2019 ன் சுற்றுச்சூழல் பிரிவில் ராம்நாத் கோயங்கா விருது பெற்ற காலநிலை மாற்றம் பற்றிய கட்டுரை தொகுதியின் ஒரு பகுதி, இந்த கட்டுரை.

“மாலை 4 மணியளவில் கொஞ்சம் கதகதப்பு வேண்டுமென்றால் இங்கு தீமூட்ட வேண்டும்” என்று சொல்கிறார் அகஸ்டின் வடக்கில். கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் தன் தோட்டத்துப் பயிர் காக்கப் போராடும் விவசாயி. “அப்படி குளிர்காய நினைத்ததெல்லாம் 30 வருடங்களுக்கு முன்பான ஒன்று. வயநாடு பனிப்பொழியும் குளிரான இடம் என்பது மாறிவிட்டது” என்கிறார். மார்ச் மாதத்தில் அதிகபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸாக இருந்தது. இப்போது மிகச் சுலபமாக அதே மார்ச் மாதத்தில் 30 டிகிரி செல்சியஸைத் தாண்டுகிறது.

வடக்கிலின் வாழ்வில் வெப்பமான நாட்கள் இரண்டு மடங்காகி இருப்பதாகச் சொல்கிறார். 1960-இல், அவர் பிறந்தபோது, “ஒரு வருடத்துக்கு குறைந்தது 32 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருக்கும் 29 நாட்களை வயநாட்டில் எதிர்பார்க்கலாம்” என்கிறது New york Times-இன் ஜுலை மாத காலநிலை மற்றும் புவி வெப்பமயமாதல் கருவி. “இப்போது வயநாடு சராசரியாக ஒரு வருடத்திற்கு 59 வெப்பமயமான நாட்களைப் பார்க்கிறது.”

டெக்கன் சமவெளியின் தென்முனையின் மேற்குத்தொடர்ச்சி மலையில், இந்த மாவட்டத்தில் மிக அதிகமாக மிளகு, ஆரஞ்சு போன்ற மிகவும் மெல்லிய பயிர்கள் பருவநிலை மாற்றங்கள் காரணமாகவும், அதிக வெப்பத்தின் காரணமாகவும் குறைந்திருக்கிறது என வடக்கில் கூறினார்.

வடக்கிலும், அவரது மனைவி வல்சாவும் மனந்தாவடி தாலுக்காவில் செருக்கோட்டூர் கிராமத்தில் நான்கு ஏக்கர் தோட்டம் வைத்திருக்கிறார்கள். பணப் பயிரான கரும்பு விளைச்சல் நன்றாக இருந்ததால், அதைச் செய்வதற்காக 80 வருடங்களுக்கு முன்பாகவே அவர்களது குடும்பம் கோட்டயத்திலிருந்து வயநாட்டுக்கு இடம்பெயர்ந்திருந்தது. அதே சமயத்தில்தான், மைய கேரளத்திலிருந்து பல சிறு விவசாயிகள் வட கிழக்கு கேரளத்திற்கு இடம்மாறிக் கொண்டிருந்தார்கள்.

நாட்கள் போகப்போக இந்த கரும்பு விளைச்சல் குறைந்தது. “கடந்த வருடத்தைப் போல மழைப்பொழிவு ஒழுங்கற்று ஏமாற்றினால், காபி பயிர் மோசமடையும்” என்றார் வடக்கில். “காபி பயிரிடுவது லாபகரமானதுதான். ஆனால், வெப்பநிலை அதன் வளர்ச்சிக்கு மிகப்பெரிய தடையாக இருக்கும். வெப்பம் மற்றும் ஒழுங்கற்ற மழைப்பொழிவு இருந்தால், அதை நாசமாக்குகிறது” என்கிறார் வல்சா. ரோபஸ்டா காபி பயிர் வளர்வதற்கான சரியான வெப்பநிலை 23 - 28 டிகிரி செல்சியஸ் என இப்பயிரை விளைவிப்பவர்கள் சொல்கிறார்கள்.

