“ஒரு வார காற்றாடி பறக்கும் போட்டிகளை பாட்னா நடத்தியிருக்கிறது. லக்நவ், டெல்லி மற்றும் ஹைதராபாத் போன்ற இடங்களிலிருந்து காற்றாடி விடுபவர்கள் அழைக்கப்படுவார்கள். அது ஒரு விழா,” என்கிறார் சையது ஃபைசான் ரஜா. கங்கை ஓரத்தில் நடந்தடி அவர் பேசுகிறார். நீரில் பிரதிபலிக்கும் வானத்தை காட்டி, ஆயிரக்கணக்கான காற்றாடிகள் அங்கு ஒரு காலத்தில் பறந்ததாக சொல்கிறார்.

பாட்னா ஆற்றின் கரையில் இருக்கும் தூலிகாட்டை சேர்ந்த மூத்தவரான ரஜா சொல்கையில், அரசர்கள் தொடங்கி ட்வாய்ஃப்கள் வரை எல்லா மக்களும் இந்த விளையாட்டை கொண்டாடுவார்கள் என்றார். பெயர்களை பட்டியலிடுகிறார் - “பிஸ்மில்லா ஜான் (டவாய்ஃப்) விளையாட்டுக்கு ஆதரவு அளித்திருக்கிறார்கள். மிர் அலி ஜமீன் மற்றும் மிர் கெஃபாயத் அலி ஆகியோர் காற்றாடி செய்ய தெரிந்த சில உஸ்தாத்கள் (வல்லுநர்கள்) என்கிறார்.

விளையாட்டுக்கு விற்பதற்கென பாட்னாவின் குர்ஹாட்டா தொடங்கி அஷோக் ராஜ்பத்திலுள்ள க்வாஜாகலன் வரை (700-800 மீட்டர் தொலைவு) ஒரு காலத்தில் காற்றாடி விற்பவர்கள் நிறைந்திருந்தார்கள். அவர்களின் வண்ணமயமான காற்றாடிகள் கடைகளுக்கு வெளியே படபடக்கும். “பாட்னாவின் காற்றாடி நூல், வழக்கமான நூலை விட அடர்த்தியாக இருக்கும். பருத்தி மற்றும் பட்டை சேர்த்து செய்யப்படும் நூல் நாக் என  அழைக்கப்படுகிறது,” என்கிறார் ரஜா.

பல்லொவின் 1868ம் ஆண்டு மாத இதழ், காற்றாடிகளுக்கு பிரபலமான இடமாக பாட்னாவை குறிப்பிடுகிறது. “பெரியளவில் சம்பாதிக்க விரும்பும் எவரும் பஜாரில் ஒரு காற்றாடி கடை திறக்க வேண்டும். மொத்த மக்களும் காற்றாடி விடுவார்களோ என்கிற எண்ணம் கூட உங்களுக்கு தோன்றும். காற்றாடி வைர வடிவில் இருக்கும். இறகை போல மெலிதாகவும் வாலின்றி இருக்கும். பட்டு நூல் பறப்பது போல இலகுவாக பறக்கும்.”

நூறு வருடங்களுக்கு பிறகு, பல விஷயங்கள் மாறிவிட்டன. ஆனால் பாட்னாவில் திலாங்கிகள் மட்டும் அவற்றின் தனித்துவத்தை தக்க வைத்திருக்கின்றன. வாலில்லா காற்றாடிகள் என்கிற தனித்துவம். “நாய்களுக்குதான் வால்கள் இருக்கும், காற்றாடிகளுக்கு அல்ல,” என்கிறார் காற்றாடி செய்த ஷபினா சிரித்தபடி. எழுபது வயதுகளில் இருக்கும் அவர் திலாங்கி கள் செய்வதை கொஞ்ச காலத்துக்கு முன், பார்வை மங்கியதும் நிறுத்தி விட்டார்.

