"முழுநேரமும் விவசாயமே பார்த்துக்கொண்டிருந்தால் காசை எப்போது பார்ப்பது?”, என்று கேட்கிறார் சி.ஜெயபால். நெல் வயல்களின் ஊடே நடந்து செல்கையில், “அதோ, அங்கே பாருங்கள்”, என்று அவர் கைகாட்ட, அங்கு ஒரு ஆலமரத்தடியில் சிலர் அமர்ந்திருக்கிறார்கள். “அவர்களில் யாராலும் வெறும் விவசாயத்தை நம்பி மட்டும் உயிர்வாழ முடியாது என்பதுதான் உண்மை. ஒருவர் டிராக்டர் ஓட்டுகிறார், மற்றொருவர் லாரியில் கட்டுமானப் பொருட்களை ஏற்றி உரிய இடத்தில் கொண்டு சேர்க்கிறார், இன்னொருவர் பேக்கரி வைத்து நடத்துகிறார். நான் இங்கிருந்து 25 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மதுரையில் ஒரு விடுதியில் நீச்சல் பயிற்சியாளராகப் பணிபுரிகிறேன்”, என்கிறார்.

மதுரை மாவட்டம் நடுமுதலைக்குளம் கிராமத்தில் ஜெயபால் வைத்திருந்த விவசாய நிலம் சாதாரணமாக, சிறியதாகத்தான் இருந்தது. 75 வயதான தன் தந்தை சின்னத்தேவரிடமிருந்து அவருக்குச் சொத்தாக வந்தது அந்த ஒன்றரை ஏக்கர் நிலம். மேலும் இரண்டு ஏக்கர் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து, வருடத்திற்கு மூன்று முறை நெல் சாகுபடி செய்கிறார். அதுதான் அதிகம் சந்தைத் தேவையுள்ள, அவ்வப்போது லாபம் தருகின்ற பயிர். ஏக்கருக்கு 20,000 ரூபாய் முதல் போட்டு உழுதாலும் லாபம் குறைவாகத்தான் வருகிறது. அதனால் அவரும் அவரது மனைவியும் விவசாயக் கூலிகளாக நாளொன்றுக்குப் பன்னிரண்டு மணிநேரம் உழைக்கிறார்கள். அப்பொழுதும் ஒரு ஏக்கரில் ஒரு மணிநேரத்திற்கு உழைத்தால் வெறும் 9.25 ரூபாய்தான் கிடைக்கிறது. “இப்படி இருந்தால் இந்த வேலையை எதற்காக என் மகன்கள் செய்யவேண்டும்?”, என்று வியர்வையைத் துடைத்தபடி கேட்கிறார்.


02-IMG_2966-AK-Where-Farming-means-Two-Full-Time-Jobs.jpg

ஒரு விவசாயக் கூலிப் பெண்மணி நாற்று நடுகிறார்


விவசாயம் ஒரு முதன்மைத் தொழிலாகத் தமிழகத்தில் இனியும் இல்லை. 2011 கணக்கெடுப்பின்படி, 2001 முதல் 2011 வரை பத்தே வருடங்களில் 8.7 லட்சம் முழுநேர விவசாயிகள் விவசாயத்தை விட்டு வெளியேறிவிட்டார்கள். பலர் வெவ்வேறு இடங்களுக்குக் குடிபெயர்ந்துவிட்டார்கள். பலர் கடனைத் திரும்ப செலுத்த முடியாமல் நிலத்தை இழந்துவிட்டார்கள். இங்கு ஒரு முக்கியமான கேள்வி எழுகிறது. அவர்களெல்லாம் எங்கே, என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்? இதற்கும் அந்தக் கணக்கெடுப்பிலேயே ஒரு பதில் இருக்கிறது. அதே பத்து வருடத்தில் தமிழகத்தில் விவசாயக் கூலிகளின் எண்ணிக்கை 9.7 லட்சம் அதிகரித்திருக்கிறது.