PHOTO • Noel Benno ,  Vishaka George

மேல் வரிசை: பிப்ரவரி மாத இறுதி அல்லது மார்ச் முதல் வாரத்தில் காபி பயிர்கள் வளர்வதற்குத் தேவையான மழையை எதிர்பார்த்து இருக்கும். கீழ் வரிசை: ரோபஸ்டா காபி கொட்டைகளை (வலது) வறண்ட வானிலையோ பொய்த்துப்போகும் மழையோ அழித்துவிடும்.

ரோபஸ்டா காபி குடும்பத்தைச் சேர்ந்த வயநாட்டுக் காபி டிசம்பருக்கும் மார்ச் இறுதிக்கும் இடையே பயிரிடப்படுகிறது. பிப்ரவரி இறுதி வாரத்திலோ மார்ச் மாத முதல் வாரத்திலோ முதல் மழையைப் பெற்றால், ஒரு வாரத்துக்குப் பிறகு காபி பூக்கத் தொடங்கும். முதல் மழைக்குப் பிறகு அடுத்த ஒரு வாரத்திற்கு மழை பெய்யாமல் இருந்தால்தான் பூக்கள் அழிவைச் சந்திக்காமல் இருக்கும். ஒரு வாரத்திற்குப் பிறகு காபி பழம் அல்லது செர்ரீக்கள் வளர்வதற்கு ஒரு மழை தேவையாக இருக்கிறது. ஒரு முறை பூக்கள் பூத்து உதிர்ந்தவுடன், காபிக் கொட்டைகளை வைத்திருக்கும் செர்ரீக்கள் முதிர்ந்து வளரத் தொடங்கும்.

“85 சதவிகிதம் வளர்ச்சியை மழைப்பொழிவே உறுதிப்படுத்தும்” என்கிறார் வடக்கில். மார்ச் முதல் வாரத்தில் அவரைச் சந்தித்தபோது அவர் மழைக்காக காத்திருந்தார். ஆனால் மழை வரவில்லை.

மார்ச் முதல் வாரத்தில், கேரளாவின் கோடைக்காலத்தின் தொடக்கத்தில் வெப்பநிலை ஏற்கனவே 37 டிகிரி வரை சென்றுவிட்டது. “இரண்டாவது மழை (ரெண்டாமத்த மழா) மிக விரைவாக வந்து பயிரை நாசம் செய்துவிட்டது” என்று மார்ச் இறுதி வாரத்தில் சொன்னார் வடக்கில்.

காபி கொட்டைகளைப் பயிரிடுவதற்காக இரண்டு ஏக்கர் நிலத்தைப் பயன்படுத்தும் வடக்கிலுக்கு இந்த வருடம் 70000 ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. இயற்கைமுறை பதப்படுத்தாத ஒரு கிலோ காபிக்கு 88 ரூபாயும், ஆர்கானிக் அல்லாத காபிக்கு 65 ரூபாயும் தருகிறது வயநாடு சமூக சேவைக் குழுமம். (WSSS)

2017-2018-இல் 55525 டன்னிலிருந்து வயநாட்டின் காபி தயாரிப்பு 40 சதவிகிதம் அவரை சரிந்திருப்பதாக WSSS-இன் இயக்குநரான ஃபாதர் ஜான் சூரப்புழயில் தொலைபேசியில் தெரிவித்தார். உள்ளூர் விவசாயிகளிடமிருந்து காபியை வாங்குகிறது WSSS கூட்டுறவு நிறுவனம். இதில் அதிகாரப்பூர்வ எண்ணிக்கை தெரியவில்லை. “வயநாட்டின் விளையும் காபிக்கு பருவநிலை மாற்றம் மிகப்பெரிய தடையாக இருக்கிறது” என்கிறார் ஜான். மாவட்டம் முழுவதும், மிக அதிகமான மழையும், மழை பொய்க்கும் நிலையும் இருக்கும் ஒழுங்கற்ற நிலையைப் பற்றி பல விவசாயிகளும் பேசினர்.