PHOTO • Ali Fraz Rezvi
PHOTO • Courtesy: Ballou’s Monthly Magazine

இடது: காற்றாடியின் பல பகுதிகளை காட்டும் விளக்கப்படம். வலது: 1868 வருடத்தின் பல்லோவ் மாத இதழின் செய்தி

PHOTO • Ali Fraz Rezvi

பாட்னாவின் அஷோக் ராஜ்பாத் பகுதியில் ஒரு காலத்தில் காற்றாடி வணிகர்கள் நிறைந்திருந்து, அவர்களின் வண்ணமயமான பொருட்கள் கடைகளுக்கு வெளியே படபடக்கும்

காற்றாடி தயாரிப்பு மற்றும் பொருட்கள் ஆகியவற்றின் மையமாக பாட்னா திகழ்கிறது. காற்றாடிகளும் அவற்றுக்கு தொடர்பான பொருட்களும் இங்கிருந்துதான் பிகாருக்கும் அண்டை மாநிலங்களுக்கும் செல்கின்றன. பரேட்டிகளும் திலாங்கிகளும் சில்குரி, கொல்கத்தா, மல்தா, ராஞ்சி, ஹசாரிபாக் ஜான்பூர், காத்மண்டு, உன்னாவ், ஜான்சி, போபால், புனே மற்றும் நாக்பூர் வரை செல்கின்றன.

*****

“காற்றாடி செய்யவும் பறக்க விடவும் நேரம் எடுக்கும்,” என காலஞ்சென்ற தந்தையின் சொல்லாடலை குறிப்பிடுகிறார் அஷோக் ஷர்மா. “இன்று நகரத்தில் நேரம்தான் அரிதிலும் அரிதான விஷயமாக இருக்கிறது.”

காற்றாடி செய்வதிலும் விற்பதிலும் ஷர்மா மூன்றாம் தலைமுறையை சேர்ந்தவர். மண் சுவரும் ஓடுகளும் கொண்ட அவரது நூற்றாண்டு கால கடை பாட்னா நகர மையத்தில் இருக்கிறது. அஷோக் ராஜ்பாத்தின் பழம்பெரும் தேவாலயத்திலிருந்து 100 மீட்டர்தான் தூரம். பரேட்டி (மூங்கில் வளையங்கள் பிடித்திருக்கும் சுருளை கொண்ட காற்றாடி) செய்யும் சிலரில் அவரும் ஒருவர். மாஞ்சா அல்லது நாக் போன்ற நூல்களை தற்போது சீனத் தயாரிப்பாகவும் ஆலைத் தயாரிப்பாகவும் வருகின்றன. முன்பைக் காட்டிலும் மெலிதாக உள்ளன.

முன்னால் அமர்ந்திருக்கும் ஷர்மாவின் கைகள், ஒரு மணி நேரத்தில் கொடுக்க வேண்டிய 150 பரேட்டி களை செய்து முடிப்பதில் மும்முரமாக இருக்கின்றன.

பரேட்டிகள் செய்வது - குச்சிகளை வளைத்து கட்டுவது - காற்றாடி செய்வதை விட திறன் வாய்ந்த விஷயம். சிலரால்தான் முடியும். ஷர்மா அத்திறனுக்கு பெயர் பெற்றவர். அவரின் சக காற்றாடி கைவினைஞர்களை போல, தன் வேலைகளை வேறொருவரை வைத்து அவர் செய்வதில்லை. அவர் செய்பவற்றை மட்டுமே விற்க விரும்புகிறார்.

PHOTO • Ali Fraz Rezvi
PHOTO • Ali Fraz Rezvi

பரேட்டிகளுக்கும் திலாங்கிகளுக்கும் குச்சிகளை அஷோக் ஷர்மா வெட்டுகிறார். பரேட்டிகள் (காற்றாடிகளுடன் சுருள்கள் இணைந்திருப்பதற்கான மூங்கில் வளையங்கள்) செய்யும் சில வல்லுநர்களில் அவரும் ஒருவர்

PHOTO • Ali Fraz Rezvi
PHOTO • Ali Fraz Rezvi

இடது: அஷோக் பட்டறையில் புதிதாக செய்யப்பட்ட பரேட்டிகள். வலது: அஷோக்கின் நண்பரும் மூத்தப் பணியாளரும் கடையில் அமர்ந்திருக்கிறார்

திலங்கிகளும் பரேட்டிகளும் நிரம்பியிருக்கும் அறை இருளில் இருக்கிறது. கொஞ்சம் ஒளி, பின்பக்கத்திலிருந்து வருகிறது. அங்கு அவரின் 30 வயது பேரன் கெளடில்யா குமார் ஷர்மா கணக்குகள் பார்த்துக் கொண்டிருக்கிறார். குடும்பத்தில் இக்கலை பல தலைமுறைகளாக இருந்தபோதும், மகன்களும் பேரன்களும் அதை தொடரும் வாய்ப்பில்லை என்கிறார் ஷர்மா.

