"மண்பாண்டம் செய்வது என்பது சக்கரத்தை சுழற்றுவது மட்டுமல்ல; நீங்கள் தயாரிப்பிலும் கவனம் செலுத்த வேண்டும்," என்று பீகாரின் வைஷாலி மாவட்டத்தில் உள்ள ரசூல்பூர் சோஹாவன் கிராமத்தின் ஒரு குக்கிராமத்தைச் சேர்ந்த மண்பாண்ட தொழிலாளி சுதாமா பண்டிட் கூறுகிறார். "ஒரு குழந்தையை வளர்ப்பது போல... முதலில், நீங்கள் களிமண்ணை குழைத்து, அதற்கு ஒரு வடிவத்தைக் கொடுக்க வேண்டும். பின்னர் அது வலிமைப் பெற அடுப்பில் வெப்பத்தை எதிர்கொள்ள வேண்டும். ”
தற்போது 54 வயதாகும் சுதாமா தனது 15 வயதில் களிமண் கலையைக் கற்றுக்கொண்டார். "என் தாத்தா மிகவும் திறமையான கைவினைஞர். ஆனால் என் தந்தை களிமண் பொருட்களை தயாரிப்பதில் ஆர்வம் காட்டவில்லை. எனவே எனது தாத்தா இந்த திறமையை எனக்கு அறிமுகப்படுத்தினார். கிராமவாசிகள் என்னை அக்கலையின் 'உண்மையான' வாரிசு அல்லது சுதாமா கும்பார் [குயவர்] என்று அழைக்கிறார்கள்," என்று அவர் பெருமையுடன் கூறுகிறார்.
சுதாமாவின் நாள் அதிகாலை தொடங்குகிறது. பறவைகள் கீச்சிடுகின்றன. அவரது மனைவி சுனிதா தேவி வீட்டின் முன் உள்ள பணியிடத்தை பெருக்கி, முந்தைய நாளின் உலர்ந்த களிமண் துண்டுகளை சக்கரம் மற்றும் பிற கருவிகளிலிருந்து அகற்றுகிறார். அதே நேரத்தில் சுதாமா களிமண்ணை தயார் செய்கிறார். "சீக்கிரம் தொடங்குவது நல்லது - நான் செய்யும் பொருட்கள் உலர போதுமான நேரம் கிடைக்க வேண்டும்," என்று அவர் கூறுகிறார்.
சுதாமா பயன்படுத்தும் களிமண், அருகிலுள்ள மாவட்டமான குர்ஹானி வட்டாரத்தில் 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள துர்க்கி கிராமத்திலிருந்து வாங்கப்படுகிறது. "என் தாத்தா காலத்தில் நல்ல தரமான களிமண்ணைப் பெறுவதற்காக எங்கள் வீட்டிலிருந்து 30 அடி தூரம் வரை தோண்டுவோம்," என்று சுதாமா கூறுகிறார். கடந்த காலத்தில், மண்பாண்டங்கள் செய்வது ஒரு குடும்பத் தொழிலாக இருந்ததால், பணிகளைப் பகிர்ந்து கொள்ள பல கைகள் இருந்தன என்று அவர் விளக்குகிறார். இப்போது அவரால் ஒரு நாள் கூட தோண்ட முடியாது. தவிர, தோண்டுவது கடினமானது என்பதால் களிமண் வாங்குவது எளிதான தேர்வாகிவிட்டது என்று அவர் கூறுகிறார்: "இப்போது பூமியைத் தோண்ட இயந்திரங்கள் உள்ளன. நாங்கள் களிமண்ணுக்கு பணம் செலுத்த வேண்டும். ஆனால் அதில் பல கற்கள் உள்ளன. அவற்றை அகற்றுவதற்கு நிறைய நேரமாகும்.”
