தாரிக் அகமது 10 வருடங்களாக ஆரம்பப் பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். 37 வயதாகும் அவர் 2009-2019 வரை ஒன்றிய அரசின் சமக்ரா ஷிக்‌ஷா திட்டத்தின் கீழ் கல்வி தன்னார்வலராக இருந்து வருகிறார். புலம்பெயர்ந்து செம்மறிகளையும் ஆடுகளையும் மேய்ச்சலுக்காக லடாக்குக்கு கொண்டு வரும் பகர்வால் குடும்பங்களின் குழந்தைகளுக்காக உயரமான ட்ராஸ் பகுதியில் பணிக்கமர்த்தப்பட்டார்.

2019ம் ஆண்டில் மாநிலம், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்னும் இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டபோது அவரின் வேலை பறிபோனது. ஜம்மு காஷ்மீரில் வசிக்கும் அவர் - ரஜவுரி மாவட்டத்தின் கலகோடேவில் வீடு இருக்கிறது - ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு வெளியே குழந்தைகளுக்கு கற்பிக்க முடியாது.

“இரண்டு யூனியன் பிரதேசங்கள் உருவானதிலிருந்து, குழந்தைகளுக்கான கல்வி அமைப்பு பெரும் சிக்கலில் இருக்கிறது,” என்னும் தாரிக், நாடோடி மக்களின் குழந்தைகளை மறந்ததற்காக அதிகாரிகளை காரணம் காட்டுகிறார்.

“நடமாடும் பள்ளிகளோ ஆசிரியர்களோ கார்கில் பகுதியின் ஜீரோ பாயிண்ட்டிலிருந்து ட்ராஸ் பகுதி வரை எங்களுக்கு இல்லை. எங்களின் குழந்தைகள் நாள் முழுக்க சுற்றித் திரிந்து, உள்ளூர்வாசிகளிடம் உணவு கேட்டு தொல்லை கொடுக்கும் நிலையில் இருக்கின்றன,” என்கிறார் கலகோடேவின் பத்தேரா கிராமத் தலைவர் ஷமிம் அகமது பஜ்ரான்.

புலம்பெயர்பவர்களுக்காக ஜம்மு காஷ்மீரில் ஆயிரக்கணக்கான தற்காலிகப் பள்ளிகள் இருப்பதாக சொல்லும் பகர்வால் சமூகத்தினர், லடாக்குக்கு இடம்பெயருகையில் அவர்களின் குழந்தைகள் ஆறு மாதங்களுக்கு - மே மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை - கல்வியை இழப்பதாக சொல்கின்றனர். பள்ளிக்கல்வியை இங்கு இழக்கும் குழந்தைகள், சக மாணவர்களை விட பின்தங்கும் நிலை நேர்கிறது. பகர்வால் சமூகத்தில் 32 சதவிகிதம் பேர் படித்திருக்கினர். அது மாநிலத்தின் எல்லா பழங்குடி பிரிவுகளை காட்டிலும் குறைவு என்கிறது பழங்குடியினர் பற்றிய 2013ம் ஆண்டு அறிக்கை .

A Bakarwal settlement in Meenamarg, Kargil district of Ladakh. The children of pastoralists travel with their parents who migrate every year with their animals
PHOTO • Muzamil Bhat
A Bakarwal settlement in Meenamarg, Kargil district of Ladakh. The children of pastoralists travel with their parents who migrate every year with their animals
PHOTO • Muzamil Bhat

லடாக்கின் கார்கில் மாவட்டத்தில் பகர்வால் வசிப்பிடமான மீனாமார்க். மேய்ச்சல் பழங்குடிகளின் குழந்தைகள் பெற்றோருடனும் அவர்களின் விலங்குகளுடனும் சேர்ந்து ஒவ்வொரு வருடமும் புலம்பெயருகின்றனர்

