கரடகா கிராமத்தில் ஒரு குழந்தை பிறந்தால், குடும்பத்தினர் முதலில் சோமக்கா பூஜாரிக்கு தெரிவிக்கிறார்கள். கிட்டத்தட்ட 9,000 மக்களைக் கொண்ட கிராமத்தில் இன்னும் செம்மறி ஆட்டு ரோமங்களில் வளையல்களை உருவாக்கக்கூடிய சில கைவினை கலைஞர்களில் இவரும் ஒருவர். உள்ளூரில் கண்டா என்று அழைக்கப்படும் இந்த ஆபரணங்கள் மங்களகரமானதாகக் கருதப்படுகின்றன. பிறந்த குழந்தைகளின் மணிக்கட்டுகளைச் சுற்றி வைக்கப்படுகின்றன.

"செம்மறி ஆடுகள் பெரும்பாலும் மேய்ச்சல் நிலங்களைத் தேடி கிராமங்களைக் கடந்து, கடினமான வானிலையையும் பொருட்படுத்தாமல் அனைத்து வகையான மக்களையும் சந்திக்கின்றன," என்று 50 வயதுகளின் பிற்பகுதியில் இருக்கும் சோமக்கா கூறுகிறார். செம்மறி ஆடுகள் சகிப்புத்தன்மையின் அடையாளமாகக் கருதப்படுகின்றன. மேலும் அவற்றின் தலைப்பகுதி ரோமங்களில் தயாரிக்கப்படும் கண்டா, தீய சக்தியை தடுக்கும் என்று நம்பப்படுகிறது.

தங்கர் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் பாரம்பரியமாக இந்த வளையல்களை வடிவமைத்துள்ளனர். இன்று, கரடகாவில் உள்ள எட்டு தங்கர் குடும்பங்கள் மட்டுமே இந்த கலையை பயிற்சி செய்வதாக கூறப்படுகிறது. "நிம்மா கவாலா கட்லா ஆஹே [இந்த கிராமத்தில் உள்ள பாதி குழந்தைகளின் மணிக்கட்டுகளை இந்த வளையல்களால் அலங்கரித்துள்ளேன்]", என்று சோமக்கா மராத்தியில் கூறுகிறார். கரடகா கிராமம் கர்நாடகாவின் பெலகாவி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது மகாராஷ்டிரா எல்லையில் உள்ளது. எனவே அப்பகுதியில் வசிக்கும் பலரும் சோமக்கா போன்று கன்னடம், மராத்தி இரண்டையும் பேசுகிறார்கள்.

"அனைத்து சாதி மற்றும் மதத்தைச் சேர்ந்தவர்களும் கண்டாவுக்காக எங்களிடம் வருகிறார்கள்", என்று சோமக்கா கூறுகிறார்.

குழந்தைப் பருவத்தில் சோமக்கா, தனது தாயார் மறைந்த கிஸ்னபாய் பங்கர், கரடகாவில் சில சிறந்த கண்டாக்களை உருவாக்குவதைப் பார்த்திருக்கிறார். "கண்டா தயாரிப்பதற்கு முன்பு செம்மறி ஆட்டு ரோமங்களை ஒவ்வொரு இழையாக [லோகர் என்றும் அழைக்கப்படுகிறது] ஏன் அம்மா சோதித்தார் என்பதை அறிய ஆர்வமாக இருந்தேன்," என்று அவர் கூறுகிறார். வடிவமைக்க எளிதானவை என்பதால் அவரது அம்மா மெல்லிய இழைகளை பயன்படுத்தினார். முதன்முறையாக கத்தரிக்கப்படும் செம்மறி ஆடுகளின் ரோமங்கள் சொரசொரப்பாக இருப்பதால் பயன்படுத்தப்படுகிறது. "நூறு செம்மறி ஆடுகளில், சரியான வகை ரோமங்களை ஒரே ஒரு ஆட்டில் தான் காண முடியும்."