இப்படி சொல்லிக் கொண்டே சுதாமா 10 கிலோ களிமண் உருண்டையை தன் சக்கரத்தில் வைத்து சுழற்றுகிறார். "இது உருவமற்ற களிமண்ணை வடிவமைக்கும் கையைப் பற்றியது," என்று அவர் கூறுகிறார். அவரது சமூகத்தின் மொழி பஜ்ஜிகா. ஆனால் நாங்கள் இந்தியில் பேசுகிறோம். சக்கரம் ஒரு சிறிய கல்லில் சுழல்கிறது. ஒரு பம்பரம் போல குறுகியது. மேலும் ஒரு நேரத்தில் சுமார் 10 நிமிடங்கள் சுழல்கிறது.
அதிலிருந்து அனைத்து வகையான பொருட்களும் வெளிப்படுகின்றன - ஒரு குல்ஹாத் (தேநீருக்கு), இனிப்புகளுக்கான கொள்கலன், தியாஸ் (விளக்குகள்), உள்ளூர் கஷாயத்தை வைத்திருக்க ஒரு கப்னி, ஒரு குலியா-சுகியா (சொப்பு சாமான் செட்), திருமணச் சடங்குப் பொருட்கள் மற்றும் தெய்வங்களின் சிலைகள் போன்றவை.
ரசூல்பூர் சோஹாவனில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள வட்டார தலைமையகமான பகவான்பூர் கிராமத்தில் சுதாமா தயாரித்த சொப்பு சாமான் செட்களை வைத்து விளையாடி வளர்ந்தேன். பாரம்பரியமாக, ஒவ்வொரு குடும்பமும் குயவனின் பங்கைக் கொண்டிருந்தன. அவர்கள் குடும்பத்திற்குத் தேவையான அனைத்து மண் பொருட்களையும் வழங்கினர். தேவைப்படும்போது வீட்டுக்கு வண்ணம் பூசுவார்கள். சுதாமாவின் குடும்பம் எங்கள் வீட்டிற்கு அனைத்து மண் பொருட்களையும் வழங்கியது.
ஈரமான களிமண்ணுக்கு சுதாமா ஒரு பானை வடிவம் கொடுத்ததும், அவர் அதை வெயிலில் உலர்த்துகிறார். அது காய்ந்ததும், அதன் வடிவத்தைச் செம்மைப்படுத்த, அதன் அடிப்பகுதியை ஒரு வட்டமான தோக்கனாலும், உட்புறத்தை அரை கூம்பு வடிவுள்ள பிடானாலும் மெதுவாக அடித்து, அதன் வடிவத்தை செம்மைப்படுத்துகிறார். "வெயிலில் காயவைத்த களிமண் பொருட்களை சுடுவது தான் பெரிய சோதனை," என்று அவர் கூறுகிறார். இதற்காக, ஈரமான களிமண்ணால் அடைக்கப்பட்ட பனை மரம் அல்லது மாமரம் அடுப்பாகவும், மாட்டுச் சாணத்தை எரிபொருளாகவும் பயன்படுகின்றன. இறுதிக்கட்டத்தில், நல்ல தரமான பொருட்கள் மட்டுமே எஞ்சுகின்றன.
இதற்கிடையில், வயல்களில் இருந்து உலர்ந்த இலைகளையும் கிளைகளையும் சேகரித்த சுனிதா தேவி வீடு திரும்புகிறார். பானை தயாரிக்கும் செயல்முறையில் அவரும் அங்கம் வகிக்கிறார். ஆனால் அவர் அதை அப்படிப் பார்க்கவில்லை. "நான் பானை செய்ய ஆரம்பித்தால் சமூகம் என்ன சொல்லும்?" என்று கேட்கிறார். "எனக்கு வீட்டு வேலைகள் உள்ளதால் தேவைப்படும் போதெல்லாம் நான் அவருக்கு உதவுகிறேன். நான் களிமண் பொருட்களை உலர்த்துவதற்கு தேவையான ஜலவான் [ தண்டுகள் மற்றும் கிளைகளை] சேகரிக்கிறேன். ஆனால் அது போதாது - வாரத்திற்கு இரண்டு முறை நாங்கள் 1,000-1,200 ரூபாய்க்கு விறகுகளை வாங்க வேண்டும்," என்று அவர் கூறுகிறார்.
