பிரம்மபுத்திரா ஆற்றில் பிளாஸ்டிக் மற்றும் அலுமினிய கொள்கலன்களில் பால் ஏற்றிக்கொண்டு சாலகுரா சாரிலிருந்து தினமும் அதிகாலை, இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப்படகு புறப்படுகிறது. சுமார் ஒரு மணி நேரத்தில் படகு துப்ரி நகரத்திற்கு பால் எடுத்துச் செல்கிறது.
அசாம் பிரம்மபுத்திரா நதிக்கரையில் நீரோட்ட செயல்முறைகளால் உருவான பல மணல் பாங்கான, நிலையற்ற தீவுகளில் சாலகுரா சார் ஒன்றாகும் ( மணல் திட்டு மக்களின் போராட்டங்கள் என தொடங்கும் பாரியின் சார்கள் கட்டுரைகளைப் பார்க்கவும்). மதியத்திற்குள் திரும்பும் படகு, பிற்பகலில் துப்ரி நகரத்திற்கு அதிகளவு பால் எடுத்துச் செல்கிறது.
கீழ் அசாமின் துப்ரி மாவட்டத்தில் சார் பகுதியில் உள்ள மண்டல் குடும்பத்தின் பால் பண்ணையில் இருந்து பால் வருகிறது. அக்குடும்பம் 50க்கும் மேற்பட்ட கறவை மாடுகளை வைத்துள்ளது. இந்த பண்ணையில் ஒரு நாளைக்கு 100-120 லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. "எங்களிடம் உள்ள பெரும்பாலான கறவை பசுக்கள், எருமைகள் அவற்றின் கறவைச் சுழற்சியின் உச்சத்தில் இருக்கும்போது, பால் உற்பத்தி ஒரு நாளுக்கு 180-200 லிட்டர் வரை இருக்கும்," என்று மூன்று குழந்தைகளின் தந்தையான 43 வயது தமீசுதீன் மண்டல் கூறுகிறார். துப்ரி நகரில் ஒரு லிட்டர் பாலுக்கு ரூ.40 கிடைக்கிறது.
துப்ரி சார்களில் உள்ள பால் பண்ணைகள் அரசால் வெற்றிகரமானதாக கணிக்கப்படுகின்றன. ஆனால் இதன் பின்னணியில் அவர்களின் வாழ்வாதாரத்தை அச்சுறுத்தும் ஒரு உண்மையும் உள்ளது - அது கால்நடை தீவன பற்றாக்குறை
சாலகுரா சார் பகுதியில் உள்ள 791 குடும்பங்களுக்கு பால் பண்ணை மிக முக்கியமான வாழ்வாதாரமாகும். ஒவ்வொரு வீட்டின் மாடும் ஒரு நாளைக்கு சராசரியாக 30-40 லிட்டர் பால் உற்பத்தி செய்கின்றன. இவர்களுக்கு தமீசுதீன் ஒரு முன்னோடி - அவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு 5,156 பேர் வசிக்கும் இந்த சிறிய தீவில் அதிக பால் உற்பத்தி செய்யும் கலப்பின பசுக்களை அறிமுகப்படுத்தினார். பெரும்பாலான பால் உற்பத்தியாளர்கள் இப்போது கலப்பின இனங்களைக் கொண்டுள்ளனர். இந்த மாடுகள் பொதுவாக பீகார் சந்தைகளில் இருந்து கொண்டு வரப்படுகின்றன. அவை பொதுவாக உள்நாட்டு மற்றும் ஜெர்சி மாடுகளின் கலப்பினம் என்று கால்நடை மருத்துவர்கள் கூறுகின்றனர்.
"கலப்பின பசுக்களின் வரவு உற்பத்தியை அதிகரித்துள்ளது," என்று இங்குள்ள மற்றொரு பால் பண்ணை விவசாயியான அன்வர் ஹுசைன் கூறுகிறார். "ஒரு கலப்பின மாடு ஒரு நாளைக்கு 10 முதல் 14 லிட்டர் வரை உற்பத்தி செய்கிறது. அதே நேரத்தில் ஒரு நாட்டு மாடு 3-4 லிட்டர் மட்டுமே பால் கொடுக்கிறது. ஒரு எருமை மாடு [பல பால் உற்பத்தியாளர்கள் இந்த விலங்குகளையும் வைத்திருக்கிறார்கள்] ஒரு நாளுக்கு 12-16 லிட்டர் பால் உற்பத்தி செய்கின்றது," என்று அவர் கூறுகிறார்.
கலப்பின கால்நடைகள் அசாமின் சில பகுதிகளில் மட்டுமே பிரபலமாக உள்ளன. 2015 - 16 ஆம் ஆண்டு அசாமின் பொருளாதார கணக்கெடுப்பின்படி, 2014-15 ஆம் ஆண்டில் மாநிலத்தில் உற்பத்தி செய்யப்பட்ட 873 மில்லியன் லிட்டர் பாலில் (பரிந்துரைக்கப்பட்ட தேவை 2,452 மில்லியன் லிட்டர்) கலப்பின மாடுகளின் பங்களிப்பு 246.06 மில்லியன் லிட்டர் மட்டுமே.
