் குழந்தைகளையும் எங்கள் உடைமைகளையும் குளத்தில் வீசி எறிந்துவிட்டு, ஒரு வட்டமாக நின்று எங்களை சுட்டுத்தள்ளும்படி கேட்போம். எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும்வரை இங்கிருந்து போக மாட்டோம்”, என்கிறார் தன் வீட்டையும் நிலத்தையும் இழக்கும் தருவாயில் இருக்கும் ரூப் ராணி. அதே நிலையில்தான் ராம்புரா கிராமத்தில் வாழும் மற்ற அனைத்து கிராமவாசிகளும் உள்ளனர்.
பன்னா புலிகள் சரணாலயத்தை சுற்றியுள்ள 49 கிராமங்களில் அவர்களின் கிராமமும் ஒன்று. சரணாலயத்தில் உள்ள புலிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் சரணாலயத்தை விரிவுபடுத்த வேண்டும் என்று வனத்துறை அவர்களிடம் கூறியதாக கிராம மக்கள் சொல்கின்றனர். புலிகள் சரணாலயத்தின் மையப்பகுதியில் மனிதர்கள் வாழ அனுமதிக்கப்படுவதில்லை என்றாலும், அதை சுற்றியுள்ள பகுதிகளில் புலிகள் நடமாடுவதற்கு அதிகமான இடம் இருக்கும். அங்கே மனிதர்களும் வன விலங்களும் இணைந்து வாழும் சூழல் உள்ளது. ராம்புரா கிராமம், பன்னா சரணாலயத்தின் சுற்றுப்புற பகுதியாக 2012 ஆகஸ்ட் முதல் மாற்றப்பட்டது.
ஆனால் கடந்த நான்கு வருடமாக புலிகள் சரணாலயத்தின் மையப்பகுதியை விரிவாக்கும் திட்டம் நடைமுறையில் உள்ளதால், ரூப் ராணி மற்றும் அவரது அக்கம்பக்கத்தினரின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.ஆனால் அவர்களின் மறுவாழ்வுக்காக நிலம் ஏதும் அரசிடம் இல்லை என்று வனத்துறை அதிகாரிகள் தங்களிடம் கூறியதாக கிராம மக்கள் சொல்கின்றனர். கால்நடை வளர்ப்பு மற்றும் விவசாயம் செய்து வரும் ரூப் ராணி தன் கணவருடன் சேர்ந்து தங்களுடைய இரண்டு ஏக்கர் நிலத்தில் கோதுமை மற்றும் சோளம் பயிர் செய்கிறார் “எங்களுக்கு ஒதுக்க அரசிடமே நிலமில்லை என்றால், எங்களை நிலம் தேடிக்கொள்ள மட்டும் அவர்கள் எப்படி சொல்கின்றனர்? வெறும் பத்து லட்சம் ரூபாயில் எப்படி எங்களால் ஒரு விவசாய நிலம் வாங்கி, ஒரு வீட்டை கட்டிக்கொண்டு, எங்கள் குழந்தைகளுக்கும், கால்நடைகளுக்கும் உணவு வழங்க முடியும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்?,” என்று தன் வேதனையை தெரிவிக்கிறார்.
