சிறிய பொம்மை குதிரைகள், யானைகள் என எல்லா பொம்மைகளையும் வேகமாகக் கட்டுகிறார் அஷோக் பட். பொம்மலாட்டத்திற்கு பயன்படுத்திய வெள்ளைத் துணியைக் கொண்டு அவற்றை கட்டுகிறார். தெற்கு டெல்லியில் அரசு நடத்தும் தில்லி சந்தைக்கு வெளியே காவல்துறையினர் திடீர் சோதனை நடத்தியதால் மற்ற தெருவோரக் கடைக்காரர்களைப் போல அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் அவரும் வேகமாக கிளம்புகிறார்.
தில்லி சந்தை என்பது கைவினைஞர்கள் தங்கள் பொருட்களைக் காட்சிப்படுத்த உள்ளூர் நகராட்சியால் வழங்கப்படும் அரை-திறந்தவெளி. கிளப்பின் சார்பில் குறுகிய காலத்திற்கு ஒவ்வொருவருக்கும் ஒரு கடை போட அனுமதிப்பதாக சொல்கிறார் அஷோக். ஆனால் ஒதுக்கப்படும் இடத்திற்காக பிற கைவினைஞர்களைப் போன்று அஷோக்கும் தனது கைவினைப் பொருட்களுடன் வரிசையில் வாய்ப்பிற்கு காத்திருக்க வேண்டும். இது போன்றவர்களை ‘சட்டவிரோதமான’ வியாபாரிகள் என உள்ளூர் காவல்துறையினர் விரட்டுகின்றனர்.
“தில்லி சந்தைக்கு வெளியே இப்படி நடப்பது ஒன்றும் புதிதல்ல,” எனும் அந்த 40 வயதுக்காரர், “இங்கு நான் கட்டாயம் வியாபாரம் [வருமானத்திற்கு] செய்ய வேண்டும்.” காவல்துறையினர் திரும்பியதும், சந்தை நுழைவாயிலில் ஓரிடத்திற்கு திரும்புகிறார் அஷோக். அவர் மீண்டும் நடைபாதையில் வெள்ளை துணியை விரித்து மனைவியின்(பெயர் வெளியிட அவர் விரும்பவில்லை) உதவியோடு கடையை அமைக்கிறார். கண்கவர் சிவப்பு, ஆரஞ்சு நிற பந்தேஜ் அச்சுப் போட்ட ஆடைகள் அணிந்த பொம்மைகளை நேர்த்தியாக அவர்கள் அடுக்கி வைத்தபடி அன்றைய நாளை மீண்டும் தொடங்குகின்றனர்.