PHOTO • Vishaka George
PHOTO • Noel Benno

அகஸ்டின் வடக்கில் மற்றும் அவரது மனைவி வல்சா (இடது) இருவரும் காபி, ரப்பர், மிளகு, வாழை, நெல் மற்றும் பாக்கு ஆகியவற்றை உற்பத்தி செய்கிறார்கள். அதிகரித்திருக்கும் வெப்பம், அவர்களது காபி பயிரையும் (வலது) மற்ற பயிர்களையும் பாதிக்கிறது

மழை பெய்வதில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் நிலத்தை நீரின்றி வாடச் செய்திருக்கிறது. “வயநாட்டில் 10 சதவிகிதம் விவசாயிகள் மட்டுமே, வறண்ட நேரத்திலும் ஒழுங்கற்ற மழைபெய்வின்போதும் போர்வெல் மற்றும் பம்புகள் மூலமாக பாசனம் செய்து வேலை செய்யமுடிகிறது” என்கிறார் ஃபாதர் ஜான்.

அதிர்ஷ்டமுள்ள சிலரில் ஒருவராக வடக்கில் இல்லை. அவரது பாசன பம்பு, ஆகஸ்ட் 2018-இல் வயநாட்டையும், கேரளத்தின் மற்ற பகுதிகளையும் பாதித்த வெள்ளத்தின்போது சேதமடைந்துவிட்டது.  அதை சரிசெய்வதற்கு தேவைப்படும் 15000 ரூபாய் இந்த நேரத்தில் அவருக்கு மிகப்பெரிய தொகையாக இருக்கிறது.

மீதமிருக்கும் அவரது இரண்டு ஏக்கர் நிலத்தில், ரப்பர், மிளகு, வாழை, நெல் மற்றும் பாக்கு ஆகியவற்றைப் பயிர் செய்திருக்கிறார்கள் வடக்கிலும் வல்சாவும். அதிகரித்திருக்கும் வெப்பம் இந்த பயிர்களையும் பாதித்திருக்கிறது. “பதினைந்து வருடங்களுக்கு முன்பாக, நாங்கள் வாழ்வதற்கு மிளகுப் பயிர் மட்டுமே போதுமானதாக இருந்தது. ஆனால், த்ருதவாட்டம் (விரைவாக சருகாவது) போன்ற நோய்கள் பல ஏக்கர் பயிர்களை அழித்துவிட்டது” என்கிறார். மிளகு நீண்டநாள் பயிராக இருப்பதால், விவசாயிகளின் இழப்பு மிக மோசமானதாக இருக்கிறது.

“நாட்கள் போகப்போக, விவசாயம் ஒருவருக்கு பொழுதுபோக்காக இருந்தால்தான் அதை மேற்கொள்ள முடியும். என்னிடம் நிலம் இருக்கிறது. ஆனால் என் நிலைமையைப் பாருங்கள்” என்கிறார் வடக்கில். “இப்போது நாங்கள் செய்யவேண்டியதெல்லாம் மிளகாயைக் கொஞ்சம் கூடுதலாக அரைத்துவைத்துக் கொள்வதுதான். அப்போதுதான் சோற்றோடு இதைச் சேர்த்து சாப்பிட முடியும்” என்கிறார் வருத்தத்துடன் சிரித்துக்கொண்டே.

“இது 15 வருடங்களுக்கு முன்பாகத் தொடங்கிய ஒன்று” என்கிறார் அவர். “ஏன் காலவஸ்தம் இப்படி மாறிக்கொண்டே இருக்கிறது?”. மலையாள வார்த்தையான காலவஸ்தா என்பது காலநிலையைக் குறிக்கிறது. வெப்பநிலையையோ வானிலையையோ அல்ல. இதே கேள்வியை வயநாட்டின் பல விவசாயிகளும் கேட்பதைக் காண முடிந்தது.

பல பத்தாண்டுகளாக விவசாயிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பயிர் செய்யும் முறையிலும் இந்தக் கேள்விக்கான ஒரு பகுதி விடை இருக்கிறது.