காலப்போக்கில், துப்ரியில் தமீசுதீன் ஒரு முன்னணி பால் உற்பத்தியாளராக நன்கு அறியப்பட்டார். பால் பண்ணையை மேற்கொள்வது குறித்து மற்ற விவசாயிகளுடன் பேச மாவட்ட நிர்வாகத்தால் பயிற்சிப் பட்டறைகளுக்கு அழைக்கப்பட்டார். 51 பால் உற்பத்தியாளர்களைக் கொண்ட கூட்டுறவுச் சங்கமான சாலகுரா மிலான் துக்தா உத்பதக் சோமோபே சமிதி என்ற அமைப்பின் தலைவராகவும் உள்ளார்.
துப்ரி மாவட்ட சார்களில் உள்ள பால் பண்ணைகள் பெரும்பாலும் நிலங்கள் மற்றும் சொத்துக்களை தொடர் அழிவுகளிலிருந்து மீட்ட மக்களின் வெற்றிக் கதையாக அரசு அதிகாரிகளால் முன்வைக்கப்படுகின்றன. எனினும், இந்த வெற்றிக் கதைக்குப் பின்னால் அவர்களின் வாழ்வாதாரத்தை அச்சுறுத்தும் ஒரு உண்மையும் உள்ளது - கால்நடை தீவன பற்றாக்குறை.
2016ஆம் ஆண்டு வரை, பொது விநியோக முறையின் கீழ் அசாமுக்கு மத்திய அரசால் வழங்கப்பட்ட கோதுமை உள்நாட்டில் அரைக்கப்பட்டு பால் விவசாயிகளுக்கு கால்நடை தீவனமாக குவிண்டாலுக்கு ரூ.600 மானிய விலையில் வழங்கப்பட்டது என்று துப்ரியின் மாவட்ட கால்நடை அதிகாரி தினேஷ் கோகோய் விளக்குகிறார். உதாரணமாக, தமீசுதீனின் குடும்பத்திற்கு ஒவ்வொரு மாதமும் 25 குவிண்டால் கோதுமை தவிடு மானிய விலையில் கிடைத்தது.
2015 டிசம்பர், அசாம் அரசு வேண்டுகோளின் பேரில், நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் மாநிலத்தின் மாதாந்திர ஒதுக்கீட்டை அந்தியோதயா அன்ன யோஜனாவின் கீழ் அரிசி மட்டுமே ('முன்னுரிமை' பிரிவில்) என்றும், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கோதுமை மட்டுமே என்றும் திருத்தியது. அதன்பிறகு அசாமுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.610-க்கு 8,272 டன் கோதுமையும், 2016 ஜூலைக்குப் பிறகு 5,781 டன் கோதுமையும் கிடைத்தது.
ஆனால் 2016 டிசம்பரில் இருந்து தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மாநிலத்திற்கு கோதுமை கிடைக்கவில்லை. 2016 நவம்பர் 30, அன்று மத்திய அரசு, மாநில அரசுக்கு எழுதிய கடிதத்தில், "மத்திய தொகுப்பில் கோதுமை பற்றாக்குறை காரணமாக, 2016 டிசம்பர் முதல் மார்ச் 2017 வரை tide over பிரிவின் கீழ் மாநிலங்களுக்கு கோதுமைக்கு பதிலாக அரிசியை ஒதுக்க முடிவு செய்துள்ளதாக" கூறியது.
அதன்பிறகு, 2017 ஆகஸ்டில் வெள்ள நிவாரணமாக வழங்கப்பட்ட சிறிய அளவிலான தீவனத்தைத் தவிர, சார்களில் உள்ள பால் உற்பத்தியாளர்களுக்கு மானிய விலையில் எந்த தீவனமும் கிடைக்கவில்லை. அவர்கள் இப்போது பொதுச் சந்தையில் கால்நடை தீவனத்தை முழுமையாக நம்பியிருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அங்கு ஒரு குவிண்டாலுக்கு ரூ.2,000 வரை விலை கடுமையாக உள்ளது.
இதனால் பால் உற்பத்திக்கான செலவு அதிகரித்தாலும், பால் விற்பனை விலை ரூ.40 ஆகவே உள்ளது. "இன்றைய கால்நடை தீவனத்தின் விலையை கருத்தில் கொண்டால், பாலின் விலை ரூ.50 அல்லது அதற்கு மேல் உயர்ந்தால் மட்டுமே நாங்கள் பிழைக்க முடியும்," என்று தமீசுதீன் கூறுகிறார்.