“எங்களின் குழந்தைகள் படிக்க விரும்பினாலும், நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது. புலம்பெயருகையில் அவர்களின் பள்ளிகள் கிட்டத்தட்ட 100 கிலோமீட்டருக்கு அப்புறத்தில் இருப்பதால், கல்வி தடைபடுகிறது,” என்கிறார் ஐந்து வயது ஹுசைஃப் மற்றும் மூன்று வயது ஷோயிப் ஆகியோரின் தந்தையான அம்ஜத் அலி பஜ்ரான். மீனாமார்க் தொடங்கி ட்ராஸ் வரை நீளும் 16 பகர்வால் குடும்பங்களின் வசிப்பிடத்தில் அவரின் குடும்பமும் வசிக்கிறது.

“ரஜோரிக்கு நாங்கள் புலம்பெயரும்போது, குழந்தைகளையும் எங்களுடன் கூட்டி செல்ல வேண்டும். ஏனெனில் 5-6 மாதங்களுக்கு குடும்பமின்றி நாங்கள் வாழ முடியாது,” என்கிறார் 30 வயது மேய்ப்பரான அவர்.

இப்பகுதியின் கல்வி அதிகாரிகள் அறிக்கை சமர்ப்பித்தால்தான் இப்பள்ளிகளுக்கு ஏற்பாடு செய்ய முடியுமென அரசு கூறுகிறது. ஆனால், “நாடோடி குழு எங்களின் எல்லைகள் தாண்டி (கஷ்மீரிலிருந்து லடாக்கின் கார்கிலுக்கு) செல்வதால், லடாக்கின் கார்கிலிலுள்ள தலைமை கல்வி அலுவலர்களுக்கு (CEO) ஜம்மு காஷ்மீரின் குடிமக்கள் மீது நிர்வாகரீதியிலான அதிகாரம் கிடையாது,” என்கிறார் டாக்டர் தீப் ராஜ் கனெதியா.  பள்ளிக் கல்வி இயக்ககமான சமக்ரா ஷிக்‌ஷாவின் திட்ட இயக்குநரான அவர், தன் கைகள் கட்டி போடப்பட்டிருப்பதாக சொல்கிறார். “மாநிலம் இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட பிறகு கார்கிலின் கல்வியில் எங்களுக்கு நிர்வாக அதிகாரம் இல்லை.”

வருடாந்திர கல்வி நிலை அறிக்கை (கிராமப்புறம் 2022) -ன்படி 55.5 சதவிகித குழந்தைகள் ஜம்மு காஷ்மீரின் அரசுப் பள்ளிகளில் சேர்ந்திருக்கின்றனர். 2018ம் ஆண்டின் 58.3 சதவிகிதத்திலிருந்து குறைந்த அளவு அது.

Left: Tariq Ahmad is a herder who was a teacher for 10 years. Here in Meenamarg he spends a few hours every day teaching children ages 3-10.
PHOTO • Muzamil Bhat
Right: Ishrat, Rifat and Nawaz (from left to right) reading under Tariq's watchful eye
PHOTO • Muzamil Bhat

இடது: 10 வருடங்களாக மேய்ப்பராக இருக்கும் தாரிக் அகமது ஓர் ஆசிரியர் ஆவார். மீனாமார்க்கில் ஒவ்வொரு நாளின் சில மணி நேரங்களையும் 3-10 வயது குழந்தைகளுக்கு பாடம் நடத்துவதில் கழிக்கிறார். வலது: இஷ்ரத், ரிஃபத் மற்றும் நவாஸ் (இடதிலிருந்து வலது) தாரிக்கின் கண்காணிப்பில் படிக்கின்றனர்

PHOTO • Muzamil Bhat

குழந்தைகள் மறந்திடாமல் இருக்கும்பொருட்டு அடிக்கடி பரிசோதிப்பதாக தாரிக் சொல்கிறார்

