“விக்னர் நஹி ஹேண்ட்லூம். ஆயுஷ்ய காத்லே தியாச்சவர் [நான் என்னுடைய கைத்தறியை விற்க மாட்டேன். எனது மொத்த வாழ்க்கையும் அந்த கைத்தறியில்தான் கழிந்தது)” என்கிறார் வசந்த் தம்பே. அவரது வீட்டின் மையத்தில் ஏழு அடி உயரத்தில் இருக்கும் ஒரு தறியை சுட்டிக்காட்டுகிறார். "இதைப் பயன்படுத்தி நீங்கள் எந்த வகையான துணியையும் நெய்யலாம்" என்று அவர் பெருமையுடன் கூறுகிறார்.

சாக்வான் மரத்தில் தயாரிக்கப்பட்டிருக்கிற இந்தத் தறியில் தம்பே ஒவ்வொரு இரண்டு வாரங்களுக்கும் 66 மீட்டர் துணியை நெய்கிறார். சராசரியாக ஒரு மாதத்திற்கு 130 மீட்டர்கள் நூல் பயன்படுத்துகிறார். இந்த நூல்தான் உயர் தர சட்டைகளாக தைக்கப்படுகிறது. அவர் 60 ஆண்டுகளுக்கும் மேலாக, பல்வேறு தறிகளில் இதைச் செய்து வருகிறார். 1 லட்சம் மீட்டர்களுக்கும் மேலான அளவுள்ள துணியை இதுவரையும் அவர் நெய்திருக்கிறார்.

அந்த ஒரு லட்சம் மீட்டர்கள் என்பது 18 வயதில் அவர்  ஒன்பது கெஜம் சேலையை நெய்தபோது தொடங்கியது.  ​​இப்போது அவருக்கு 82 வயதாகிறது. ரெண்டல் கிராமத்தில் உள்ள ஒரு பணியிடத்தில்  கைத்தறியில் பயிற்சி பெறுபவராக முதலில் தம்பே  சேர்ந்தார். சேலை தயாரிப்பது எப்படி என்று அங்கு கற்றுக்கொண்டார். "ஒரு மாதம் நாங்கள் அங்கே எந்த சம்பளமும் இல்லாமல் வேலை செய்ய வேண்டியிருந்தது," என்று அவர் நினைவு கூர்ந்தார்.

நான்கு மணி நேரத்தில் ஒரு ஒன்பது கெஜம் சேலையை (ஒரு கெஜம் என்பது எட்டு மீட்டர்களை விட கொஞ்சம் அதிகம்) நெசவு செய்ய   தம்பே வேகமாக கற்றுக்கொண்டார். ஒவ்வொரு சேலைக்கும் 1.25 ரூபாய் அவருக்குக் கிடைக்கும். "அதிகபட்சம் எத்தனை சேலைகளை நெய்ய முடியும் என்று நாங்கள் போட்டியிடுவோம். ஒரு வாரத்தில் 21 புடவைகள் வரை நெய்திருக்கிறோம் ” என்று அவர் நினைவு கூர்ந்தார். 1960 கள் மற்றும் 70 களில், அவருக்கும் அவரது சக ஊழியர்களுக்கும் அத்தகைய சாதனைக்கு 2 ரூபாய் போனசாக கிடைக்கும்.

வசந்த் குடும்பத்தில் வேறு யாரும் நெசவாளர் இல்லை. அதனால் அவருக்கு அந்தப் பயிற்சி அவசியமாக இருந்தது. அவரது குடும்பம் நாடோடி பழங்குடி இனமாக பட்டியலிடப்பட்ட தங்கர் சமூகத்தைச் சேர்ந்தது. வசந்தின் தந்தை சங்கர் தம்பே கொத்தனாராகப் பணிபுரிந்தார். அவரது தாயார் சோனா பாய் ஒரு விவசாயத் தொழிலாளியாகவும் இல்லத்தரசியாகவும் இருந்தார். நீங்கள் ஏன் உங்கள் அப்பாவைப் போல ஒரு கொத்தனாராக மாறவில்லை என்று  கேட்டால், "வீடுகளின் உச்சியிலிருந்து விழுந்துவிடுவேனோ என்று நான் பயந்தேன் " என்கிறார் வசந்த். "அதனால் வேறு வேலை செய்ய முடிவு செய்தேன்." என்கிறார் அவர்.

