நான் சபர்பாதாவை அடைந்தபோது இரவாகியிருந்தது. பந்துவன் தாலுகாவில் உள்ள குஞ்சியா கிராமத்தின் எல்லையில் உள்ள சாலைகளில் இல்லாமல் பதினொரு வீடுகள் உள்ளன -- இவை தான் சவர் (சபர் என்றும் அழைக்கப்படுகிறது) சமூகத்தைச் சேர்ந்தோரின் சிறிய மண் வீடுகள்.
பாதி இருளில் மூழ்கியிருக்கும் அந்த வீடுகள், மேலும் அடர்ந்து வளரும் காடுகளின் தொடக்கத்தைக் குறிக்கின்றன. அங்கிருந்து அவை துவர்சினி மலையுடன் இணைகிறது. சால், செகுன், பியல் மற்றும் பலாஷ் மரங்கள் நிறைந்த இந்த காடு, பழங்கள், பூக்கள் மற்றும் காய்கறிகள் என உணவுக்கும், வாழ்வாதாரத்திற்குமானது.
சவர் சமூகம், மேற்கு வங்கத்தில் சீர்மரபினர் (DNTs) மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் வரிசையில் வருகிறது. காலனித்துவ பிரிட்டிஷ் அரசாங்கத்தின் குற்றவியல் பழங்குடியினர் சட்டத்தால் (CTA) 'குற்றவாளிகள்' என்று முத்திரை குத்தப்பட்ட பல பழங்குடியினரில் இவர்களும் அடக்கம். 1952 ஆம் ஆண்டில், இந்திய அரசாங்கம் இந்தச் சட்டத்தை ரத்து செய்தது. எனவே இவர்கள் இப்போது அறிவிக்கப்படாத பழங்குடியினர் (DNTs) அல்லது நாடோடி பழங்குடியினர் (NTs) என்று குறிப்பிடப்படுகிறார்கள்.
இன்றும், சபர்பாதாவில் (சபர்பாரா என்றும் அழைக்கப்படுகிறது) உள்ள குடும்பங்கள், காடுகளை வாழ்வாதாராமாக கொண்டுள்ளனர். 26 வயதான நேபாளி சபர் அவர்களில் ஒருவர். அவர் புருலியா மாவட்டத்தில் உள்ள தனது மண் வீட்டில் தனது கணவர் கால்து, இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகனுடன் வசித்து வருகிறார். ஒன்பது வயதாகும் மூத்த மகள், இன்னும் 1ம் வகுப்பில் படித்து வருகிறாள். இரண்டாவது பெண், சிறு குழந்தை, இளையவள், பால்குடி மாறாத கைக்குழந்தை. குடும்பத்தின் வருமானம் சால் (ஷோரியா ரோபஸ்டா) இலைகளைச் சார்ந்தது.
இக்கிராமத்தில் உள்ள 11 குடும்பங்களில், ஏழு குடும்பங்கள், சால் மர இலைகளால் செய்யப்பட்ட தட்டுகளை செய்து விற்பனை செய்கின்றனர். இம்மரங்கள், துவர்சினி வனத்தைச் சேர்ந்தவை. அந்தக் காடும் மலைகள் வரை நீள்கிறது. மலைகள் கிராமத்தின் எல்லை வரை உள்ளது. “நவ் பஜே யஹான் சே ஜாதே ஹை. எக் கண்டா லகுதா ஹை துவர்சினி பஹுன்ச்னே மேன். [நாங்கள் காலை ஒன்பது மணிக்கு இங்கிருந்து கிளம்புவோம். துவர்சினி காடை அடைய எங்களுக்கு ஒரு மணிநேரம் ஆகும்]," என்கிறார் நேபாளி.
தம்பதிகள் காட்டிற்குச் செல்லும் முன், உணவு சமைக்க வேண்டும். நேபாளி தன் வீட்டின் முற்றத்தில் வேலை செய்கிறார். குழந்தைகள் மற்றும் கணவருக்கு உணவளிக்க வேண்டும். மூத்த மகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும். இளையவனை, இரண்டாவது குழந்தையின் பராமரிப்பில் விட வேண்டும். அண்டை வீட்டார் யாரேனும் இருந்தால், அவர்கள் குழந்தைகளை மீது ஒரு பார்வையை வைத்துக்கொள்வர்.