ஜெயபால் தான் செய்யும் விவசாயத்தை, தன்னுடைய நிலத்தை, இப்பூமியை மிகவும் நேசிக்கிறார். அவருடைய கிராமத்தையும் அதைச்சுற்றியுள்ள ஐயாயிரம் ஏக்கர் நிலத்தையும் குறித்து அவருக்கு மிகவும் பெருமை. செருப்பு அணியாத அவருடைய பாதம் நிலத்தை மென்மையாகத் தொட்டுச் செல்ல, குறுகலான வரப்பில் விறுவிறுவென்று அனாயசமாக நடக்கிறார். அவருக்கு ஈடுகொடுத்து என்னால் நடக்க முடியவில்லை. ஈர நிலம் வழுக்கி வழுக்கி விடுகிறது. நிலை தடுமாறி விழப்போய் ஒருவழியாக சமாளித்துக்கொண்டு தத்தித் தத்தி நடக்கிறேன். நாற்று நட்டுக்கொண்டிருந்த பெண்கள் நிமிர்ந்து அந்தக் காட்சியைப் பார்த்து கலகலவென்று சிரிக்கிறார்கள். மணி பதினொன்றுதான், ஆனால் அவர்கள் அப்பொழுதே ஆறு மணிநேரமாக உழைத்துக்கொண்டிருக்கிறார்கள். அதிகாலை எழுந்து முதல் மூன்று மணிநேரம் வீட்டு வேலை செய்தும், அடுத்த மூன்று மணி நேரம் வயலில் களைபறித்தும் ஆறு மணி நேரம் உழைத்துவிட்டு, இப்பொழுது நாற்று நடுகிறார்கள்.


03-IMG_2799-AK-Where-Farming-means-Two-Full-Time-Jobs.jpg

வரப்பில் வெறும் கால்களில் நடந்து செல்லும் ஜெயபால்


டிசம்பரில் பெய்த எதிர்பாராத மழை அனைத்து குளங்களையும் நிரப்பி, சுற்றியுள்ள மலைகளில் பசுமையைப் போர்த்திவிட்டது. கொக்குகள் புதிதாய் மலர்ந்த மலர் போல் வெண்மையாக மரங்களின் மேல் உட்கார்ந்துகொண்டிருக்கின்றன. கணுக்கால்கள் வரை சேற்றில் புதைந்திருக்க, முட்டியை மூக்கு இடிக்கும் அளவிற்குக் குனிந்தபடி பெண்கள் வரிசையாக நின்று நாற்று நடுகிறார்கள். விரைவாகவும் அசைவுகளில் ஒரு அழகுடனும் நாற்று நட்டபடி மெல்ல மெல்ல நகர்கிறார்கள். அவர்கள் ஒருமுறை கூட முதுகை நிமிர்த்தி களைப்பாறுவதாக இல்லை. ஆம், அங்கு நான் கண்டவை ஏற்கனவேயே பல தமிழ்த் திரைப்படப் பாடல் காட்சிகளில் காட்டப்பட்டவைதான்.


