குர்பிரதாப் சிங் 11ம் வகுப்பு படிக்கிறார். அவரின் 13 வயது உறவினர் சுக்பிர் ஏழாம் வகுப்பு படிக்கிறார். இருவரும் பஞ்சாபின் அம்ரிட்சர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். இப்போது அவர்கள் பள்ளிக்கு செல்லவில்லை. வேறு வகை கல்வியை பயின்று கொண்டிருக்கின்றனர்.
“நாங்கள் ஒவ்வொரு இரவும் விவசாயிகளின் எல்லையை இங்கு காத்து நிற்கிறோம்,” என ஹரியானாவின் சிங்கு தில்லி எல்லைப்பகுதியிலிருக்கும் 17 வயது குர்பிரதாப் சொல்கிறார்.
தில்லி எல்லையின் பல்வேறு பகுதிகளில் திரண்டிருக்கும் ஆயிரக்கணக்கான விவசாயக் குடும்பங்களில் அவர்களும் அடக்கம். சில விவசாயிகள் சில வாரங்களுக்கு முன்பே தலைநகருக்குள் நுழைந்துவிட்டனர். வடக்கு தில்லியின் புராரி மைதானத்தில் முகாமமைத்துள்ளனர்.
செப்டம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக பல்வேறு களங்களில் இருந்து பெரியளவில் அவர்கள் நடத்தும் அறவழிப் போராட்டங்கள் தொய்வு அடைவதற்கான அறிகுறியே தென்படவில்லை. ஒரு நீண்ட போராட்டத்துக்கு தயாராகியே விவசாயிகளும் வந்திருக்கின்றனர். அவர்களின் கோரிக்கைகளில் தெளிவாக இருக்கின்றனர். நோக்கத்திலும் உறுதியாக இருக்கின்றனர்.
இரவு ஆகிவிட்டது. சிங்கு மற்றும் புராரி பகுதி முகாம்களினூடாக நான் செல்கையில் பலர் உறங்க தயாராகிக் கொண்டிருக்கின்றனர். சில விவசாயிகள் அவர்களின் ட்ரக் வாகனங்களில் தங்கி இருக்கின்றனர். சிலர் பெட்ரோல் பம்ப் நிலையங்களில் உறங்குகின்றனர். சிலர் குழுவாக பாடல்கள் பாடி இரவை கழிக்கின்றனர். கதகதப்பு, தோழமை, தீர்வுக்கான உறுதி, போராட்டவுணர்வு யாவும் இப்பகுதிகளில் தெளிவாக புலப்படுகின்றன.
விவசாயிகள் இந்த மூன்று சட்டங்களை எதிர்த்துதான் போராடுகின்றனர் : வேளாண் விளைபொருள் வர்த்தகம் மற்றும் வணிகம் (ஊக்குவித்தல் மற்றும் வசதி ஏற்படுத்துதல்) சட்டம்; விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைக்கான விவசாயிகள் (அதிகாரம் அளிப்பு மற்றும் பாதுகாப்பு) ஒப்பந்த சட்டம் 2020 மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் (திருத்த) சட்டம் 2020.
இந்த சட்டங்களின் வழியாக தங்களுக்கு இருக்கும் உரிமையையும் மொத்த விவசாயத்தையையும் தூக்கி நாட்டின் வலிமையான நிறுவனங்களுக்கு கொடுப்பதாக விவசாயிகள் நினைக்கிறார்கள். பெருவணிகங்களின் காலடியில் சட்டங்கள் விவசாயிகளை விழச் செய்வதாக எண்ணுகின்றனர். “இது துரோகம் இல்லை என்றால், வேறு எது துரோகம்?” என இருளுக்குள்ளிருந்து ஒரு குரல் கேட்கிறது.
“இந்த பெருநிறுவனங்களுடன் விவசாயிகளான எங்களுக்கு ஏற்கனவே அனுபவம் இருக்கிறது. நாங்கள் அவர்களை நம்புவதாக இல்லை. எங்களை அவர்கள் முன்பே ஏமாற்றியிருக்கின்றனர். நாங்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை. எங்களின் உரிமைகள் என்னவென்பது எங்களுக்கு தெரியும்,” என ஒரு குரல் சிங்குவின் முகாம்களுக்கு இடையே நான் நடந்தபோது கேட்டது.
விவசாயிகள் கேட்பது போல் சட்டங்களை ரத்து செய்வதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்க மறுக்கும் அரசின் நிலை அவர்களுக்கு கவலையை தரவில்லையா? தாக்குப்பிடிப்பார்களா?
”நாங்கள் வலிமையாக இருக்கிறோம்,” என்கிறார் பஞ்சாபை சேர்ந்த விவசாயி ஒருவர். “நாங்களே உணவு சமைத்து பிறருக்கும் வழங்குகிறோம். நாங்கள் விவசாயிகள். எப்படி வலிமையாக இருப்பதென எங்களுக்கு தெரியும்.”