திலங்கிகள் மற்றும் பரேட்டி கள் செய்யும் கலையை கற்கத் தொடங்கியபோது அவர் 12 வயது சிறுவன். “கடையின் தரையில் நான் குழந்தையாக வேலை பார்க்க ஆரம்பித்தேன். என் இளமைக்காலமும் இந்த வேலை செய்வதில்தான் கழிந்தது. பல திலங்கிகள் நான் செய்திருந்தாலும் அவற்றை பறக்க விட்டதில்லை,” என்கிறார் மூத்த காற்றாடி கைவினைஞர்.

“காற்றாடி செய்வதை நகரத்தின் பிரபுக்களும் மேட்டுக்குடியினரும் மேற்பார்வை செய்தார்கள். அவர்களின் ஆதரவு, காற்றாடி செய்பவர்களுக்கு வரமாக இருந்தது,” என்கிறார் அஷோக் ஷர்மா. “பாட்னாவின் காற்றாடிக் காலம், மகாசிவராத்திரி வரை உச்சத்தில் இருக்கும். ஆனால் இப்போது சங்கராந்தி (பாரம்பரியமாக காற்றாடிகள் பறக்க விடப்படும் அறுவடை விழா) சமயத்தில் கூட வாடிக்கையாளர் கிடைப்பது கஷ்டமாக இருக்கிறது.”

*****

வைரத்தின் தோற்றத்தை ஒரு திலாங்கி கொண்டிருக்கும். பத்தாண்டுகளுக்கு முன்பு, காகிதத்தில் செய்யப்பட்டது. ஆனால் இப்போது முற்றாக பிளாஸ்டிக்கில் செய்யப்படுகிறது. விலையும் பாதியாகி விட்டது. காகித திலாங்கிகள் எளிதாக கிழிந்துவிடும். காகிதத்தை கையாளுவது கடினம் என்பதால் செலவும் அதிகம். சாதாரண ஒரு காகித காற்றாடியின் விலை ரூ.5. ஆனால் பிளாஸ்டிக் காற்றாடியின் விலை ரூ.3.

அளவுகள் 12 x 12 மற்றும் 10 x 10 அங்குலங்களில் இருக்கின்றன. 18 x 18 மற்றும் 20 x 20 அளவு கொண்டவைகளும் செய்யப்படுகின்றன. அளவுகள் அதிகரிக்கையில் விலையும் அதிகரிக்கிறது. வடிவங்களின் நுட்பமும் அதிகரிக்கிறது. குறிப்பிட்ட கார்ட்டூன்கள் அல்லது திரைப்பட பாத்திரங்கள் அல்லது வசனங்கள் போன்றவை சேர்க்கப்பட்டால் விலை ரூ.25 வரை அதிகரிக்கும். மாநிலத்துக்கு வெளியிலிருந்து கொடுக்கப்படும் ஆர்டர்களுக்கு விலை 80-லிருந்து 100 ரூபாய் வரை போகும். பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஷீட்களும் டீலிகள் மற்றும் கட்டாகள் ஆகியவற்றின் தரமும் கூடும். லெ யின் (கோந்து) தரமும் அதிகரிக்கும்.

சஞ்சய் ஜெய்ஸ்வாலின் ஜன்னல்களில்லா எட்டு சதுர அடி திலாங்கி பட்டறையில், காற்றாடி தயாரிப்புக்கான மரம் வெட்டும் கருவி, பல மூங்கில் குச்சிகள் மற்றும் பிற பொருட்கள் கிடக்கின்றன.

