வட தமிழ்நாட்டில் திருவள்ளூர் மாவட்டக் கடலோரப் பகுதியில் உள்ள கிராமங்களின் எல்லைகளைப் பாதுகாக்கிறது கன்னிசாமி. மீனவச் சமூகத்தின் இந்தக் காவல் தெய்வம் இந்தச் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரைப்போலவே தோற்றமளிக்கிறது. ‘அவர்’ பளிச்சென்ற வண்ணத்தில் ஆடை அணிந்துள்ளார். இடுப்பில் வேட்டியும், தலையிலே துண்டும் அணிந்திருக்கிறார். பாதுகாப்பாக கரை திரும்பவேண்டும் என இந்த தெய்வத்தை வேண்டிவிட்டே மீனவர்கள் கடலுக்குச் செல்கிறார்கள்.
மீனவக் குடும்பங்கள் கன்னி சாமியை வெவ்வேறு வடிவங்களில் வணங்குகிறார்கள். வட சென்னையில் இருந்து பழவேற்காடு வரையில் இந்த வழிபாடு பிரபலம்.
எண்ணூர் குப்பம் மீனவர்கள் படகிலும், நடந்தும் சுமார் 7 கி.மீ. பயணம் செய்து அத்திப்பட்டு சென்று கன்னிசாமி சிலைகளை வாங்கி வருகிறார்கள். ஆண்டுதோறும் ஆடி மாதம், ஒரு வாரத்துக்கு திருவிழா நடக்கும். 2019-ல் இந்த ஊரைச் சேர்ந்த மீனவர்கள் கன்னிசாமி சிலை வாங்குவதற்காக அத்திப்பட்டு சென்றபோது நானும் அவர்களோடு சேர்ந்து பயணித்தேன். வட சென்னையில் உள்ள எண்ணூர் அனல் மின் நிலையம் அருகே கொசஸ்தலையாற்றின் கரையோரம் ஒன்று சேர்ந்து அத்திப்பட்டு நோக்கி நடக்கத் தொடங்கினோம்.
இரண்டு மாடிகள் கொண்ட ஒரு வீட்டை நெருங்கினோம். அங்கே தரையில் கன்னிசாமி சிலைகளை வரிசையாக நிறுத்தியிருந்தார்கள். அவை வெள்ளைத் துணியால் மூடிவைக்கப்பட்டிருந்தன. வெள்ளை வேட்டியும் நெற்றியில் திருநீரும் அணிந்த மனிதர் ஒருவர் அந்த சிலைகளுக்கு கற்பூரம் காட்டிக்கொண்டிருந்தார். 40 வயது கடந்த அந்த மனிதர் ஒவ்வொரு கன்னிசாமி சிலைக்கும் பூசை செய்து, ஒவ்வொரு மீனவரின் தோளில் எடுத்து வைத்தார்.
அப்போதுதான் டில்லி அண்ணாவை நான் முதல் முதலாகப் பார்த்தேன். அந்த சூழ்நிலையில் அவரோடு பேச முடியவில்லை. தங்கள் தோள்களில் கன்னிசாமி சிலைகளை சுமந்துகொண்டு திரும்பிய மீனவர்களோடு நானும் திரும்பிவிட்டேன். நான்கு கிலோமீட்டர் நடந்து கொசஸ்தலை ஆற்றை அடைந்தோம். அங்கிருந்து மூன்று கி.மீ. படகில் பயணித்து மீண்டும் எண்ணூர் குப்பம் வந்து சேர்ந்தோம்.