04-IMG_3023-AK-Where-Farming-means-Two-Full-Time-Jobs.jpg

நடுமுதலைக்குளம் இயற்கை அழகு மிக்க ஒரு இடம்


இப்பகுதிகளில் பிழைக்க வேண்டுமென்றால் கடின உழைப்பு மட்டும் போதாது. “புதிது புதிதாக ஏதேனும் செய்தபடி இருக்கவேண்டும். சில பணிகளில் துணிந்து இறங்கியாக வேண்டும். அப்படித்தான் நான்கு வருடத்திற்கு முன்னால் சிறிய தானியமான ‘அக்‌ஷயா’ அரிசி விதைகளைப் பயிரிட்டேன். என்ன லாபம் வரும், எதுவும் தெரியாது, கிட்டத்தட்ட சூதாட்டம்தான். ஏக்கருக்கு 35 மூட்டைகள் அறுவடையானது. ஒவ்வொன்றையும் 1,500 ரூபாய்க்கு விற்றேன். ஆனால்...”, என்று நிறுத்தி ஒரு கணம் சிரிக்கிறார். “ஆனால், நான் அக்‌ஷயாவைப் பயிரிட்டதைப் பார்த்து கிராம மக்கள் அனைவரும் அதை சாகுபடி செய்ய ஆரம்பித்துவிட்டனர். அவ்வளவுதான், விலை சர்ரென்று குறைந்துவிட்டது.”, என்று புன்னகைத்தார். இந்த வருடம் மீண்டும் விலைகள் உயரும் என்று ஜெயபால் நம்பிக்கையுடன் இருக்கிறார். யாருமே எதிர்பாராத விதமாக சென்ற வருடம் பருவமழை அதிகவுக்கதிகமாகப் பெய்ததில் பல ஏக்கர் பயிர்கள் நாசமாகிவிட்டன. அதனால் விலைகள் உயர்ந்தபடி இருக்கின்றன.

ஜெயபாலின் வீட்டை நோக்கி நடந்து செல்கையில் அவர் பல விஷயங்களைப் பேசியபடி வருகிறார். மழை, தண்ணீர், சூரியன், மண், மாடுகள், கம்மாய், என்று தனக்கு நெருக்கமானதைப் பற்றி நேசத்துடன் பகிர்ந்துகொள்கிறார். அவற்றை நம்பிதான் அவர் உணவும் வளமும் இருக்கின்றன. அருகே ஒன்பது கிலோமீட்டர் தொலைவில் செக்கனூரணி என்னும் ஊரிலுள்ள ஒரு கடையில்தான் விதைகள், உரங்கள் ஆகியவற்றை வாங்குகிறார். அந்தக் கடையில் என்ன விதை இருக்கிறதோ அதுதான் ஜெயபாலுக்கு அந்தப் பருவத்தின் சாகுபடி. களையெடுப்பது, நீர் பாய்ச்சுவது, மருந்தடிப்பது, மாடு மேய்ப்பது என அவருடைய தினசரி பணிகளே ஒரு நாளைக்கான நேரத்தை எடுத்துக்கொண்டுவிடுகின்றன. அப்படி வேலை இல்லாதபோது, நீச்சல்குளத்தில் பயிற்சியாளர் வேலை!

வாரத்திற்கு ஆறு நாட்கள், தினசரி ஒன்பது மணி நேரம், மதுரையில்  ஒரு நட்சத்திர விடுதியில், ஜெயபால் முற்றிலும் புதியதோர் உலகத்தில் உழல்கிறார். “தினமும் அதிகாலையில் ஓரிரு மணிநேரம் வயல் வேலை. காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை ஷிப்ட் என்றால் அங்கிருந்தே வண்டியில் விடுதிக்கு சென்றுவிடுவேன். சிற்றுண்டி சாப்பிடவெல்லாம் ஏது நேரம்?”, என்று கேட்கிறார். விடுதியை அடைந்ததும் நீல சட்டை, பேண்ட் என்று பணிச்சீருடைக்கு மாறி, ஒரு அழகிய நீச்சல் குளத்தின் பக்கமாக நின்றுகொள்கிறார். விடுதியில் தங்கியிருப்போர் அங்கு நீச்சலடிக்க வரும்போது அவர்களுக்குத் துணைபுரிகிறார்.அங்கு பணிபுரியும்போது கற்றுக்கொண்ட ஆங்கிலத்தை வைத்து வெளிநாட்டினரிடம் தன் ஊரான மதுரையைப் பற்றிப் பேசுகிறார். அவருக்கு அந்த வேலை பிடித்திருக்கிறது. மாதம் அதில் வரும் 10,000 ரூபாய் சம்பளம் அவருக்கு உதவிகரமாய் இருக்கிறது. மேலும், தற்போது விளையாட்டோடு அவருக்கு இருக்கும் ஒரே தொடர்பு அதுதான். பத்து வருடங்களுக்கு முன்னால், அதுதான் அவருக்கு எல்லாமே!


