சரிகாவும், தயானந்த் சத்புதேவும் ஓராண்டிற்கு முன், 2017 மே மாதம் தயக்கத்துடன் வீடு மாற்றினர். "இது பாதுகாப்பின்மை, அச்சம் காரணமாக எடுக்கப்பட்ட முடிவு", என்று 44 வயதாகும் தயானந்த் கூறுகிறார்
மகாராஷ்டிராவின் லத்தூர் மாவட்டத்தில் உள்ள மொகர்கா கிராமத்தில் தலித் சமூகத்தினர் 2017 ஏப்ரல் 30 அன்று அம்பேத்கர் ஜெயந்தியைக் கொண்டாடினர். "ஆண்டுதோறும் பாபாசாகேப்பின் பிறந்த நாளுக்கு [ஏப்ரல் 14 அன்று] சில நாட்கள் கழித்து இதை கொண்டாட ஒரு நிகழ்ச்சியை நாங்கள் நடத்துகிறோம்," என்று தயானந்த் கூறுகிறார்
மொகர்கா கிராமத்தில் சுமார் 2600 பேர் வசிக்கின்றனர் - பெரும்பான்மையானவர்கள் மராத்தியர்கள், சுமார் 400 தலித்துகளில் பெரும்பாலானோர் மகர் மற்றும் மாதாங் சமூகங்களைச் சேர்ந்தவர்கள். மராட்டியர்கள் கிராமத்தின் மையப்பகுதியிலும், தலித்துகள் புறநகர்ப் பகுதியிலும் வசிக்கின்றனர். ஒரு சில தலித் குடும்பங்களுக்கு மட்டுமே சிறிய நிலம் உள்ளது. பலர் மராட்டிய விவசாயிகளின் பண்ணைகளில் தொழிலாளர்களாக வேலை செய்கின்றனர். அவர்கள் இங்கு முக்கியமாக சோளம், துவரம் பருப்பு மற்றும் சோயாபீன் பயிரிடுகின்றனர். சிலர் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிலாரி நகரில் தொழிலாளர்கள், தச்சர்கள் மற்றும் சுமை தூக்குபவர்களாக வேலை செய்கின்றனர்.
ஆனால் கடந்தாண்டு விழாவிற்குப் பிறகு நிலைமை மோசமாகிவிட்டது. "திருவிழா முடிந்த மறுநாள் கிராம சபைக் கூட்டம் [பஞ்சாயத்தால்] கூட்டப்பட்டது," என்று தயானந்த் கூறுகிறார். " சிலர் எங்கள் வீடுகளுக்குள் நுழைந்து, எங்களை அச்சுறுத்தி, ஆஜராகுமாறு உத்தரவிட்டனர். அடுத்த நாள் காலை நாங்கள் [சுமார் 15 பேர்] சபையை அடைந்தபோது, அவர்கள் எங்களை ஆத்திரமூட்ட 'ஜெய் பவானி, ஜெய் சிவாஜி' கோஷங்களை எழுப்பினர்." இந்த முழக்கங்கள் 17ஆம் நூற்றாண்டின் மராட்டிய ஆட்சியாளர் சத்ரபதி சிவாஜியை புகழ்கின்றன.
தயானந்துடன் அம்பேத்கரின் ஆண்டுவிழாவைக் கொண்டாட நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த மற்றவர்களிடமும் இதுபற்றி விளக்கம் கேட்கப்பட்டது. "அது எங்கள் உரிமை என்றும், ஏற்கனவே பலமுறை கொண்டாடியுள்ளோம்," என்றும் தயானந்த் கூறினார். "ஒரு சண்டை வெடித்து எங்களில் பெரும்பாலானோர் மோசமாக காயமடைந்தனர். அவர்கள் ஏற்கெனவே கம்பிகள், கற்கள் முதலியவற்றைத் தயாராக வைத்திருந்தார்கள்..."