சோமக்கா தனது தந்தை மறைந்த அப்பாஜி பங்கரிடமிருந்து கண்டா தயாரிப்பதைக் கற்றுக்கொண்டார். அவருக்கு 10 வயது இருந்தபோது, கற்றுக்கொள்ள இரண்டு மாதங்கள் ஆனது. நான்கு தசாப்தங்களுக்குப் பிறகும், சோமக்கா இந்த கலையை தொடர்ந்து பயிற்சி செய்கிறார். அதன் புகழ் மங்கி வருவது குறித்து கவலைப்படுகிறார்: "இப்போதெல்லாம் இளம் மேய்ப்பர்கள் செம்மறி ஆடுகளை மேய்ப்பதில்லை. செம்மறி ஆட்டு ரோமங்களுடன் தொடர்புடைய கைவினை பற்றி அவர்களுக்கு என்ன தெரியும்?"

PHOTO • Sanket Jain
PHOTO • Sanket Jain

இடது : கரடகா கிராமத்தில் ஒரு குழந்தையின் மணிக்கட்டில் சோமக்கா ஒரு கண்டாவை மாட்டுகிறார் . வலது : செம்மறி ஆட்டின் ரோமத்தை கத்தரிக்கப் பயன்படும் உலோக கத்தரிக்கோலான கதர்புனி

PHOTO • Sanket Jain

தீமையை தடுப்பதாக நம்பப்படும் ஒரு ஜோடி கண்டாவைக் காட்டும் சோமக்கா

"ஒரு செம்மறி ஆட்டில் வழக்கமாக ஒரு கத்தரிப்பில் 1-2 கிலோ லோக்கர் கிடைக்கும்," என்று சோமக்கா விளக்குகிறார். அவரது குடும்பத்திற்கு சொந்தமான மந்தையில், ஆண்கள் ஆண்டுக்கு இரண்டு முறை செம்மறி ஆட்டு ரோமங்களை கத்தரிக்கின்றனர். வழக்கமாக தீபாவளி மற்றும் பெண்தூரின் போது (ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையில் நடைபெறும் காளை கொண்டாட்ட திருவிழா). ஒரு கதர்புனி, அல்லது ஒரு ஜோடி பாரம்பரிய கத்தரிக்கோல் பயன்படுத்தப்படுகிறது. ஒரு செம்மறி ஆட்டின் ரோமங்களை வெட்டுவதற்கு சுமார் 10 நிமிடங்கள் ஆகும். இது பொதுவாக காலையில் செய்யப்படுகிறது. ஒவ்வொரு இழையும் பின்னர் தரத்திற்காக சோதிக்கப்படுகிறது. அங்கு சிதைந்த ரோமங்கள் அப்புறப்படுத்தப்படுகிறது. சோமக்கா ஒரு கண்டா செய்ய 10 நிமிடங்கள் ஆகும். சோமக்கா இப்போது பயன்படுத்தும் லோகர் 2023 ஆம் ஆண்டு தீபாவளியின் போது கத்தரிக்கப்பட்டது - "நான் அதை பிறந்த குழந்தைகளுக்காக பாதுகாப்பாக வைத்துள்ளேன்", என்றுக் கூறுகிறார்.

வடிவமைப்பை தொடங்குவதற்கு முன், சோமக்கா ரோமங்களில் உள்ள தூசு, பிற அசுத்தங்களை நீக்குகிறார்.  இழைகளை இழுத்து ஒரு வட்ட வடிவத்தை அவர் கொடுக்கிறார்.  பிறந்த குழந்தையின் மணிக்கட்டுக்கு ஏற்ப கண்டாவின் அளவை அவர் தீர்மானிக்கிறார். வட்ட வடிவ அமைப்பு தயாரானதும்,  அதை தனது உள்ளங்கைகளுக்கு இடையில் தேய்க்கிறார். இப்படி உரசுவதால் அது உறுதிப்படுகிறது.

சோமக்கா ஒவ்வொரு சில வினாடிகளுக்கும் இந்த வட்ட சட்டத்தை தண்ணீரில் நனைக்கிறார். "நீங்கள் தண்ணீரை எவ்வளவு சேர்க்கிறீர்களோ, அவ்வளவு வலுவாக மாறும்," என்று அவர் கூறுகிறார். இழைகளை லாவகமாக இழுத்து, சட்டத்தை தனது உள்ளங்கைகளுக்கு இடையில் தேய்க்கிறார்.

