தங்களின் வசனங்களை பேசி ஒத்திகை பார்க்கும் கலைஞர்களின் குரல்கள், புரிசை தெருக்களை நிறைத்திருக்கிறது. இந்த கிராமம், அக்டோபர் மாதத்தில் உறங்குவதில்லை. ஆர்வத்துடன் பார்வையாளர்கள், கிராம சதுக்கத்தில் திரளுகிறார்கள். இசை காற்றை நிறைக்கிறது. தெருக்களின் சிறிய வீடுகள் ஒப்பனை அறைகளாக மாறுகின்றன. குப்புசாமி மற்றும் சந்திரா நடத்தும் டீக்கடை போன்ற சிறுதொழில்கள், இரவு முழுக்க வாடிக்கையாளர்களை கவனிக்கின்றன. நாடு முழுவதிலுமிருந்து கலைஞர்கள் வந்திருக்கின்றனர். ஜார்க்கண்டின் நாடகக் கலைஞர்கள், உள்ளூர் தெருக்கூத்து கலைஞர்கள், தமிழ்நாட்டின் பிற பகுதிகளை சேர்ந்த பறை குழுவினர், கேரளா மற்றும் புதுச்சேரியை சேர்ந்த நிகழ்த்து கலைஞர்கள், சென்னை போன்ற இடங்களை சேர்ந்த நவீன நாடகக் கலைஞர்கள் எனப் பலரும் வருகின்றனர். அது அக்டோபர் 6, 2024. புரிசை விழாவென அழைக்கப்படும் பிரபலமான கலைமாமணி கண்ணப்ப தம்பிரான் நினைவு நாடக விழா மீண்டும் நடக்கிறது.
முன்பு, இவ்விழா மூன்று நாட்கள் கொண்டாடப்பட்டது. கோவிட் தொற்றுக்கு பிறகு, இத்தகைய பாரம்பரியங்கள் பல பாதிப்புக்குள்ளாயின. எனவே ஒரு வருட இடைவெளியில் இந்த விழா ஒன்றரை நாள் வரை நடத்தப்படுகிறது. விழாவின் வேர்கள் 1989 வரை செல்கின்றன. அச்சமயத்தில் இது கோடை விழா என அழைக்கப்பட்டது. நவீன நாடகக் கலைஞர் ந.முத்துசாமியால், கண்ணப்ப தம்பிரான் மற்றும் புரிசையை சேர்ந்த அவரது மூத்த மகன் காசி ஆகியோருடன் இணைந்து தொடங்கப்பட்ட விழா இது. நாட்டுப்புறக் கலை கொண்டிருக்கும் பரிசுத்த ஆற்றலால் ஈர்க்கப்பட்ட முத்துசாமி, நவீன கதைசொல்லல் உத்திகளுடன் தெருக்கூத்து வடிவத்தை இணைக்கவென தம்பிரானிடம் பணியாற்றினார்.
தெருக்கூத்து கலைஞர்கள் குழுமும் இடமாக அறியப்பட்ட ஊர் இது. “இங்குள்ள ஒவ்வொருவரும் கலைஞர்தான். விவசாயியோ தினக்கூலியோ அனைவரும் கலைஞர்கள்தான்,” என்கிறார் ஊரை சேர்ந்த தெருக்கூத்து கலைஞரான 49 வயது பழனி முருகன். விழாவின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவர் அவர். பல பத்தாண்டுகளாக நகரத்தை சார்ந்த நவீன நாடகம் மற்றும் சமகால நடனத்தில் இயங்கிவிட்டு, தெருக்கூத்துக்கு வந்தவர் முருகன். “பல வருடங்களாக ஒத்திகை நிகழ்ச்சிகளில் இயங்கிவிட்டு, தெருக்கூத்தின் தன்னிச்சையான இயல்புக்கு பொருந்துவது சவாலாக இருந்தது,” என ஒப்புக்கொள்கிறார் அவர். “ஆனாலும் வீடு திரும்பும் உணர்வை இது தந்தது.”
