05-IMG_2792 & IMG_20150801_115622(Crop) -AK-Where-Farming-means-Two-Full-Time-Jobs.jpg

தன்னுடைய நிலத்தில் ஜெயபால் (இடது) மதுரையில் உள்ள விடுதியில் (வலது)


மதுரையின் சுற்றுவட்டாரம் ஜல்லிக்கட்டிற்குப் பெயர் பெற்றது. ஜெயபால் அதில் போட்டியிட்டு வென்றிருக்கிறார். அங்கு நடந்த கபடி, குண்டு எறிதல், வட்டு எறிதல் போன்ற போட்டிகளிலும் கலந்துகொண்டு வென்றிருக்கிறார். ஜெயபாலுடன் இவ்வாறு பேசியபடி மெல்ல நடந்து வீட்டை அடைகிறோம். அவருடைய மனைவி பொதுமணி எங்களை வரவேற்று உபசரிக்கிறார். சிறிது நேரம் கழித்து பேச்சு மீண்டும் விளையாட்டு பற்றிச் செல்கையில் பொதுமணி, “இதோ வருகிறேன்”, என்று உள்ளே சென்று ஒரு பீரோவிலிருந்து சான்றிதழ்களை எடுத்து காண்பிக்கிறார். வீட்டில் நடுவறை பெரிதாக இருக்கிறது. வெள்ளையடிக்கப்பட்ட சிறிய மண் சுவர்கள் ஆங்காங்கு எழுப்பப்பட்டு, சமையலறை படுக்கையறை என்று பிரிக்கப்பட்டிருக்கிறது. பரணில் துணிமணிகள், மூட்டைகள், வைக்கோல் போன்றவை அடுக்கப்பட்டிருக்கின்றன. 2002-ல் நடந்த அவர்களின் திருமணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சுவரை அலங்கரிக்கின்றன.


06-IMG_3090-AK-Where-Farming-means-Two-Full-Time-Jobs.jpg

ஜெயபால் வென்ற போட்டிகளின் சான்றிதழ்கள்


போட்டிகளில் வென்ற பரிசுகள் என்னன்ன என்று ஜெயபால் ஒவ்வொன்றாக அடுக்குகிறார். “இதோ, இந்தத் தங்கக் காசு, குத்துவிளக்கு, அதோ தொலைக்காட்சி, வாயிலில் இருக்கும் மிதிவண்டி, இதோ நீங்கள் சாய்ந்துகொண்டிருக்கிறீர்களே, இந்த கிரைண்டர், எல்லாமே போட்டிகளில் வென்றதுதான்”, என்று பெருமிதத்துடன் காட்டுகிறார். “இப்படி வாழ்க்கை விளையாட்டுகளின் தொகுப்பாகச் சென்றுகொண்டிருந்தபோதுதான் 2003 முதல் 2007 வரை அந்த நான்கு ஆண்டுகள் பருவமழை பொய்த்தது. எங்கும் உணவு இல்லை, கையில் பணம் இல்லை. மனைவியையும் என் இரண்டு மகன்களையும் காப்பாற்ற வேண்டும்.  எனவே கூலி வேலையில் இறங்கினேன். 2008-லிருந்து என் குடும்பத்தின் பாரம்பரியத் தொழிலான விவசாயத்தைக் கைகொண்டேன்”, என்று நினைவுகளில் மூழ்குகிறார். அதே ஆண்டுதான் அந்த விடுதியிலும் வேலைக்குச் சேர்ந்தார். இரண்டுமே தனக்கு முழுநேர வேலைதான், என்று சிரித்துக்கொண்டே சொல்கிறார். “இங்கு ஒரே ஒரு வருமானத்தை வைத்துக்கொண்டு பிழைப்பது சாத்தியமில்லை. இதுதான் உண்மை”.

