Cissus quadrangularis என்னும் அறிவியல் பெயர் கொண்ட பிரண்டையைத் தேடி நானும், தோழமை ரதியும் நெல்லையின் புதர்க்காடுகளில்  அலைந்து கொண்டிருக்கிறோம். செவ்வக வடிவத் தண்டைக் கொண்ட இந்தப் பிரண்டைக்கு அருமையான குணங்கள் உண்டு.  இளம் பிரண்டைத்தண்டுகளைப் பறித்து, உப்பு, மிளகாய், நல்லெண்ணெய் சேர்த்து செய்யப்படும் பிரண்டை ஊறுகாய், ஒரு வருடம் வரை கெடாமல் இருக்கும். அரிசிச் சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

ஜனவரி மாத மதியத்தில், காட்டுக்குள் பிரண்டையைத் தேடி, வறண்ட, பழங்கால ஓடை வழியே நடந்து செல்கிறோம். ஓடையின் பெயர் எல்லையத்த அம்மன் ஓடை.. பெயரைக் கேட்டவுடன் மயிர்க்கூச்செறிகிறது. பாறைகளும், மணலும், ஆங்காங்கே தென்படும் ஈரக்கசிவும் என அகன்றும், குறுகியும் செல்லும் ஓடை வழி மேலும் கிளர்ச்சியைத் தருகிறது.

வழிநெடுக ரதி பல கதைகளைச் சொல்கிறார். ஆரஞ்சுப் பழங்கள், பட்டாம் பூச்சிகள் எனச் சில வேடிக்கையான கற்பனைக் கதைகள்.  அவற்றுள், ரதி பள்ளியில் படிக்கையில் நிகழ்ந்த சாதிக்கலவரம் என்னும் உண்மைக் கதையும் உண்டு. “மொத்தக் குடும்பமுமே ஊரை விட்டு, தூத்துக்குடிக்கு ஓடிப் போச்சு”.

20 ஆண்டுகள் கழித்து, கதை சொல்லியாக, பொம்மலாட்டக் கலைஞராக, நூலக ஆலோசகராக ரதி தன் கிராமத்துக்குத் திரும்பி வந்திருக்கிறார்.  “கோவிட் காலத்துல, ஏழு மாசத்துல, சின்னக் குழந்தைகளுக்கான  குட்டிப் புத்தகங்கள் கிட்டத்தட்ட 22000 படிச்சேன்.. ஒரு கட்டத்துல நிறுத்தச் சொல்லி என் உதவியாளர் தினமும் கெஞ்ச ஆரம்பிச்சுட்டார். ஏன்னா புத்தகத்துல இருந்த வசனங்களை என்னையறியாமலேயே பேச ஆரம்பிச்சுட்டேன்”, எனச் சிரிக்கிறார்.

அவரது சிரிப்பு அவரின் பெயரில் உள்ள நதியின் பெயரைப் போலவே ஆரவாரத்துடன் இருக்கிறது. அவரது முழுப்பெயர் பாகீரதி. சுருக்கமாக “ரதி”.  இமய மலையில் உருவாகி ஓடும் பாகீரதி நதியில் இருந்தது 3000 கிலோ மீட்டார் தள்ளி, தென் தமிழ்நாட்டின் நெல்லை மாவட்டத்தில், மலைகளும், புதர்க் காடுகளும் சூழ்ந்திருக்கும் சிறு கிராமத்தில் வசித்து வருகிறார். மலைகளையும், காடுகளையும் முழுமையாக அறிந்திருக்கிறார்.

“காட்டுக்குள்ளார எங்க போறீங்க”, என எதிர்ப்படும் பெண் தொழிலாளர்கள் கேட்கிறார்கள்..  “பிரண்டை பொறுக்கப் போறோம்”, என ரதி பதிலளிக்கிறார். “கூட வர்றது யாரு? தெரிஞ்சவுங்களா”, என மாடுமேய்ப்பவர் கேட்கிறார்.. “ஆமாமா”, எனச் சிரித்துக் கொண்டே பதில் சொல்கிறார் ரதி. கையசைத்துக் கொண்டே மேலே நடக்கிறோம்.

