ஊரடங்கு காரணமாக பெங்களூரை விட்டு அப்துல் சத்தார் சென்று நான்கு மாதங்களுக்கு மேல் ஆகிறது.
“தாமதம் ஆனாலும் நாங்கள் இங்கிருந்து சென்றாக வேண்டும்” என அவர் கூறுகிறார். அந்தச் சமயத்தில்தான், மே 20, அம்பன் புயல் தரையிறங்கியது. இருந்தாலும், தங்கள் கிராமமான சக் லாச்சிபூருக்குச் செல்லும் 1,800கிமீ பயணத்தை அப்துல் சத்தாரும் அவரது நண்பர்களும் தைரியமாக தொடங்கினர். மேற்கு வங்காளத்தின் பசிம் மெதின்பூர் மாவட்டத்தில் இவர்கள் கிராமம் உள்ளது.
அப்துல், மும்பையிலிருந்து பெங்களூரு வந்து ஒருசில மாதங்களே ஆகிறது. ஜனவரி அல்லது பிப்ரவரியில் இங்கு வந்தேன் என்கிறார். இவரது மனைவி ஹமிதா பேகம், 32, மற்றும் குழந்தைகள் சல்மா கதுன், 13, யசீர் ஹமீது, 12 ஆகியோர் கதல் தாலுகாவிலுள்ள தங்கள் கிராமத்தில் இருக்கும் மூன்று அறை கொண்ட சிறிய வீட்டில் வசிக்கின்றனர். இவரது குடும்பத்திற்குச் சொந்தமாக கால் ஏக்கர் நிலம் உள்ளது. அதில் இவரது சகோதரர் நெல் பயிரிட்டுள்ளார்.
எட்டாம் வகுப்பிற்கு மேல் பள்ளிக்குச் செல்லாமல், கிராமத்தில் உள்ள பலரைப் போல தையல் கற்க தொடங்கினார் அப்துல். அன்றிலிருந்து ஒவ்வொரு இடமாக நகர்ந்து கொண்டிருக்கிறார். டெல்லியில் சில வாருடங்கள் வேலை, பின்பு மும்பை, 5-6 மாதங்களுக்கு ஒரு முறை வீட்டிற்குச் செல்வது என இப்படியே போகிறது அவரது வாழ்க்கை. “நான் இயந்திர தையல் வேலைப்பாடுகளைச் செய்வேன். மும்பையில் எனக்கு வேலை அதிகமாக இல்லை. அதனால் எனது உறவினரோடு சேர்ந்து பணியாற்ற முடிவு செய்தேன்” என்கிறார் அவர்.
அப்துல், 40, தனது உறவினர் ஹஸனுல்லா ஷேக், 33, தெற்கு பெங்களூரில் வைத்திருந்த சிறிய தையல் கடையில் சேர்ந்தார். ஐந்து நபர்களோடு ஒற்றை அறையை பகிர்ந்து கொண்டார். இவர்கள் அனைவரும் சக் லச்சிபூரைச் சேர்ந்தவர்களே. ஆறு பேரும் ஹஸனின் கடையில் தையல் வேலை பார்க்கிறார்கள்.
தனது மனைவி மற்றும் ஆறு வயது மகனோடு கடந்த 12 வருடங்களாக பெங்களூரில் வசித்து வருகிறார் ஹஸன். அவரும் அவரது குழுவும் ஏப்ரல், மே மாதங்களில் வரும் திருமண மற்றும் ரம்ஜான் சீசனை எதிர்நோக்கி இருக்கிறார்கள். “இந்த மாதங்களில் எங்களுக்கு நிறைய பணிகள் வரும்” என அவர் கூறுகிறார். இந்த சீசனில் ஒவ்வொரு தொழிலாளிக்கும் ஒரு நாளைக்கு ரூ. 400-500 அல்லது அதற்கும் மேல் கிடைக்கும். ஒரு மாதத்தில் குறைந்தது 15,000-16,000 ரூபாய் சம்பாதித்து விடலாம் என அனைவரும் எதிர்பார்த்திருப்பார்கள். எல்லா செலவும் போக, ஹஸனுக்கு ரூ. 25,000 கிடைத்தது.