ஊர்த்தலைவர் ஷர்மிம் சொல்கையில்,  நாடோடி மக்கள் புலம்பெயரும் லடாக்கின் கார்கிலில் நாடோடி குழந்தைகளுக்கு கல்வி புகட்டவென ஆறு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டதாகவும் ஆனால் அவர்களில் யாரும் சமவெளியில் இல்லை என்றும் கூறுகிறார். “புலம்பெயரும் காலத்தின் முடிவில் அவர்கள் வருவார்கள். அவர்களின் பணி பதிவேட்டை தலைமை அலுவலரிடம் காட்டி கையெழுத்து பெற்று, அவர்கள் பார்க்காத வேலைக்கான சம்பளத்தை பெற்றுக் கொள்வார்கள்,” என அவர் சுட்டிக் காட்டுகிறார்.

”உதவியற்ற நிலையில் நாங்கள் இருக்கிறோம். அதனால்தான் எங்கள் குழந்தைகள் விலங்குகளை மேய்க்கும் வேலையையும் வேறு வேலைகளையும் செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது,” என்கிறார் அம்ஜத். “குழந்தைகள் படித்து நல்ல எதிர்காலம் பெற வேண்டுமென யாருக்கு விருப்பம் இருக்காது?”

நல்வாய்ப்பாக அம்ஜத்துக்கும் பிற மேய்ப்பர்களின் குழந்தைகளுக்கும் கல்வி புகட்டவென பயிற்சி பெற்ற ஆசிரியர் தாரிக் அவர்களுடன் இருக்கிறார். சமக்ரா ஷிக்‌ஷாவால் வேறெங்கும் நியமிக்கப்படாத அவர், மீனாமார்க்கில் ஆங்கிலம், கணக்கு, அறிவியல் மற்றும் உருது படிக்கும் பகர்வால் குழந்தைகளுக்கு கல்வி புகட்டுகிறார். “இக்குழந்தைகளுக்கு கல்வி போதிப்பது என் சமூகத்துக்கு நான் செய்ய வேண்டிய கடமை என நினைக்கிறேன். இது எனக்கு சந்தோஷத்தையும் நிம்மதியையும் தருகிறது,” என்கிறார் இளம் பகர்வால்.

ஊதியம் பெறும் ஆசிரியர் அவர் இல்லை என்பதால், கொஞ்சம் மேய்ச்சல் வேலையையும் அவர் செய்கிறார். காலை 10 மணிக்கு கிளம்பி மாலை 4 மணிக்கு திரும்புவார். தாரிக்கின் குடும்பத்துக்கு செம்மறியும் ஆடும் என 60 விலங்குகள் சொந்தமாக இருக்கின்றன. இங்கு அவர் மனைவி மற்றும் மகள் ரஃபிக் பானோ ஆகியோருடன் இருக்கிறார்.

இளம் ஆசிரியரின் கல்வி பயணமும் சவால்களின்றி இல்லை. பள்ளி நாட்களை நினைவுகூரும் அவர், “ஸ்ரீநகருக்கு இடம்பெயர்ந்து பெரும் தடைகளின்றி கல்வியை தொடர உறவினர்களின் வீட்டில் தங்கினேன்,” என்கிறார். சவுரா ஸ்ரீநகரின் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பை 2003ம் ஆண்டில் அவர் முடித்தார்.

PHOTO • Muzamil Bhat
PHOTO • Muzamil Bhat

தற்காலிக பள்ளிகளில் பெரும்பாலும் ஆசிரியர்கள் இருப்பதில்லை, என்கின்றனர் கிராமத்தின் மூத்தவர்கள். ‘அதனால்தான் எங்களின் குழந்தைகளும் விலங்குகள் மேய்க்கும் வேலையையும் கூலி வேலையையும் செய்யும் நிலைக்கு ஆளாகின்றனர்,’ என்கிறார் தந்தை அம்ஜத்

பகர்வால் சமூகத்தை சேர்ந்த அவர், மக்களுக்கு செய்ய வேண்டுமென எண்ணுகிறார். “எல்லா பாடங்களையும் அப்பா இங்கு சொல்லிக் கொடுப்பார். ஆனால் பள்ளியில் ஒவ்வொரு பாடத்துக்கும் வெவ்வேறு ஆசிரியர்கள் இருப்பார்கள்,” என்கிறார் ரஃபிக் பானோ. பத்து வயதாகும் அவர், ரஜோரி மாவட்டத்தின் பனிகார் கிராமத்திலுள்ள ஜம்மு காஷ்மீர் பெண்கள் நடுநிலை  பள்ளியில் ஆறாம் வகுப்பில் இருக்கிறார்.