PHOTO • Vishaka George
PHOTO • Noel Benno

மழை குறைவாக இருக்கும்போது, மற்ற பல பெரிய எஸ்டேட்டுகளைப் போலவே மனந்தவாடி (இடது) காபி எஸ்டேட்டிலும் செயற்கையான குளங்கள் அமைக்கப்பட்டு, பம்புகள் அமைக்கப்பட்டன. வடக்கிலின் (வலது) சிறிய தோட்டத்தைப் போன்றவை, கிணறுகளையும், மழையையுமே நம்பி இருக்கவேண்டியதாகிறது.

”ஒரே பயிர் செய்யும் தற்போதைய முறையை விட, ஒரு பயிர்த் தோட்டத்தில் அதிகம் பயிர்களை விளைவிப்பதுதான் ஆரோக்யமான போக்கு” என்கிறார் டி.ஆர் சுமா. நில மாற்றம் தொடர்பான விஷயங்களில் கடந்த பத்தாண்டுகளாக பணிபுரிந்து வரும் சுமா, எம்.எஸ் சுவாமிநாதன் நிறுவனத்தில் ஆராய்ச்சியாளராக இருக்கிறார். ஒரு பயிர் பயிரிடப்பட்டிருந்தால், பூச்சு அரிப்புகளும் நோய்களும் ஏற்பட்டு, அதற்காக பூச்சி மருந்துகளையும், செயற்கை உரங்களையும் நாட வேண்டியிருக்கிறது. இது நிலத்தடி நீருக்குள் ஊடுருவி, காற்றில் கலந்து கலப்படத்தையும், மாசையும் உருவாக்குகிறது. சில காலத்தில் சுற்றுச்சூழலுக்கு பெரிய ஆபத்தை ஏற்படுத்துகிறது.

பிரிட்டீஷாரால் தொடங்கப்பட்ட வன அழிப்பிலிருந்து இது தொடங்கியதாகக் கூறுகிறார் சுமா. “காடுகளை மூங்கில்களுக்காக அழித்து, உயர்ந்த மலைகளை தோட்டங்களாக மாற்றினார்கள்” காலநிலை மாற்றமும் ஒரு காரணம் எனப் பேசிய அவர், “அதிகமான மக்களின் இடம்பெயர்தல் (1940களில் மாவட்டத்தில் இடம்பெயரத் தொடங்கிய மக்கள்) காரணமாக நமது நிலப்பரப்பும் மாறியிருக்கிறது”. இதற்கு முன்பு, மாற்றுப் பயிரை விளைவிப்பதைத்தான் வயநாட்டு விவசாயிகள் கடைபிடித்து வந்தார்கள்.

அந்த பத்தாண்டுகளில், காபியோ மிளகோ முதன்மைப் பயிராக இருந்ததில்லை. இங்கு நெல்தான் முதன்மைப் பயிராக இருந்தது. நெல் வயலில் நிலம் என்பதால்தான் இதற்கு வயநாடு அல்லது வயல் நாடு என்கிற பெயர் நிலைத்தது. இந்த வயல்கள் கேரளாவின் சுற்றுச்சூழல் மற்றும் சக உயிரின அமைப்புகளுக்கு சாதகமாக இருந்தது. வடக்கில் பிறந்த வருடமான, 1960களில் 40000 ஹெக்டேர்களாக இருந்த நெல் வயல்கள் இப்போது 8000 ஹெக்டேர்களாக குறைந்திருக்கிறது. 2017-2018 அரசு தகவலின்படி, மாவட்டத்தின் மொத்த பயிர் பகுதியின் அளவுக்கு 5 சதவிகிதம்தான். இப்போது வயநாட்டின் காபி பயிரிடல் 68000 ஹெக்டேர்களுக்கு இருக்கிறது. கேரளாவின் காபி உற்பத்தி அளவில் இது 79 சதவிகிதமாகும். மொத்த இந்திய நாட்டில், ரோபஸ்டா உற்பத்தியில் 36 சதவிகிதமும் இதுதான்.