“எங்களில் பலரும் வீட்டு வாடகை மற்றும் இதர செலவுகளை ரூ. 5,000-6,000 க்குள் சுருக்கிக் கொள்வோம். மீதமுள்ளதை வீட்டிற்கு அனுப்புவோம். வீட்டுச் செலவிற்கும் குழந்தைகளின் கல்விச் செலவிற்கும் நான்தான் அனுப்ப வேண்டும். இதுதவிர என் பெற்றோர்களின் மருத்துவச் செலவையும் நானே கவனித்துக் கொள்கிறேன்” என்கிறார் அப்துல். (இவருடைய மூத்த அண்ணோடு இவர் பெற்றோர் வசிக்கிறார்கள்; இவருக்கு நான்கு சகோதரர்களும் ஒரு சகோதரியும் உள்ளனர். நெல் பயிரிட்ட மூத்த சகோதரர், அம்பன் புயல் காரணமாக வயல்வெளிகளை வெள்ளம் சூழ்ந்ததால் கடுமையான இழப்பைச் சந்தித்துள்ளார்.)
ஆனால் அப்துல் பெங்களூருக்கு வந்து இரண்டு மாதங்களே வேலை செய்த நிலையில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இவர்கள் வியாபாரம் மூடப்பட்டதால், உணவுப் பொருட்களும் தீர்ந்து போயின. ஹஸன் கூறுகையில், “எங்களால் வெளியே போக முடியாது. எங்கள் பகுதியில் எல்லாக் கடைகளும் மூடியிருந்தன. எங்கு சென்று உணவை வாங்கலாம் என எங்களுக்கு தெரியவில்லை. அதிர்ஷடவசமாக, அருகில் மசூதி இருந்தது. அங்குள்ள தன்னார்வலர்கள் தினசரி இரு வேளை எங்களுக்கு உணவு வழங்கினர்.”
“எங்கள் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் அதன் அருகிலுள்ள பகுதிகளில் வசிக்கும் பலர் இங்கு பெங்களூரில் உள்ளனர். எல்லாரும் தையல் கலைஞர்களாக இருக்கிறார்கள். வழக்கமாக 5-6 பேர் ஒர் அறையைப் பகிர்ந்து கொள்வோம். பலரிடம் பொருளோ அல்லது பணமோ இல்லாததை நாங்கள் பார்த்தோம். தன்னார்வலர்கள் சிலர் உணவுப் பொருட்கள் வழங்கினர். எங்களுக்கு கொடுக்கப்பட்டதை தெரிந்த சிலருக்கு கொடுத்து நாங்களும் சிறு உதவி செய்தோம். நாங்கள் மற்றவர்களுக்கு உதவி செய்வதைப் பார்த்த போலீசார் எங்களைப் பைக்கில் செல்ல அனுமதித்தனர்” என அப்துல் என்னிடம் கூறினார்.
இரண்டு மாதங்களாக எந்த வருமானமும் இல்லை, எப்போது எல்லாம் சரியாகும் என்று தெரியாத நிலையில் அப்துல், ஹஸன் மற்றும் கிராமத்தினர் சிலர் சக் லச்சிபூருக்குச் செல்ல தயாராகினர். “எவ்வுளவு நாளைக்குதான் அடுத்தவர்களின் உதவியை நாட முடியும்? நாங்கள் அங்குச் சென்றால் எங்கள் உறவினர்கள் இருக்கிறார்கள். சாப்பாட்டிற்காவது பிரச்சனை இருக்காது” என்றார் ஹஸன்.
“நாங்கள் இப்போது ஊருக்குச் செல்ல விரும்புகிறோம். ஊரிலுள்ள எங்கள் குடும்பத்தினரும் நாங்கள் வரவேண்டும் என விரும்புகின்றனர். இங்கு நோய்வாப்பட்டால் எங்களால் சிகிச்சை பெற முடியாது. குடும்பத்தினர் யாரும் அருகில் இல்லாமல் மும்பையிலுள்ள எங்கள் உறவினர் ஒருவர் கொரோனாவால் இறந்துவிட்டார். எங்களுக்கும் இப்படி ஏதாவது நடந்தால், கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். எங்களைக் கவனித்துக் கொள்ள யாரும் இங்கு இல்லை. நாங்கள் ஒரே முடிவாக இருக்கிறோம்” என அப்துல் கூறுகிறார்.