"1-3 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இந்த வளையலை அணிவார்கள்," என்று அவர் கூறுகிறார். ஒரு ஜோடி கண்டா குறைந்தது மூன்று ஆண்டுகள் நீடிக்கும். அம்மக்கள் இந்த வளையல்கள் செய்வதைத் தாண்டி, கால்நடைகள் மேய்க்கும் வேலையையும் பண்ணைகளை பார்த்துக் கொள்ளும் வேலையையும் செய்கின்றனர். தங்கர்கள் மகாராஷ்டிராவில் நாடோடி பழங்குடியினராகவும், கர்நாடகாவில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினராகவும் பட்டியலிடப்பட்டுள்ளனர்.

PHOTO • Sanket Jain
PHOTO • Sanket Jain

சுத்தம் செய்த செம்மறி ஆட்டு ரோமங்களை உள்ளங்கைகளுக்கு இடையில் தேய்த்து வடிவமைக்கிறார் சோமக்கா

PHOTO • Sanket Jain
PHOTO • Sanket Jain

வட்ட வடிவ கண்டாவை வலுவாக்க தண்ணீரில் நனைத்து , பின்னர் அதிகப்படியான தண்ணீரை வடிகட்டுகிறார்

சோமக்காவின் கணவர் பாலு பூஜாரி தனது 15 வயதில் ஆடு மேய்க்கும் வேலையைத் தொடங்கினார். தற்போது 62 வயதாகும் அவர் வயது மூப்புக் காரணமாக கால்நடைகளை மேய்ப்பதை நிறுத்திவிட்டார். கிராமத்தில் தனக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் நிலத்தில் கரும்பு பயிரிட்டு வருகிறார்.

சோமக்காவின் மூத்த மகனான 34 வயதாகும் மாலு பூஜாரி கால்நடை மேய்க்கும் வேலையை ஏற்றுள்ளார். தனது மகன் 50க்கும் குறைவான செம்மறி ஆடுகளையும் வெள்ளாடுகளையும் மேய்ப்பதாக பாலு கூறுகிறார். "பத்தாண்டுகளுக்கு முன்பு எங்கள் குடும்பம் 200க்கும் மேற்பட்ட கால்நடைகளை சொந்தமாக வைத்து மேய்த்து வந்தது," என்று நினைவுகூர்ந்த அவர், கரடகாவை சுற்றியுள்ள மேய்ச்சல் நிலங்கள் குறைந்து வருவதே இந்த வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் என்று கூறுகிறார்.

மந்தையின் அளவு சுருங்குவதால், முன்பு வெட்டப்படாத செம்மறி ஆடுகள் கிடைப்பது கடினம். இதனால் கிராமத்தில் கண்டா தயாரிப்பிலும் பாதிப்பு.

செம்மறி ஆடு, மாடு மேய்ச்சலுக்கு பாலுவின் தினசரி பயணங்களில் உடன் சென்றதை சோமக்கா நினைவுக் கூர்ந்தார். 151 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கர்நாடகாவின் பிஜாப்பூர் வரையிலும், 227 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மகாராஷ்டிராவின் சோலாப்பூர் வரையிலும் இந்த ஜோடி பயணம் செய்தது. "வயல்வெளிகள் எங்கள் வீடாக மாறும் அளவுக்கு நாங்கள் பயணம் செய்தோம்," என்று பத்தாண்டுகளுக்கு முன்பு வரையிலான தங்கள் வாழ்க்கையைப் பற்றி சோமக்கா கூறுகிறார். "நான் ஒவ்வொரு நாளும் திறந்த வெளியில் தூங்குவது வழக்கம். எங்கள் தலைக்கு மேலே நட்சத்திரங்களும் சந்திரனும் இருந்தன. நாலு சுவர் கொண்ட வீட்டில் என்ன இருக்கிறது?"