பணப் பயிர்களை விளைவிக்காமல் நிலத்தை ஒதுக்குவதற்கு பதிலாக ”சிறு குன்றுகளில் ராகியைப் பயிரிடுகிறார்கள் விவசாயிகள்” என்று கூறுகிறார் சுமா. பயிர் நிலங்கள் சூழலை சமன்படுத்தி வளமாக இருந்தன. ஆனால், அதிக மக்கள் நுழைவும், உணவுப் பயிர்களுக்கு பதிலாக பணப் பயிர்களை நாடியதும் முதன்மையானதாக மாறிவிட்டது. 1990களில் உலகமயமாக்கலின் வரவுக்குப் பிறகு, மிளகு போன்ற பணப் பயிர்களையே மொத்தமாக மக்கள் நம்பத் தொடங்கிவிட்டார்கள்.

’வயநாட்டின் காபி உற்பத்திக்கு காலநிலை மாற்றம் ஒரு பெரிய தடையாக இருக்கிறது. அதனால் உற்பத்தி குறைந்திருக்கிறது’- இந்த மாற்றங்களைக் குறித்து மாவட்டம் முழுவதிலுமிருக்கும் விவசாயிகள் பேசுகிறார்கள்

பார்க்க வீடியோ: பொழுதுபோக்காக இருந்தால் மட்டுமே விவசாயத்திற்கு பொருள் இருக்கும்.

“இன்று, ஒரு கிலோ நெல்லுக்கு 12 ரூபாயும், காபிக்கு 67 ரூபாயும் வருமானம் பெறுகிறார் விவசாயிகள். 360-இல் இருந்து 365 வரை மிளகுக்கு கிடைக்கிறது” என்கிறார் மனந்தவாடி நகரின் இயற்கை விவசாயியும், WSSS-இன் முன்னாள் திட்ட அலுவலருமான ஈ.ஜே ஜோஸ். அதிக அளவிலான இந்த வருமான வித்தியாசம்தான், விவசாயிகள் மிளகு மற்றும் காபி உற்பத்தியை நோக்கித் தள்ளியது. “எது தேவையென்பதை விட, எது லாபகரமானதோ அதைத்தான் அனைவரும் பயிரிடுகிறார்கள்.மழை பெய்யும்போது அதை உறிஞ்சி, நிலத்தின் நீர் அளவைத் தக்க வைக்கும் நெல்லையும் இழந்து வருகிறோம்.”

மாநிலத்தின் பல நெல் வயல்கள் இப்போது வீட்டுமனைப் பட்டாக்களாக மாறிவிட்டது. நெல் விளைச்சலில் நிபுணத்துவம் பெற்ற விவசாயிகளின் வேலையும் குறைந்துவிட்டது.

“இந்த மாற்றங்கள் எல்லாம் சேர்ந்து வயநாட்டின் நிலப்பரப்பில் தொடர்ச்சியான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது” என்கிறார் சுமா. “ஒரு பயிர் முறை மூலமாக மண் சுரண்டப்பட்டிருக்கிறது. அதிகரிக்கும் மக்கள் தொகையும் (1931 சென்சஸில் 100,000க்கு குறைவாக இருந்த மக்கள் தொகை, 2011 சென்சஸில் 817,420 ஆக இருந்தது) நிலத் துண்டாடலும் அதிகமாவதால் வயநாடு வெப்பமயமாவதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை” என்கிறார்.

பயிரிடும் முறைகளில் இருக்கும் மாற்றம் அதிகரிக்கும் வெப்பநிலைக்கு காரணம் என்பதை ஜோஸும் நம்புகிறார். “விவசாய முறை மாற்றங்கள் மழைப் பொழிவில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது” என்கிறார் அவர்.

தவின்ஹல் பஞ்சாயத்துக்கு அருகில், தன் 12 ஏக்கர் நிலத்தில் நடந்துகொண்டிருந்த 70 வயது ஜே.ஜார்ஜ், “இந்த நிலம் முழுவதும் ஒருகாலத்தில் மிளகாக இருந்தது. மரங்களுக்கு நடுவில் வெளிச்சம் புகுவதே கஷ்டமாக இருக்கும். கடந்த சில வருடங்களில் டன் கணக்கில் மிளகை இழந்திருக்கிறோம். மாறிவரும் காலநிலை விரைவில் சருகாகும் நோய்களுக்கு காரணமாக இருக்கிறது” என்றார்.

