தக்ஷிண கன்னடா மாவட்டம், பெல்டாங்கடி தாலுக்கா மலைப் பகுதிகளில் டைன்-டைன்-டைன் எனும் பசுக்களின் மணிச் சத்தம் கேட்பது இப்போது அரிதாகிவிட்டது. “இப்போது யாரும் இந்த மணிகளை செய்வதில்லை,” என்கிறார் ஹூக்ரப்பா. அவர் பேசுவது பசுவின் கழுத்தில் கட்டும் சாதாரண மணி குறித்து அல்ல. அவரது ஷிபாஜி கிராமத்தில், கால்நடைகளின் கழுத்தில் உலோக மணி கட்டப்படுவதில்லை. மூங்கிலில் செய்யப்படும் கைவினை மணியை அவர் சொல்கிறார். 60 வயதுகளில் உள்ள ஹூக்ரப்பா எனும் கொட்டை பாக்கு விவசாயி இந்த தனித்துவமான கைவினைப் பொருளை பல ஆண்டுகளாகச் செய்து வருகிறார்.

“இதற்கு முன் நான் கால்நடைகளை மேய்த்து வந்தேன்,” என்கிறார் ஹூக்ரப்பா. “நாங்கள் சில சமயம் பசுக்கள் சென்ற பாதையை தொலைத்துவிடுவோம். அப்போது தான் மூங்கிலில் மணி செய்யும் சிந்தனை வந்தது.” பசுக்கள் பிறரது வயல்களில் சுற்றினாலும் அல்லது மலைகளில் திரிந்தாலும் ஓசையைக் கொண்டு கண்டறிய மணிகள் உதவும். ஊர் பெரியவர் ஒருவர் இக்கலையை கற்றுத் தந்ததும், சிலவற்றை அவர் செய்யத் தொடங்கினார். காலப்போக்கில் அவர் வெவ்வேறு அளவுகளில் மணிகளைச் செய்வதற்கு தேர்ச்சி பெற்றார். மூன்று வகையான மூங்கில் செடிகளின் பிறப்பிடமாக திகழும் கர்நாடகாவின் மேற்கு தொடர்ச்சி மலைத் தொடர்களில் குத்ரேமுக் தேசிய பூங்காவின் காப்புக் காட்டில் உள்ள அவரது பெல்டாங்கடி கிராமத்தில் மூங்கில் கிடைப்பது மிகவும் எளிது.

ஹூக்ரப்பா பேசும் துலு மொழியில் ‘பொம்கா’ எனப்படும் பசு மணியை கன்னடத்தில் ‘மாண்டி’ என்கின்றனர். துர்கா பரமேஸ்வரி கோயிலில் தெய்வத்திற்கு காணிக்கையாக இந்த மாண்டிகள் வழங்கும் மரபு உள்ளதால் ஷிபாஜியின் கலாச்சார வாழ்விலும் இதற்கு சிறப்பான இடம் உள்ளது. கோயில் எல்லையில் ‘மாண்டிதட்கா’ என்றும் அழைக்கின்றனர். பக்தர்கள் தங்களின் கால்நடைகளின் பாதுகாப்பிற்கும், தங்களின் வேண்டுதல்கள் நிறைவேறுவதற்கும் வேண்டிக் கொள்கின்றனர். அவர்களில் சிலர் ஹூக்ரப்பாவிடம் மூங்கில் மணிக்கு ஆர்டர் தருகின்றனர். “மக்கள் இதை ஹர்கே [நேர்த்திக்கடன்] செலுத்துவதற்காக வாங்குகின்றனர். [உதாரணத்திற்கு] பசு கன்று போடாவிட்டால் இதை தெய்வத்திற்கு காணிக்கை செலுத்துகின்றனர்,” என்கிறார் அவர். “ஒரு துண்டுக்கு அவர்கள் ரூ.50 தருகின்றனர். பெரிய மணி என்றால் 70 ரூபாய் வரை விற்கலாம்.”