PHOTO • Ali Fraz Rezvi
PHOTO • Ali Fraz Rezvi

இடது: மன்னன் (நாற்காலியில் இருப்பவர்) பட்டறையில் பணியாளர்களை மேற்பார்வையிடுகிறார். வலது: முகமது அர்மான், பெண்கள் மூங்கில் கட்டா ஒட்ட அனுப்புவதற்காக பிளாஸ்டிக் ஷீட்களை எண்ணிக் கொண்டிருக்கிறார்

PHOTO • Ali Fraz Rezvi
PHOTO • Ali Fraz Rezvi

இடது: குச்சிகளை பொதிகளாக பணியாளர்கள் கட்டுகிறார்கள். வலது: கருவியில் மூங்கில் வெட்டப்படுகிறது

“இந்தப் பட்டறைக்கென பெயர் இல்லை,” என்கிறார் சஞ்சய். மன்னன் என்கிற பெயரிலும் அவர் அழைக்கப்படுகிறார். காற்றாடிகள் அதிகளவில் விற்பவர் என்பதால் பெயரில்லாதது அவருக்கு ஒரு பிரச்சினையாக இல்லை. “எங்களுக்கு பெயர் இல்லையே ஒழிய பெயர் தெரியாதவர்கள் அல்ல,” என்கிறார் அவர் உடன் இருக்கும் பணியாளர்களுடன் சேர்ந்து சிரித்தபடி.

மொஹல்லா தீவானில் இருக்கும் குர்ஹாட்டா பகுதியிலுள்ள மன்னனின் பட்டறை, மூங்கில் கழிகள் தாங்கியிருக்கும் ஆஸ்பெஸ்டாஸ் கூரையுடன், பெரும்பாலும் திறந்த கடையாகதான் இருக்கிறது. அருகே ஒரு சிறு அறை இருக்கிறது. 11 பணியாளர்களை வேலைக்கு வைத்திருக்கிறார். சில வேலைகளை பெண்களுக்கும் தருகிறார். “வீடுகளிலிருந்து பெண்கள் வேலை பார்ப்பார்கள்,” என்கிறார்.

55 வயது முகமது ஷமிம்தான் இங்குள்ள மூத்த கைவினைஞர். பாட்னாவின் சோட்டி பஜாரில் இருக்கும் அவர், காற்றாட்சி செய்வதை கொல்கத்தாவில் ஒரு உஸ்தாதிடம் கற்றுக் கொண்டதாக கூறுகிறார். கொல்கத்தா, அகமதாபாத், மும்பை மற்றும் பனாரஸ் ஆகிய இடங்களில் பணிபுரிந்திருக்கும் அவர், நிரந்தரப் பணியிடம் தேடி நகரத்துக்கு திரும்பியிருக்கிறார்.

டீலி களை ஒட்டிக் கொண்டே பேசும் அவர், 22 வருடங்களாக இங்கிருப்பதாக சொல்கிறார். மூங்கில் குச்சிகளை வளைத்து கோந்து கொண்டு ஒட்டுவதில் வல்லுநர் அவர். நாளொன்றில் கிட்டத்தட்ட 1,500 காற்றாடிகள் செய்து விடுகிறார் ஷமிம். கடின உழைப்பு அது.

”நாளொன்றுக்கு 200 ரூபாய் ஈட்ட வேண்டும் என்பதுதான் இலக்கு. அப்போதுதான் மாதந்தோறும் 6,000 ரூபாய் ஈட்ட முடியும்,” என்கிறார் ஷமிம். 1,500 காற்றாடிகளுக்கு அவர் டீலி ஒட்டி பிறகு மாலையில் டேப் கொண்டு அவற்றை பாதுகாக்கிறார். “இதன் வழி, 200-210 ரூபாய் ஒருநாளில் நான் ஈட்ட முடியும்,” என்கிறார் அவர்.

இந்த வருட மே மாதத்தில் பாரி சென்றபோது வெளிப்புற வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ்ஸுக்கும் அதிகமாக இருந்தது. காற்றாடி செய்ய பிளாஸ்டிக் ஷீட் பயன்படுத்தப்படுவதால் ஃபேன்கள் கிடையாது.

