“தினமும் சாப்பிட்டால் தான் எங்களால் வேலை செய்ய முடியும்,” எனும் டி. நாராயணப்பா பெங்களூரிலிருந்து நவம்பர் 4ஆம் தேதி புச்சர்லா திரும்பினார். இக்கிராமத்தைச் சேர்ந்த மற்ற தலித் தொழிலாளர்களைப் போன்று அவரும் பல ஆண்டுகளாக கட்டுமானப் பணிக்காக நகரங்களை நோக்கி புலம்பெயர்ந்து செல்கிறார். அவ்வப்போது சில நாட்களுக்கு மட்டும் வீட்டிற்கு வந்து தங்குகிறார்.

ஆந்திரா-கர்நாடகா எல்லை மாவட்டமான அனந்தபூரின் ரோத்தம் மண்டலில் நவம்பர் மாதத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் கிராமத்தில் ஒரு மாதம் அல்லது அதற்கு மேல் தங்குவார்கள். மற்றவர்களைப் போன்று நாராயணப்பாவும் அப்போது புச்சர்லாவில் உள்ள வயல்களில் வருமானத்திற்காக வேலை செய்கிறார். ஒரு மாதத்திற்கு வேலை செய்யாமல் வருமானமின்றி அவர்களால் இருக்க முடியாது.

PHOTO • Rahul M.

‘நாங்கள் அம்பேத்கரின் மக்கள்,’ என்கிறார் புச்சர்லாவில் தங்கள் வீட்டில் உள்ள டி.நாராயணப்பா. இச்சமூகத்தினர் கடன் வாங்குவது ஏன் அவ்வளவு கடினமானது என்பதையும் விளக்குகிறார்

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு நவம்பரில் ஊருக்கு செல்வது மகிழ்ச்சிகரமானது. முன்னோர்களின் பண்டிகையான ஷாண்டி கொண்டாட அவர்கள் தங்கள் சேமிப்புப் பணத்தையும் எடுத்து வருவார்கள். திருவிழாவின் போது புச்சர்லாவில் எஸ்சி(பட்டியலினத்தவர்) காலனிக்கு சுமார் 150 தலித் குடும்பங்கள் பங்கேற்று சடங்குகளை செய்வார்கள். இதனால் பெருந்தொற்றிலிருந்து தாங்கள் காக்கப்படுவதாக அவர்கள் நம்புகின்றனர். தேவி பெட்டம்மாவிற்கு காளைகள், ஆடுகளை அவர்கள் பலிகொடுத்து காணிக்கையாக்குகின்றனர். சடங்குகளை தொடர்ந்து பலி கொடுத்த விலங்கை உணவாக சமைத்து விருந்து சாப்பிடுகின்றனர்.

இந்த ஆண்டு நவம்பர் 29ஆம் தேதி பலிகள் கொடுக்க திட்டமிடப்பட்டது. புலம்பெயர் தொழிலாளர்கள் தாங்கள் சேமித்து வைத்த பணத்துடன் திருவிழாவில் பங்கேற்பதற்காக வீடு திரும்ப தொடங்கினர். அப்போது பண மதிப்பு நீக்கமும் வந்துவிட்டது.

கிராமத்தில் கடும் பணத் தட்டுப்பாடு ஒருபுறம் என்றால், பருவமழை சரிவர இல்லாததால் நிலக்கடலை, மல்பெரி உற்பத்தியும் மறுபுறம் பாதித்துள்ளது. விலை ஏற்ற இறக்கத்தால் ரோத்தமில் உள்ள விவசாயிகள் வருவாய் இழந்துள்ளனர். அவர்களால் தொழிலாளர்களை தொடர்ந்து வேலைக்கு அமர்த்த முடியவில்லை. கிராமத்தின் பல்வேறு சாதிகளைச் சேர்ந்த தினக்கூலி தொழிலாளர்களில் ஆண்களுக்கு ரூ.150, பெண்களுக்கு ரூ.100 என 15 நாட்களுக்கு கொடுக்கப்படும் கூலி இன்னும் வரவில்லை.