"கிராம சபைக்குப் பிறகு நடந்தது முற்றிலும் அநீதியானவை," என்று சரிகா கூறுகிறார். "ஆதிக்க சமூகத்தின் உத்தரவால், ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர்கள் வாகனத்தில் எங்களை ஏற்ற தடை விதிக்கப்பட்டது. கிராமத்தில் உள்ள கடைக்காரர்கள் எங்களுக்கு எதையும் விற்க மாட்டார்கள். குழந்தைகளுக்கு தேவையான அடிப்படை உணவுப் பொருட்களைக் கூட வாங்க முடியவில்லை." இந்த 'தடை', கிராமத்தில் உள்ள அனைத்து தலித் குடும்பங்களையும் பாதித்தது.
மொகர்கா வழக்கை கையாண்ட காவல் ஆய்வாளர் மோகன் போஸ்லே – தலித்துகளும் மராட்டியர்களும் கிலாரி காவல் நிலையத்தில் ஒருவருக்கொருவர் வழக்குகளை பதிவு செய்தனர் – என்று இந்த சம்பவத்தை உறுதிப்படுத்துகிறார். ஆனால், "இப்போது நிலைமை சீராகிவிட்டது. கடந்த ஆண்டு அக்டோபரில் நாங்கள் தீபாவளி கொண்டாட்டத்தை கூட்டாக நடத்தினோம். பாவ்பீஜ் அன்று, சகோதரர் தனது சகோதரிக்கு பரிசு வழங்கினார். மராத்தியர்கள், தலித்துகள் இடையே அடையாளப் பரிசுகளை பரிமாறிக் கொள்ள வைத்து அமைதிக்கு உறுதியளிக்கிறோம்.
ஆனால் தயானந்தும், சரிகாவும் இந்த கட்டாய அமைதி குறித்து சந்தேகம் கொண்டுள்ளனர். "தீபாவளிக்கு முன்பு யாரோ ஒருவர் மற்றவருக்கு 'ஜெய் பீம்' என்று சொன்னதால் மற்றொரு சண்டை [இரு சமூகங்களுக்கும் இடையில்] வெடித்தது", என்று தயானந்த், பீம்ராவ் அம்பேத்கரை வரவழைத்து தலித் சமூகங்களின் வாழ்த்துக்களைக் குறிப்பிடுகிறார். "சும்மா, ஜெய் பீம்' என்று கூறியதே பிரச்னையை வெடிக்கச் செய்யும்போது அங்கு அமைதியை எப்படி நம்புவது?"
அகமதுநகர் மாவட்டத்தின் கோபர்டி கிராமத்தில் 2016 ஜூலையில் ஒரு மைனர் பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொல்லப்பட்ட சம்பவம் மகாராஷ்டிராவில் ஏற்கனவே ஆழமாக வேரூன்றியுள்ள சாதி மோதல்களை மொகர்காவில் நிலவும் சாதி உரசலும் காட்டுகிறது . அச்சிறுமி மராத்தா சமூகத்தைச் சேர்ந்தவள். குற்றம் சாட்டப்பட்ட மூவரும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அனைவருக்கும் சிறப்பு நீதிமன்றம் 2017ஆம் ஆண்டு நவம்பரில் மரண தண்டனை அறிவித்தது.
இந்த கொடூரமான குற்றம் மாநிலம் முழுவதும் உள்ள பல மராத்தா மோர்ச்சாக்களைத் தூண்டியது – 2017, ஆகஸ்ட் 9 அன்று 3 லட்சம் மராட்டியர்கள் எதிர்ப்புத் தெரிவித்து மும்பைக்கு அணிவகுத்துச் சென்றனர். அவர்கள் பல கோரிக்கைகளை முன்வைத்தனர். ஆனால் கோபார்டி குற்றவாளிகளுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது முக்கிய கோரிக்கையாக இருந்தது.