Pirandai grows in the scrub forests of Tirunelveli, Tamil Nadu
PHOTO • Courtesy: Bhagirathy
The tender new stem is picked, cleaned and preserved with red chilli powder, salt and sesame oil and will remain unspoilt for a year
PHOTO • Courtesy: Bhagirathy

புகைப்படம்: பிரண்டை தமிழ்நாட்டின் புதர்க்காடுகளில் வளரும் தாவரம். பிரண்டைச் செடியைக் கண்டு பிடித்த ரதி  வலது: இளம் பிரண்டைத்தண்டுகளைப் பறித்து, உப்பு, மிளகாய், நல்லெண்ணெய் சேர்த்து செய்யப்படும் பிரண்டை ஊறுகாய், ஒரு வருடம் வரை கெடாமல் இருக்கும்

*****

சுயதேவைக்காக செடிகொடிகளைத் தேடிக் கொண்டு வருதல் உலகெங்கும் இருக்கும் உள்ளூர் வழக்கமாகும். இது உள்ளூர்ப் பொதுவெளி என்னும் கருதுகோளுடன் அணுக்கமாக உள்ள ஒரு நடைமுறை. அதிலிருந்து கிடைக்கும் பொருட்கள் உள்ளூர்ச் சமூகத்தில் உள்ள அனைவருக்குமானவை. இயற்கையில் கிடைக்கும் பொருட்கள் உள்ளூரிலேயே, நீடித்து நிலைக்கும் வகையில் அது நுகரப்படுகிறது

chasing Soppu “, என்னும் நூல், நகரத்தில் நிகழும் இயற்கைச் செடி கொடிகளைத் தேடிக் கொணரும் வழக்கத்தைக் கொண்டாடுகிறது. இந்தப் புத்தகத்தின் ஆசிரியர்கள், “தென்கலம் என்னும் ஊரில், இயற்கையில் கிடைக்கும் செடி கொடிகளை தேடிக் கண்டுபிடித்து பயன்படுத்துதல், உள்ளுர் சுற்றுச் சூழலைப் பாதுகாக்கவும், அது தொடர்பான மரபான அறிவைப் பாதுகாக்கவும் பயன்படுகிறது”, என்கிறார்கள். இயற்கையில் கிடைக்கும் இந்தச் செடிகொடிகளை, பெரும்பாலும் பெண்களே அடையாளம் கண்டு, சேகரிக்கிறார்கள். இந்தச் செடிகொடிகளில் எவை உணவுக்கு உதவுபவை, எவை மருந்தாக உபயோகப்படுபவை என்பது போன்ற தகவல்களைத் தெளிவாக அறிந்திருக்கிறார்கள். இந்தச் செடிகொடிகளை பறிக்கும் பருவங்களும் அவர்களுக்கு அத்துபடி.

அவர்களிடம் முன்னோர்களிடம் இருந்து வழிவழியாக வந்த சுவையான சமையல் குறிப்புகள் உள்ளன.

குறிப்பிட்ட பருவத்தில் கிடைக்கும் பொருட்களை வருடம் முழுவதும் உபயோகிக்க எளிய வழி, அவற்றைப் பதப்படுத்திப் பாதுகாத்து வைப்பதுதான். பதப்படுத்துதலில், உலர வைத்தல், ஊறுகாய் வழி பதப்படுத்துதல் என்பன மிகவும் பிரபலமான வழிகள். இந்த முறையில், தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில், வினீகருக்குப் பதில் நல்லெண்ணெய் உபயோகிக்கப்படுகிறது.

“நல்லெண்ணையில், செஸமின் மற்றும் செஸமால் என்னும் உட்பொருட்கள் உள்ளன. இவை இயற்கையாகவே ஆண்டி ஆக்ஸிடண்ட் தன்மை கொண்டவை. அதனால், உணவுப் பொருள் கெட்டுப்போகாமல் பாதுகாக்கின்றன”, என்கிறார் மேரி சந்தியா. முது அறிவியல் உணவுத் தொழில்நுட்பம் பயின்ற இவர், “ஆழி (கடல்)”, என்னும் பெயரில் மீன் ஊறுகாய் தயாரித்து விற்பவர்.  ஊறுகாய்த் தயாரிப்பில், செக்கில் ஆட்டப்பட்ட நல்லெண்ணையையே இவர் விரும்பி உபயோகிக்கிறார்.  “இதனால் ஊறுகாய் ஊட்டச்சத்துடன் நீண்டநாள் கெடாமல் இருக்கும். சுவையும் நிறமும் நன்றாக இருக்கும்”.

PHOTO • Aparna Karthikeyan

செடிகொடிகளைத் தேடிக் கொணர்வது ஒரு பாரம்பரியமான வழக்கம். இது பல்வேறு சமூகங்களுக்கும், கண்டங்களுக்கும் பொதுவான ஒரு நிகழ்வு. இயற்கையாகக் கிடைக்கும் இந்தப் பொருட்கள் உள்ளூரிலேயே நீடித்து நிலைக்கும் வகையில் நுகரப்படுகின்றன.  இந்தப் பொருட்களைத் தேடிக் கொண்டுவர ரதிக்கு தோராயமாக 4 மணிநேரம் தேவைப்படுகின்றது. 10 கிலோ மீட்டர் வரை நடக்க வேண்டியிருக்கிறது.  “வீட்டுக்குக் கொண்டு வந்ததும், எங்கே போகுதுன்னே தெரியாது;, எனச் சிரிக்கிறார்