எண்ணூர் குப்பம் வந்து சேர்ந்த பிறகு, கோயில் எதிரே சிலைகளை வரிசையாக நிறுத்தினார்கள் மீனவர்கள். பூசை, சடங்குகளுக்குத் தேவையான சாமான்கள் சிலைகளுக்கு எதிரே வைக்கப்பட்டன. மாலை இருட்டத் தொடங்கியதும், டில்லி அண்ணா குப்பத்துக்கு வந்தார். ஊர் மக்கள் சிலைகளைச் சுற்றித் திரண்டார்கள். சிலைகளை சுற்றியிருந்த வெள்ளைத் துணியை நீக்கிய டில்லி அண்ணா, மை கொண்டு கன்னி சாமிக்கு கண் வரைந்தார். ‘கண் திறப்பது’ என்று இதைச் சொல்கிறார்கள். பிறகு அவர் ஒரு கோழியின் கழுத்தைக் கடித்துப் பலியிட்டார். இது கெட்ட ஆவிகளை விரட்டும் என்பது நம்பிக்கை.
பிறகு கன்னி சாமி சிலைகள் ஊர் எல்லைக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
எண்ணூரின் கடற்கரையோர அலையாத்தி நிலப்பரப்பு எனக்கு நிறைய மக்களை அறிமுகம் செய்தது. அவர்களில் டில்லி அண்ணா முக்கியமானவர். கன்னிசாமி சிலைகளை செய்வதற்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக்கொண்டவர் அவர். டில்லி அண்ணாவைப் பார்ப்பதற்கு 2023 மே மாதம் நான் மீண்டும் அத்திப்பட்டில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்றபோது அங்கே வீட்டுக்கு தேவையான பொருட்கள் ஏதும் இல்லை. வீடு முழுவதும் கன்னி சிலைகள், களிமண், கூளம் ஆகியவையே நிறைந்து இருந்தன. அவரது வீட்டு அலமாரிகளில் அலங்காரம் இல்லை. வீடு முழுவதும் களிமண் வாசனை மட்டுமே நிறைந்திருந்தது.
ஊர் எல்லையில் இருந்து எடுத்துவரும் கைப்பிடி மண்ணை களிமண்ணுடன் கலந்த பிறகே கன்னி சாமி சிலைகள் செய்யப்படுகின்றன. “இப்படிச் செய்தால், சாமியின் சக்தி ஊருக்குச் செல்லும் என்பது நம்பிக்கை,” என்கிறார் 44-வயது டில்லி அண்ணா. “தலைமுறை தலைமுறையாக என் குடும்பமே கன்னி சாமி சிலைகளை செய்கிறது. என் அப்பா இருந்தவரை எனக்கு இதில் ஆர்வம் இருந்ததில்லை. 2011ல் என் தந்தை இறந்த பிறகு, என்னை சுற்றி இருந்தவர்கள் எல்லோரும் நான் இந்த தொழிலை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார்கள். அதனால்தான் இந்த வேலைக்கு நான் வந்தேன். இது என் அப்பா – அம்மா சொல்லிக் கொடுத்த வேலை. இங்கே இந்த வேலையைச் செய்வதற்கு வேறு யாரும் இல்லை,” என்றார் டில்லி அண்ணா.
10 நாட்கள், தினம் 8 மணி நேரம் வேலை செய்தால் ஒரே நேரத்தில் 10 சிலைகளை செய்துவிட முடியும் என்கிறார் டில்லி அண்ணா. ஓர் ஆண்டுக்கு இவர் 90 சிலைகள் செய்கிறார். “ஒரு சிலை செய்ய, 10 நாட்கள் வேலை செய்யவேண்டும். முதலில் களிமண்ணை இடித்து அதில் இருக்கும் கல்லையெல்லாம் நீக்கிவிட்டு, சுத்தம் செய்ய வேண்டும். பிறகு அதனுடன் மண், கூளம், சேர்த்து குழைத்து சிலை செய்யத் தயாராக வேண்டும். சிலைக்கு வலுவூட்டவே வைக்கோல்கள் சேர்க்கப்படுகின்றன.
“தொடங்கியதில் இருந்து முடிக்கும் வரை இந்த சிலைகளை நான் மட்டுமே தனியாக செய்கிறேன். உதவிக்கு ஆள் வைத்து சம்பளம் கொடுக்கும் அளவுக்கு என்னிடம் பணம் இல்லை,” என்கிறார் அவர். “இந்த மொத்த வேலையையும் நிழலிலேயே செய்யவேண்டும். வெயிலில் வைத்து செய்தால், செய்து கொண்டிருக்கும் சிலையோடு புதிதாக சேர்க்கும் களி மண் ஒட்டாது. உடைந்துவிடும். சிலை செய்யும் வேலை முடிந்தவுடன், அதை சுட்டு தயார் செய்ய வேண்டும். சுட்டு முடிக்கும்வரை ஒரு சிலை செய்ய 18 நாட்கள் ஆகும்.”