PHOTO • Ali Fraz Rezvi
PHOTO • Ali Fraz Rezvi

இடது: திலாங்கிக்கான குச்சிகளை பணியாளர்கள் வெட்டுகின்றனர். வலது: அஷோக் பண்டிட் (கறுப்பு டி ஷர்ட்) குச்சிகளை காற்றாடிகளில் ஒட்டுகிறார். சுனில் குமார் மிஷ்ரா பிளாஸ்டிக் ஷீட்களை வெட்டுகிறார்

PHOTO • Ali Fraz Rezvi
PHOTO • Ali Fraz Rezvi

இடது: முகமது ஷமிம் டீலிகளை ஒட்டுகிறார். வலது: சுனில் பிளாஸ்டிக் ஷீட்களில் வேலை பார்க்கிறார்

பிளாஸ்டிக்கை சிறு சதுரங்களாக வெட்டும் சுனில் குமார் மிஷ்ரா, வியர்வையை கைக்குட்டையால் துடைக்கிறார். “காற்றாடி செய்வதில் கிடைக்கும் வருமானத்தை கொண்டு குடும்பத்தை நடத்த முடியாது. இங்குள்ள எந்தப் பணியாளரும் 10,000 ரூபாய்க்கு அதிகமாக மாத வருமானம் ஈட்டவில்லை,” என்கிறார் அவர்.

ஹாஜிகஞ்ச் மொஹல்லாவை சேர்ந்த அவர், காற்றாடி தயாரிக்கும் சமூகத்தின் பிரதான மையமாக ஒரு காலத்தில் இருந்த அப்பகுதியில் காற்றாடிகள் தயாரிக்கப்படுவதை கண்டு வளர்ந்தவர். கோவிட் காலத்தில், அவரது பூ வியாபாரம் நடக்காமல் போன பிறகு, காற்றாடி செய்வதை பார்த்து வளர்ந்த அனுபவம் அவருக்குக் கை கொடுத்தது. காற்றாடிகள் செய்யத் தொடங்கினார்.

சுனில் ஒரு வழக்கமான பணியாளர் என்றாலும் காற்றாடி எண்ணிக்கை பொறுத்துதான அவருக்கும் ஊதியம் கொடுக்கப்படுகிறது. “காலை 9 மணி தொடங்கி இரவு எட்டு மணி வரை அனைவரும் ஆயிரக்கணக்கான காற்றாடிகளை செய்துவிட வேண்டுமென முனைப்புடன் இயங்குகின்றனர்,” என்கிறார் அவர்.

*****

காற்றாடி தயாரிப்பில் பெரும் எண்ணிக்கையிலான இஸ்லாமிய பெண்கள் ஈடுபடுகின்றனர். பகுதியாகவோ முழுமையாகவோ அவர்கள் காற்றாடிகளை வீடுகளில் செய்கின்றனர். நான்கு பேர் கொண்ட குடும்பத்தை பார்த்துக் கொள்வதற்காக ஐஷா பர்வீன் இக்கலையைக் கற்றுக் கொண்டார். கடந்த 16 வருடங்களாக ஐஷா, தன் ஓரறை வீட்டில் காற்றாடி செய்து வருகிறார். இரண்டு குழந்தைகளும் கணவரும் அந்த வீட்டில் அவருடன் வசிக்கின்றனர். “கொஞ்ச காலத்துக்கு முன் வரை, ஒரு வாரத்தில் நான் 9000 திலங்கிகள் செய்து கொண்டிருந்தேன்,” என நினைவுகூருகிறார் அவர். “இப்போது 2,000 காற்றாடிகளுக்கான ஆர்டர் கிடைப்பது கூட கடினமாக இருக்கிறது,” என்கிறார் அவர்.