காணொளி: ஷிபாஜியின் பசு மணி கைவினைஞர்

விவசாயம், கைவினைகள் செய்வதற்கு முன் ஹூக்ரப்பா கால்நடைகளை மேய்ப்பதை மட்டுமே தனது வாழ்வாதாரமாகக் கொண்டிருந்தார். அவரும், அவரது அண்ணனும் கிராமத்தில் பிறருக்குச் சொந்தமான பசுக்களை மேய்ச்சலுக்கு கொண்டு சென்றனர். “எங்களுக்கு சொந்தமாக எந்த நிலமும் கிடையாது. எங்கள் வீட்டில் 10 பேர் என்பதால், உணவு போதவில்லை. எனது தந்தை தொழிலாளரா இருந்தார். மூத்த சகோதரிகள் வேலைக்கு வெளியில் செல்வார்கள்,” என்கிறார் அவர்.  பிறகு உள்ளூர் நிலச்சுவாந்தார் ஒருவர் குத்தகைக்கு சிறிதளவு காலி நிலத்தை இக்குடும்பத்திற்கு அளித்தார். அதில் அவர்கள் கொட்டைப் பாக்கு (வெற்றிலைக்கு) சாகுபடியை செய்யத் தொடங்கினர்.  “அவருக்கு வாடகையாக அதில் பங்கு  தரப்படும். இதை நாங்கள் 10 ஆண்டுகளாக செய்து வந்தோம். நிலச் சீர்திருத்தச் சட்டம் [1970களில்] இந்திரா காந்தி கொண்டு வந்தபோது, எங்களுக்கு நில உரிமை கிடைத்தது,” என்கிறார் அவர்.

பசு மணிகளில் இருந்தும் கிடைக்கும் வருவாய் போதாது. “இப்பகுதிகளில் யாரும் இனிமேல் இதை செய்யப் போவதில்லை. இக்கைவினையை என் பிள்ளைகள் யாரும் கற்கவில்லை,” என்கிறார் ஹூக்ரப்பா. ஒருகாலத்தில் காட்டில் எளிதில் கிடைக்கும் மூங்கில்களும் இப்போது குறைந்து வருகின்றன. “நாங்கள் இப்போது 7-8 மைல்கள் [11-13 கிலோமீட்டர்] நடந்துச் சென்று அதை கண்டுபிடிக்கிறோம். அதுவும் இன்னும் சில ஆண்டுகள்தான் தாக்குப்பிடிக்கும்,” என்கிறார் அவர்.

கடினமான மூங்கில்களை விரும்பிய வடிவில் வெட்டி செதுக்கி மணிகள் செய்யும் ஷிபாஜி ஹூக்ரப்பாவின் திறன்மிக்க கைகளில் இப்போது இக்கலை உயிர்ப்புடன் உள்ளது. பெல்டாங்கடி வனப்பகுதிகளில் அதன் ஓசை இப்போதும் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது.

தமிழில்: சவிதா

Reporter : Vittala Malekudiya

விட்டலா மலிகுடியா ஒரு பத்திரிகையாளர், 2017 முதல் பாரியில் உள்ளார். இவர் தக்ஷிண கன்னடா மாவட்டம், பெல்டாங்கடி தாலுக்காவில் உள்ள குத்ரிமுக் தேசிய பூங்காவின் குத்லுர் கிராமத்தில் வசிப்பவர். இவர் வனவாசிகளான மலிகுடியா பழங்குடியைச் சேர்ந்தவர். மங்களூர் பல்கலைக்கழகத்தில் முதுநிலை ஊடகவியல் மற்றும் மக்கள் தொடர்பியலில் பட்டம் பெற்றவர். இப்போது ‘பிரஜாவனி’ கன்னட செய்தித்தாளின் பெங்களூர் அலுவலகத்தில் இவர் வேலை செய்கிறார்.

Other stories by Vittala Malekudiya
Translator : Savitha

சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.

Other stories by Savitha