“யே பரா லாக்வாலா நா? இஸி கி பாத் கர் ரகே ஹை நா?” என்கிறார் 30 வயது ஷாகித் ஹுசேன், செல்பேசியிலுள்ள வாட்சப் மெசேஜை காட்டி. 12 லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கும் வருமான வரிக்கான வரம்பு குறித்த குறுந்தகவல் அது. பெங்களூருவின் மெட்ரோ பாதையில் வேலை பார்க்கும் நாகார்ஜுனா கட்டுமான நிறுவனத்தில் க்ரேன் இயக்கும் வேலையை பார்க்கிறார் ஷாகித்.
”12 லட்ச ரூபாய் வரம்பு வரை வருமான வரி விலக்கு பற்றி நிறைய கேள்விப்படுகிறோம்,” என்கிறார் அங்கு வேலை பார்க்கும் மற்றொருவரான ப்ரிஜேஷ் யாதவ். “இங்குள்ள எவரும் வருடத்துக்கு 3.5 லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பாதிப்பதில்லை.” 20 வயதுகளில் இருக்கும் பிரிஜேஷ், உத்தர்ப்பிரதேச தியோரியா மாவட்டத்தின் துமாரியா கிராமத்திலிருந்து புலம்பெயர்ந்து வந்தவர்.
“வேலை இருந்தால், மாதத்துக்கு 30,000 ரூபாய் வரை நாங்கள் ஈட்டுவோம்,” என்கிறார் பிகாரின் கைமூர் மாவட்டத்தின் பியூர் கிராமத்தை சேர்ந்த ஷாகித். வேலை தேடி பல மாநிலங்களுக்கு அவர் சென்றிருக்கிறார். “இந்த வேலைக்கு பிறகு, நிறுவனம் எங்களை வேறு எங்காவது அனுப்பும். அல்லது 10-15 ரூபாய் அதிகமாக கிடைக்கும் வேறு வேலை நாங்கள் தேடுவோம்.”
சாலையின் ட்ராபிக் சந்திப்பில் உத்தப்பிரதேசத்திலிருந்து புலம்பெயர்ந்து வந்திருக்கும் இன்னொருவர் கண்ணாடி கவசங்களும், கார் கழுத்து பட்டைகளும் துடைப்பான்களும் விற்கின்றார். அவர் சாலையில் வேகமாக முன்னும் பின்னும் செல்கிறார். நாளின் ஒன்பது மணி நேரங்கள், கார்களின் ஜன்னல்களை தட்டி வியாபாரம் செய்ய முனைகிறார். “எந்த பட்ஜெட்டை பற்றி நான் பேச வேண்டும்? என்ன செய்தி?” என் கேள்விகள் நஃபீசுக்கு எரிச்சலை கொடுத்தது.
அவரும் அவரின் சகோதரரும் மட்டும்தான் 1,700 கிலோமீட்டர் தொலைவில், உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜ் மாவட்டத்தின் பாரத்கஞ்சில் உள்ள ஏழு பேர் கொண்ட குடும்பத்தில் சம்பாதிப்பவர்கள். “எங்களின் சம்பாத்தியம் எங்களின் வேலையை சார்ந்து இருக்கிறது. இன்று நான் சம்பாதித்தால், காசு வரும். இல்லை என்றால், இல்லை. வருமானம் கிடைக்க முடிந்தால் 300 ரூபாய் வரை ஈட்டுவேன். வார இறுதிகளில் 600 ரூபாய் வரை கிடைக்கும்.”
“ஊரில் எங்களுக்கு நிலம் இல்லை. குத்தகை நிலங்களில் விவசாயம் பார்த்தால், 50:50 அளவில்தான் பிரித்துக் கொள்வோம். அதாவது பாதி செலவை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். நீர், விதைகள் போன்றவற்றுக்கு. “வேலை நாங்கள் பார்ப்போம். எனினும் பயிரில் பாதியை நாங்கள் கொடுத்து விடுவோம். எங்களால் பார்த்துக் கொள்ள முடியாது. பட்ஜெட்டை பற்றி என்ன சொல்வது?” நஃபீஸ் பொறுமையின்றி இருக்கிறார். சிக்னல் சிவப்பாக மாறுகிறது. கார்களில் இருக்கும் வாடிக்கையாளர்களை நோக்கி செல்கிறார்.
தமிழில் : ராஜசங்கீதன்