அத்திப்பட்டை சுற்றி இருக்கிற எண்ணூர் குப்பம், முகத்திவாரக்குப்பம், தாழங்குப்பம், காட்டுக்குப்பம், மேட்டுக்குப்பம், பல்தொட்டிக் குப்பம், சின்னக்குப்பம், பெரியகுளம் போன்ற ஊர்களுக்கு டில்லி அண்ணா கன்னிசாமி சிலைகளை செய்து தருகிறார்.
திருவிழா காலத்தில், இந்த ஊர்களைச் சேர்ந்த மக்கள், வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக ஊர் எல்லையில் கன்னி சாமி சிலைகளை வைக்கிறார்கள். சிலர் யானை, குதிரை வாகனங்களும் வேண்டும் என்பார்கள். நான் செய்வது யானை வாகனம், குதிரை வாகனம், வேட்டபாரியம்மா, பொம்பள சிலை, ஆம்பள சிலை என ஐந்து வகை சிலைகள்தான். பாப்பாத்தி அம்மன், பொம்மாதி அம்மன், பச்சை அம்மன் என வேறு சில பெயர்களையும் சொல்வார்கள். சிலைகளுக்குப் பக்கத்தில் பந்து, நாய் பொம்மையெல்லாம் வைப்பார்கள். சாமி வந்து இவற்றோடு விளையாடும் என்பது அவர்களின் நம்பிக்கை. அடுத்த நாள் காலையில் பார்த்தால், சாமி சிலைகளின் கால்களில் விரிசல் இருக்கும் என்றும் கூறுகிறார்கள்.
“சில இடங்களில் மீனவர்கள் ஆண்டுக்கு ஒரு முறை கன்னி சிலை வைப்பார்கள். சில இடங்களில் இரண்டு ஆண்டுக்கு, நான்கு ஆண்டுக்கு ஒரு முறை வைப்பார்கள்,” என்கிறார் டில்லி அண்ணா.
இந்த ஊர்களை சேர்ந்த மீனவர்கள் சிலை வாங்குவது குறையவோ, நிற்கவோ இல்லை. இவர்களுக்காக 30 ஆண்டுகளாக சிலை செய்துவரும் டில்லி அண்ணாவுக்கு, தனக்குப் பிறகு யார் இந்த வேலையை செய்வார்கள் என்று தெரியவில்லை. இப்போதெல்லாம் சிலை செய்வதற்கு அவருக்கு அதிகம் செலவாகிறது. “இப்போது விலைவாசி அதிகமாகிவிட்டது. அதைப் பார்த்து அவர்களுக்கு (ஒரு சிலைக்கு இவ்வளவு என்று) விலை சொன்னால், அவர்கள் (வாடிக்கையாளர்கள்) என்ன இவ்வளவு விலை சொல்கிறேன் என்பார்கள். ஆனால், இதில் இருக்கும் கஷ்டம் நமக்குத்தான் தெரியும்.”
வட சென்னை கடற்கரையோரம் அனல் மின் நிலையங்கள் எண்ணிக்கை அதிகரித்துவிட்டதால், நிலத்தடி நீரெல்லாம் உப்பாகிவிட்டது. இதனால், இங்கே விவசாய வேலை குறைந்து, நிலத்தின் தன்மையும் மாறிவிட்டது. “இப்போதெல்லாம் எங்கேயும் களிமண் கிடைப்பதில்லை,” என்கிறார் டில்லி அண்ணா. மூலப் பொருளெல்லாம் தேடினால்தான் கிடைக்கிறது.