Vasant Tambe bought this loom from a weaver in Rendal for around Rs. 1,000
PHOTO • Sanket Jain
The warp passes through 3,500 wire heddles of the handloom. It helps in separating the warp threads and helps the steady passage of the weft thread
PHOTO • Sanket Jain

இடது: இந்தத் தறியை 1975 ஆம் ஆண்டில் சுமார் ஆயிரம் ரூபாய்க்கு வசந்த் தம்பே வாங்கினார். வலது: கைத்தறியில் உள்ள  3,500 இழை ஹெட்லஸ்கள் வழியாக செல்கிறது செல்கிறது நூல்களைப் பிரிக்கிற வார்ப்

தம்பே 2 ஆம் வகுப்பு வரை பள்ளியில் படித்தார். அதற்கு மேல் அவரைப் படிக்க வைக்க பெற்றோரால் முடியவில்லை. பாதியிலேயே நின்றுவிட்டார். அப்பா வேலைக்குப் போகும்போது அவருக்குத் துணையாகச் சென்றார். வெள்ளியில் பொருள்கள் செய்கிற ஆசாரிக்கு உதவியாளராக மாறினார். அதைச் செய்துகொண்டிருக்கும்போதே கிராமத்தில் கைத்தறிகளின் இயங்குகிற இனிமையான ஓசை அவரைக் கவர்ந்தது.

ஒரு சேலை நெய்தால் இரண்டு ரூபாய் ஐம்பது காசுகள் கிடைக்கும் அளவுக்கு 1960 களில்,கூலி உயர்ந்தது. நெசவு வேலை கிடைக்கும் போதெல்லாம் சுமார் ஒரு மாதத்தில் சுமார் 75 ரூபாய் வரை வசந்த் சம்பாதித்தார்.  அந்த வருமானத்தோடு ஒரு விவசாயத் தொழிலாளியாகவும் அவர் பணியாற்றினார்.  1950 களில் வயல்களில் 10 மணிநேரம் வேலை செய்தால் நாலணா அல்லது 25 பைசா தருவார்கள் என்கிறார் அவர். “ஒரு கிலோ அரிசி 1960இல் இரண்டு ரூபாய்தான்” என்று அவர் நினைவு கூர்ந்தார். ஒரு கிலோ பருப்பு விலை 62 பைசாக்கள் தான் எனறும் அவர் கூறினார்.

கைத்தறிகளின் தொழிற்சாலைகளில் 20 ஆண்டுகள் பணிபுரிந்த பின்னர், 1975 ஆம் ஆண்டில் கோலாப்பூர் மாவட்டத்தின் ஹட்கானங்கிள் தாலுகாவில் உள்ள அவரது கிராமமான ரெண்டலில் உள்ள பட்டறை உரிமையாளர்களிடமிருந்து, 38 ஆண்டுகள் பழைமையான இரண்டு கைத்தறிகளை,  ஒவ்வொன்றும் சுமார் ஆயிரம் ரூபாய் என்று பணம் கொடுத்து சொந்தமாக அவர் வாங்கினார்.  தனது சொந்தத் தறியில் சேலைகளை நெய்ததன் மூலம் அவர் உள்ளூர் கைத்தறி கூட்டுறவு நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதன் மூலம், ஒரு சேலைக்கு 3 ரூபாய் அளவுக்கு சம்பாதித்தார்.

கூடுதலாகக் கூலி தரவேண்டும் என்று கைத்தறித் தொழிலாளர்கள் கைத்தறி உரிமையாளர்களுக்கு எதிராக 1964 ஆம் ஆண்டில் போராட்டங்கள் நடத்தியதை தம்பே நினைவு கூர்கிறார். அப்போது அவர் ரெண்டலில் ஹத்மாக் கம்கர் யூனியனின் தலைவராக இருந்தார். " ஒரு சேலைக்கு இரண்டு ரூபாய் 50 காசுகளுக்கு மேல் கூலி வழங்க வேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கையாக இருந்தது” என்கிறார்  அவர். “மூன்று மாதகால போராட்டத்துக்குப் பிறகு, கைத்தறி உரிமையாளர்கள்  கூலியில் 5 பைசாவை அதிகரித்தார்கள்" என்று தம்பே கூறுகிறார். நெய்து முடித்த சேலையை மடிக்கிற பணி முன்னர் நெசவாளர்களால் செய்யப்பட்டது. அந்தப் பணி  மற்ற தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டது. தொழிலாளர்களுக்கு மூன்று மாதங்களுக்கு ஊதியம் வழங்கப்படாதபோது, கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் இலவசமாக தானியங்களை வழங்கி உதவினார்கள்" என்றும் அவர் மேலும் கூறுகிறார்.