ஊறுகாய், மசலா, காய்கறிகள், மாமிசம் எனப் பலவகைப்பட்ட பொருட்களைப் பதப்படுத்த ரதியின் குடும்பத்தார், நல்லெண்ணையையே உபயோகிக்கிறார்கள்.  ஆனால், உணவு அரசியலில் இருக்கும் சமூக அடுக்குகள் ரதிக்கு கொதிப்பை ஏற்படுத்துகின்றன.  ஒரு விலங்கு உணவுக்காகக் கொல்லப்பட்டால், அதன் முக்கியமான பாகங்கள் மேல்சாதி மக்களுக்குச் செல்கின்றன. குடல் போன்ற யாரும் தொடாத அசுத்தமான பகுதிகளே எங்களுக்குக் கிடைக்கின்றன என்கிறார்.  எங்கள் சமூகத்தில் மாமிச உணவு வழக்கமே இல்லை.. ஏன்னா, நல்ல மாமிசம் எங்களுக்கு எப்போதும் கொடுக்கப்படுவதில்லை. மிஞ்சிப் போனா ரத்தம் மட்டுமே கிடைக்கும்.

“ஒடுக்குமுறை, வாழிடம், உள்ளூரில் கிடைக்கும் செடிகொடிகள், காய்கறிகள், விலங்குகள், சாதி அடுக்குகள் முதலியவை, தலித், பகுஜன் மற்றும் ஆதிவாசி மக்களின் உணவுக் கலாச்சாரத்தைப் பெருமளவு பாதிக்கின்றன. இவை இன்னுமே சமூகவியல் விஞ்ஞானிகளால் சரியான முறையில் ஆவணப்படுத்தப்படாமல் உள்ளன என்கிறார்”, “ தலித் சமையல் குறிப்புகள் மற்றும் இரத்தப் பொரியல் – என் இளம் வயது நினைவுகளில் இருந்து” , என்னும் கட்டுரையை எழுதிய வினய் குமார்.

“ரத்தம், குடல் போன்ற உடல் பகுதிகளைச் சுத்தம் செய்ய என் அம்மா வடிவம்மாள் ஒரு சிறந்த வழியை வைத்திருக்கிறார்”, என்கிறார் ரதி. “போன ஞாயிற்றுக் கிழமை அம்மா ரத்தம் சமைத்தார். நகரத்தில், ரத்த சாஸேஜ், ரத்த புட்டு (pudding) போன்றவை சிறந்த உணவுகள். மூளை வறுவல் என்பது அரிதான உணவு. கிராமத்தில் 20 ரூபாய்க்குக் கிடைக்கும் இவற்றை நகரத்தில், மிக அதிக விலை கொடுத்து வாங்கி உண்கிறார்கள்.”

ரதியின் அம்மா, செடிகொடிகளைப் பற்றியும் நிறையத் தெரிந்து வைத்திருக்கிறார்.  “திரும்பிப் பாருங்க.. மருத்துவ மூலிகைகள், எண்ணெய்கள்”, என வரவேற்பறையில் இருப்பனவற்றை நமக்குக் காண்பிக்கிறார். “அம்மாவுக்கு எல்லாத்தொட பேரும், அது எதுக்குப் பயன்படும்கற தகவலும் தெரியும். பிரண்டை சீரணத்துக்கு நல்லது. அம்மா அவங்களுக்கு வேணும்கற செடியைக் காண்பிப்பாங்க.. நான் காட்டுக்குள்ளே போயித் தேடி கொண்டு வந்து, சுத்தம் பண்ணிக் கொடுப்பேன்”.

இந்தப் பொருட்களெல்லாம் பல்வேறு பருவங்களில் காடுகளில் கிடைப்பவை. பொதுவாக மார்க்கெட்டில் கிடைக்காதவை.  இவற்றைத் தேடிச் செல்ல தோராயமாக 4 மணிநேரம் ஆகிறது ரதிக்கு. 10 கிலோமீட்டர் வரை நடக்க வேண்டியிருக்கிறது.  “கொண்டு வந்து போட்டதற்கு அப்புறம் என்ன ஆகுதுன்னு எனக்குத் தெரியாது”, எனச் சிரிக்கிறார் ரதி

*****

Rathy in the forest plucking tamarind.
PHOTO • Aparna Karthikeyan
tamarind pods used in foods across the country
PHOTO • Aparna Karthikeyan

புகைப்படம்:  இடது: காட்டிற்குள் புளி பறிக்கும் ரதி. வலது:  உணவில் உபயோகிக்கப்படும் ஒருவகைக் காய்

காட்டுக்குள் செல்லும் பயணம் மனத்தை மயக்குவதாக இருக்கிறது. சிறுவர்களுக்கான மர்மக்கதைகள் போல, ஒவ்வொரு திருப்பத்திலும் ஒரு ஆச்சர்யம் காத்திருக்கிறது. ஒரு புறம் பட்டாம் பூச்சிகள். இன்னொரு புறம் பறவைகள்.. அருமையான நிழல் தரும் மரங்கள். இன்னும் முதிர்ந்திராக காய்களைக் காட்டுகிறார் ரதி.. “இன்னும் சில நாட்களில் பழுத்திரும். ருசியாக இருக்கும்”, என்கிறார். நாங்கள் பிரண்டையைத் தேடுகிறோம். காணவில்லை.

