“பட்ஜெட் பெரும் தொகைகளை பற்றியது. ஒரு குடிமகனாக என் மதிப்பு அரசாங்கத்தை பொறுத்தவரை பூஜ்யம்!”
’அரசாங்க பட்ஜெட்’ என்கிற வார்த்தையைக் கேட்டதும் ஏற்படும் கசப்புணர்வை வெளிப்படுத்த சந்த் ரதன் ஹல்தார் தயங்கவில்லை. “என்ன பட்ஜெட்? யாருடைய பட்ஜெட்? அது பெரும் மோசடி!” 53 வயதாகும் அவர் கொல்கத்தாவின் ஜாதவ்பூரில் ரிக்ஷா இழுக்கிறார்.
“பல பட்ஜெட்களுக்கும் திட்டங்களுக்கும் பிறகும் தீதியிடமிருந்தோ பிரதமரிடமிருந்தோ எங்களுக்கு வீடு கிடைக்கவில்லை. தார்ப்பாய் குடிசையில்தான் நான் வாழ்ந்து வருகிறேன். ஒரு அடி வரை அது தரையில் புதைந்திருக்கிறது,” என்கிறார் சந்து. பட்ஜெட் மீதான அவரது நம்பிக்கை இன்னும் ஆழமாக புதைந்து போயிருக்கிறது.
மேற்கு வங்கத்தின் சுபாஷ்கிராம் டவுனை சேர்ந்த நிலமற்றவரான அவர், அதிகாலை சீல்தாவுக்கு செல்லும் உள்ளூர் ரயில் பிடித்த ஜாதவ்பூருக்கு செல்கிறார். அங்கு அவர் மாலை வரை வேலை பார்த்து விட்டு பின் வீடு திரும்புவார். “பட்ஜெட்கள் எங்கள் உள்ளூர் ரயில்களை போல வரும் போகும். நகரத்துக்கு வருவது தற்போது கடினமாகி விட்டது. எங்கள் வெறும் வயிற்றில் அடிக்கும் இத்தகைய பட்ஜெட்டால் என்ன பயன்?” எனக் கேட்கிறார்.
![](/media/images/02-IMG154534-SK-Whose_budget_is_it_anyway.max-1400x1120.jpg)
![](/media/images/03-IMG155936-SK-Whose_budget_is_it_anyway.max-1400x1120.jpg)
இடது: மேற்கு வங்கத்தின் சுபாஷ்கிராம் டவுனில் வசிக்கும் சந்த் ரதன் ஹல்தார், தினசரி கொல்கத்தாவுக்கு பயணித்து ரிக்ஷா இழுக்கும் வேலையை செய்கிறார். அவர் சொல்கையில், ‘பட்ஜெட்கள் உள்ளூர் ரயில்கள் போல வரும் போகும். நகரத்துக்கு வருவது இப்போது கஷ்டமாகி விட்டது,’ என்கிறார். வலது: காலில் வந்த கட்டியைக் காட்டுகிறார்
பிறரால் சந்து என அழைக்கப்படும் அவர், ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தின் 4ம் நுழைவாயிலுக்கு எதிரே பயணிகளுக்காக காத்திருக்கிறார். ஒரு காலத்தில் அப்பகுதியில் 20க்கும் மேற்பட்ட ரிக்ஷாக்கள் இருந்த அந்த இடத்தில், இப்போது வெறும் மூன்று ரிக்ஷாக்கள்தான் இருக்கிறது. அவற்றில் அவரதும் ஒன்று. தினசரி அவர் 300-500 ரூபாய் சம்பாதிக்கிறார்.
”நாற்பது வருடங்களுக்கு மேலாக நான் வேலை பார்த்து வருகிறேன். என் மனைவி இன்னொருவர் வீட்டில் வேலை பார்க்கிறாள். கஷ்டப்பட்டு எங்களின் இரு மகள்களை மணம் முடித்து கொடுத்து விட்டோம். தவறு ஏதும் செய்ததில்லை. ஒரு பைசா கூட திருடியதில்லை. மோசடி செய்ததில்லை. இன்னும் இருவேளை சாப்பாட்டுக்கே எங்களுக்கு சிரமமாக இருக்கிறது. இந்த நிலையில் 7, 10, 12 லட்சம் ரூபாய் என பேசப்படும் இப்பேச்சால் எங்களுக்கு ஏதும் பயன் இருக்கும் என நினைக்கிறீர்களா?” என்கிறார் அவர் 12 லட்சம் ரூபாய் வரையான வருமானத்துக்கு அளித்திருக்கும் வரி விலக்கை பற்றி.
“பெரும் அளவு பணம் சம்பாதிப்பவர்களுக்குதான் பட்ஜெட் வரி விலக்குகள் அளிக்கும். பல கோடி ரூபாய்களை வங்கிகளிடம் கடன் வாங்கிவிட்டு வெளிநாட்டுக்கு தப்பியோடுபவர்களை அரசாங்கம் ஒன்றும் செய்யாது. ஆனால் என்னை போன்ற எளிய ரிக்ஷாக்காரன் தப்பான பாதையில் செல்லும்போது பிடிபட்டால், ரிக்ஷாவை கைப்பற்றிக் கொள்வார்கள். லஞ்சம் கொடுக்கவில்லை எனில் எங்களை துன்புறுத்துவார்கள்,” என்கிறார் அவர்.
மருத்துவத் துறையில் சொல்லப்பட்டிருக்கும் பட்ஜெட் அறிவிப்புகளை பற்றி சொல்கையில், தன்னை போன்ற ஆட்கள் சாதாரண மருத்துவத்துக்குக் கூட நீண்ட வரிசைகளில் காத்திருந்து பெற வேண்டியிருப்பதாக சொல்கிறார். “என்னுடைய சம்பளத்தை மருத்துவமனைக்கு செல்வதற்கு நான் இழந்தால், மலிவான மருந்து கிடைத்து என்ன பயன்?” காலில் வந்திருக்கும் கட்டியை அவர் காட்டி, “இதனால் என்ன சிரமம் அடையப் போகிறேன் என எனக்கு தெரியவில்லை,” என்கிறார்.
தமிழில்: ராஜசங்கீதன்