உலக புகைப்பட நாளான ஆகஸ்ட் 19 அன்று, கர்நாடகாவின் பந்திப்பூர் தேசியப் பூங்காவின் அசாதாரண புகைப்படங்களை பாரி பிரசுரிக்கிறது. காடுகளையும் வன உயிர்களையும் மக்களையும் காட்டுப்பகுதியில் வசிக்கும் மக்களின் கண்ணோட்டத்தில் பாருங்கள். சுற்றுலா பயணி அல்லது புகைப்படக் கலைஞரின் லென்ஸ் வழியாக பார்க்காதீர்கள்
புகைப்படக் கலையின் மாந்தர்களாக மிஞ்சாமல், புகைப்படக் கலையின் வழியாக மக்கள் தங்களின் கதைகளை வெளிப்படுத்துகிறார்கள் என்பதை இந்த புகைப்படக் கட்டுரைகள் எடுத்துக் காட்டுகின்றன. ஊடகங்களில் வன உயிர் சார்ந்த மிக அழகான புகைப்படங்களுக்கு பஞ்சமே இல்லை. ஆனால் அருகி வரும் உயிர்களுடன் ஆபத்தான விலங்குகளின் அருகாமையிலும் வாழும் மக்களின் கதைகளோ பெரியளவில் இல்லை. கொல்வதற்கான திறன் படைத்த மனிதர்களும் விலங்குகளும் ஒன்றாக வாழும் இத்தகைய நிலப்பரப்பில் வாழ்க்கை என்னவாக இருக்கும்? யார் இந்த கதைகளை சொல்வார்?
பந்திப்பூர் புத்தகத்தை உருவாக்க தூண்டுதலாக இருந்தது இதுதான். 2015-2016 இடையில் ஓர் ஆறு மாதங்களுக்கு விவசாயிகள், தொழிலாளர்கள், வன உயிர் வல்லுநர்கள், பழங்குடிகள் போன்ற ஆறு பேர், தங்களின் அன்றாட வாழ்க்கைகளையும் பந்திப்பூர் தேசியப் பூங்கா பகுதில் வாழும் அனுபவத்தையும் ஆவணப்படுத்தினர். புலிகள், சிறுத்தைகள், யானைகள் போன்ற உயிரினங்களை கொண்ட உலகின் முக்கியத்துவம் வாய்ந்த காப்பகங்களில் இதுவும் ஒன்று.
இந்த முன்னெடுப்பில் ஈடுபட்டவர்கள் இதற்கு முன் புகைப்படக் கருவி பயன்படுத்தாதவர்கள். அவர்கள் அனைவரும் குழுவாக சந்தித்து, அவர்களின் அன்றாட வாழ்க்கைகளில் வேலை, விளையாட்டு அல்லது எதிர்பாராத வகைகளில் விலங்குகள் எப்படி எதிர்ப்படுகிறது என்பதை கலந்துரையாடி இருக்கின்றனர். அவர்களின் கட்டுரை ஆவணப்படுத்துவது போல, பந்திப்பூர் இருவேறு உலகங்கள் எதிர்ப்படும் நிலப்பரப்பு. இந்த உலகங்களை வெளிப்படுத்துவதுதான் இப்பணிக்கான ஊக்கம்.
இங்கு இடம்பெற்றிருக்கும் பல புகைப்படக் கலைஞர்களை பொறுத்தவரை, வரலாற்றுப்பூர்வமாக மக்களுக்கு உரிமை இருக்கும் நிலங்களை, வன உயிர் பாதுகாப்பு என்கிற பெயரில் அரசு கையகப்படுத்தியதுதான் பந்திப்பூர் பரப்பு என்கிற கருத்து இருக்கிறது. சிலர், பந்திப்பூர் போல தனிமைப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்படும் பகுதிகளின் வழியாகதான் இந்தியாவின் அருகி வரும் உயிர்களை காக்க முடியும் என்றும் நம்புகின்றனர். மொத்தத்தில், வன உயிர் பாதுகாப்பு என்கிற பின்னணியில் சமூகநீதி என்பது என்ன என்பதையும் இயற்கை பாதுகாப்பு குறித்த எதிர்காலத்தை திட்டமிட நாம் யாரின் உதவியை நாட வேண்டும் என்பதையும் இந்த புகைப்படக் கட்டுரைகள் நமக்கு கற்றுக் கொடுக்கின்றன.








