நெளரதேகிய வன உயிர் காப்பகத்தில் வனக்காவலராக இருந்து 13 வருடங்களில் தாராசந்த் கோண்ட், சாம்பல் நிற ஓநாய்களை காட்டிலும் அதிக அளவில் புலிகளை பார்த்திருக்கிறார். இந்த முரண் குறித்து பேசுகையில் 34 வயதான அவரது கண்கள் மின்னுகின்றன.
அவர் ஆச்சரியம் கொள்கிறார். ஏனெனில் அவர் பேசும் இந்தியாவின் பழமையான வன உயிர் பூங்கா, அருகி வரும் ஓநாய் வகைக்கு பெயர் பெற்றது. ஆனால் இந்தியாவில் மட்டுமே காணப்படும் சாம்பல் நிற இந்திய ஓநாய் தட்டுப்படுவதில்லை. நாட்டில் 3,000 சாம்பல் நிற ஓநாய்கள் இருக்கின்றன. 2022 கணக்கின்படி புலிகளின் எண்ணிக்கையோ 3,682 என்கிற அளவில் இருக்கிறது.
முதல்முறை சாம்பல் நிறத்தை பார்த்த தருணத்தை தாராசந்த் மறக்கவில்லை: “முதல்முறையாக பெடியாவை (ஓநாய்), ரோந்து செல்ல ஆரம்பித்த இரண்டு ஆண்டுகள் கழித்து நான் பார்த்தேன்,” என்கிறார் கோண்ட் பழங்குடி வனக்காவலரான அவர். “அந்த விலங்கை தூரத்தில் பார்த்தபோது நான் பராய் வட்டத்தின் மூத்த ரேஞ்சராக பணியாற்றிக் கொண்டிருந்தேன். எங்களிடமிருந்து விலகி ஓடியது. மற்றவரிடம் என்ன அது என கேட்டேன். ‘இதுதான் பெடியா. இதற்கென உருவாக்கப்பட்டதுதான் இந்த சரணாலயம்,’ என்றார்கள்.”
பல காலத்துக்கு ஓநாய்கள்தாம் நெளராதேகியின் பிரதான விலங்குகளாக இருந்தன. மத்தியப்பிரதேச விந்திய மலையின் தெற்குப்பக்கத்தில் இருக்கும் இந்த புதர்க்காட்டில் அவைதான் ராஜாக்கள். ஆனால் அவை தட்டுப்படுவது அரிது. பெரும்பாலும் நரிகளென தப்பாக அவை நினைத்துக் கொள்ளப்படுவதுண்டு. “அவற்றை நீங்கள் பார்த்தால், பின்பக்கம் அல்லது பக்கவாட்டில்தான் பார்க்க முடியும். ஏனெனில் உங்களை பார்த்து அவை ஓடிக் கொண்டிருக்கும்,” என்கிறார் வனக் காவலாளியான ஷுபம் ராய்க்வார்.
700 ஓநாய்கள் கொண்டிருக்கும் மத்தியப் பிரதேசம்தான் ஓநாய்களை அதிகமாக கொண்டிருக்கும் மாநிலம் ஆகும். எனினும், “அவற்றை காண முடிவதில்லை. புலியை விட ஓநாய் புத்திக்கூர்மை நிறைந்தது,” என்கிறார் டாக்டர் அனிருத்தா மஜும்தார். ஜபல்பூரின் மாநில வன ஆய்வு மையத்தில் வன உயிர் உயிரியலாளராக இருக்கும் அவர், Ecology of the Indian Wolf and its conservation implications in Nauradehi Wildlife Division என்கிற பணிக்காக அவற்றை ஆய்வு செய்து வருகிறார்.













