நாங்கள் அளிக்கும் ஒவ்வொரு அறிக்கைக்குமான ‘முக்கிய அம்சங்கள்’ தொகுக்கும் எங்களின் தன்னார்வலர்கள்தான் எங்களின் பணியின் இதயம். கல்லூரி மாணவர்கள் தொடங்கி, ஓய்வு பெற்ற பணியாளர்கள் வரை பலரும் தன்னார்வ பணியில் பங்கெடுத்து விரிவான தலைப்புகளையும் அடர்ந்த தரவுகளை வகைப்படுத்தி தெளிவான வாசிப்புக்கு அளிக்கின்றனர். தங்களின் நேரத்தையும் திறமையையும் எங்களுக்கு வழங்கி, தரவுகளின் பெட்டகம் செறிவுடன் இருப்பதை உறுதி செய்கிறார்கள்.
தற்போது பாரி நூலகத்தில் கிட்டத்தட்ட 450 தன்னார்வலர்கள் இருக்கின்றனர். தொடக்கம் தொடங்கி இவர்கள் பாரியுடன் இயங்கி வருகிறார்கள்.
2025ம் ஆண்டு முடியும் தறுவாயில், தம் அனுபவங்களையும் முக்கியமான கற்றல்களையும் பற்றி சில தன்னார்வலர்கள் பேசுவதை அளிக்கிறோம்.
யாழினி சத்தியமூர்த்தி
ஐஐடி பம்பாயில் சூழலியல் அறிவியல் மற்றும் பொறியியலில் எம்டெக் படித்து வருகிறார்
ஒவ்வொரு அறிக்கைக்கும் நான் தொகுக்கும் ‘முக்கிய அம்சங்கள்’ எனக்கு புதிய பார்வையை வழங்குகிறது. உதாரணமாக Tainted Carpets: Slavery and child labour in India’s hand-made carpet sector அல்லது Climate India 2024: An assessment of extreme weather events போன்ற அறிக்கைகள் எனக்கு கலக்கத்தை கொடுத்தது. அவற்றை ஆராய பல நாட்கள் பிடித்தன. நான் படித்துக் கொண்டிருக்கும் கல்வி சார்ந்தும் பல விஷயங்களை நான் தெரிந்து கொள்வதற்கான வாய்ப்புகளை இந்த அறிக்கைகள் வழங்கி இருக்கின்றன.
ஒரு பக்க போஸ்டரோ 500 பக்க புள்ளியியல் அறிக்கையோ, பாரி நூலகத்தின் ‘முக்கிய அம்சங்கள்’ பிரிவு, பிரச்சினையின் முக்கியத்துவத்துக்கு உங்களை இட்டுச் செல்லும். இந்த அறிக்கைகளில் பல, இன்னும் பொதுவெளியில் இல்லை என்பதுதான் துயரம்.
அபிசார் ஷெய்க்
ஊடகம் மற்றும் பொருளாதார சேவைகளில் 30 வருட அனுபவம் கொண்ட வல்லுநர்
எனக்கு நிறைய நேரம் இருந்தது. நல்ல வகையில் அதை செலவழிக்க விரும்பினேன். பாரி நூலகத்தில் தன்னார்வ பணி செய்வது சிறந்த வாய்ப்பாக இருந்தது. பாரியின் பணி மிக சரியாக இருந்தது. என்னுடைய தனிப்பட்ட ஆர்வத்தை பூர்த்தி செய்வதாகவும் அது அமைந்தது.
ஒரு வாசகராக, மேம்படுத்தப்பட்ட பட்டியலும் தேடல் சாத்தியமும் நூலகத்தில் இருக்க விரும்புகிறேன்.
ஜெர்ரி ஜோஸ்
கேரள கோட்டயத்தில் காலநிலை அறிவியலாளராக இருக்கிறார்
பாரி இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்ட சமயத்தில் பி.சாய்நாத் கொடுத்த உரைதான் எனக்கு அறிமுகம். “ஒரு துணைக் கண்டத்துக்குள் ஒரு கண்டமாக அமைந்திருக்கும்” கிராமங்களை ஆவணப்படுத்துவது முக்கியமான முதல் முயற்சி ஆகும். என்னுடைய தன்னார்வ பணி என்பது தொடர்ந்து விரிவடைந்து வரும் பாரி நூலகத்துக்கான என்னுடைய பங்களிப்பு ஆகும்.
‘முக்கிய அம்சங்கள்’ என்கிற முன்னிறுத்தலுடன் பாரி நூலகம், அறிக்கைகளை அளிப்பது பாராட்டத்தக்கது. விரிவான இந்த தன்மை பாரியின் இதழியலுக்கு உதவுவதாக நான் நினைக்கிறேன். என்னுடைய திறனுக்கான் வெளியிலும் அதற்கு வெளியேயும் பணியாற்றுவதன் மூலம் நானும் பல விஷயங்களை கற்றுக் கொள்கிறேன்.