ஒரு ஆணாக ஜெயபாலுக்குக் கூலித் தொழில் மூலம் பணம் வருகிறது. பொதுமணி ஜெயபாலைவிட அதிக நேரம் உழைத்தாலும் அவருக்குக் குறைவான கூலியே கிடைக்கிறது. முக்கால்வாசி பெண்களின் நிலை அப்படித்தான், ஜெயபாலின் 70 வயது தாயார் கண்ணம்மாளையும் சேர்த்து. அவர் ஒரு நாளைக்குப் பல வேலைகளைச் செய்கிறார். காலை ஐந்து மணிக்கு வீட்டு வேலை. பிறகு எட்டு மணி முதல் பிற்பகல் மூன்று மணி வரை வயலில் வேலை. மதிய உணவைத் தாமதமாக உண்ட பிறகு மாட்டுத் தீவனமும் சமையல் விறகையும் சேகரிக்கச் செல்கிறார். அது முடிந்ததும் வீட்டிற்கு வந்து மாட்டுக் கொட்டகையை சுத்தம் செய்து, பால் கறந்து, மீண்டும் ஆடுகளை மேய்க்கச் செல்கிறார். அது முடிந்ததும் மீண்டும் சமையல்கட்டில் வேலை. “அம்மா உதவிக்கு இருப்பதால்தான் என்னால் இரண்டு வேலைகளையும் பார்க்க முடிகிறது. அவர் இல்லையென்றால் எங்கள் வீடே ஓடாது”, என்று வாஞ்சையுடன் பதிவு செய்கிறார்.


07-IMG_3087-AK-Where-Farming-means-Two-Full-Time-Jobs.jpg

ஜெயபாலும் பொதுமணியும் அவர்களின் இல்லத்தில்


நடுமுதலைக்குளத்தில் பெண்களுக்கு மிகக் குறைவான அளவில்தான் வேலை வாய்ப்பு உள்ளது. கிராமத்தில் உள்ள 1,500 மக்களில் பெரியவர்களின் முதன்மைத் தொழிலாக விவசாயம்தான் இருக்கிறது. ஆனால் அங்குள்ள குழந்தைகளுக்கு வேறு திட்டங்கள் இருக்கின்றன. தங்களின் பெற்றோர் படும் கஷ்டத்தை அவர்கள் பார்க்கிறார்கள். எனவே நன்றாகப் படித்து, வெவ்வேறு பணிகளில் அமர்ந்து, தங்களின் பெற்றோரின் கஷ்டத்தைப் போக்கி வீட்டின் வருமானத்தைப் பெருக்க வேண்டும் என்ற பெருங்கனவு அவர்களுக்கு இருக்கிறது. விவசாயக் கூலியாக இருந்தால் நாளொன்று நூறு ரூபாய்தான் கிடைக்கும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் வேலை செய்தால் நாளொன்றுக்கு 140 ரூபாய் வரும். ஆனால் அந்தப் பணி அவ்வப்போதுதான் வரும். அப்படியே வந்தாலும் அது சரியான சமயத்தில் வராது. “பயிரிடும், கதிரறுக்கும் நேரம் பார்த்து ஏதேனும் ஒரு வேலையை ஒதுக்கிவிடுகிறார்கள். எல்லோரும் அங்கு சென்றுவிட இங்கு கூலியாட்கள் எவரும் கிடைப்பதில்லை. அதிக கூலி, சாப்பாடு, தேனீர், வடை என்று விதவிதமாகக் கொடுத்து அவர்களை விவசாயம் நோக்கி ஈர்க்க வேண்டியிருக்கிறது”, என்று குறைப்பட்டுக்கொள்கிறார் ஜெயபால்.