பைடோப்டோரா பூஞ்சையால், மாவட்டம் முழுவதும் ஆயிரக்கணக்கானவர்களின் வாழ்வாதாரத்தை பாதித்திருக்கிறது இந்த பயிர் நோய். அதிகமான ஈரப்பதம் கொண்ட நிலையிலும் இந்த நோய் இருக்கும். “கடந்த பத்தாண்டுகளில் இந்த பயிர் நோய் அதிகமாக இருந்து வருகிறது” என்கிறார் ஜோஸ். “மழை இப்போது ஒழுங்கில்லாமல் பெய்கிறது. பூஞ்சையை தக்கவைக்கும் அளவுக்கு நல்ல பாக்டீரிவான ட்ரைகோடெர்மாவை அழித்து, இந்த நோயின் தாக்கத்தை அதிகமாக்குறது அதிகரித்துவரும் செயற்கை உரங்களின் பயன்பாடு” என்கிறார் அவர்.

PHOTO • Noel Benno ,  Vishaka George

மேல் இடது: மழைக்கு நாங்களதான் பிரசித்தம் என்கிறார் எம்.ஜே ஜார்ஜ். மேல் வலது: “இந்த வருடம் மிகக் குறைந்த காபி உற்பத்தி எங்களுடையது” என்கிறார் சுபத்ரா பாலகிருஷ்ணன். கீழ் இடது: வன அழிப்பு பிரிட்டீஷாரால் தொடங்கப்பட்டது என்று சொல்லும் ஆராய்ச்சியாளர் டி.ஆர் சுமா. கீழ் வலது: “தேவையானவற்றை அல்ல. லாபகரமானதையே எல்லோரும் பயிரிடுகிறார்கள்” என்று சொல்லும் ஈ.ஜே ஜோஸ்.

“முன்பு குளிர்சாதன காலநிலை வயநாட்டில் இருந்தது. இனி அப்படியில்லை” என்கிறார் ஜார்ஜ். “சரியான நேரத்தில் பெய்த மழை 15 வருடங்களாக குறிப்பிடத்தக்க அளவில் குறைந்து வந்திருக்கிறது. மழைக்கு நாங்கள்தான் பிரசித்தம்...” என்கிறார்

ஜூன் 1 முதல் ஜூலை 28 வரை வயநாட்டில் பெய்த மழை, சராசரியை விட 54 சதவிகிதம் குறைந்தது என்று தெரிவிக்கிறது திருவனந்தபுரத்தின் இந்திய வானியல் துறை தரவுகள்.

அதிக மழை நேரங்களில், வயநாட்டில் நன்கு மழை பெரும் பகுதி 4000 மில்லிமீட்டர் வரை மழையளவைப் பதிவு செய்திருக்கின்றன. ஆனால், மாவட்டத்தின் சராசரி இப்போது அதிகமாக குறைந்திருக்கிறது. 2014-இல் 3260 மில்லி மீட்டராகவும், அடுத்த இரண்டு வருடங்களில் 2283 மில்லி மீட்டர் மற்றும் 1328 மில்லி மீட்டர் அளவிலும் இருந்திருக்கிறது. 2017-இல் 2,125 மில்லி மீட்டரும், வெள்ளம் ஏற்பட்ட 2018-இல் 3,832 மில்லி மீட்டரும் இருந்ததாகத் தெரிய வருகிறது.

”வருடாந்திர மழை மாற்றம் கடந்த இருபதாண்டுகளில் மாறியிருக்கிறது. 1980களில் தொடங்கி அந்த மாற்றம் 90களில் அதிகரித்திருக்கிறது” என்கிறார் திருச்சூர் கேரள விவசாயப் பல்கலைக்கழகத்தின் காலநிலை மாற்றக் கல்வி மற்றும் ஆய்வு நிறுவனத்தின் அறிவியல் அலுவலர் கோபகுமார் சோலையில். “பருவமழைக்காலத்திலும், பருவமழை முடிந்த காலங்களிலும் பெய்யும் தீவிர மழை பெய்யும் போக்கு கேரளாவில் அதிகரித்திருக்கிறது. இதற்கு வயநாடும் விதிவிலக்கல்ல” என்கிறார்.