தாழ்த்தப்பட்டோர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் (1989) ரத்து செய்யப்பட வேண்டும் அல்லது திருத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு இந்தப் போராட்டங்கள் குரல் கொடுத்தன. இந்த சட்டத்தை தலித்துகள் தவறாக பயன்படுத்துவதாக உயர் சாதியினர் நீண்ட காலமாக கூறி வருகின்றனர்.
மராத்தா கிராந்தி மோர்ச்சாவின் உதய் கவரே, "போலியான" வன்கொடுமை வழக்குகளை இலவசமாக எடுத்து வாதாடி வருகிறார். மொகர்கா கிராம சபையில் தலித்துகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை அவர் கண்டிக்கிறார். ஆனால் கிராமத்தில் 'தடை' என்பது வன்கொடுமைச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்தியதற்கான எதிர்வினை என்று கூறுகிறார். "தகராறை தீர்க்க விரும்பியவர்கள் மீதும் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. " என்றார். " வழக்குகள் உண்மையாக இருக்கும்போது மராத்தியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். ஆனால், வழக்கு பொய் என்றால், குற்றம் சாட்டப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க வேண்டும்" என்றார்.
மொகர்காவில் இரு சமூகங்களுக்கும் இடையிலான பதற்றங்கள் உச்சமடைந்தது. இதனால் சரிகா தனது 12, 11 வயதுகளில் உள்ள இரு மகள்களையும் வீட்டை விட்டு வெளியேற அனுமதிக்கவில்லை. " சிறிய பொருளை வாங்குவதற்கு கூட நாங்கள் கிராமத்தை விட்டு வெளியே நடக்க வேண்டியிருந்தது," என்று அவர் கூறுகிறார். "என் மாமனாருக்கு உயர் ரத்த அழுத்தத்திற்கு மருந்து தேவைப்பட்டபோது, மருந்துக் கடைக்காரர் அதை விற்க மறுத்துவிட்டார். அவர் அவற்றை [கிராமத்திற்கு வெளியே உள்ள ஒரு கடையில் இருந்து] வாங்க ஐந்து கிலோமீட்டர் நடந்து சென்றார். எங்களுக்கு யாரும் வேலை கொடுக்கவில்லை. உயிர் வாழ்வது கடினமாகிவிட்டது."
ஒட்டுமொத்த சமூகமும் ஒரு மாதத்திற்கும் மேலாக இந்த அடக்குமுறைகளை எதிர்கொண்டதாக சரிகா கூறுகிறார். 2017ஆம் ஆண்டு மே மாத இறுதியில், அவரும் தயானந்தும் மூட்டை முடிச்சுகளை கட்டிக்கொண்டு தங்கள் மகள்களுடன் லத்தூர் நகரில் உள்ள இந்தியா நகர் காலனிக்கு சென்றனர். லத்தூரில் உள்ள ஒரு பள்ளியில் மகள்களை சேர்த்தனர். "எங்களுக்கு சொந்தமாக நிலம் இல்லை," என்று தயானந்த் கூறுகிறார். "நாங்கள் அங்கு தொழிலாளர்களாக வேலை செய்தோம். இங்கும் அதையே செய்கிறோம். ஆனால் செலவுகள் அதிகம் ஆவதால் இங்கு வாழ்க்கை மிகவும் கடினமாக உள்ளது," என்று கூறுகிறார்.
அன்றிலிருந்து தினமும் காலையில் கணவன், மனைவி இருவரும் ஊருக்கு வேலை தேடி வீட்டை விட்டு கிளம்புகிறார்கள். "கிராமத்தை விட இங்கு வாழ்க்கை கடினமாக உள்ளது", என்று தயானந்த் கூறுகிறார். "நான் ஒரு நாளைக்கு சுமார் 300 ரூபாயில் [கூலித் தொழில் அல்லது சுமைதூக்கி] வாரத்திற்கு மூன்று முறை வேலை பெறுகிறேன். 1,500 ரூபாய் வாடகை செலுத்த வேண்டும். குறைந்தபட்சம் என் குடும்பத்தின் பாதுகாப்பை நான் உறுதி செய்கிறேன்.”