35 பேர் கொண்ட கூட்டுக் குடும்பத்தில் தமீசுதீன் வசித்து வருகிறார். அவரும் அவரது ஐந்து சகோதரர்களான ஜமீர் அலி, உமர் அலி, அப்துர் ரஹீம், அப்துல் காசிம் மற்றும் நூர் உசேன் ஆகியோர் பால் பண்ணை வேலைகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள். குடும்பம் ஒரே சமையலறையில் சமைக்கிறது. அவர்களுக்கு சுமார் இரண்டு ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. அங்கு பெண்கள் பல்வேறு பயிர்களை விளைவிக்கின்றனர். பால் உற்பத்தியிலிருந்து குடும்பத்தின் தினசரி வருமானம் கணிசமானதாகத் தோன்றினாலும், ஆறு பெரிய குடும்பங்களிடையே பிரிக்கப்படும்போது இலாபம் போதவில்லை.
"பால் பண்ணைத் தொழிலுக்கு அதிக உழைப்பு தேவைப்படும்," என்று விளக்குகிறார் தமீசுதீன். "கலப்பின மாடுகளுக்கு 24 மணி நேரமும் தீவனம் தேவை. அவை நோய் தொற்றுகளுக்கு ஆளாகின்றன. எல்லா நேரமும் ஒரு உதவியாளர் தேவைப்படுகிறது." அரசு கால்நடை ஊழியர்களுக்கு கடும் பற்றாக்குறை உள்ளதால், இங்கு ஒரு கால்நடை மருத்துவரை அவசரத்திற்கு அணுகுவது மிக கடினம் என்று தமீசுதீன் கூறுகிறார். இரவில் அவசரமாக மருத்துவர் தேவைப்படும் போது, ஒரு பிரத்யேக படகை வாடகைக்கு எடுக்க வேண்டும். இதற்கு ரூ.2,500 முதல் ரூ.3,000 வரை செலவாகும்.
பிரம்மபுத்திராவில் உள்ள அனைத்து சார்களும் உடைப்பு, மண் அரிப்புக்கு ஆளாகின்றன. ஆனால் சாலகுராவில் (இப்பெயருக்கு 'இயக்கம்' என்று பொருள்) மண் அரிப்பு அடிக்கடி நிகழ்கிறது. இருப்பினும், மணல் திட்டுகள் அருகிலேயே விரைவாக உருவாகின்றன. இடம்பெயர்ந்தவர்கள் புதிதாக உருவாக்கப்பட்ட மணல்திட்டுக்கு உடனடியாக இடம்பெயர அனுமதிக்கிறது. சாலகுரா சார் இப்போது ஐந்து வெவ்வேறு பகுதிகளின் தொகுப்பாக உள்ளது. ஒவ்வொரு பகுதியிலும் 135 முதல் 1,452 வரை மக்கள் தொகை உள்ளது. அதன் குடியிருப்புவாசிகள் மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை இடம்பெயர்கிறார்கள்; தமீசுதீன் குடும்பம் இதுவரை 15 முறை மீள்குடியேற வேண்டியிருந்தது.
பல தலைமுறைகளாக, பால் பண்ணை சார் குடியிருப்புவாசிகளின் நாடோடி வாழ்க்கையின் ஓர் அங்கமாக மாறியுள்ளது. "இதுபோன்ற நிச்சயமற்ற தன்மை, அடிக்கடி இடம்பெயர்வதற்கு இடையே, எங்கள் முன்னோர்கள் பால் பண்ணை விவசாயத்தை ஒரு நிலையான வாழ்வாதார விருப்பமாக ஏற்றுக்கொள்ள முடிவு செய்தனர்," என்று தமீசுதீன் விளக்குகிறார். "வருடாந்திர வெள்ளம், மண் அரிப்பால் அழியக்கூடிய விவசாய நிலங்களில் நிற்கும் பயிர்களைப் போல் இல்லாமல், கால்நடைகள் நிரந்தர சொத்து மற்றும் எடுத்துச் செல்லக் கூடியவை. நாங்கள் ஒவ்வொரு முறை ஒரு புதிய தோட்டத்திற்கு இடம்பெயரும்போதும், எங்கள் வீட்டுப் பொருட்களுடன் கால்நடைகளையும் அழைத்துச் செல்கிறோம். இந்த இடப்பெயர்வு எங்கள் வாழ்வின் ஓர் அங்கமாக மாறிவிட்டது," என்று அவர் கூறுகிறார்.
முந்தைய ஆண்டுகளில் பால் விற்பனையின் மூலம் கிடைத்த நிலையான வருமானம், பெரும்பாலான குடும்பங்கள் தங்கள் ஓலை வீடுகளை மாற்றி, தேவைப்படும்போது மாற்றக்கூடிய மடிப்பு மரச்சட்டத்தின் மீது அமைக்கப்பட்ட புதுமையான தகரக் கூரை மற்றும் தகர சுவர் கட்டமைப்புகளை உருவாக்க உதவியது.