ஒரு சிறுமியாக கெகுவே, தாயும் பாட்டியும் சுனைக்காஞ்சொறி தண்டு அல்லது தெவோ வுடன் நெய்வதை பார்த்திருக்கிறார். அவரது தாய் பாதி செய்து முடித்த துணியை எடுத்து, அவர் செய்து பார்ப்பார். ஆனால் அதையும் ரகசியமாகதான் செய்தார். ஏனெனில், துணியைத் தொடக் கூடாது என அவரது தாய் எச்சரித்திருந்தார். இப்படித்தான் கெகுவே மெதுவாகவும் ரகசியமாகவும் நாகா சால்வைகளை நெசவு செய்யும் திறனை, யாரும் போதிக்காமல் கற்றுக் கொண்டதாக சொல்கிறார் அவர்.
இன்று அவர் திறன் படைத்த கைவினைக் கலைஞராக திகழ்கிறார். விவசாயம் மற்றும் வீட்டு வேலைக்கு இடையே இந்த வேலையை செய்கிறார். “சாதம் சமைப்பதற்கான நீர் சூடாக காத்திருக்கும் நேரத்திலோ குழந்தைகளை யாரேனும் வெளியே அழைத்து சென்றிருந்தாலோ இந்த அளவுக்கு நாங்கள் நெய்ய முயற்சி செய்வோம்,” என்கிறார் அவர் ஆட்காட்டி விரல் நீளத்தைக் காட்டி.
கெகுவே இரு பக்கத்து வீட்டுக்காரர்களான வெகுசுலு மற்றும் ஈசோட்சோ ஆகியோருடன் ருக்கிசோ காலனியிலுள்ள தன் தகரக் கூரை வீட்டுக்குள் அமர்ந்திருக்கிறார். கெகுவேவின் கணக்குப்படி, நாகாலாந்தின் ஃபெக் மாவட்டத்திலுள்ள ஃபுசேரா கிராமத்தின் 266 குடும்பங்களில் 11 சதவிகிதம் நெசவுப் பணி செய்கிறது. பெரும்பாலும் இதில் சகேசாங் (பட்டியல் பழங்குடி) சமூகத்தின் உட்பிரிவான குசாமி பெண்கள்தான் வேலை செய்கின்றனர். “எங்களின் கணவர்கள் உதவுவார்கள்,” என்னும் கெக்குவே, “சமைக்கவும் செய்வார்கள். ஆனால் பெண்கள் அளவுக்கு சமைக்க மாட்டார்கள். எனவே நாங்கள் சமைத்து, விவசாயம் செய்து, நெசவு பார்த்து, வீட்டு வேலையும் செய்ய வேண்டும்,” என்கிறார்.
கெக்குவே, வெகுசுலு மற்றும் ஈசோட்சோ ஆகியோர் இளம் வயதிலேயே நெய்யத் தொடங்கி விட்டனர். நூல் சுற்றுதல், குறுக்கு நெசவு செய்தல் போன்ற சிறு வேலைகளிலிருந்து கற்றல் தொடங்குகிறது.
35 வயதாகும் ஈசோட்சோ 20 வயதில் நெசவு தொடங்கினார். “சால்வை, சுற்றிக் கட்டும் துணி எனப் பல வகைகளை நான் நெய்கிறேன். 30 துணிகள் வரை நெய்வேன். ஆனால் இப்போது குழந்தைகளை பார்த்துக் கொள்ள வேண்டியிருப்பதால் சால்வை நெய்ய ஒரு வாரத்துக்கும் மேலாகிறது,” என்கிறார் அவர்.
“காலையும் மாலையும் குழந்தைகளை பார்த்துக் கொள்வேன். பகலில் நெய்கிறேன்,” என்கிறார் அவர். நான்காவது குழந்தை கருவில் இருப்பதால் தற்போதைக்கு வேலை செய்வதை நிறுத்தியிருக்கிறார்.
மெகாலா (பாரம்பரிய நாகர் சரோங்) மற்றும் சால்வைகள் போன்ற தனக்கும் தம் குடும்பத்துக்குமான துணிகளை பெண்கள் நெய்து கொள்கின்றனர். நான்காம் தலைமுறை நெசவாளரான வெகுசுலு, அங்காமி பழங்குடியினருக்கும் துணி நெய்கிறார். “குறிப்பாக அவற்றை இருவாச்சி திருவிழா சமயத்தில் நெய்வேன். அப்போதுதான் டிமாண்ட் அதிகமாக இருக்கும்,” என்கிறார் அவர்.
நாகாலாந்து மாநில அரசாங்கத்தால் ஒருங்கிணைக்கப்படும் இருவாச்சி திருவிழா டிசம்பர் 1ம் தேதி தொடங்கி 10 நாட்கள் நடக்கும். பாரம்பரிய வாழ்க்கை முறை மற்றும் பண்பாட்டை முன் வைத்து நடத்தப்படும் அந்த விழாவுக்கு சுற்றுலா பயணிகள் இந்தியாவிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் வருவார்கள்.