சுனிதா பானை சுடும் செயல்முறையை மேற்பார்வையிடுகிறார். பானைகளுக்கு போதுமான சூரிய ஒளி கிடைப்பதை உறுதி செய்கிறார். "நாங்கள் பொருட்களை சுடும் நாட்களில், ஒரு நிமிடம் தாமதித்தால் கூட அவற்றை விற்க முடியாமல் போய்விடும்," என்று அவர் கூறுகிறார். உள்ளூர் சந்தையில் இருந்து வாங்கிய வண்ணப்பூச்சுகளால் பொருட்களை அவர் அலங்கரிக்கிறார். "சின்ன சின்ன வேலைகள் உள்ளன - நான் ஒருபோதும் உட்காருவதில்லை. ஏதாவது ஒரு வேலை செய்து கொண்டே இருக்கிறேன்."
சுதாமாவும், சுனிதாவும் சக்கரத்தை சுழற்றுவதில் முறையான வருமானத்தை பெறுவதில்லை. "நான் ஒவ்வொரு மாதமும் சுமார் 10,000 ரூபாய் மதிப்புள்ள பொருட்களை உள்ளூரில் விற்கிறேன் - இதில் சுமார் 4,000 ரூபாய் இலாபம் கிடைக்கும். ஆனால் களிமண் பொருட்களை உலர வைக்கும் அளவுக்கு மழைக்காலங்களிலும், டிசம்பர்-ஜனவரி மாதங்களிலும் சூரிய ஒளி வலுவாக இல்லாத காலங்களில் வியாபாரம் பாதிக்கப்படுகிறது," என்று சுதாமா கூறுகிறார். பண்டிகைகள் மற்றும் திருமண காலங்களில் - ஜனவரி மத்தியிலிருந்து பிப்ரவரி பாதி வரையிலும், மே மத்தியிலிருந்து ஜூன் பாதி வரையிலும் - இத்தம்பதியினர் மாதத்திற்கு கூடுதலாக ரூ. 3,000-4000 சம்பாதிக்கின்றனர். சில நேரங்களில், சுதாமா பானைகளுக்கான மொத்த ஆர்டர்களைப் பெறுகிறார். இதுவும் அவர்களுக்கு சிறிது கூடுதல் வருமானத்தை தருகிறது.
சுதாமாவின் நிலையற்ற வருவாய் இரண்டு இளைய சகோதரர்களான மல்லு, கப்பாத் ஆகியோர் இத்தொழில் செய்வதை தடுத்தது. எனவே அவர்கள் கொத்தனார்களாக வேலை செய்கிறார்கள். அவரது நான்காவது சகோதரர், கிருஷ்ணாவும், சுதாமாவை விட இளையவர். எங்கள் உரையாடலில் இணைந்து கொள்கிறார். அவர் பகுதிநேர குயவராக வேலை செய்கிறார். ஆனால் தினசரி கூலி வேலையை விரும்புகிறார். "இந்த தொழிலின் ஏற்ற தாழ்வுகளை என்னால் தாங்க முடியாது; வருமானம் போதவில்லை. எனது சகோதரர் மிகவும் திறமையானவர். வாடிக்கையாளர்களின் நெட்வொர்க்கை வைத்துள்ளார். எனவே தான் அவரால் இத்தொழிலை நம்பி வாழ முடிகிறது," என்று அவர் கூறுகிறார்.
சுதாமா மற்றும் சுனிதாவின் மகன்களும் வேறு தொழில்களை மேற்கொள்வார்கள். இவர்களுக்கு திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர். அவர்களின் மூத்த மகனான 26 வயது சந்தோஷ், வங்கி வேலைக்கான போட்டித் தேர்வுகளை எழுத டெல்லியில் படித்துக் கொண்டிருக்கிறார். இளைய மகனான 24 வயது சுனில், பகவான்பூரில் கணித பயிற்சி வகுப்பை நடத்துகிறார், அங்கு அவர் இளநிலை பட்டப்படிப்பு படித்து வருகிறார்.