களிமண் விலை அதிகமாகிவிட்டது. அதனால், “வீட்டுக்கு அருகே தரையைத் தோண்டி களிமண் எடுத்துவிட்டு, அந்தக் குழியை மணல் வாங்கி நிரப்புகிறேன்,” களி மண்ணை விட மணல் விலை குறைவு.
அத்திப்பட்டில் சிலை செய்கிறவர் இவர் மட்டும்தான் என்பதால், ஏரி, குளத்தில் களி மண் எடுப்பதற்கு ஊராட்சியில் அனுமதி வாங்குவது கடினம். “10-20 குடும்பங்கள் சிலை செய்தால், ஒன்றாக சேர்ந்து ஊராட்சியில் அனுமதி வாங்கலாம். அவர்களும், ஏரி, குளத்தில் சிலை செய்வதற்கு இலவசமாக மண் எடுக்க அனுமதி தருவார்கள். நான் ஒருவன் மட்டும் இருப்பதால் கேட்பதற்கு தயக்கமாக இருக்கிறது. எனவே, வீட்டுக்கு அருகிலேயே களிமண் எடுத்துக்கொள்கிறேன்.”
கைகளால் நெல் அறுவடை செய்வது அரிதாகிவிட்டதால், டில்லி அண்ணா சிலை செய்வதற்கு வேண்டிய வைக்கோல் கூளம் கிடைப்பதும் அரிதாகிவிட்டது. “இயந்திரங்கள் மூலம் அறுவடை செய்யும்போது நமக்கு நிறைய வைக்கோல் கூளம் கிடைக்காது. கூளம் இருந்தால்தான் எனக்கு வேலை. இல்லாவிட்டால் இல்லை,” என்கிறார் அவர். “தேடிச் சென்று, கைகளால் நெல் அறுக்கும் இடங்களில் வைக்கோல் கூளம் வாங்கி வருகிறேன். பூத்தொட்டி, அடுப்பு செய்வதை எல்லாம் நிறுத்திவிட்டேன். இதற்கெல்லாம் தேவை அதிகமாகத்தான் இருக்கிறது. ஆனால், இவற்றையெல்லாம் என்னால் செய்ய முடியவில்லை.”
தனக்கு என்ன வருமானம் வருகிறது என்று விவரிக்கிறார் டில்லி அண்ணா. “ஒரு சிலைக்கு ஊர் மக்கள் ரூ.20,000 தருகிறார்கள். செலவெல்லாம் போக ஒரு சிலைக்கு எனக்கு ரூ.4,000 கிடைக்கும். நான்கு ஊருக்கு சிலை செய்தால், எனக்கு ரூ.16,000 கிடைக்கும்.”
கோடை காலத்தில், பிப்ரவரியில் இருந்து ஜூலை வரையில்தான், டில்லி அண்ணன் சிலை செய்ய முடியும். ஆடி மாதம் திருவிழாக்கள் தொடங்கும்போது மக்கள் சிலை வாங்க வருவார்கள். “6-7 மாதம் கஷ்டப்பட்டு செய்த சிலையெல்லாம் ஒரே மாதத்தில் விற்றுவிடும். அடுத்த ஐந்து மாதத்துக்கு பணம் ஏதும் வராது. சிலைகள் விற்றால்தான் எனக்குப் பணம் வரும்,” என்று கூறும் டில்லி அண்ணா வேறு எந்த வேலைக்கும் செல்ல விரும்பவில்லை.