“படித்து ஆசிரியராக விரும்புகிறேன். அப்போதுதான் என் அப்பாவை போல இக்குழந்தைகளுக்கு கல்வி புகட்ட முடியும். எங்களுக்கு இங்கு வேறு ஆசிரியர்கள் எவரும் இல்லை. எனவே நானே ஆசிரியராகி அவர்களுக்கு கல்வி கற்றுக் கொடுப்பேன்,” என்கிறார் அந்த சிறுமி.

எனவே தங்களுடைய நாட்களை விளையாடியும் மலைகளில் ஊர் சுற்றியும் கழித்துக் கொண்டிருந்த குழந்தைகளுக்கு தற்போது தாரிக்கின் தயவில் சில மணி நேரங்கள் கல்வி கிடைக்கிறது. ஜூலை மாதத்தில் கட்டுரையாளர் சந்தித்தபோது அவர்கள் அனைவரும் பாடப்புத்தகத்தில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தனர். 3-10 வயதுகளில் இருக்கும் 25 பேர் இருந்த குழுவை தாரிக் கவனித்துக் கொண்டிருந்தார். மீனாமார்க்கின் உயரமான பகுதியில், தம் வீடுகளுக்கு அருகே அவர்கள் மரங்களுக்கடியில் நிழலில் அமர்ந்திருந்தனர்.

“இந்த மாணவர்கள் படிக்க வேண்டுமென்பதற்காக நான் இங்கு வந்திருக்கிறேன். ஆனால் இன்னும் பல குழந்தைகள் உயரமான பகுதிகளில் வசிக்கின்றனர். அவர்களின் நிலை என்ன? யார் அவர்களுக்கு கல்வி புகட்டுவார்?,” என்கிறார் கட்டணமின்றி பாடம் நடத்தும் அந்த ஆசிரியர்.

சமீபத்தில் (2019-ல்) யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்ட லடாக்கில் கார்கில் இருக்கிறது. முன்பு அது ஜம்மு காஷ்மீரில் இருந்தது.

தமிழில்: ராஜசங்கீதன்

Muzamil Bhat

মুজামিল ভট শ্রীনগর-কেন্দ্রিক ফ্রিল্যান্স ফটোজার্নালিস্ট ও চলচ্চিত্র নির্মাতা, ২০২২ সালে তিনি পারি ফেলো ছিলেন।

Other stories by Muzamil Bhat
Editor : PARI Desk

আমাদের সম্পাদকীয় বিভাগের প্রাণকেন্দ্র পারি ডেস্ক। দেশের নানান প্রান্তে কর্মরত লেখক, প্ৰতিবেদক, গবেষক, আলোকচিত্ৰী, ফিল্ম নিৰ্মাতা তথা তর্জমা কর্মীদের সঙ্গে কাজ করে পারি ডেস্ক। টেক্সক্ট, ভিডিও, অডিও এবং গবেষণামূলক রিপোর্ট ইত্যাদির নির্মাণ তথা প্রকাশনার ব্যবস্থাপনার দায়িত্ব সামলায় পারি'র এই বিভাগ।

Other stories by PARI Desk
Translator : Rajasangeethan

রাজাসংগীতন চেন্নাইবাসী লেখক। এক প্রখ্যাত তামিল খবরের চ্যানেলে সাংবাদিক হিসেবে কাজ করেন।

Other stories by Rajasangeethan