10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கரடகா மற்றும் அதன் அண்டை கிராமங்களில் உள்ள பண்ணைகளிலும் சோமக்கா வேலை செய்வார். அவர் தினமும் வேலைக்கு நடந்து செல்வார்.  "கிணறு வெட்டுதல், கற்களை தூக்குதல் போன்ற வேலைகளையும் கூட செய்வேன்," என்று அவர் கூறுகிறார். 1980களில் கிணறு வெட்ட அவருக்கு 25 பைசா வழங்கப்படும். "அந்தக் காலத்தில், ஒரு கிலோ அரிசியின் விலை கிலோ 2 ரூபாய்," என்று அவர் நினைவுகூர்ந்தார்.

PHOTO • Sanket Jain

சோமக்காவும் அவரது கணவர் பாலுவும் தங்கள் செம்மறி ஆடுகளையும் வெள்ளாடுகளையும் மேய்ப்பதற்கு வீட்டிலிருந்து நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தூரம் கரடுமுரடான நிலப்பரப்புகள் வழியாக பயணம் செய்துள்ளனர்

PHOTO • Sanket Jain
PHOTO • Sanket Jain

இடது: தங்கர் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் நெசவு செய்ய பயன்படுத்தும் பாரம்பரிய உபகரணங்கள். வலது: பித்தளை பாத்திரத்தில் ஆணி கொண்டு செதுக்கப்பட்ட பறவை உருவம். 'பாத்திரம் என்னுடையது என்பதற்கான அடையாளமாக அது இருக்கிறது' என்கிறார் பாலு பூஜாரி

கண்டா வை கையால் உருவாக்குவது எளிமையானதாகத் தோன்றலாம். ஆனால் இதில் பல சவால்கள் உள்ளன. ரோமங்கள் பெரும்பாலும் தயாரிப்பாளரின் மூக்கு மற்றும் வாய்க்குள் நுழைகிறது.  இது இருமல் மற்றும் தும்மலுக்கு வழிவகுக்கிறது. வேலையில் சுதந்திரம் இருந்தாலும், பணம் கிடைப்பதில்லை - மேய்ச்சல் நிலங்களின் வீழ்ச்சியுடன் சேர்ந்து கைவினையும் கடுமையாக பாதித்துள்ளது.

பிறந்த குழந்தையின் மணிக்கட்டில் சோமக்கா கண்டாவை மாட்டும் விழாவிற்குப் பிறகு, அவர் வழக்கமாக ஹலாத்-குங்கு (மஞ்சள்-குங்குமம்), டோபி (பாரம்பரிய தொப்பி), பான் (வெற்றிலை), சுபாரி (வெற்றிலை), ஜம்பர் (ரவிக்கை துண்டு), சேலை, நாரல் (தேங்காய்) மற்றும் தவால் (துண்டு) ஆகியவற்றைப் பெறுகிறார். "சில குடும்பங்கள் சிறிதளவு பணத்தையும் கொடுக்கின்றன," என்று சோமக்கா கூறுகிறார். பதிலுக்கு அவர் எதையும் கேட்பதில்லை. "இந்த கலை ஒருபோதும் பணம் சம்பாதிப்பதற்காக இருந்ததில்லை," என்று அவர் வலியுறுத்துகிறார்.

இப்போதெல்லாம் சிலர் செம்மறி ஆட்டு ரோமங்களுடன் கருப்பு நூல் கலந்து கண்டா செய்து சந்தைகளில் 10 ரூபாய்க்கு விற்கின்றனர். "அசல் கண்டாவைக் கண்டுபிடிப்பது கடினமாகிவிட்டது," என்று சோமக்காவின் இளைய மகனான, 30 வயதாகும் ராமச்சந்திரா கூறுகிறார். அவர் ஒரு கிராம கோவிலில் பூசாரியாக இருக்கிறார். அவர் தனது தந்தையுடன் விவசாயமும் செய்கிறார்.

PHOTO • Sanket Jain
PHOTO • Sanket Jain

இடது: பாலு மற்றும் சோமக்கா பூஜாரியின் குடும்பம் ஆறு தலைமுறைகளாக கரடகாவில் வசித்து வருகிறது. வலது: பூஜாரி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பாரம்பரிய கோங்காடி, இது செம்மறி ஆட்டு ரோமங்களிலிருந்து தயாரிக்கப்படும் போர்வை

சோமக்காவின் மகளான 28 வயதாகும் மஹாதேவி இந்த திறனை தாயிடமிருந்து கற்றுக்கொண்டுள்ளார். "இப்போது மிகச் சிலரே அதில் ஆர்வம் காட்டுகிறார்கள்," என்று தங்கர் சமூகத்தைச் சேர்ந்த ஒவ்வொரு பெண்ணும் கண்டா செய்யத் தெரிந்த ஒரு காலத்தை நினைவுகூருகிறார் சோமக்கா.