PHOTO • Sanket Jain

மேல் இடது: வசந்த் தம்பே ஒரு அங்குலத்தில் எத்தனை நூல்கள் இருக்கின்றன என்று பூதக்கண்ணாடியுடன் சரிபார்க்கிறார். மேல் வலது: கைத்தறியில் உள்ள இழையில் ஒவ்வொரு நூலுக்கும் ஒன்று என்ற வகையில் செயல்படும் 3,500 கம்பிகள் கொண்ட  ஹெட்ல்ஸ் எனும் நெய்யும் கருவி. கீழே இடது: தம்பே அவரது கைத்தறியுடன். கீழ் வலது: இந்த பெடல்களைக் கால்களால் அழுத்தி ஹெட்ல்ஸ் எனும் நெய்யும் கருவியின் மேல் மற்றும் கீழ் இயக்கத்தை நெசவாளர்கள் கட்டுப்படுத்துகிறார்கள்

ஆனால், 1970களில், மலிவான விசைத்தறிகள் கிடைக்கத் தொடங்கின. மகாராஷ்டிரா முழுவதும் வெள்ளைப் பருத்தி புடவைகளுக்கான தேவை குறையத் தொடங்கியது. ரெண்டலின் கைத்தறி நெசவாளர்கள் பருத்திப் புடவைகளை தயாரிப்பதிலிருந்து சட்டைகளுக்கான துணி தயாரிக்கத் தொடங்கினர்.

"எங்கள் தறிகளில் நெய்யப்பட்ட புடவைகள்  எளிமையானவை.  சில முறை துவைத்தாலே அவற்றின் நிறம் கூட மங்கிவிடும். யார் அவற்றை வாங்குவார்கள்? ”என்கிறார் தம்பே. 1980களுக்குள் ரெண்டல் கிராமத்தின் துணி சாயமிடுதல் பட்டறைகளுக்கு ரெண்டலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இச்சல்கரஞ்சி நகரத்தில்  வளர்ந்து வந்த சாயத் தொழில், போட்டியாக மாறியது.  அவர்கள் வேதியியல் சாயங்களையும் இயந்திரங்களையும் பயன்படுத்தினார்கள்.

1970களின் முற்பகுதியில் ஒரு உள்ளூர் தொழிலதிபர் மும்பையிலிருந்து வாங்கிய விசைத் தறிதான் முதலாவதாக ரெண்டலுக்கு வந்த விசைத்தறி என்று தம்பே மதிப்பிடுகிறார். அப்போது அதன் விலை ஐயாயிரம் ரூபாயாக இருந்தது. அதற்குப் பிறகு சில கிராமவாசிகள் வட்டிக்காரர்களிடமிருந்து கடன்கள் வாங்கி மும்பை, அகமதாபாத் மற்றும் சூரத் ஆகிய நகரங்களிலிருந்து விசைத் தறிகளை வாங்கத்தொடங்கினர். இன்று, ஒரு விசைத் தறி குறைந்தபட்சம் ரூ. 1 லட்சம் ஆகிறது. 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகைத் கணக்கெடுப்பின்படி, 19,674 பேர் வசிக்கிற பெரிய கிராமமான ரெண்டலில் நெசவாளர்கள் 7,000 பேர் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

Stones are attached to the handloom to help control the flow of thread towards the heddle from the mounted beam
PHOTO • Sanket Jain
This wooden equipment is called dabi in Marathi, and it was used to create designs on the sarees and cloth
PHOTO • Sanket Jain
The shuttle which carries the pirn moves back and forth and helps in interweaving the yarn to produce the cloth
PHOTO • Sanket Jain

இடது: கைத்தறியில் இணைக்கப்பட்டிருக்கிற கற்கள், உயர்த்திக் கட்டப்பட்டிருக்கிற கம்பத்தில் உள்ள ஹெட்டிலை நோக்கிய நூல் இழைகளின் ஓட்டத்தைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. மையம்: மராத்தியில் டாபி என்று அழைக்கப்படும் இந்த மர உபகரணங்கள் புடவைகள் மற்றும் துணியின் மீது வடிவமைப்புகளை உருவாக்க பயன்படுத்தப்பட்டன. வலது: நெய்கிற பணியைச் செய்கிற ஷெட்டில் எனப்படும் இந்த மரக்கருவி நூலை பின்னிப் பிணைத்து நெய்வதற்காக முன்னும் பின்னுமாக நகரும்