அவரது வேலை காலை 7 மணிக்குத் தொடங்கும். 8 மணி நேரம் அவர் வேலை செய்வார். காய்ந்துகொண்டிருக்கும் சிலைகளை உன்னிப்பாக அவர் கவனிக்கவேண்டும். இல்லாவிட்டால் அவை உடைந்துவிடும். வேலையில் அவருக்கு இருக்கும் அர்ப்பணிப்பைக் குறிப்பிட அவர் ஒரு சம்பவத்தை சொன்னார். “ஒரு முறை இரவில் என்னால், சுவாசிக்க முடியவில்லை. ஒரே வலி. அதிகாலை 1 மணிக்கு நான் மருத்துவமனைக்கு சைக்கிள் மிதித்துக்கொண்டு சென்றுவிட்டேன். டாக்டர்கள் எனக்கு குளுக்கோஸ் ஏற்றினார்கள். அன்று காலை என் தம்பி வந்தார். ஸ்கேன் செய்வதற்கு வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கே இருந்த ஊழியர்கள் இரவு 11 மணிக்குத்தான் ஸ்கேன் செய்ய முடியும் என்றார்கள். ஆனால், அதற்குள் சிலைகள் வெடித்துவிடும். அந்த சிலைகளை பிறகு மேற்கொண்டு செய்ய முடியாது என்று கூறி, ஸ்கேன் எடுக்காமலே திரும்பிவந்துவிட்டேன்,” என்றார் டில்லி அண்ணா.
30 ஆண்டுகளுக்கு முன்பு அவரது குடும்பத்துக்கு காட்டுப்பள்ளி அருகே உள்ள செப்பாக்கம் கிராமத்தில் 4 ஏக்கர் நிலம் இருந்தது. அப்போது செப்பாக்கம் சிமெண்ட் தொழிற்சாலையை அடுத்த பிள்ளையார் கோயில் அருகே எங்கள் வீடு இருந்தது. நிலத்துக்கு அருகே இருந்தால் விவசாயம் செய்ய முடியும் என்று அங்கே ஒரு வீடு கட்டிக்கொண்டோம்,” என்றா அவர். நிலத்தடி நீர் உப்பாகிப்போனபோது அவர்கள் விவசாயத்தை கைவிட்டனர். பிறகு அவர்கள் அந்த வீட்டை விற்றுவிட்டு அத்திப்பட்டு வந்துவிட்டனர்.
“எங்கள் பெற்றோருக்கு நாங்கள் நான்கு பிள்ளைகள். அவர்களில் நான் மட்டும்தான் இந்தப் பாரம்பரிய வேலையில் இருக்கிறேன். எனக்குத் திருமணம் ஆகவில்லை. இந்தப் பணத்தைக் கொண்டு எப்படி மனைவி, பிள்ளைகளைப் பார்த்துக்கொள்ள முடியும்?” என்று கேட்கிறார். தான் வேறு வேலைக்குப் போனால், மீனவர்களுக்கு சிலைகள் செய்ய வேறு யாரும் இருக்கமாட்டார்கள் என்று அஞ்சுகிறார் அவர். “என் முன்னோர்கள் எனக்குத் தந்தது. இதை நான் விட்டுவிட்டுப் போக முடியாது. அவர்களுக்கு இந்த சிலைகள் கிடைக்காவிட்டால், அவர்களுக்கு சிக்கலாகும்.”
டில்லி அண்ணாவுக்கு சிலைகள் செய்வது வெறும் தொழில் அல்ல. அது ஒரு கொண்டாட்டம். தன் அப்பா காலத்தில் அவர்கள் ஒரு சிலை, 800 ரூபாய், 900 ரூபாய்க்குதான் விற்பார்கள் என்பதை அவர் நினைவுகூர்கிறார். சிலை வாங்க வரும் எல்லோருக்கும் உணவு பரிமாறுவோம். “அது கல்யாண வீடு போல இருக்கும்” என்று நினைவுகூர்கிறார்.
சிலைகள் உடையாமல் சுடப்பட்டால் டில்லி அண்ணாவுக்கு மகிழ்ச்சி. இந்த களிமண் பொம்மைகள் அவருக்குத் துணை. “இந்த சிலைகள் செய்யும்போது கூட ஓர் ஆள் இருப்பதைப் போல இருக்கும். சிலைகளோட பேசிட்டு இருக்கற உணர்வு எப்பவும் எனக்குள்ளே இருக்கும். எனக்குப் பிறகு இவற்றை யார் செய்வார்கள் தெரியவில்லை” என்கிறார் அவர்.
மொழிபெயர்ப்பாளர்: அ.தா.பாலசுப்ரமணியன்