*****
ஒவ்வொரு நாகா குழுவுக்குமென சொந்தமான தனித்துவமான சால்வை இருக்கிறது. சகேசாங் சால்வைகளுக்கு 2017ம் ஆண்டில் புவிசார் குறியீடு வழங்கப்பட்டந்து.
“அந்தஸ்து, அடையாளம், பாலினம் எனப் பல விஷயங்களை முன்னிறுத்துபவை சால்வைகள்,” என விளக்குகிறார் ஃபெக் அரசு கல்லூரியில் வரலாறு போதிக்கும் டாக்டர் சொக்குஷெயில் ரக்கோ. “எந்த விழாவும் சால்வைகளின்றி முழுமை அடைவதில்லை.”
“பாரம்பரிய சால்வைகள் எங்களின் விழுமியங்களையும் பண்பாடுகளையும் அடையாளப்படுத்துபவை,” என விளக்குகிறார் சிசாமி நெசவின் திட்ட ஒருங்கிணைப்பாளரான நெய்ட்ஷோபூ. நாகாலாந்தின் தனித்துவமான ஜவுளியை பாதுகாத்து ஊக்குவிப்பதற்கான திட்டம் அது.
“ஒவ்வொரு சால்வை அல்லது மெகலாவும் பல வகைகளில் வருகின்றன. உதாரணமாக மணமாகாதவர்கள், தம்பதியர், இளம்பெண் மற்றும் ஆண், இறுதி அஞ்சலி எனப் பல வகைகளில் சால்வைகள் இருக்கின்றன,” என விளக்குகிறார். அவரைப் பொறுத்தவரை வேல், கேடயம், யானை, நிலவு, சூரியன், பூக்கள் மற்றும் பட்டாம்பூச்சிகள் போன்றவை சகேசாங் சால்வைகளில் வழக்கமாக பொறிக்கப்படும் முத்திரைகள்.
ஆனால் பெண்கள் பலருக்கும் இந்த வகைமைகளும் அவர்கள் நெய்யும் முத்திரைகளின் முக்கியத்துவமும் தெரியவில்லை. இந்தக் கலை தலைமுறைகள் தாண்டி கையளிக்கப்பட்டதுபோல அவற்றை பற்றிய கதைகள் கையளிக்கப்பட்டிருக்கவில்லை. கெகுவேக்கும் அவரது அண்டை வீட்டாருக்கும் கூட சகேசாங் பெற்றிருக்கும் சர்வதேச அங்கீகாரம் தெரியவில்லை. ஆனால் நெசவு, பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உதவுவதாக சொல்கின்றனர். துணிக்குள் ஒரு நூலை நெய்து கொண்டிருக்கும் வெகுசுலு, “விவசாயத்தில் அறுவடை வரை எங்களுக்கு ஒன்றும் கிடைக்காது. ஆனால் நெசவில் எப்போது வேண்டுமானாலும் விற்றுக் கொள்ளலாம். பொருளாதார சிக்கலையும் சமாளித்துக் கொள்ளலாம்,” என்கிறார்.
*****
ஃபெக் மாவட்டத்தின் உட்பிரிவான ஃபுசேராவிலுள்ள சந்தையில்தான் மூலப் பொருட்களை நெசவாளர்கள் வாங்குகின்றனர். இரு வகை நூல் நெசவில் பயன்படுகிறது. பருத்தி மற்றும் கம்பளி தற்போது பயன்படுத்தப்படுகிறது. செடிகளிலிருந்து எடுக்கும் இயற்கை நூலின் பாரம்பரிய பயன்பாடு, எளிதாக கிடைக்கும் பெருவிகித உற்பத்தி நூலால், மெல்ல சரிந்து வருகிறது
“வழக்கமாக நாங்கள் நவம்பர்-டிசம்பர் மாதங்களில், எங்களின் பொருட்களை விற்பனை செய்யும் குறிப்பிட்ட கடையிலிருந்து மொத்தமாக வாங்குவோம்,” என்கிறார் வெகுசுலு. உள்ளுர் கம்பளி ஒரு கிலோவும் இரண்டு நூல் சரண்டும் 550 ரூபாய் ஆகும். தாய்லாந்து நூல் ஒரு கிலோ ரூ.640 ஆகும்.
நெசவாளர்கள் பாரம்பைய மூங்கில் தறியில் நெய்கிறார்கள்.
செசெர்ஹோ அல்லது பின் சரடு மற்றும் ராட்சூ அல்லது மர இயந்திரம் ஆகியவற்றை சுட்டிக் காட்டுகிறார். பின் சரடு கெபேயுடன் (மரத் தடி) இணைக்கப்பட்டிருக்கும் என விளக்குகிறார். இது இறுக்கத்தை உருவாக்கி, நெய்த முனையை சுற்றி விடும். ஆனால் ‘ராட்சூ’ இல்லாமல் ’ராட்சூ குலோ’ என்கிற மரத் தூணை கிடைமட்டமாக சுவருடனோ வேறு எதனுடனுமோ இணைத்து பயன்படுத்த முடியும்.
