கோவிட்-19 தொற்றுநோயின் போது ஹரியானாவிலிருந்து உத்தரப்பிரதேசத்தில் உள்ள தனது சொந்த ஊரான மகாராஜ்கஞ்சிற்கு தான் சுயமாக பயணிக்க வேண்டியிருந்ததை நினைவுகூருகிறார் சுனிதா நிஷாத்.
திடீரென அறிவிக்கப்பட்ட தேசிய ஊரடங்கைத் தொடர்ந்து, இத்தகைய சூழலை சந்திக்க வேண்டிய லட்சக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்களில் அவரும் ஒருவர். அதனால் ஒன்றிய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட எந்தவொரு புதிய அரசாங்க திட்டங்களிலும் அவருக்கு ஆர்வம் இல்லாதது ஆச்சரியமான விஷயமல்ல.
“என்னிடத்தில் பட்ஜெட்டைப் பற்றி கேட்கிறீர்கள்,” என்று துவங்கியவர், “அதற்கு பதில், அரசாங்கத்திடம், கொரோனா [கோவிட்-19 தொற்றுநோய்] காலத்தில் எங்களை வீட்டிற்கு அனுப்ப ஏன் போதுமான பணம் இல்லை என்று கேளுங்கள்,” என்கிறார்.
தற்போது, 35 வயதான அவர் ஹரியானாவில் உள்ள ரோஹ்தக்கின் லாதோட் கிராமத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை பிரித்தெடுக்கும் பணியில் மீண்டும் தொடர்கிறார். “ மஜ்பூர் ஹுன் [நான் உதவியற்றவள்]. அதனால்தான் இங்கு மீண்டும் திரும்ப வேண்டியதாயிற்று.”
மறுசுழற்சிக்காக தூக்கி எறியப்பட்ட வாசனை திரவிய குப்பிகளை உடைத்த வண்ணம், “ மேரே பாஸ் படா மொபைல் நஹின் ஹை, சோட்டா மொபைல் ஹை [என்னிடம் பெரிய மொபைல் ஃபோன் இல்லை, சிறியது தான் உள்ளது]. பட்ஜெட் என்னவென்று எனக்கு எப்படித் தெரியும்?” அதிகரித்து வரும் டிஜிட்டல்மயமாக்கல், அரசாங்கத் திட்டங்களை அறிந்து கொள்ள ஸ்மார்ட்போன் மற்றும் இணைய இணைப்பை சார்ந்திருக்கச் செய்துள்ளது. கிராமப்புற இந்தியாவில், இது அனைவருக்கும் சாத்தியமில்லை.
![](/media/images/02-IMG_5966-AM-Budget_What_have_I_got_to_d.max-1400x1120.jpg)
ரோஹ்தக்கின் லாதோட் கிராமத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை பிரித்தெடுக்கும் சுனிதா நிஷாத்
![](/media/images/03a-IMG_5979-AM-Budget_What_have_I_got_to_.max-1400x1120.jpg)
![](/media/images/03b-IMG_5999-AM-Budget_What_have_I_got_to_.max-1400x1120.jpg)
கௌசல்யா தேவி ஹரியானாவின் ரோஹ்தக்கில் உள்ள பயான் பூர் கிராமத்தைச் சேர்ந்த எருமை மேய்ப்பவர். மத்திய பட்ஜெட் குறித்த அவரது கருத்துகளை கேட்டபோது, 'பட்ஜெட்டா? அதற்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?' என்று கேள்வி எழுப்புகிறார்
அண்டை கிராமமான பயான் பூர் கிராமத்தில், எருமை மேய்க்கும் 45 வயது கௌசல்யா தேவிக்கும், மத்திய பட்ஜெட்டைப் பற்றி இதே கருத்து தான்.
“பட்ஜெட்? உஸ்ஸே க்யா லேனா-தேனா ? [அதற்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?] நான் சாணம் தட்டி, எருமை பேய்ப்பவள். ஜெய் ராம்ஜி கி!” என்று கூறி உரையாடலை முடிக்கிறார்.
கௌசல்யா தேவியின் கவலையெல்லாம், பாலுக்கான குறைவான அரசாங்க கொள்முதல் விலைதான். எருமை சாணத்தை சேகரித்த இரண்டு கனமான சட்டிகளில் ஒன்றைத் தூக்கியவாறு, "என்னால் இரண்டையும் தூக்க முடியும். பாலுக்கு மட்டும் நல்ல விலை கொடுத்தால் போதும்" என்று கேலி செய்கிறார்.
“பாலுக்குக் கூட மதிப்பு கொடுக்காத அரசாங்கத்தின் மற்ற திட்டங்கள், நம்மை எப்படி மதிக்கும்?” என்று அவர் மேலும் கூறுகிறார்.
தமிழில் : அஹமத் ஷ்யாம்