மகாராஷ்டிராவில் 3,418 நெசவாளர்களும் 4,511 கைத்தறிகளும் இருக்கின்றன என்கிறது கைத்தறிகளைப் பற்றி அகில இந்திய அளவில் 2009-2010இல் நடத்தப்பட்ட கணக்கெடுப்பு.  மகாராஷ்டிரா முழுவதும் தற்போது 13 லட்சம் விசைத் தறிகள்  உள்ளன என்கிறது மகாராஷ்டிரா மாநிலத்தின் கூட்டுறவு, சந்தைப்படுத்தல் மற்றும் ஜவுளிக்கான அரசுத் துறை பிப்ரவரி 2018இல் வெளியிட்ட ஆவணம்.

ரெண்டல் கிராமத்தில் உள்ள தம்பே உள்ளிட்ட நான்கு நெசவாளர்கள் மட்டுமே கைத்தறியில் தொடர்ந்து பணியாற்றுகிறார்கள்.

ரெண்டலின் நெசவாளர்கள் தாங்கள் தயாரித்த துணியை, கிராமத்தில் உள்ள கைவினைப் பொருள்கள் தயாரிக்கும் மையங்களின் உரிமையாளர்கள் நடத்தும் இரண்டு கூட்டுறவு சங்கங்களுக்கு விற்பனை செய்வது நீண்ட காலமாக நடைபெற்றுவருகிறது. தானியங்கி கைத்தறி கூட்டுறவு விங்கர் சங்கம் மற்றும் ஹாத்மக் விங்கர் கூட்டுறவு சங்கம் ஆகியவை அவை. இவை 220 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சோலாப்பூர் நகரில் ஒரு பெரிய கூட்டுறவு சங்கத்துக்கு  விற்பனை செய்யும்.

ஆனால், அந்த கூட்டுறவு சங்கங்கள் 1990களில் மூடப்பட்டன.  கைத்தறி துணியின் தேவை குறைந்ததுதான் காரணம். இரண்டு மாடிக் கட்டமாக செயல்பட்ட அவர்களின் அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன. ஒரு மாடியில் ஒரு தனியார் பள்ளிக்காக  வாடகைக்கு விட்டுள்ளார்கள். அருகிலுள்ள கிராமங்களிலும் நகரங்களிலும் உள்ள மற்ற கைத்தறி சங்கங்களும் மூடத் தொடங்கின.  அதனால் நெசவாளர்கள் ரெண்டலிலிருந்து 22 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள பெல்காம் மாவட்டத்தின் சிக்கோடி தாலுகாவின் கோகனோலி கிராமத்தில் உள்ள கர்நாடக கைத்தறி மேம்பாட்டுக் கழகத்தின் துணை மையத்துக்கு விற்கத் தொடங்கினர். இப்போதும் அவர்கள் அதற்குத்தான் விற்கின்றனர்.

தம்பே உள்ளிட்ட நான்கு நெசவாளர்களுக்கும் 31 கிலோ எடை கொண்ட வார்ப் பீம் கருவியை கைத்தறி மேம்பாட்டு கழகம் வழங்குகிறது.  240 மீட்டர்கள்  பருத்தி அல்லது பாலியஸ்டர் நூல் அதைச் சுற்றிலும் கட்டப்பட்டிருக்கும்.  ஐந்து கிலோ எடையுள்ள நூல் உருளையும் அவர்களுக்குக் கிடைக்கும். “இதைப் பயன்படுத்தி  நான் நெய்கிற துணி, அதிக நூல் எண்ணிக்கையோடு உயர்வான தரத்தில் இருக்கும். எனக்கு மீட்டருக்கு 28 ரூபாயும் கிடைக்கும்” என்கிறார் தம்பே. "மற்ற நெசவாளர்களுக்கு மீட்டருக்கு 19 ரூபாய் அளவுக்குத்தான் கிடைக்கிறது” என்றும் அவர் கூறுகிறார். நெசவு மூலம் அவர் மாதம் ரூ. 3,000 முதல் 4,000 வரை சம்பாதிக்கிறார். கூடுதல் வருமானத்துக்காக, அவர் ஒரு ஏக்கர் நிலத்தில் கரும்பு பயிரிடுகிறார்.