“நமக்கு முன்னாடியே யாரோ வந்து பறிச்சிட்டுப் போயிட்டாங்க போல.. கவலைப்பட வேண்டாம்.. வரும் போது பாத்துக்கலாம்”, என்கிறார் ரதி

ஒரு பெரும் புளிய மரத்தின் கீழ் சென்று, அடிக்கிளையை வளைத்து, சில புளியம்பழங்களைப் பறிக்கிறார் ரதி. பிரண்டைதான் கிடைக்கவில்லை. புளியங்காயையாவது பறிப்போமே என நினைக்கிறார் போல. புளியம்பழத்தின் ஓட்டை உடைத்து உள்ளே அசட்டுத் தித்திப்பில் இருக்கும் புளியம்பழத்தை உண்கிறோம். அவரது இளம் வயதுப் புத்தகம் படிக்கும் நினைவுகள் புளியங்காயுடன் இணைந்திருக்கின்றன. “புஸ்தகத்தை எடுத்துக்கிட்டு, ஒரு மூலைக்குப் போய் ஒக்காந்துகிட்டு, பச்சப் புளியங்காயத் தின்னுகிட்டுப் படிச்சிகிட்டு இருப்பேன்”.

“கொஞ்சம் பெரிசான பின்னால, வீட்டுக்குப் பின்னால இருக்கற கொடுக்காப்புளி மரத்து மேலே ஏறி ஒக்காந்துகிட்டு புத்தகம் படிப்பேன். 14-15 வயசானதுக்குப் பின்னாடியும் கொடுக்காப்புளி மரத்து மேலே ஏறி ஒக்காந்து படிக்கறதப் பாத்த எங்க அம்மா, அந்த மரத்தையே வெட்டிட்டாங்க”, என வெடித்துச் சிரிக்கிறார் ரதி

நடுமதியமாகி விட்டது. சூரியன் சுட்டெரிக்கத் தொடங்கியது. ஜனவரி மாதம் போலவே இல்லை. பயங்கர வெய்யில். “இன்னும் கொஞ்சம் தூரம்தான்.. அதுக்குள்ள புலியூத்து வந்துரும். எங்க ஊருக்கே தண்ணி இங்கிருந்துதான் கிடைக்குது”. வறண்டிருந்த குட்டையில், ஆங்காங்கே நீர் தேங்கியிருந்தது. சேறும் சகதியுமாக இருந்த அந்த நீர்த்திட்டுக்களின் மீது பட்டாம் பூச்சிகள் பறந்து கொண்டிருந்தன. அவை தங்கள் இறக்கைகளைத் திறக்கையில் கண்ணை மயக்கும் நீல வண்ணமாகவும், மூடுகையில் சாதாரணப் பழுப்பு நிறமாகவும் இருந்தன. திடிரென நிகழும் மாயமந்திரக் காட்சி போல.

புலியூத்து நீர்க் குட்டை, பழைய கிராமத்துக் கோவிலை அடுத்து இருந்தது. அதற்கு எதிர்த்தாற்போல, புதிதாகக் கட்டப்பட்டு வரும் பிள்ளையார் கோவிலைக் காண்பிக்கிறார் ரதி. பெரும் ஆல மரத்தின் நிழலில் அமர்ந்து கொண்டு சென்றிருந்த ஆரஞ்சுப் பழங்களைத் தின்னத் தொடங்குகிறோம். எங்களைச் சுற்றி மென்மதிய ஒளி. எலுமிச்சை, ஆரஞ்சுப்பழங்களின் வாசனை.. கறுப்பு மீன்கள். மென்மையாக இரு கதையை எனக்குச் சொல்லத் தொடங்குகிறார் ரதி..  “இதன் பெயர் பித், பிப் அண்ட் பீல்”, என. நான் கூர்ந்து கேட்கத் தொடங்குகிறேன்.

Rathy tells me stories as we sit under a big banyan tree near the temple
PHOTO • Aparna Karthikeyan
Rathy tells me stories as we sit under a big banyan tree near the temple
PHOTO • Aparna Karthikeyan

புகைப்படம் (வலது) பெரும் ஆலமரத்தின் அடியில், எனக்குக் கதைகள் சொல்கிறார் ரதி

ரதிக்கு எப்போதுமே கதைகள் பிடிக்கும். வங்கியில் மேலாளராக இருந்த அவர் தந்தை அவருக்கு மிக்கி மவுஸ் கதைப் புத்தகங்களைக் கொடுத்தது அவரின் முதல் நினைவு. “அண்ணன் கங்காவுக்கு விடியோ கேம்ஸ்.. தங்கை நர்மதாவுக்கு பொம்மை.. எனக்கு கதைப் புத்தகம்”.