இதையே வடக்கில், ஜார்ஜ் மற்றும் மற்ற விவசாயிகளும் உறுதிப்படுத்துகிறார்கள். உற்பத்தி குறைவைப் பற்றிக் கவலைப்பட்டாலும், மழைநீர் சராசரி அளவை விட குறைந்திருந்தாலும், அவர்கள் எதிர்பார்க்கும்போதும், தேவைப்படும்போதும் மழை கிடைப்பதில்லை என்பதை வலியுறுத்துகிறார்கள். குறைந்த மழை பெய்யும் காலம், அதிக மழை பெய்யும் காலம் ஆகிய இரண்டு நேரத்திலும் தேவையான நேரத்தில் அதைப் பெறுவதில்லை என்கிறார்கள். இங்கு ஜூலைதான் பருவமழைக் காலத்தின் முதன்மை நேரம் என்றாலும், ஆகஸ்ட் - செப்டம்பரில் மழை வரலாம். (இங்கும், இன்னும் இரண்டு மாவட்டங்களிலும் ’கனத்த’ மற்றும் ’மிக கனத்த’ மழை பெய்யலாம் என்னும் ஆரஞ்சு எச்சரிக்கையை ஜூலை 29ம் தேதி அளித்திருக்கிறது IMD)

PHOTO • Vishaka George
PHOTO • Vishaka George

வடக்கிலின் தேங்காய் மற்றும் வாழைத் தோட்டங்கள், ஒழுங்கற்ற வானிலையின் காரணமாக தொய்வுடன் காணப்படுகின்றன

“பயிர் முறையில் மாற்றங்கள், வன அடர்த்தி அழிப்பு, நிலப் பயன்பாட்டு முறை என இவையனைத்தும் சுற்றுச்சூழலின் மீது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது” என்கிறார் முனைவர் சோலையில்.

“கடந்த வருடத்தின் வெள்ளத்துடன், எனது எல்லா காபி பயிர்களும் அழிந்துவிட்டன. வயநாடு முழுவதும் மிகக் குறைந்த அளவில் மட்டுமே காபி உற்பத்தியாகி உள்ளது” என்கிறார் மனந்தாவடியில் சுபத்ரா டீச்சர் என்று அன்போடு அழைக்கப்படும் அவர். 75 வயதான விவசாயியான சுபத்ரா பாலகிருஷ்ணன், எடவகா பஞ்சாயத்தைச் சேர்ந்த அவரது குடும்பத்தின் 24 ஏக்கர் பயிரைப் பார்த்துக்கொள்கிறார். காபி, தேங்காய், நெல் மற்றும் பிற பயிர்களை விளைவிக்கிறார் அவர். “பல வயநாட்டு விவசாயிகள் வருமானத்திற்கு அவர்களது கால்நடைகளை நம்பியிருக்கிறார்கள்” என்கிறார் அவர்.

’காலநிலை மாற்றம்’ என்னும் வார்த்தையை அவர்கள் பயன்படுத்தாமல் இருந்திருக்கலாம். ஆனால், அதன் விளைவுகளால் அனைவரும் கவலையோடு இருக்கிறார்கள்.