அவருடைய இருசக்கர வாகனத்தில் நான் பின்னால் ஏறிக்கொள்ள, அவர் கிராமத்தை சுற்றிக் காட்டுகிறார். “இங்கு சுலபமான காரியம் என்று ஒன்று உண்டென்றால் அது கடனாளி ஆவதுதான்”, என்று வருத்தப்படுகிறார். ஒரு அறுவடை பொய்த்தாலும் போட்ட பணம் போட்டதுதான். தினசரி செலவுகள், எதிர்பாராத செலவுகள் ஆகியவை போக, குத்தகையெடுத்த நிலத்திற்கு வேறு வாடகை கட்டவேண்டும். “என் தகப்பனாரின் காலத்தில் ஆண்கள் எல்லோரும் உடல் வலுவும் திறனும் பெற்றிருந்தார்கள். வரப்புகளை அவர்களே வெட்டிக்கொள்வார்கள். ஆனால் என்னுடைய தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்கு விவசாய அறிவு குறைவாகவே இருக்கிறது. நம்முடைய பாரம்பரிய விவசாய அறிவு கொஞ்சம் கொஞ்சமாகத் மறைந்துகொண்டிருக்கிறது”, என்கிறார் வேதனையுடன். அடுத்த தலைமுறையில் நிலைமை இன்னும் கவலைக்கிடமாகும் என்பதே அவரது கணிப்பு.

அங்கு ஏக்கர் கணக்கில் பரந்து விரிந்திருக்கும் பசுமையான நெல் வயல்களைக் கைகாட்டி, “நான் படிக்கவில்லை, அதனால்தான் விவசாயி ஆனேன். பன்னிரண்டாம் வகுப்பு பாஸ் செய்யாததால் எனக்கு வேலைவாய்ப்புகள் குறைவாகத்தான் இருந்தன. ஆனால் என் மகன்களான 13 வயது ஹம்சவர்தனும், 11 வயது ஆகாஷும் நல்ல கல்வியையும் அலுவலகப் பணியையும் விரும்புகிறார்கள். என்னிடம், ‘அப்பா உனக்குப் பணம் வேண்டுமா? மதுரையிலிருந்து நாங்கள் சம்பாதித்துத் தருகிறோம். எங்களுக்கு இந்த வாழ்க்கை வேண்டாம்’, என்கிறார்கள்”, என்றபடி கலவையான உணர்வுகளோடு நம்மிடமிருந்து விடைபெற்றுக் கொள்கிறார் ஜெயபால். கனத்த இதயத்துடன் நாமும் அவரிடமிருந்து விடைபெறுகிறோம்.

NFI தேசிய ஊடக விருது 2015-ன் ஆதரவுடன் நடந்துவரும் ‘தமிழக கிராமப்புறங்களில் மறைந்துவரும் வாழ்வாதாரம்’ என்ற கட்டுரைத் தொடரின் ஒரு பகுதியே இக்கட்டுரையாகும்.

Aparna Karthikeyan

அபர்ணா கார்த்திகேயன் ஒரு சுயாதீன பத்திரிகையாளர், எழுத்தாளர் மற்றும் PARI-யின் மூத்த மானியப் பணியாளர். 'Nine Rupees an Hour'என்னும் அவருடைய புத்தகம் தமிழ்நாட்டில் காணாமல் போகும் வாழ்வாதாரங்களைப் பற்றிப் பேசுகிறது. குழந்தைகளுக்கென ஐந்து புத்தகங்கள் எழுதியிருக்கிறார். சென்னையில் அபர்ணா அவரது குடும்பம் மற்றும் நாய்களுடன் வசிக்கிறார்.

Other stories by Aparna Karthikeyan
Translator : Vishnu Varatharajan

இயந்திரப் பொறியியல் பட்டதாரியான விஷ்ணு வரதராஜன் தமிழில் கட்டுரைகளை மொழிபெயர்ப்பதில் விருப்பமுள்ளவர். அவரைத் தொடர்பு கொள்ள @vishnutshells

Other stories by Vishnu Varatharajan