புத்தகம் வாசிக்கும் வழக்கம் ரதிக்குத் தன் தந்தையிடம் இருந்து வந்த ஒன்று. அவரிடம் நிறையப் புத்தகங்கள் இருந்தன. ரதியின் ஆரம்பப் பள்ளியில் பெரும் நூலகமும் இருந்தது. “அங்கே எனக்குத் தடைகள் எதுவும் இல்லை. வழக்கமாகப் பூட்டி வைக்கப்படும் புத்தகங்களான நேஷனல் ஜியோக்ராஃபிக் மற்றும் அறிவியல் கலைக்களஞ்சியங்கள் கூட எனக்காகத் திறந்து வைக்கப்பட்டன. எனக்குப் புத்தகங்கள் பிடிக்கும் என்பதுதான் ஒரே காரணம்.”

புத்தகங்களைப் பிடித்துப் போன ரதியின் குழந்தைப் பருவம் முழுவதும் புத்தகங்கள் படிப்பதிலேயே கழிந்தது.  “ரஷ்ய மொழியில் இருந்து மொழிபெயர்க்கப்பட்ட ஒரு புத்தகம். தொலைந்து விட்டது என நினைத்தேன். பெயர் நினைவில்லை. போன வருடம் அமேசானில் காணக் கிடைத்தது. அது கடற்பயணம் மற்றும் கடல் சிங்கங்களைப் பற்றியது.  கேக்கறீங்களா”, என அந்தக் கதையைச் சொல்கிறார். கடல் அலைகளைப் போலவே ஏற்ற இறக்கங்களுடன் அந்தக் கதை செல்கிறது.

ரதியின் பள்ளிப்பருவம் கடலைப் போலவே கொந்தளிப்பாக இருந்தது. உயர்நிலைப் பள்ளியில் இருக்கையில் எதிர் கொண்ட வன்முறையை நினைவு கூர்கிறார். “கத்திக் குத்து.. பஸ் எரிப்பு.. என்னும் செய்திகளைத் தொடர்ந்து கேட்டு வந்தேன். எங்கள் ஊரில், திருவிழாக்களில் சினிமாத் திரையிடுவது ஒரு வழக்கம். வன்முறை அங்கிருந்துதான் தொடங்கும். அதைத் தொடர்ந்து கத்திக் குத்து. 8 ஆம் வகுப்புப் படிக்கையில், வன்முறை  உச்சத்தில் இருந்தது.  ‘கர்ணன்”, படம் பாத்தீங்களா? எங்கள் வாழ்க்கையும் அப்படித்தான் இருந்தது.”  “ கர்ணன்” , திரைப்படம் 1995 ஆண்டும் கொடியங்குளம் கிராமத்தில் நிகழ்ந்த வன்முறையைப் பற்றியது. அதில் தனுஷ் நாயகனாக நடித்திருந்தார். ‘கர்ணன்”, என்னும் தைரியமான வீர இளைஞனைப் பற்றிய கதை. ஒடுக்குமுறைக்கு எதிரான அடையாளமாக அந்த இளைஞர் மாறிப்போனார். கிராமத்தின் மேல்சாதியினர் அதிகாரத்தையும் சலுகைகளையும் அனுபவிக்கையில், தலித்துகள் ஒடுக்குமுறையை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

இந்த வன்முறை மிக அதிகமாக இருந்த 90 களின் இறுதிவரையில், ரதி தன் தாயார் மற்றும் சகோதர சகோதரிகளுடன் கிராமத்தில் வசித்து வந்தார். அவர் தந்தை பணி நிமித்தம் பல்வேறு நகரங்களில் வாழ்ந்து வந்தார். 9 ஆம் வகுப்புக்கு அப்புறம், ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு பள்ளி மாற வேண்டிய நிலை ஏற்பட்டது.

ரதியின் வாழ்க்கையும், அனுபவங்களும், அவரது பணி வாழ்க்கையைத் தீர்மானித்தது. “நான் 30 ஆண்டுகளுக்கு முன்பு, பெரும் வாசகியாக இருந்தேன். எனக்காகப் புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து வழிகாட்ட எவருமில்லை. ஆரம்பப் பள்ளியிலேயே ஷேக்ஸ்பியர் புத்தகங்களைத் தேர்ந்தெடுத்தேன். உங்களுக்குத் தெரியுமா? ஜார்ஜ் எலியட்டின், Mill on the Floss எனக்கு மிகவும் பிடித்த புத்தகம். அது நிறம் மற்றும் வகுப்புவாத வேற்றுமைகளைப் பற்றியது. அதன் நாயகி ஒரு கறுப்பினப்பெண். அது இளங்கலை வகுப்புகளுக்குப் பாடமாக இருந்தது. ஆனால், அதை நான் 4 ஆம் வகுப்பிலேயே படித்திருக்கிறேன். அந்த நாயகியின் வாழ்க்கையுடன் என்னை நான் அடையாளப்படுத்திக் கொள்ள முடிந்தது. அவளது கதை என்னைத் துயரத்தில் ஆழ்த்தியது.”

