ஐம்பதுகளில் அடியெடுத்து வைத்துள்ள அசோக் ராணி கோண்ட், பள்ளிக்கு சென்றதே இல்லை. ஆனால், அவரது ஒன்பது வயதுப் பேரன், ஒரு நாள் கூட பள்ளியை தவறவிட்டதில்லை என்று அவர் சிரித்துக்கொண்டே கூறுகிறார். "ஏக் பீ தின் நஹின் ச்சோடா [ஒரு நாள் கூட அவன் பள்ளியைத் தவறவிட்டதில்லை]," என்று அவர் கூறுகிறார்.
டாபா தொடக்கப்பள்ளியில் பயிலும் 39 குழந்தைகளில் அவரது பேரனும் ஒருவர். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி சுமார் 500 பேரைக் கொண்ட இந்தக் கிராமம், டாமோஹ் மாவட்டத்தின் எல்லையில், தாழ்வான குன்றுகள், திறந்த புல்வெளிகள் மற்றும் சிறு சிறு விவசாய நிலங்களால் சூழப்பட்டுள்ளது. பெரும்பாலும் கோண்ட் ஆதிவாசிகளைக் கொண்ட இந்த குடும்பங்கள், சிறிய அளவில் விவசாயம் செய்வதோடு, கால்நடைகளையும் வளர்க்கின்றனர்.
இங்கு வசிக்கும் பல பெரியவர்கள் பள்ளிக்குச் சென்றதே இல்லை. கோண்ட் ஆதிவாசிகளில் 50 சதவீதம் பேர் எழுத்தறிவு அற்றவர்களாகவே உள்ளனர் என்று 2013-ல் வெளியான அறிக்கை தெரிவிக்கிறது.
எனவே, டாபா பள்ளியில், பள்ளிக்குச் செல்லத் தயங்கும் சில மாணவர்கள் இருந்துள்ளனர். பருவ காலத்திற்கு ஏற்ப அவர்களின் எண்ணிக்கையும் மாறுபடுகிறது. வேலைவாய்ப்புகள் இல்லாத நாட்களில், குடும்பங்கள் தங்கள் குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு வேறு இடங்களுக்குக் வேலைக்காக குடிபெயரும்போது, பள்ளிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைகிறது. 6 முதல் 9 வயது வரையிலான இக்குழந்தைகளில் சிலர் வீட்டில் இருந்தபடியே மா, கொய்யா மற்றும் பிற மரங்களில் ஏறி விளையாடுவதை அதிகம் விரும்புகின்றனர்.
இப்பள்ளியில் பணிபுரியும் இரண்டு ஆசிரியர்களில் ஒருவரான தாராசந்த் யாதவ், இங்கேயே பிறந்து வளர்ந்தவர். பள்ளிக்கு வரத் தயங்கும் இத்தகைய மாணவர்களுக்காக ஒரு தனி உத்தியைக் கையாளுகிறார். அவர் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் காத்திருந்துவிட்டு, பின்னர் கையில் சில சாக்லேட்டுகளுடன், பள்ளிக்கு வராத குழந்தைகளின் வீட்டிற்கே நேரில் செல்கிறார். "முதலில் நான் பெற்றோர்களிடம் பேசுகிறேன்; குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புமாறு அவர்களிடம் கேட்டுக்கொள்கிறேன்," என்று அவர் கூறுகிறார். அதற்கு அவர்கள், "ஐயா (மஸ்டர்), நாங்கள் அதிகாலையிலேயே கூலி வேலைக்காக சென்றுவிடுகிறோம்... பிறகு நாங்கள் என்ன செய்ய முடியும்?" என்று பதில் கேள்வி கேட்கிறார்கள்.