"எனக்குப் பிறகு, இந்த பாரம்பரியத்தை எடுத்துச் செல்ல யாருமில்லை," என்று சுதாமா கூறுகிறார். இதன் காரணமாக அவர் மோட்டார் பொருத்தப்பட்ட சக்கரத்தை வாங்க விரும்பவில்லை. இது வேகமாக இருக்கும். கூடுதல் செலவோடு (எவ்வளவு என்று அவருக்குத் தெரியவில்லை), அவரது குடும்பத்தில் வேறு யாரும் இந்த வேலையைச் செய்ய மாட்டார்கள் என்பதால், முதலீடு வீணாகிவிடும் என்று அவர் கூறுகிறார்.
தவிர, வியாபாரமும் சரிவில் உள்ளது. "அலுமினியம், பிளாஸ்டிக், ஸ்டீல் பொருட்களின் பயன்பாடு அதிகரித்து வருவதால், மண் பொருட்களைப் பயன்படுத்தும் பாரம்பரியம் குறைந்து வருகிறது," என்று அவர் கூறுகிறார். "அவை இப்போது சடங்குகளுடன் குறைக்கப்பட்டு சுவையான உணவுகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன [அன்றாட சமையலில் அல்ல]", என்று கூறுகிறார்.
இதனால் சுதாமாவின் குக்கிராமத்தில் உள்ள பல கும்பர்கள் இத்தொழிலை கைவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. "சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு, கூரைக்கு ஆஸ்பெஸ்டாஸைப் பயன்படுத்துவது பொதுவானது. கடந்த காலத்தில், காப்டா (கூரை ஓடுகள்) தயாரிப்பது எங்களுக்கு இலாபகரமான வருமான ஆதாரமாக இருந்தது", என்று சுதாமா கூறுகிறார். "கும்பர் தோலாவில் சுமார் 120 கைவினைஞர் குடும்பங்கள் இருந்தன. ஆனால் இந்த எண்ணிக்கை எட்டாகக் குறைந்துவிட்டது", என்று அவர் கூறுகிறார்.
இது சுதாமாவை வருத்தப்படுத்தினாலும், அவரது உற்சாகத்தை குறைக்கவில்லை. நடைமுறைவாதியாக புதிய திறன்களைக் கற்றுக்கொள்ள அவர் முயற்சித்துள்ளார். 2014ஆம் ஆண்டில், பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் மற்றும் சிமெண்டுடன் பணிபுரியும் திறமையான கைவினைஞர்களுக்கு பெயர் பெற்ற உத்தரபிரதேசத்தின் மிர்சாபூருக்கு அருகிலுள்ள சுனார் நகரத்திற்கு அவர் சென்றார். அங்கு, இந்த பொருட்களின் சிற்பங்களை எவ்வாறு உருவாக்குவது என்பதை அவர் கற்றுக்கொண்டார். அவை இப்போது சந்தைகளை நிரப்புகின்றன. எனினும் சிக்கலான வடிவமைப்புகளை உருவாக்கக்கூடிய இயந்திரங்கள் பெருமளவில் உற்பத்தி செய்யப்படலாம். சொந்த ஊரில், சுதாமாவும் சிமெண்ட் கொண்டு சிற்பங்களை உருவாக்கும் வேலையைத் தொடங்கியுள்ளார். அதற்கு நல்ல விலை கிடைக்கவும் அவர் முயற்சிக்கிறார்.
அவர்களது வீட்டு நடைமுறைகளும் மாறிவிட்டன. "நாங்களும் சமையலுக்கு மண் பாத்திரங்களைப் பயன்படுத்துவதில்லை. அலுமினியப் பாத்திரங்களில் சமைக்கிறோம்", என்று அவர் கூறுகிறார். "குறைந்த விலையில் மொத்தமாக உற்பத்தி செய்யப்படும் பொருட்களுடன் எங்களால் போட்டியிட முடியாது. இந்த நிச்சயமற்ற தன்மையுடன், என் குழந்தைகள் குயவர்களாக மாறுவதை நான் விரும்பவில்லை. நகரத்தால் இன்னும் நிறைய கொடுக்க முடியும்.”
தமிழில்: சவிதா