சுவர்களில் விளம்பரம்: வேலையிழந்த தலித் ஒருவர் ரேஷன் கடைக்கு வெளியே படுத்திருக்கிறார். முரணாக வேலைவாய்ப்பிற்கான அரசு உதவி எண் சுவரில் எழுதப்பட்டுள்ளது

வேலையின்றி நவம்பரை கழிப்பதற்கும்,ஷாண்டி திருவிழாவை கொண்டாடுவதற்கும், தலித்துகள் குறைவாக உண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். “சில நாட்களுக்கு மட்டுமே கையிருப்பு உள்ள அரிசியை இன்னும் கொஞ்சம் நீட்டித்து சமாளித்துக் கொள்ள வேண்டும்,” என்கிறார் விவசாய கூலித்தொழிலாளியான ஹனுமக்கா. நவம்பரில் அவரைப் போன்று எஸ்சி காலனியில் உள்ள சுமார் 600 தலித்துகளும் தினமும் குறைவாக சாப்பிடுவதோடு, வாராந்திர இறைச்சி உண்பதையும் தவிர்ப்பதாக தெரிவித்துள்ளார்.

ஏழு பேர் கொண்ட நாராயணப்பாவின் குடும்பத்தில் அவரது மனைவி, இரண்டு மகன்கள், மகன்களின் மனைவிகள், இரண்டு வயது பேத்தி ஆகியோர் உள்ளனர். அவர்கள் பொதுவாக மாதம் 90 கிலோ அரிசி, கேழ்வரகு 30 சீர்களும்(ஒரு சீர் என்பது ஒரு கிலோவிற்கும் சிறிது குறைவு) உண்பார்கள். “நவம்பரில் நாங்கள் 60 கிலோ அரிசி, 10 சீர் கேழ்வரகு மட்டுமே உண்டோம்,” என்கிறார் அவர்.

புச்சர்லாவிலிருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள ரோத்தம் கிராமத்தில் ஜி.ஆர் ராகவேந்திரா என்பவர் நடத்தும் மளிகை கடையில் நாராயணப்பா அரிசி வாங்குகிறார். அங்கு 50 கிலோ அரிசி மூட்டையின் விலை ரூ.1,200. ராகவேந்திராவின் தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது. “அக்டோபரில் நாங்கள் தலா 25 கிலோ எடையிலான 20 மூட்டை அரிசி விற்றோம்,” என்றார். “கடந்த மாதம்[நவம்பர்] நாங்கள் 8-10 மூட்டைகள் மட்டுமே விற்றோம்.”

PHOTO • Rahul M.

ஜி.ஆர். ராகவேந்திரா (வலது) ரோத்தம் கிராமத்தில் உள்ள தனது மளிகை கடையில். வாடிக்கையாளர்கள் பண நெருக்கடியில் தவிப்பதால் அவர் அதற்கும் முந்தைய மாதம் விற்ற அரிசியில் பாதி பங்கு மட்டுமே நவம்பரில் விற்பனை செய்துள்ளார்

மண்டலத்தின் 21 கிராமங்களுக்காக ரோத்தமில் உள்ள மற்ற மளிகை கடைகளும் பண மதிப்பு நீக்கத்திற்கு பிறகு தொழிலில் சரிவு கண்டுள்ளன. “அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விற்பனையும் சரிந்துள்ளது,” என்கிறார் அக்கிராமத்தில் கடை வைத்துள்ள பி.அஷ்வதலக்ஷ்மி. “வாரத்திற்கு மூன்று அட்டைப்பெட்டி சோப்புகளை நாங்கள் விற்போம். டிசம்பர் முதல் வாரத்தில் ஒரு அட்டைப் பெட்டி கூட காலியாகவில்லை.”