Vimal Tambe hand spinning the polyester thread which is wound on a pirn
PHOTO • Sanket Jain
The pirn winding process is usually done sitting on the ground. After an accident, Vimal Tambe sits on a chair to work
PHOTO • Sanket Jain

பிர்ன் கருவியில் சுற்றப்பட்டிருக்கிற பாலியஸ்டர் நூலை விமல் தாம்வே கையால் நூற்கிறார்

“கைத்தறிகளில் வேலை செய்ய நிறைய உடல் உழைப்பு தேவைப்படும். பெரும்பாலான மக்கள் இப்போது அதைச் செய்ய விரும்பவில்லை. விசைத் தறிகளில் நீங்கள் இயந்திரத்தை இயக்கினால் போதும்” என்று தம்பே கூறுகிறார். " இந்தக் குறைந்த வருமானத்தில் நாங்கள் எப்படி பிழைப்போம்? கூடுதலாக ஏதாவது ஒரு வேலை செய்யவேண்டியது அவசியம்” என்றும் அவர் கூறுகிறார்.

வசந்தின் மனைவி விமல்  (75 வயது)  கைத்தறியில் நெசவு செய்வதற்கு கற்றுக்கொள்ளவில்லை. ரெண்டல் கிராமத்தில், ஆண்கள் மட்டுமே கைத்தறியில் வேலை செய்கிறார்கள். ஒரு ஷர்கா போன்ற எந்திரத்தில் பெண்கள் வேலை செய்கிறார்கள். அதில் ஒரு உருளையான பைர்ன் அல்லது ஸ்பின்டில் கருவியைக்கொண்டு நூல் நூற்பார்கள். நாட்டில் 38.47 லட்சம் நெசவாளர்களும் நெசவாளர்களுடன் தொடர்புடைய தொழில்களைச் செய்வோரும் உள்ளனர். அதில் 77 சதவீதம் பேர்  பெண்கள். 23 சதவீதம் பேர் ஆண்கள்  என்கிறது இந்திய கைத்தறிகளைப் பற்றி 2009-2010இல் நடத்திய அகில இந்திய கணக்கெடுப்பு. "எனக்கு நிறைய வீட்டுவேலைகள் இருக்கின்றன. நான் நூலை கையால் நூற்பேன்" என்கிறார்  விமல். அவள் ஏன் கைத்தறியில் நெய்வதற்குக்  கற்றுக்கொள்ளவில்லை என்று அவளிடம் கேட்டேன். அவர் ஒரு விவசாயத் தொழிலாளியாகவும் பணிபுரிந்துள்ளார். ஆனால்,  வயதாகிவிட்டதால் பத்து வருடங்களுக்கு முன்பு வேலைக்கு போவதை நிறுத்திவிட்டதாக சொன்னார்.

25 பிர்ன் கருவிகளில் உள்ள நூல்களை நூற்பதற்கு விமலுக்கு மூன்று மணி நேரம் ஆகும். அவரது கணவருக்கு ஒரு மீட்டர் துணியை   நெசவு செய்வதற்கு மூன்று பிர்ன்கள் தேவை.  தரையில் உட்கார்ந்துதான் விமல் முன்பெல்லாம் நூற்பார். கடந்த ஆண்டு அவருக்கு விபத்தில் கால் உடைந்து விட்டது.  இப்போது நாற்காலியில் அமர்ந்து அவர் நூல் நூற்கிறார்.

அவர்களது இரண்டு மகன்களும் குழந்தைகளாக இருக்கும்போதே இறந்து விட்டனர். திருமணமான ஒரு மகள் தையல் வேலை செய்கிறாள். 1980 களின் முற்பகுதியில் கூட தம்பே ஒரு கதவு சட்டகத்தை உருவாக்க அவர் வாங்கிய இரண்டாவது கைத்தறியை உடைத்தார். அது மறைந்துபோன ஒரு உலகத்திற்கு வழிவகுக்கிறது.

தமிழில்: த நீதிராஜன்

Sanket Jain

சங்கேத் ஜெயின் மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் உள்ள பத்திரிகையாளர். அவர் 2022ம் ஆண்டில் PARI மூத்த மானியப் பணியாளராக இருக்கிறார். 2019-ல் PARI-ன் மானியப் பணியில் இணைந்தார்.

Other stories by Sanket Jain