சத்புதே குடும்பத்தின் நகர்வு, தலித்துகள் நகரங்களுக்கும் மாநகரங்களுக்கும் பெருமளவில் இடம்பெயர்வதைப் பற்றி குறிக்கிறது. விவசாயம் கைவிட்டதால் அனைத்து சமூகங்களிலிருந்தும் பெருமளவு மக்களை தங்கள் கிராமங்களை விட்டு வெளியேற்றுகிறது என்றாலும், ஒரு வித்தியாசம் இருக்கிறது என்று புனேவைச் சேர்ந்த தலித் பழங்குடியினரான அதிகார் மஞ்சின் சட்டப் பேராசிரியர் நிதிஷ் நவ்சாகரே கூறுகிறார். "தலித்துகளுக்கும் மற்றவர்களுக்கும் இடம்பெயர்வதற்கு இடையிலான வேறுபாடு என்னவென்றால், மற்றவர்கள் [வழக்கமாக] சொந்த நிலத்தை வைத்திருப்பார்கள். எனவே அவர்கள் கிராமத்தை விட்டு வெளியேற அதிக நேரம் எடுத்துக்கொள்கிறார்கள். தலித்துகள்தான் முதலில் புலம்பெயர்கிறார்கள். அவர்கள் திரும்பிச் செல்வதற்கு எதுவும் இல்லை. பெரும்பாலும், அச்சமூக பெரியவர்கள் மட்டும் அங்கேயே தங்கிவிடுவார்கள்."
2011 வேளாண் கணக்கெடுப்பின் தரவு இந்தியாவில் தலித்துகளுக்கு எவ்வளவு குறைவான நிலம் சொந்தமாக உள்ளது என்பதை தெளிவாகக் காட்டுகிறது. நாட்டிலுள்ள 138,348,461 செயல்பாட்டு நிலங்களில், பட்டியல் சாதியினர் 17,099,190 அல்லது 12.36 சதவீத நிலங்களை மட்டுமே வைத்துள்ளனர். மொத்தமுள்ள 159,591,854 ஹெக்டேர் நிலத்தில், தலித்துகளிடம் 13,721,034 ஹெக்டேர் அல்லது 8.6 சதவீத நிலம் மட்டுமே உள்ளது.
மும்பையில் உள்ள டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஷியல் சயின்சஸின் ஸ்கூல் ஆஃப் சோஷியல் ஒர்க் துறையின் டீன் மணீஷ் ஜா கூறுகையில், தலித் சமூகங்களின் இடப்பெயர்வு, அதிகரித்து வரும் விவசாய துயரங்களாலும் பாகுபாடுகளாலும் உந்தப்படுகிறது என்கிறார். "கிராமங்களில் சுரண்டப்படுவது அல்லது பாகுபாடு காட்டப்படுவது, அவமானம் செய்தல் அல்லது விலக்கி வைக்கப்படும் உணர்வை அவர்களுக்கு உருவாக்குகிறது," என்று அவர் கூறுகிறார். எல்லாவற்றுக்கும் மேலாக தலித்துகளுக்கு சொந்தமாக நிலம் இல்லை. வறட்சி அல்லது விவசாய நெருக்கடி காலங்களில் கூலித் தொழிலாளர்களாக அவர்களுக்கு வேலையிழப்பு ஏற்படுகிறது," என்று அவர் கூறுகிறார்.