Rathy shows one of her favourite books
PHOTO • Aparna Karthikeyan
Rathy shows her puppets
PHOTO • Varun Vasudevan

புகைப்படம்: ரதி தனக்குப் பிடித்த புத்தகங்களைக் காட்டுகிறது. வலது: பொம்மைகள்

பல ஆண்டுகளுக்குப் பின்னால், ரதி குழந்தைகளுக்கான புத்தகங்களை மீண்டும் கண்டு கொண்டார் அது அவரது பணிவாழ்க்கையின் பகுதியாக மாறிப்போனது.  “எடுத்துக்காட்டாக, “where the Wild Things Are and Ferdinand”, போன்ற சிறுவர்களுக்கான புத்தங்கள் இருந்தன என்பதே எனக்குத் தெரியாது. அந்தப் புத்தகங்கள் 80-90 ஆண்டுகளாக இருந்திருக்கின்றன. நகரங்களில் வசிக்கும் குழந்தைகள் அவற்றைப் படித்திருக்கிறார்கள். எனக்கும் அந்த வாய்ப்புக் கிடைத்திருந்தால், என் வாழ்க்கை வேறுமாதிரியாக மாறியிருக்கும் அல்லவா? மேம்பட்டிருக்கும் எனச் சொல்ல வில்லை. வேறு மாதிரியாக மாறியிருக்கும் எனச் சொல்கிறேன்”.

வாசிப்பு என்பது இன்னுமே பள்ளிக் கல்வியிலிருந்து குழந்தைகளை வேறு திசைக்குக் கொண்டு செல்லும் என்பதாகவே பார்க்க. “வாசிப்பு பொழுதுபோக்காகப் பார்க்கப்படுகிறது. திறனை மேம்படுத்தும் ஒன்றாக அல்ல. பெற்றோர்களும் பள்ளிக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் பயிற்சி ஏடுகளை மட்டுமே வாங்குகிறார்கள். கதைப்புத்தங்கள் வழியே விளையாட்டாக நிறைய விஷயங்களைக் குழந்தைகள் கற்றுக் கொள்ள முடியும் என்பதை அவர்கள் இன்னும் உணரவில்லை. இதைத் தாண்டி, நகர்ப்புற குழந்தைகளுக்கும், கிராமப்புரக் குழந்தைகளுக்கும் பெரும் இடைவெளி உள்ளது. கிராமப்புரக் குழந்தைகள், நகர்ப்புரக் குழந்தைகளை விட வாசிப்பதில் இரண்டு மூன்று தளங்கள் கீழே உள்ளார்கள்”.

எனவேதான் ரதி கிராமப்புரக் குழந்தைகளுடன் பணிபுரிய விரும்புகிறார். கடந்த ஆறு ஆண்டுகளாக கிராம நூலகங்களை மேம்படுத்துவதிலும், கிராம இலக்கிய, புத்தக விழாக்களை நடத்துவதிலும் நேரத்தைச் செலவிட்டு வருகிறார்.  திறமையான நூலகர்கள், தங்கள் நூலகத்தில் உள்ள புத்தகங்களை மிகத் தெளிவாகப் பட்டியலிட்டு வைத்திருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்குக் கூட புத்தகத்தின் உள்ளடக்கம் என்ன என்பது தெரியாமல் இருக்கிறது. என்ன புத்தகங்கள் படிக்கலாம் என உங்களுக்கு அவர்கள் ஆலோசனை செய்ய முடியாவிட்டால், நல்ல நூலகமும், பட்டியலும் இருந்தும் பயனில்லாமல் போய்விடும்.

“ஒருவாட்டி, ஒரு நூலகர் என்னிடம் கேட்டார்.. “சின்னப் புள்ளங்கள எல்லாம் எதுக்கு லைப்ரரிக்குள்ளார விடுறீங்க மேடம்”, னு கேட்டார்.. “அப்ப எம் மூஞ்சிய நீங்க பாத்திருக்கனுமே.” அவரது உரத்த சிரிப்பு, அந்த மதிய நேரத்தை நிரப்புகிறது.

*****

வீடு திரும்புகையில், பிரண்டையைக் கண்டு பிடித்து விட்டோம். செடி கொடிகளின் மீது படர்ந்திருந்தது.  பிரண்டையின் வள்ர்நுனியில் உள்ள பகுதியை எப்படிப் பறிக்க வேண்டும் என எனக்குக் கற்றுத் தந்தார். பறிக்கையில் பட் பட் என்று உடைகிறது. “பிசாசின் முதுகெலும்பு”, எனச் சொல்கிறார். அந்தப் பெயர் மீண்டும் சிரிப்பைக் கொண்டு வருகிறது.