நெசவுக்கென நெசவாளர்கள் ஐந்திலிருந்து எட்டு கருவிகள் பயன்படுத்துகின்றனர். சால்வையின் தரம், மென்மை, உறுதி ஆகியவற்றை உறுதி செய்ய ஒரு மர அடிப்பான் பயன்படுகிறது. மெஃபெட்ஷுகா எனப்படும் ஒரு மெல்லிய குச்சி நூல்களை கொண்டிருக்கும். நுட்பமான வடிவங்களை நெய்ய, மெல்லிய மூங்கில் ஊடிழைகள் பயன்படுத்தப்படுகிறது. லொபு என்கிற மூங்கில் குச்சி, நூலை மேல், கீழ் எனப் பிரிக்க நெசவின்போது உதவுகிறது. கெழே சுகா மற்றும் நசே சுகா ஆகிய மூங்கில் தடிகள், நூல் பிரிந்து, அடுக்காக இருக்க உதவுகின்றன.
*****
பிரதான பயிரான நெல் மே-ஜுன் மாதங்களில் சுயபயன்பட்டுக்காக பயிரிடப்படுகிறது. தங்களின் சிறு நிலத்தில் வெகுசுலு குவியெ என்கிற மூலிகையையும் விளைவிக்கிறார். உள்ளூர் சந்தையில் அவர் விற்கும் உணவுகளில் சேர்க்கப்படும் மூலிகை அது.
“விதைப்புக்கும் அறுவடைக்கும் இடையிலான காலத்தில், வழக்கமாக களையெடுப்பு, பராமரிப்பு, விலங்குகளிடந்து பயிரை பாதுகாப்பது ஆகிய விஷயங்கள் இருக்கும்,” என்கிறார் அவர் நெசவில் செலுத்தப்படும் நேரம் குறித்து.
விவசாயத்தில் நேரம் செலவழிக்காமல் நெசவில் மட்டும் கவனம் செலுத்துவதால் கெகுவேவை குடும்பத்தினர் திட்டியிருக்கிறார்கள் என்கிறார் அவர். “விவசாய நிலத்துக்கு நான் அடிக்கடி செல்லவில்லை என்றாலும், நெசவுதான் முக்கிய வருமானம் தருகிறது. என் திருமணத்துக்கு முன், சகோதரரின் குழந்தைகளுக்கான கல்விக் கட்டணத்தை கட்ட நான் உதவியிருக்கிறேன். விழா நேரங்களின்போதும் சாத்தியப்படும் வகைகளில் உதவியிருக்கிறேன்,” என்கிறார் அவர். பிற நேரங்களில் நெசவால் ஈட்டும் வருமானம் குடும்ப உணவுக்கு பயன்படுவதாக கெகுவே கூறுகிறார்.
வருமானம் போதுவதில்லை என்கிறனர் பெண்கள்.
“கூலி வேலைகளுக்கு நாங்கள் சென்றால், 500லிருந்து 600 ரூபாய் வரை வருமானம் ஈட்டுவோம். நெசவு செய்தால், வாரத்துக்கு 1,000 முதல் 1,500 ரூபாய் வரை கிடைக்கிறது,” என்கிறார் வெகுசுலு. குறைந்த தினக் கூலிக்கு காரணம், “ஒரு தினக்கூலி நாளொன்றுக்கு 600 முதல் 1,000 ரூபாய் வரை பெறுகையில் பெண்ணோ 100 முதல் 150 ரூபாய்தான் பெறுவார்,” என்கிறார் கெகுவே.
“ஊதியம் கிடைக்கும் வரை எனக்கு பிரச்சினை கிடையாது,” என்னும் ஈசோட்சோ ஒரு முக்கியமான பிரச்சினையையும் சொல்கிறார். “அரசாங்க உதவி இங்கு கிடைப்பதில்லை.”
உடல் நல சிக்கல்களும் இருக்கின்றன. ஒரே நிலையில் அதிக நேரம் அமர்ந்திருப்பதும் குனிந்திருப்பதும் முதுகு வலியை கொடுக்கிறது. வேலையின் முக்கிய சவால் அதுதான் என்கிறார் வெகுசுலு.
இயந்திர உற்பத்தி பொருட்களால் போட்டி இருக்கிறது. “இத்தகைய துணிகளை சந்தையில் வாங்கும்போது எந்தப் புகாருமின்றி அதிக விலை கொடுத்து மக்கள் வாங்குகின்றனர்,” என்கிறார் கெகுவே. “உள்ளூர் நெசவாளர்கள் தயாரித்த பொருட்கள் என்றால் மட்டும், ஒரு நூல் விட்டிருந்தாலும் தள்ளுபடி கேட்கிறார்கள்.”
இக்கட்டுரை மிருணாளினி முகெர்ஜி அறக்கட்டளையின் உதவியில் எழுதப்பட்டது
தமிழில் : ராஜசங்கீதன்