தொடைகளில் இழைகளை ஒன்றாக சுருட்டி லோகரிலிருந்து (செம்மறி ஆட்டு ரோமங்கள்) நூலை நெய்யவும் சோமக்காவுக்குத் தெரியும்.  ரோமங்களை உரசுவது பெரும்பாலும்  தோலை எரிக்கிறது. அதனால்தான் சிலர் அத்தகைய நெசவுக்கு மர சர்க்காவைப் பயன்படுத்துகிறார்கள். அவரது குடும்பம் நெய்த லோகரை சங்கார்களுக்கு விற்கின்றனர். இச்சமூகம் கோங்காடிகளை தயாரிப்பதில் புகழ்பெற்றது – செம்மறி ஆட்டு ரோமங்களிலிருந்து தயாரிக்கப்படும் போர்வைகள். இந்த போர்வைகள் வாடிக்கையாளர்களுக்கு 1,000 ரூபாய்க்கு மேல் விற்கப்படும் நிலையில், சோமாக்கா நெய்த நூலை மிக குறைவாக கிலோ ரூ.7 க்கு விற்கிறார்.

கோலாப்பூரின் பட்டன் கோடோலி கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு இடையில் நடைபெறும் விட்டல் பிர்தேவ் யாத்திரையில் இந்த நூல்கள் விற்கப்படுகின்றன. இந்த யாத்திரைக்கு முன்னதாக சோமக்கா நீண்ட நேரம் வேலை செய்கிறார். யாத்திரை தொடங்குவதற்கு முந்தைய நாள் குறைந்தது 2,500 நூல் கண்டுகளை நெசவு செய்கிறார். "இது அடிக்கடி என் கால்களை வீங்கச் செய்கிறது," என்று அவர் கூறுகிறார். சோமக்கா 16 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த இடத்திற்கு 10 கிலோவுக்கும் அதிகமான நூல் கண்டுகளை ஒரு கூடையில் தலையில் சுமந்து செல்கிறார் - இதில் அவருக்கு கிடைப்பது 90 ரூபாய்.

எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் சோமக்காவின் கண்டா செய்யும் ஆர்வம் குறையவில்லை. "இந்த பாரம்பரியத்தை நான் உயிர்ப்புடன் வைத்திருப்பதில் பெருமைப்படுகிறேன்," என்று நெற்றியில் மஞ்சள் பூசியபடி அவர் கூறுகிறார். "சுற்றி செம்மறி ஆடுகளுடனும், வெள்ளாடுகளுடனும் வயல்வெளியில் பிறந்த நான், இறக்கும் வரை இந்த கலை வடிவத்தை உயிர்ப்புடன் வைத்திருப்பேன்," என்று சோமக்கா கூறுகிறார்.

இந்த கட்டுரை சங்கேத் ஜெயின் எழுதிய கிராமப்புற கைவினைஞர்கள் பற்றிய தொடரின் ஒரு பகுதியாகும். இது மிருணாளினி முகர்ஜி அறக்கட்டளையால் ஆதரிக்கப்படுகிறது.

தமிழில்: சவிதா

Sanket Jain

சங்கேத் ஜெயின் மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் உள்ள பத்திரிகையாளர். அவர் 2022ம் ஆண்டில் PARI மூத்த மானியப் பணியாளராக இருக்கிறார். 2019-ல் PARI-ன் மானியப் பணியில் இணைந்தார்.

Other stories by Sanket Jain
Editor : Dipanjali Singh

திபாஞ்சலி சிங் பாரியின் உதவி ஆசிரியராக இருக்கிறார். பாரி நூலகத்தின் ஆவணங்களை ஆய்வு செய்யும் பணியும் செய்கிறார்.

Other stories by Dipanjali Singh
Translator : Savitha

சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.

Other stories by Savitha