Foraging and harvesting pirandai (Cissus quadrangularis), the creeper twisted over plants and shrubs
PHOTO • Aparna Karthikeyan
Foraging and harvesting pirandai (Cissus quadrangularis), the creeper twisted over plants and shrubs
PHOTO • Aparna Karthikeyan

புகைப்படம்:  செடிகள் / புதர்கள் மீது படர்ந்திருக்கும் பிரண்டை பறிக்கும்  படலம் (Cissus quadranguaris)

ஒரு மழை பெஞ்சா மறுபடியும் துளிச்சிரும் என்கிறார் ரதி. “பச்சையாக இருக்கும் அடிப்பகுதியை நாங்க பறிக்க மாட்டோம். அது முட்டையிடும் மீனைப் பிடிக்கிற மாதிரி. அதப் பிடிச்சிட்டா, அப்பறம் மீன் இனப் பெருக்கம் எப்படி நடக்கும்?”.

காட்டிலிருந்து கிராமத்துக்குத் திரும்புகையில் வெயில் கொளுத்துகிறது. பனை மரங்களும் புதர்களும் பழுப்பாகவும் உலர்ந்தும் இருக்கின்றன. பூமி வெக்கையால் தகிக்கிறது. கருப்பு இபிஸ் என்னும் வலசைப் பறவைகள், நாங்கள் அவர்களை நெருங்கியதும் அவர்களது பெரும் இறக்கைகளை அழகாய் விரித்துப் பறந்து  செல்கின்றன. கிராமத்தின் சதுக்கத்தை அடைகிறோம். அங்கே அம்பேட்கர் கையில் நாட்டின் அரசமைப்புச் சட்டத்தைச் சுமந்தபடி உயர்ந்து நிற்கிறார்.  “வன்முறைச் சம்பவங்களுக்கு அப்புறம்தான் சிலைக்குக் கம்பிவேலி போட்டாங்கன்னு நினைக்கிறேன்”.

ரதியின் வீடு அம்பேட்கர் சிலையிலிருந்து சில நிமிடத் தொலைவில் இருக்கிறது. வீட்டின் முன்னறையில் அமர்ந்து கொண்டு, கதைகள் தனது பழம் துயரங்களைக் கடந்து வர உதவும் வழியாக உள்ளதாகச் சொல்கிறார். “கதை சொல்லியாக மேடையில் நடிக்கையில், பலவிதமான உணர்வுகள் என்னுள்ளில் இருந்து வெளிப்படுகின்றன. இல்லையெனில், அவற்றை நான் ஒரு போதும் வெளியில் கொண்டு வந்திருக்க மாட்டேன். களைப்பு, ஏமாற்றம் போன்ற எளிமையான உணர்வுகளைக் கூட, நாம அடக்கிகிட்டுத்தான வாழ்கிறோம். ஆனா, இந்த உணர்வுகளை நான் மேடையில் நடிக்கையில் வெளிப்படுத்தி விடுவேன்”.

பார்வையாளர்கள் ரதியைப் பார்ப்பதில்லை. அவர் நடிக்கும் பாத்திரத்தைத்தான் பார்க்கிறார்கள் என்பதைச் சுட்டிக் காட்டுகிறார் ரது. துக்கம் கூட மேடையில் தனக்கான வடிகாலைத் தேடிக் கொள்கிறது.  “எங்கிட்ட ஒரு போலியான அழுகை இருக்கு. சத்தமாக நான் அழுதா, ஜனங்க ஓடி வந்து பாப்பாங்க.. யாரு ஒப்பாரி வைக்கிறானு..”. எனக்காக இப்ப அழமுடியுமான்னு கேட்கிறேன். ரதி சிரித்துக் கொண்டே சொல்கிறார், “வேணாம்.. இங்க நிச்சயமா முடியாது.. என்னாச்சின்னு சொந்தக்காரங்க எல்லாம் ஓடி வந்துருவாங்க”.

நான் கிளம்ப வேண்டிய நேரம் வந்து விட்டது. எனக்காக பிரண்டை ஊறுகாய் பாட்டில்களைக் கட்டித்தருகிறார். பூண்டு வில்லைகளுடன் எண்ணெயில் ஜொலிக்கிறது ஊறுகாய். அதன் வாசனை, சொர்க்கத்துக்கே என்னை அழைத்துச் செல்கிறது. ஒரு வெயில் நாளில் சென்று வந்த அந்த நீண்ட நடைபயணத்தை, பிரண்டை பறித்த அனுபவத்தை, ரதியின் கதைகளை அது நினைவு படுத்துகிறது.