கணவனும் மனைவியும் துவர்சினி வனத்தை அடைந்ததும், வேலை செய்யத் தொடங்குகிறார்கள். 33 வயதான கால்து, மரத்தில் ஏறி சிறிய மற்றும் பெரிய இலைகளை, ஒரு சிறிய கத்தியால் வெட்டுகிறார். இதற்கிடையில், நேபாளி சுற்றியுள்ள மரங்களிலிருந்து எளிதில் எட்டும் இலைகளைப் பறிக்கிறார். “பாரே பஜே தக் பத்தே தோட்தே ஹை. தோ-தீன் கண்டே லகுதே ஹைன். [நாங்கள் மதியம் 12 மணி வரை இலைகளை வெட்டுகிறோம். எப்படியும் இரண்டு முதல் மூன்று மணி நேரம் ஆகும்]," என்கிறார். நண்பகலில் வீடு திரும்புகிறார்கள்.
"நாங்கள் வீட்டிற்கு வந்த பிறகு மீண்டும் சாப்பிடுகிறோம்." அதன் பிறகு, கால்து ஓய்வெடுக்கிறார். ஒரு குட்டித் தூக்கம் அவருக்கு அவசியமாகிறது. ஆனால் நேபாளி, அரிதாகவே ஓய்வெடுக்கிறார். அவர் இலைகளிலிருந்து தட்டுகளைத் தயாரிக்கத் தொடங்குகிறார். ஒரு தட்டு செய்ய, எட்டு முதல் பத்து சால் இலைகளை, மெல்லிய மூங்கில் குச்சிகளால் ஒன்றாக இணைக்க வேண்டும். “நான் மூங்கில் வாங்க சந்தைக்குப் போவேன். ஒரு துண்டு 60 ரூபாய் ஆகும். மூன்று முதல் நான்கு மாதங்களுக்கு போதுமானது. மூங்கிலைப் பிளப்பது நேபாளிதான்,” என்கிறார் கால்து.
நேபாளிக்கு ஒரு தட்டு தயாரிக்க ஒன்று அல்லது இரண்டு நிமிடங்கள் ஆகும். "ஒரு நாளில் 200-300 காளி பட்டாக்கள் செய்யலாம்," என்று அவர் கூறுகிறார். இலை தட்டுகளை சாவர்கள், காளி பட்டா அல்லது தாலா என்று குறிப்பிடுகின்றனர். அவர்களின் இலக்கை அடைய வேண்டும் என்றால், நேபாளி பகலில் தொடர்ந்து எட்டு மணி நேரம் வேலை செய்ய வேண்டும்.
நேபாளி தட்டுகளை செய்கிறார், கால்து அதனை விற்பனை செய்கிறார்.
"அதிக சம்பாத்தியம் இல்லை. 100 தட்டுகளுக்கு அறுபது ரூபாய் கிடைக்குமா? ஒரு நாள் வேலைக்கு, 150 முதல் 200 ரூபாய் வரை கிடைக்கும். எங்கள் வீட்டிற்கே ஒரு ஆள் வந்து அவற்றை வாங்கி செல்கிறார்,” என்கிறார் கால்டு. அப்படி பார்த்தால், ஒரு தட்டுக்கு 60 முதல் 80 பைசா வரை கிடைக்கும். அவர்கள் இருவரும் சேர்ந்து ஒரு நாளைக்கு 250 ரூபாய் சம்பாதிப்பது, மாநிலத்தில் MGNREGA-ன் கீழ் உள்ள திறமையற்ற தொழிலாளர்களின் பரிதாபகரமான தினசரி ஊதிய விகிதத்தை விட மிகவும் மோசமானது.
அவரின் கடின உழைப்பு குறித்த எனது வியப்பிற்கு கால்து பதிலளிப்பதைப் கண்டதும், "அவரும் உதவுகிறார்," என்று கணவருக்கு ஆதரவாக பதிலளிக்கிறார். "அவர் ஒரு காய்கறி வியாபாரியிடமும் வேலை செய்கிறார். தினமும் அல்ல, எப்போதாவது அவர் அழைக்கும் போது வேலைக்கு செல்கிறார். அதற்கு அவருக்கு 200 ரூபாய் கிடைக்கும். வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை வேலை இருக்கும்,” என்று அவர் மேலும் கூறுகிறார்.
"இந்த வீடு என் பெயரில் உள்ளது," நேபாளி விரைவாக கூறுகிறார். ஒரு சிறிய நிசப்தத்திற்கு பிறகு சிரிப்பொலி எழுகிறது. அவரின் கண்கள், அந்த சிறிய மண் வீட்டின் பிரதிபலிப்போடு ஒளிர்கிறது.
தமிழில்: அஹமத் ஷ்யாம்