ராம்புரா, மத்திய பிரதேசத்தின் பன்னா மாவட்டத்தில் இருக்கிறது. சுமார் 150 மக்கள்(சுமார் 30-40 குடும்பங்கள்) வாழும் ஆதிவாசி கிராமம். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பில் இந்த கிராமம் இடம்பெறவில்லை. சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு குக்கிராமம் கண்டவஹா. அங்கு சுமார் 20-25 குடும்பங்கள் இருந்த போதிலும், அது குடியிருப்பில்லாத ஒரு பகுதியாகவே ஆவணம் செய்யப்பட்டுள்ளது. ராம்புராவின் பஞ்சாயத்து கிராமமான இத்வான் கலான் 15 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. 5994 பேர் வாழ்வதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
ராம்புராவில் ஒரு அங்கன்வாடி மற்றும் ஆரம்ப தொடக்கப்பள்ளியும் உள்ளது. ஆனால் அரசின் திட்டங்களான ‘உஜ்வாலா’, ‘அவாஸ் யோஜனா’ அக்கிராமத்தை அடையவில்லை. மின்சாரம் கூட இன்னும் அங்கு சென்றடையவில்லை. வனத்துறை ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு சூரிய மின்விளக்கை கொடுத்துள்ளது. கிராம மக்கள் ஒன்றாக சேர்ந்து தங்கள் அலைபேசிகளுக்கு மின்சாரம் ஏற்ற ஒரு சிறிய சூரிய மின் தகடை வாங்கியுள்ளனர். இதுவே பன்னாவிலுள்ள நிறைய ஆதிவாசி கிராமங்களில் உள்ள வழக்கமாகும்.“எங்களுக்கு கிடைக்க வேண்டிய எல்லா விதமாக நன்மைகளுக்கும் தடையாக வனத்துறை அதிகாரிகள் நிற்கின்றனர். இந்த கிராமம் இடமாற்றம் செய்யப்பட உள்ளதால், எந்த சலுகைகளும் இங்கு நேர விரயமே என அவர்கள் கருதுகிறார்கள்”, என்கிறார் 55 வயதான ஷோபா ராணி. அவரின் குடும்பம், பூர்வீக சொத்தான 11 ஏக்கர் நிலத்தை நம்பியே வாழ்கிறது. (ராம்புரா கிராமவாசிகள் தங்களிடம் நிலப் பட்டா மற்றும் உரிமம் இருப்பதாக தெரிவிக்கின்றனர் - என்னிடம் அவை காண்பிக்கப்படவில்லை.)
2018 செப்டம்பரில், ஷோபா மற்றும் ராம்புராவை சேர்ந்த இன்னும் சில பெண்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்துள்ளனர். “அதில் எங்கள் கோரிக்கைகளை முன்வைத்து, மக்களிடம் கையெழுத்துகள் பெற்றுக் கொடுத்தோம். அது பன்னா மாவட்ட ஆட்சியரிடம் கொடுக்கப்பட்டது. அவர் தன் முத்திரையை அதில் பதித்து, தனக்கு ஒரு நகலை எடுத்துக்கொண்டு, எங்களுக்கு ஒரு நகலையும் கொடுத்தார்.”
இதுவரை அந்த மனுவிற்கு எந்த நடவடிக்கையும் இல்லை. நான் ஆட்சியரை பார்த்து பேச முயற்சித்த போது, அவர் வெளியூர் சென்றிருந்தார். வனத்துறையிலிருந்து என்னிடம் பேசிய ஒரே ஒரு நபர், ஒரு வனக் காவலர் (அவரது பெயரை இங்கு நாங்கள் குறிப்பிடவில்லை). அவர் பேசும்போது, “அரசாங்கத்திடம் மக்களுக்கு கொடுக்க எந்த நிலமும் இனிமேல் கிடையாது. கிராமவாசிகள் அவர்களுக்கு தேவையான நிலத்தை அவர்கள் (இழப்பீடு)பணத்தில் வாங்கிக் கொள்ளலாம். அவர்கள் தங்களுக்கு தேவையான எந்த ஒரு கிராமத்திலும் குடியேறலாம். அதற்கு அவர்கள் ஆட்சியரிடம் ஒரு விண்ணப்பம் செலுத்தி அந்த கிராம பஞ்சாயத்தில் தங்களை இணைத்துக் கொள்ளலாம்” என்றார்.சுமார் ஒரு வருடம் முன்னதாக, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் ராம்புரா கிராம மக்களை சந்தித்து வேறொரு ஒப்பந்தம் செய்து கொள்ள முயற்சித்தார். “அவர் குடும்பம் ஒன்றுக்கு ஒரு வீடும், குடும்பத்தில் வயது வந்த நபர் ஒவ்வொருவருக்கும் ரூ.10 லட்சம் இழப்பீடு பணமும் வழங்குவதாக சொன்னார். ஆனால் கிராமவாசிகள் அதை ஏற்கவில்லை.” (சில கிராமவாசிகள், தங்களில் வயது வந்தோர் ஒவ்வொருவருக்கும் தலா 10 லட்சம் ரூபாய் அரசு வழங்க இருப்பதாக சொன்னார்கள். ஆனால், இது உறுதி செய்யப்படவில்லை.)
