மோன்பா மண விழாக்களில் கார்ச்சுங் பாடும்போது, சமைத்த ஆட்டுக்கறியை சன்மானமாக பெறுகிறார். அவரின் இசை, மண விழாவின் மதிப்பை கூட்டுவதாக சொல்லப்படுகிறது. மணமகளின் குடும்பம்தான் அவரை அழைக்கிறது.
மோன்பா சமூகத்தை சேர்ந்த இருவர், திருமணத்துக்கு ஒப்புக் கொண்ட பின், இருநாள் சடங்குகள் தொடங்கும். மணமகன் பெண் வீட்டுக்கு செல்வார். அங்கு அர மதுபானம் குடிக்கப்படும். சம்பந்தப்பட்டவர்கள் மணத்தை உறுதி செய்வார்கள். பிறகு ஒரு பெருவிருந்தில் நடனமாடுவார்கள். இங்குதான் கார்ச்சுங் எந்த இசைக்கருவியும் இன்றி பாடுவார். அடுத்த நாள், மணமகன் தன் வீட்டுக்கு பெண்ணுடன் திரும்புவார்.
கார்ச்சுங்கின் இயற்பெயர் ரிஞ்சின் டாஷி. கார்ச்சுங் அவரின் புனைபெயர். அருணாச்சலப் பிரதேசத்தின் மேற்கு காமேங் மாவட்ட சங்க்பா சாலையில் ஒரு சிறு மளிகைக் கடையை அவர் நடத்துகிறார். அவர் வேலை செய்யும்போது பின்னணியில் பிடித்த இசையை ரேடியோவில் ஒலிக்க விடுவது, இசை மீதான அவரது ஆர்வத்தை காட்டுகிறது. அர பற்றியும் கார்ச்சுங் பாடுவார். “விவசாயம் செய்யும்போதும் நண்பர்களுடன் பேசும்போதும் பாடுவேன்,” என்கிறார்.
53 வயதாகும் அவர், மனைவி பெம் ஜோம்பாவுடன் வாழ்கிறார். மனைவிதான் குடும்பத்துக்கு ‘தலைவி’ என்கிறார் அவர். குடும்பத்துக்கு இருக்கும் ஒரு ஏக்கர் நிலத்தில் பெம்தான் விவசாயம் பார்க்கிறார். “நெல், சோளம், கத்திரிக்காய், கடுகுக் கீரை, வெங்காயம், காலிஃபிளவர் போன்றவற்றை விளைவிக்கிறோம்,” என்கிறார் அவர். பெரும்பாலான நெல், தானியம், காய்கறி ஆகியவற்றை சொந்த பயன்பாட்டுக்காக குடும்பம் பயன்படுத்திக் கொள்கிறது. சில நேரங்களில் அதிகமாக இருக்கும் விளைச்சலை, திராங் ஒன்றியத்தின் ரமா முகாமிலுள்ள வாரச் சந்தையில் விற்கிறார்கள்.