கடைசியாகச் சென்ற இடம் ஏடன் சமவெளி. சுல்தான் பத்தேரி தாலுக்காவின் பூத்தடி பஞ்சாயத்தின் 80 ஏக்கர் தோட்டம். கடந்த 40 வருடங்களாக விவசாயப் பணியாளராக இருக்கும் கிரிஜன் கோபியைச் சந்தித்தோம். அவரது அரைநாள் வேலையை முடித்து வந்து கொண்டிருந்தார். “இரவில் மிகுந்த குளிராகவும், பகலில் மிகுந்த வெப்பமாகவும் இருக்கிறது. இங்கு என்ன நடக்கிறது என்பதை யார் அறிவார்” என்கிறார் அவர். மதிய உணவுக்காக நடந்துகொண்டிருந்த அவர் தனக்குள்ளே இப்படிப் பேசிக்கொள்கிறார். “கடவுளுக்குத்தான் தெரியும். இதையெல்லாம் வேறு யாரால் புரிந்துகொள்ள முடியும்?” முணுமுணுக்கிறார்.

அட்டைப் படம்: விஷாகா ஜார்ஜ்

இந்தக் கட்டுரைக்கு பெரும் உதவியாக இருந்த ஆராய்ச்சியாளர் நோயெல் பென்னோவுக்கு, இக்கட்டுரையாசிரியர் நன்றி தெரிவிக்க விரும்புகிறார்.

பருவநிலை, காலநிலை மாற்றத்தைக் குறித்த நாடு முழுவதுமான செய்திப்பணியிலிருக்கும் PARI, UNDP முயற்சியின் ஒரு பகுதி. சாமான்ய மக்களின் வாழ்வனுபவம் வழியாகவும், அவர்களின் குரல்களின் மூலமாகவும் ஆவணப்படுத்தும் முயற்சி.

இக்கட்டுரையை மீண்டும் வெளியிட வேண்டுமா? [email protected], [email protected] இருவருக்கும் தெரிவிக்கவும்.

தமிழில்: குணவதி

Reporter : Vishaka George

বিশাখা জর্জ পারি’র বরিষ্ঠ সম্পাদক। জীবিকা এবং পরিবেশ-সংক্রান্ত বিষয় নিয়ে রিপোর্ট করেন। পারি’র সোশ্যাল মিডিয়া কার্যকলাপ সামলানোর পাশাপাশি বিশাখা পারি-র প্রতিবেদনগুলি শ্রেণিকক্ষে পৌঁছানো এবং শিক্ষার্থীদের নিজেদের চারপাশের নানা সমস্যা নিয়ে প্রতিবেদন তৈরি করতে উৎসাহ দেওয়ার লক্ষ্যে শিক্ষা বিভাগে কাজ করেন।

Other stories by বিশাখা জর্জ
Editor : P. Sainath

পি. সাইনাথ পিপলস আর্কাইভ অফ রুরাল ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা সম্পাদক। বিগত কয়েক দশক ধরে তিনি গ্রামীণ ভারতবর্ষের অবস্থা নিয়ে সাংবাদিকতা করেছেন। তাঁর লেখা বিখ্যাত দুটি বই ‘এভরিবডি লাভস্ আ গুড ড্রাউট’ এবং 'দ্য লাস্ট হিরোজ: ফুট সোলজার্স অফ ইন্ডিয়ান ফ্রিডম'।

Other stories by পি. সাইনাথ
Series Editors : P. Sainath

পি. সাইনাথ পিপলস আর্কাইভ অফ রুরাল ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা সম্পাদক। বিগত কয়েক দশক ধরে তিনি গ্রামীণ ভারতবর্ষের অবস্থা নিয়ে সাংবাদিকতা করেছেন। তাঁর লেখা বিখ্যাত দুটি বই ‘এভরিবডি লাভস্ আ গুড ড্রাউট’ এবং 'দ্য লাস্ট হিরোজ: ফুট সোলজার্স অফ ইন্ডিয়ান ফ্রিডম'।

Other stories by পি. সাইনাথ
Series Editors : Sharmila Joshi

শর্মিলা জোশী পিপলস আর্কাইভ অফ রুরাল ইন্ডিয়ার (পারি) পূর্বতন প্রধান সম্পাদক। তিনি লেখালিখি, গবেষণা এবং শিক্ষকতার সঙ্গে যুক্ত।

Other stories by শর্মিলা জোশী
Translator : Gunavathi

Gunavathi is a Chennai based journalist with special interest in women empowerment, rural issues and caste.

Other stories by Gunavathi