ராம்புரா கிராம மக்களுக்கு முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் கொடுத்த வாக்குறுதி குறித்து அச்சப்பட காரணங்கள் இருக்கிறது. “இதே போன்ற ஒரு வாக்குறுதி பட்காடி கிராம மக்களுக்கு(சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்) அவர்கள் கிராமத்தை விட்டு வெளியேற்றப்பட்டபோது வழங்கப்பட்டது. ஆனால் அவர்களுக்கு கடைசி வரை வீடே கிடைக்கவில்லை”, என்கிறார் 50 வயதான பசந்தா ஆதிவாசி. பட்காடி கலன், பன்னா மாவட்டத்தில் புலிகள் சரணாலயத்தின் மையமான ஹினௌடா பகுதியில் உள்ளது. “துரோகம் செய்யப்பட்டதால், அவர்கள் அந்த இழப்பீடு பணத்தை கூட வனத்துறையிடமிருந்து பெற மறுத்துவிட்டனர். அவர்களில் பெரும்பாலோர் தற்போது சத்தர்பூர் மாவட்டத்தில் (உள்ள நகரங்களில்) வசித்து வனத்துறையுடன் போராடி வருகின்றனர். தங்கள் வழக்கறிஞருக்கு கொடுக்கக் கூட அவர்களிடம் பணம் கிடையாது.
ராம்புரா மக்கள், இடமாற்றம் செய்யப்பட்ட மற்ற கிராம மக்களின் போராட்டங்களை கண்கூடாக பார்த்துள்ளனர். “தல்கோன் மக்களுக்கு என்ன நேர்ந்ததென்று உங்களுக்கு தெரியும். [பார்க்க : Forced out of the forest and into uncertainty ]. அதே நிலைக்கு தள்ளப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. அதனால் தான் மறுவாழ்வுக்கு முன்னதாக எங்களை ஒரு பஞ்சாயத்துடன் இணைக்கும்படி கேட்கிறோம் (அதுவே கிராமவாசிகளுக்கு அரசு சலுகைகள் கிடைக்க உதவும்). எங்களின் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதையும், எங்களுக்கு எரிவாயு மற்றும் மின்சாரம் போன்ற பிற வசதிகள் கிடைப்பதையும் உறுதி செய்ய வேண்டும்”, என்கிறார் ஷோபா ராணி.ராம்புரா கிராமத்தின் முக்கிய வருவாய் ஈட்டும் தொழில் விவசாயம். இங்கு விளைவிக்கும் முக்கிய பயிர்கள் கருப்பு உளுந்து, சோளம், கடலைப்பருப்பு, எள் மற்றும் கோதுமை. இங்கு வாழும் குடும்பங்கள் இவற்றையே தங்கள் உணவாக கொள்கின்றன. அதில் ஒரு பகுதியை விற்பனை செய்து வருடத்திற்கு சுமார் ரூ.20,000 முதல் ரூ.50,000 வரை வருமானம் ஈட்டுகின்றனர்.
சரணாலயத்தின் சுற்றுப்பகுதியில் வாழும் கிராமவாசிகளுக்கு காட்டில் உற்பத்தியாகும் பொருட்களை எடுக்கவோ, பயன்படுத்தவோ அல்லது விற்கவோ எந்த தடையும் இல்லை. ஆனால் இதற்கும், காட்டில் விவசாயம் செய்வதற்கும் அனுமதிகள் மறுக்கப்பட்டு வருகின்றன. தங்கள் வருமானத்திற்கும் வீட்டின் பயன்பாட்டிற்கும் உதவிய இந்த காட்டில் உற்பத்தியாகும் பொருட்களை கிராமவாசிகள் எடுக்க செல்வது தற்போது அரிதாகிவிட்டது. “மற்ற பொருட்களை விடுங்கள், காட்டில் மரக்கட்டைகள் எடுக்க சென்றால் கூட எங்கள் கோடாரிகள் பறிமுதல் செய்யப்படுகிறது. எங்கள் புகார்கள் உயர் அதிகாரிகளை சென்றடைவதில்லை. வன விலங்குகளால் சேதப்படுத்தப்படும் எங்கள் பயிர்களுக்கான நஷ்ட ஈடும் இப்போது கிடைப்பதில்லை”, என்கிறார் 3.5 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்யும் 30 வயதான விரேந்திர ஆதிவாசி.