புச்சர்லா எஸ்சி காலனிவாசிகள், ரேஷன் கடைகளில் இருந்து ஒரு பகுதி உணவு தானியங்களை மட்டுமே பெறுகின்றனர். தேவைக்கேற்ப மாதம் ஒரு முறை குறிப்பிட்ட அளவு மட்டும் வெளியில் வாங்குகின்றனர். தானியங்களை சேமித்து வைத்துக் கொள்ளும் அளவுக்கு வாங்குவதற்கு அவர்களிடம் பணம் கிடையாது. “இம்முறை நாங்கள் [போதிய அளவு] பணமில்லை என்பதால் வெளியில் வாங்கவில்லை [ரேஷன் கடையில் மட்டும் அரிசி வாங்குகிறோம்.],” என்கிறார் ஹனுமக்கா. கிராமத்தில் வேலை பறிபோனதால் அவர் வீட்டில் இருக்கிறார்.

PHOTO • Rahul M.

ஹனுமக்காவும் (இடது) அவரது மகளும் ரேஷன் கடையில் கடன் சொல்லி அரிசி வாங்குகின்றனர், டிசம்பர் மாதத்திற்கான பணத்தை பிறகு கொடுக்கலாம்

தலித் காலனிவாசிகளுக்கு தட்டுப்பாடு என்பது புதிதல்ல. 1990-களுக்கு முன்பு வரை இப்பிராந்தியத்தின் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான ஆண்கள் கொத்தடிமை தொழிலாளர்களாக இருந்து வந்தனர். அவர்களுக்கு தற்போதைய சூழல் அக்காலத்தை நினைவுப்படுத்துகின்றன. இம்முறை அவ்வளவு மோசமில்லை என்கின்றனர். “ இந்த தட்டுப்பாடு [பணமதிப்பு நீக்கத்தால்] என்பது சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் அனுபவித்த பஞ்சத்தைவிட குறைவுதான்,” என்கிறார் தற்போது 49 வயதாகும் நாராயணப்பா. “என் 20 வயதுகளில் தொடர்ச்சியாக மூன்று அல்லது நான்கு நாட்கள் பசியோடு இருந்திருக்கிறேன். புளி விதைகளை தண்ணீரில் ஊறவைத்து அதை சாப்பிடுவோம் அல்லது உயிர் பிழைக்க பனங்கிழங்கை உண்ணுவோம். நான் அப்போது 14 ஆண்டுகளுக்கு ஜீதாகாது[கொத்தடிமை தொழிலாளி] ஆக இருந்தேன்.”

முன்னாள் கொத்தடிமை தொழிலாளர்களான இவர்கள் தற்போது தங்கள் கிராமத்தில் விவசாய வேலைவாய்ப்புகள் குறைந்து போனதால் வேலை தேடி ஆண்டுதோறும் பல மாதங்கள் புலம்பெயர்கின்றனர். நாராயணப்பா குடும்பத்தில் பலரும் பெங்களூர் இடம்பெயர்ந்துள்ளனர். 3-4 மாதங்களுக்கு ஒருமுறை சில நாட்களுக்கு மட்டும் வீடு திரும்புகின்றனர். நகரின் கட்டுமானப் பணியிடங்களில் பெரும்பாலும் வேலை செய்யும் இவர்கள் வேலை நடைபெறும் கட்டடத்தின் மேல் தளத்தில் உறங்குகின்றனர் அல்லது சாலையோரம் நெரிசல் மிகுந்த அறைகளில் தங்கிக் கொள்கின்றனர். கடுமையான உழைப்பின் பயனாக முழு உணவையும் உண்கின்றனர். “வாரத்திற்கு இருமுறை நாங்கள் கண்டிப்பாக இறைச்சி உண்போம்,” என்கிறார் நாராயணப்பா. பணமதிப்பு நீக்கத்திற்கு பிறகு இதுவும் மாறிப்போனது.