திலாங்கி ஏழு பகுதிகளாக செய்யப்படுகிறது. ஒவ்வொரு பகுதியையும் ஒவ்வொரு பணியாளர் செய்கிறார்,” என்கிறார் ஐஷா. ஒரு பணியாளர் பிளாஸ்டிக் ஷீட்டை தேவைக்கேற்ப சதுரங்களாக வெட்டுவார். இரண்டு பணியாளர்கள் மூங்கிலை டீலி களாகவும் கட்டா களாகவும் வெட்டுவார்கள். ஒன்று நீளமாகவும் மெலிதாகவும் இருக்கும். அடுத்தது சற்று தடிமனாகவும் உயரம் குறைவாகவும் இருக்கும். இன்னொரு பணியாளர், கட்டா களை வெட்டப்பட்ட பிளாஸ்டிக் சதுரங்களில் ஒட்டி, வளைந்த டீலி களை ஒட்டும் பணியாளருக்குக் கொடுப்பார்.

இவை எல்லாமும் முடிந்த பிறகு இரண்டு கைவினைஞர்கள் பரிசோதித்து பார்த்துவிட்டு, ஒரு டேப்பை ஒட்டி விட்டு, துளைகளை போட்டு, கன்னா கள் எனப்படும் சுருள்களை கட்ட அடுத்த பணியாளரிடம் கொடுப்பார்கள்

PHOTO • Ali Fraz Rezvi
PHOTO • Ali Fraz Rezvi

தமன்னா மும்முரமாக கட்டா (இடது) பிளாஸ்டிக் ஷீட்களில் ஒட்டிக் கொண்டிருக்கிறார். அவர் முடித்ததும், கற்றாடியை தூக்கி (வலது) சூரிய ஒளியில் பரிசோதித்து பார்க்கிறார்

பிளாஸ்டிக் வெட்டுபவர்கள் 1,000 காற்றாடிகளுக்கு 80 ரூபாய் ஈட்டுகின்றனர். மூங்கில் வெட்டுபவர்கள் 100 ரூபாய் ஈட்டுகின்றனர். பிறர் அதே எண்ணிக்கைக்கு ரூ.50 ஈட்டுகின்றனர். ஒரு பணியாளர் குழு, காலை 9 மணி தொடங்கி, சிறு இடைவேளைகள் மட்டும் எடுத்து, 12 மணி நேரங்களுக்கு வேலை பார்த்தால் ஒருநாளில் 1,000 காற்றாடிகள் செய்யலாம்.

“ஏழு பேர் சேர்ந்து செய்யும் ஒரு திலாங்கி , சந்தையில் இரண்டு, மூன்று ரூபாய்க்கு விற்கப்படுகிறது,” எனச் சுட்டிக் காட்டுகிறார் ஐஷா. 1,000 காற்றாடிகளுக்கு மொத்தமாக ரூ.410 கிடைக்கிறது. அதை ஏழு பேரும் பிரித்துக் கொள்கின்றனர். “ருக்சானா (அவரது மகள்) இந்த வேலைக்குள் வர நான் விரும்பவில்லை,” என்கிறார் அவர்.

ஆனால் பிற பெண் கலைஞர்களை போல, அவரும் வீட்டை விட்டு வெளியேறாமல் சம்பாதிக்க முடிவதால் சந்தோஷம் கொள்கிறார். எனினும் வருமானம் குறைவாக இருப்பதாக சொல்கிறார். “குறைந்தபட்சம் வேலை தொடக்கத்திலிருந்து தொடர்ச்சியாக இருக்கிறது.” 2000 காற்றாடிகளுக்கு கட்டா ஒட்டவும் கன்னா கட்டவும் 180 ரூபாய் ஐஷாவுக்கு கொடுக்கப்படுகிறது. 100 காற்றாடிகளுக்கு இந்த இரு வேலைகளை செய்ய ஐஷாவுக்கு 4-5 மணி நேரங்கள் பிடிக்கிறது.

தமன்னாவும் அதே தீவான் மொஹல்லாவில் வசிக்கிறார். அவரும் திலாங்கி கள் செய்கிறார். “பெண்கள் இந்த வேலையில் அதிகம் ஈடுபடக் காரணம், காற்றாடித் துறையிலேயே இதுதான் குறைவான ஊதியம் அளிக்கப்படும் வேலை,” என்கிறார் 25 வயதாகும் அவர். “ கட்டா அல்லது டீலி ஒட்டுவதில் சிறப்பாக ஏதுமில்லை. ஆனால் 1,000 கட்டா ஒட்டும் பெண்ணுக்கு 50 ரூபாய் கிடைக்கும். 1,000 டீலி கள் ஒட்டும் ஆணுக்கு 100 ரூபாய் கிடைக்கும்.”