தலித்துகள் மட்டுமே வசிக்கும் லத்தூரின் புத்தா நகரைச் சேர்ந்த 57 வயதாகும் கேசவ் காம்ப்ளே, ஆண்டுதோறும் மக்கள்தொகை அதிகரித்து வருவதாகக் கூறுகிறார். "தற்போது, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இங்கு வசிக்கின்றனர்," என்று அவர் மதிப்பிடுகிறார். "சிலர் [தங்கள் கிராமங்களிலிருந்து] பல தசாப்தங்களுக்கு முன்பு இங்கு வந்தவர்கள், சிலர் சில நாட்களுக்கு முன்பு வந்தவர்கள்," என்று கூறுகிறார். லத்தூரிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கரோலா கிராமத்திலிருந்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இங்கு வந்த கவிதா, பாலாஜி காம்ப்ளே என காலனியில் உள்ள அனைத்து குடும்பங்களும் தினசரி கூலித் தொழிலாளர்கள். "நாங்கள் தினக்கூலிகளாக, கட்டுமானத் தொழிலாளர்களாக - கிடைக்கும் அனைத்து வேலைகளையும் செய்கிறோம்", என்று கவிதா கூறுகிறார். "கிராமத்தில் நிலம் வைத்திருப்பவர்கள் தான் எங்கள் வேலையை முடிவு செய்வார்கள். மற்றவர்களின் தயவில் ஏன் இருக்க வேண்டும்?"
மொகர்காவில் ஓராண்டிற்கு பிறகும் சாதி மோதல்கள் தொடர்கின்றன என்று தயானந்தின் சகோதரர் பகவந்தின் மனைவி யோகிதா கூறுகிறார். அவர் தனது கணவர், பெற்றோருடன் அக்கிராமத்தில் தொடர்ந்து வசித்து வருகிறார். "அவர்கள் வயதானவர்கள்," என்று அவர் கூறுகிறார். "அவர்கள் கிராமத்தை விட்டு வெளியேற விரும்பவில்லை. அவர்கள் வாழ்க்கை முழுவதையும் இங்கு கழித்தவர்கள். என் கணவர் பெரும்பாலும் கிராமத்திற்கு வெளியே கூலி வேலை செய்கிறார். கிராமத்தில் எங்களுக்கு வேலை கிடைத்தாலும் முன்பு போல் இல்லை. நாங்கள் இன்னும் மோசமாக நடத்தப்படுகிறோம். எங்கள் வேலையிலும் கவனமாக இருக்கிறோம்."
ஏப்ரல் 2016 முதல் லத்தூரில் நடந்த சுமார் 90 சாதி சார்ந்த குற்றங்களில் மொகர்கா சம்பவமும் ஒன்று என்று மாவட்ட சமூக நலத்துறை கூறுகிறது. இருப்பினும் அவை அனைத்தும் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படவில்லை. 35 வயதாகும் லதா சத்புதே ஒவ்வொரு நாளும் எதிர்கொள்ளும் துயரங்கள் இதில் சேர்க்கப்படவில்லை. லதா எப்போதாவது விவசாயத் தொழிலாளியாக வேலை செய்கிறார். அவரது கணவர் வார்வந்தி கிராமத்திலிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள லத்தூர் நகரில் தினக்கூலியாக வேலை செய்கிறார். வீட்டிற்கு வெளியே ஒரு பொதுக் கிணறு இருந்தாலும் தண்ணீருக்காக கூடுதலாக மூன்று கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டும் [கிராமத்திற்கு வெளியே உள்ள கிணற்றுக்கு]. " துணிகளை துவைக்கவோ, தண்ணீரை நிரப்பவோ எங்களுக்கு இங்கு அனுமதி இல்லை," என்று அவர் தனது மகளிடம் கூறுகிறார். அவர் ஒரு பத்திரிகையாளரிடம் பேசுவதை அக்கம்பக்கத்தினர் கவனித்தார்களா என்பதை கண்காணிக்குமாறு கேட்டுக் கொள்கிறார். "கோவிலுக்குள் நுழைவது இருக்கட்டும், அதன் முன் நடக்கக் கூட எங்களுக்கு அனுமதி இல்லை."
தமிழில்: சவிதா