நவம்பர் முதல் வாரம் நாராயணப்பா குடும்பம் புச்சர்லா திரும்பியபோது, வயல்களில் வேலை கிடைக்கவில்லை. அனைத்து செலவுகளுக்கும் சேமிப்பையே நம்பியிருந்தனர். கிராமத்தில் உள்ள மற்ற சாதியினர் தானியங்களை பகிர்ந்து கொண்டு அல்லது மற்றவர்களிடம் கடன் வாங்கிக் கொண்டு சமாளித்துக் கொள்கின்றனர். நாராயணப்பா சாதி மக்களிடம் குறைவான தானிய சேமிப்பு மட்டுமே உள்ளது. கிராமத்தில் மற்றவர்களிடம் எளிதில் கடனும் பெற முடியாது.

“நாங்கள் அம்பேத்கரின் மக்கள்,” எனும் நாராயணப்பா, எங்களால் கிராமத்தில் மற்றவர்களிடம் பணம் கடன் கேட்கவோ, தானியங்களை பகிர்ந்து கொள்ளவோ முடியாது என விளக்குகிறார். அவர் தனது சாதிப் பெயரை (மடிகா) குறிப்பிட விரும்பவில்லை. தெலுங்கில் சில சமயம் இழிவாகவும் அது பயன்படுத்தப்படுகிறது. மற்றவர்களுக்கு முன் தான் கஷ்டப்படுவதை காட்டிக்கொள்ளவும் அவர் விரும்பவில்லை. “எங்களுக்கும் கவுரவம் உள்ளது,” என்கிறார். “யாராவது எங்களுக்கு உணவுக் கொடுத்தால், நாங்கள் ஏற்பதில்லை. நாங்கள் கொஞ்சமாக கூட சாப்பிட்டுக் கொள்கிறோம். ஆனால் நன்றாக சாப்பிட்டதாக அவர்களிடம் கூறிக் கொள்கிறோம்.”

PHOTO • Rahul M.

நாராயணப்பாவின் பூட்டப்பட்ட வீடு. அவரது குடும்பத்தினர், மற்றவர்களுடன் சேர்ந்து பெங்களூருக்கு வேலைக்குச் சென்றுவிட்டனர்

பணமதிப்பு நீக்கத்தை நாராயணப்பாவின் சாதியினர் குறைவாக சாப்பிட்டு சமாளித்துக் கொள்கின்றனர். ஆனால் ரோத்தமில் உள்ள கனரா வங்கிக் கிளையில் பண தட்டுப்பாடு நிலவுவதால் கிராமத்தின் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால் எஸ்சி காலனிவாசிகளுக்கு பண தட்டுப்பாடு கவலை அளிக்கவில்லை. “எங்களிடம் பழைய நோட்டுகளை மாற்றும் அளவிற்கு பணம் இல்லை. எங்களுக்கு வேலை மட்டுமே வேண்டும்,” என்கிறார் நாராயணப்பா.

பின்குறிப்பு: ஒரு மாதம் பாதி வயிற்று பசியுடன் கழித்த நாராயணப்பா குடும்பத்தினர், திட்டமிட்ட மூன்று வாரங்களுக்கு முன்பே டிசம்பர் 4-ம் தேதி பெங்களூர் திரும்பினர். வீட்டில் பெரியவர்களிடம் பிள்ளைகளை ஒப்படைத்துவிட்டு பல தலித் குடும்பங்களும் சென்றுவிட்டன. புச்சர்லாவில் உள்ள எஸ்சி காலனிவாசிகள் கொண்டாட்ட மனநிலையில் கடந்த மாதம் ஒன்று கூடினர். திருவிழாவிற்கு பிறகு ஒரு வாரம் மவுனித்தனர்.

தமிழில்: சவிதா

Rahul M.

ராகுல் M. ஆந்திரப் பிரதேசம் அனந்தபூரிலிருந்து இயங்கும் சுதந்திர ஊடகவியலாளர்.

Other stories by Rahul M.
Editor : Sharmila Joshi

ஷர்மிளா ஜோஷி, PARI-ன் முன்னாள் நிர்வாக ஆசிரியர் மற்றும் எழுத்தாளர். அவ்வப்போது கற்பிக்கும் பணியும் செய்கிறார்.

Other stories by Sharmila Joshi
Translator : Savitha

சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.

Other stories by Savitha