திருத்தம் செய்யப்பட்ட தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணைய விதிகள்படி (2008), வன விலங்குகளால் மனித உயிரிழப்போ அல்லது பயிர்கள் சேதமடைந்தாலோ வனவாசிகளுக்கு இழப்பீடு வழங்கபட வேண்டும். ராம்புராவில் காட்டுப்பன்றிகள் மற்றும் நீலான்கள் அடிக்கடி பயிர்களை சேதப்படுத்தும். “நாங்கள் இரவு முழுவதும் கண் விழித்து விலங்குகளை துரத்திக்கொண்டிருப்போம்”, என்று விரேந்திரா சொல்கிறார். “அவற்றை காயப்படுத்துவது சட்டப்படி குற்றமாகும், நாங்கள் சிறைக்கு அனுப்பப்படுவோம். பெரும்பாலும் அவை எங்கள் பயிர்களை பெரும் சேதம் செய்துவிடும்.”இத்தனை சிரமங்களையும் கடந்து ராம்புரா மக்கள் பாதுகாப்பாக இருப்பதாக உணர்கிறார்கள். அதற்கு காரணம் அவர்களுக்கு கிடைக்கும் தண்ணீர் தான். “நீங்கள் அங்கிருக்கும் குளத்தை பார்த்திருப்பீர்கள்... அதில் வருடம் முழுவதும் தண்ணீர் கிடைக்கும். இது போன்ற ஒரு நீராதாரத்தை இங்கு சுற்றியுள்ள வேறெந்த ஒரு கிராமத்திலும் பார்ப்பது கடினம். எங்கள் கிராம பெண்கள் தண்ணீருக்காக தினமும் பல மைல்கள் நடந்து செல்ல வேண்டிய தேவையில்லை”, என்கிறார் விரேந்திரா.
ப்ரேம் பாய், கிராமப் பள்ளிக்கூடத்தில் மதிய உணவு தயாரிக்கும் வேலை பார்ப்பவர். அவரது கூட்டுக்குடும்பம் சுமார் 10 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்கிறது. அவரும் தங்கள் பாதுகாப்பை பற்றி குறிப்பிடுகிறார். “நானும் எனது கணவரும் வயதானவர்கள்”, என்கிறார் 45 வயதான அவர். “இந்த காட்டை விட்டு வெளியே சென்றால், தினக்கூலியாக வேலை செய்ய எங்களுக்கு தெம்பில்லை. இங்கு எங்களுக்கு இடமாவது இருக்கிறது. இதில் எங்கள் உணவாதாரத்தை நாங்கள் பயிர் செய்து கொள்கிறோம். வெளியே சென்றால் நிலம் இல்லாமல் எப்படி எங்களால் உயிர் வாழ முடியும்? நாங்கள் கேட்பதெல்லாம் எங்களுடைய உரிமையைத்தான். நிலம், அடையாளம் மற்றும் பாதுகாப்பான ஒரு வாழ்வாதாரம்!”
தங்கள் மனுவின் மீதான மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கைக்காக பொறுமையாக காத்திருக்கும் ராம்புராவின் மக்கள், அவர்கள் எதிர்கொள்ள இருக்கும் சிரமங்களுக்கும் தயாராகவே உள்ளனர். “எங்கள் கிராமம் மட்டுமே இங்கிருந்து வெளியேற்றப்பட போவதில்லை”, என்று சொல்கிறார் பசந்தா. “மற்ற கிராமங்களும் இருக்கின்றன. அவர்களும் இதே கோரிக்கையை முன் வைக்கின்றனர். நாங்கள் கூட்டாக சேர்ந்து ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஒரு போராட்டத்தை நடந்துவோம்.”
தமிழில்: ராஜசங்கீதன்.