Cleaning and cutting up the shoots for making pirandai pickle
PHOTO • Bhagirathy
Cleaning and cutting up the shoots for making pirandai pickle
PHOTO • Bhagirathy

புகைப்படம்:  பிரண்டை ஊறுகாய் செய்ய பிரண்டைத் தண்டை வெட்டிச் சுத்தம் செய்தல்

Cooking with garlic
PHOTO • Bhagirathy
final dish: pirandai pickle
PHOTO • Bhagirathy

புகைப்படம்: இடது: பூண்டுகள் போட்டு ஊறுகாய் செய்தல் வலது: பிரண்டை ஊறுகாய். பிரண்டை ஊறுகாய் செய்யும் வழிமுறை கீழே உள்ளது:

ரதியின் அம்மா “வடிவம்மாள்”, அவர்களின், பிரண்டை ஊறுகாய் செய்யும் வழிமுறை

முதலில் பிரண்டையை சுத்தம் செய்து, பொடியாக நறுக்கிக் கொள்ளவும். நீர் இருக்கக் கூடாது. வாணலியை எடுத்து அடுப்பில் வைத்து, தேவையான அளவு நல்லெண்ண்ணெய் சேர்க்கவும். எண்ணெய் சூடானதும், கடுகு, வெந்தயம், பூண்டு வில்லைகளைச் சேர்க்கவும். அவை பொன்னிறமாக வரும் வரை வறுக்கவும். முன்பே ஊற வைத்த புளியைக் கரைத்து சேர்க்கவும். பிரண்டை தரக்கூடிய தொண்டைக் கமறலை புளி சரிக்கட்டி விடும். (சில சமயங்களில் பிரண்டையைக் கழுவிச் சுத்தம் செய்யும் போதே கைகளில் அரிப்பு ஏற்படும்)

புளித்தண்ணீரைச் சேர்த்த பிறகு, உப்பு, மஞ்சள் பொடி, சிவப்பு மிளகாய்ப் பொடி, பெருங்காயம் முதலியவற்றைச் சேர்க்கவும். பிரண்டை நன்றாக வெந்து எல்லாப் பொருட்களும் ஒன்றாகச் சேர்ந்து கலந்து வரும் வரை கிளறவும். நன்றாக வெந்து வரும் போது நல்லெண்ணெய் மேல மிதக்கத் தொடங்கும். பின்னர் அடுப்பிலிருந்து இறக்கி, ஆற வைக்கவும். நன்றாக ஆறிய பின்னர் பாட்டில்களில் நிரப்பி மூடி வைக்கவும். இது ஒரு வருடம் வரை கெடாமல் இருக்கும்


இந்த ஆய்வு, 2020 ஆம் ஆண்டுக்கான அசீம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தின் நிதிநல்கையின் உதவியினால செய்யப்பட்டது.

தமிழில்: பாலசுப்ரமணியம் முத்துசாமி

Aparna Karthikeyan

அபர்ணா கார்த்திகேயன் ஒரு சுயாதீன பத்திரிகையாளர், எழுத்தாளர் மற்றும் PARI-யின் மூத்த மானியப் பணியாளர். 'Nine Rupees an Hour'என்னும் அவருடைய புத்தகம் தமிழ்நாட்டில் காணாமல் போகும் வாழ்வாதாரங்களைப் பற்றிப் பேசுகிறது. குழந்தைகளுக்கென ஐந்து புத்தகங்கள் எழுதியிருக்கிறார். சென்னையில் அபர்ணா அவரது குடும்பம் மற்றும் நாய்களுடன் வசிக்கிறார்.

Other stories by Aparna Karthikeyan

பி. சாய்நாத், பாரியின் நிறுவனர் ஆவார். பல்லாண்டுகளாக கிராமப்புற செய்தியாளராக இருக்கும் அவர், ’Everybody Loves a Good Drought' மற்றும் 'The Last Heroes: Foot Soldiers of Indian Freedom' ஆகிய புத்தகங்களை எழுதியிருக்கிறார்.

Other stories by P. Sainath
Translator : Balasubramaniam Muthusamy

பாலசுப்ரமணியம் முத்துசாமி ஒரு சிறு விவசாயியின் மகன். அவர் இளநிலை வேளாண்மையும், முதுநிலை ஊரக மேலாண்மையும் படித்தவர். திராவிட இயக்கங்களின் சமூக நீதிக் கொள்கைகளால் மேலெழுந்தவர். உணவு மற்றும் நுகர் பொருள் வணிகத்தில் 31 ஆண்டுகள் அனுபவம். அவர் தற்போது தான்சானியா நாட்டின் நுகர் பொருள் நிறுவனம் ஒன்றின் முக்கிய நிர்வாக அலுவலராகவும், இயக்குநராகவும் பணி புரிந்து வருகிறார்.

Other stories by Balasubramaniam Muthusamy