PHOTO • Ali Fraz Rezvi

தான் செய்த திலாங்கியை ருக்சானா காட்டுகிறார்

காற்றாடி தயாரிப்பு மற்றும் பொருட்கள் ஆகியவற்றின் மையமாக பாட்னா திகழ்கிறது. காற்றாடிகளும் அவற்றுக்கு தொடர்பான பொருட்களும் இங்கிருந்துதான் பிகாருக்கும் சில்குரி, கொல்கத்தா, மல்தா, ராஞ்சி, ஹசாரிபாக் ஜான்பூர், காத்மண்டு, உன்னாவ், ஜான்சி, போபால், புனே மற்றும் நாக்பூர் போன்ற பகுதிகளுக்கும் செல்கின்றன

ஐஷாவின் 17 வயது மகளான ருக்‌ஷானா கட்டா ஒட்டுபவர். அவர் மூங்கில் குச்சிகளை பிளாஸ்டிக் ஷீட்களில் ஒட்டுகிறார். 11ம் வகுப்பு படிக்கும் வணிகவியல் மாணவியான அவர், காற்றாடி தயாரிப்பில் அவ்வப்போது தாய்க்கு உதவுகிறார்.

12 வயதில் இக்கலையை தாயிடமிருந்து அவர் கற்றுக் கொண்டார். “இளம் வயதில் அவள் காற்றாடிகளுடன் விளையாடுவாள். அதில் சிறப்பு பெற்றவள் அவள்,” என்னும் ஐஷா, காற்றாடி விடுவது ஆண்களின் விளையாட்டு என்பதால் அவரை தற்போது அந்த விளையாட்டுக்கு அனுமதிப்பதில்லை என்றும் கூறுகிறார்.

மொஹல்லா தீவானில் இருக்கும் ஷீஷ்மகெல் பகுதியிலுள்ள வாடகை அறையின் வாசலருகே திலாங்கிகளை அடுக்கி வைத்திருக்கிறார் ஐஷா. இறுதிக் கட்ட வேலைகளை ருக்‌ஷானா செய்து கொண்டிருக்கிறார். ஒப்பந்ததாரர் ஷஃபீக் வந்து அவற்றை பெறுவதற்கு காத்திருக்கின்றனர்.

“2,000 காற்றாடிகள் செய்வதற்கான ஆர்டர் கிடைத்தது. ஆனால் மகளிடம் சொல்ல மறந்துவிட்டேன். அவள் மிச்ச பொருட்களை கொண்டு மேலதிகமாக 300 காற்றாடிகளை செய்து விட்டாள்,” என்கிறார் ஐஷா.

“ஆனால் கவலைப்பட ஒன்றுமில்லை. அடுத்த ஆர்டருக்கு அவற்றை பயன்படுத்திக் கொள்வோம்,” என்கிறார் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்த அவரின் மகள் ருக்சானா.

“இன்னொரு ஆர்டர் கிடைத்தால்தான்,” என்கிறார் ஐஷா.

இக்கட்டுரை மிருணாளினி முகெர்ஜி அறக்கட்டளை (MMF) மானியப்பணியில் எழுதப்பட்டது.

தமிழில்: ராஜசங்கீதன்

Ali Fraz Rezvi

Ali Fraz Rezvi is an independent journalist and theatre artist. He is a PARI-MMF fellow for 2023.

Other stories by Ali Fraz Rezvi
Editor : Priti David

Priti David is the Executive Editor of PARI. She writes on forests, Adivasis and livelihoods. Priti also leads the Education section of PARI and works with schools and colleges to bring rural issues into the classroom and curriculum.

Other stories by Priti David
Translator : Rajasangeethan

Rajasangeethan is a Chennai based writer. He works with a leading Tamil news channel as a journalist.

Other stories by Rajasangeethan