ஆனால் சொந்த ஊருக்குச் செல்வது எளிதான காரியம் இல்லை. எங்கு அனுமதி வாங்க வேண்டும், மேற்கு வங்காளத்திற்குள் நுழைய பாஸ் வாங்க வேண்டுமா, எப்போது ரயில்கள் செல்லும் போன்ற பல குழப்பங்கள் இருந்தன. மோசமான இணைய வசதி இருந்தும், மாநில அரசாங்கத்தின் சேவா சிந்து இணையதளத்தில் உள்ள அத்தியாவசிய பயணப் படிவத்தை எப்படியோ நிரப்பினர். அதன்பிறகு ஒப்புதலுக்காக 10 நாட்கள் காத்திருந்தனர். தங்கள் பயணத்தை பதிவு செய்ய அருகிலுள்ள காவல் நிலையத்திற்குக் கூட சென்று வந்தார் அப்துல்.
“நான் நோன்பு இருக்கிறேன். வெயிலில் காவல் நிலையம் முன் நீண்ட நேரம் காத்திருக்க என்னால் முடியவில்லை” என அவர் என்னிடம் கூறினார். ரயில்கள் குறித்து சரியான தகவல்கள் இல்லாதது மற்றும் இடம் கிடைப்பதற்கு முன்பே ஒப்புதல் வாங்கிய பாஸ் காலாவதி ஆகிவிடும் என்ற பயம் காரணமாக வேறு ஏதாவது வழி இருக்கிறதா என குழுவினர் ஆராய்ந்தார்கள். தனியார் வாகனங்கள் ஐந்து நபர்களை கூட்டிச் செல்ல ரூ. 70,000 வசூலித்தது. பேருந்து வைத்திருக்கும் ஒருவர் இவர்கள் பயணத்திற்கு ரூ. 2.7 லட்சம் கேட்டார்.
பல முயற்சிகளுக்குப் பிறகு, ஒருவழியாக அப்துலும் ஹஸனும் பேருந்தை ஏற்பாடு செய்தனர் (மேலே முகப்பு படத்தைப் பார்க்க). “எங்கள் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் பேருந்து வைத்திருந்தார். எப்படியாவது எங்களுக்கு பேருந்தை அனுப்புங்கள் என பேசி அவரின் ஒப்புதலை வாங்கினோம். எங்களுக்கான எல்லா பாஸ்கள் மற்றும் அனுமதியை அவர்கள் ஏற்பாடு செய்தார்கள். நாங்கள் 30 பேர் இருந்தோம். எல்லாரும் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்களே. அனைவரும் தையல் வேலை பார்க்கிறார்கள். பயணத்திற்காக ரூ. 1.5 லட்சம் கொடுத்தோம். ஒரு சிலர் தங்கள் நகை மற்றும் நிலத்தை அடமானம் வைத்து பணம் கொடுத்தனர். “நாளைக் காலை பேருந்து வருகிறது. இந்நேரத்திற்கு நாங்கள் ஊருக்குச் சென்று கொண்டிருப்போம்” என ஹஸன் என்னிடம் மே மாதம் கூறினார்.
திட்டமிட்டபடி இவர்களால் அடுத்தநாள் கிளம்ப முடியவில்லை. ஆந்திரபிரதேச எல்லையில் பேருந்து தடுத்து நிறுத்தப்பட்டதால் தாமதம் ஏற்பட்டது. ஒருவழியாக, அடுத்த நாள், மே 20, மேற்கு வங்காளத்தில் அம்பன் புயல் தரையிறங்கிய அன்று கிளம்பினர். பல்வேறு சோதனைச் சாவடிகளில் ஏற்பட்ட தாமதத்திற்குப் பிறகு, மே 23 அன்று சக் லச்சிபூரை அடைந்தது பேருந்து. வீட்டிற்குச் சென்றதும் அப்துலும் மற்றவர்களும் தங்களது சிறிய வீடுகளில் இரண்டு வாரங்கள் தனிமையில் இருந்தனர்.
இவர்கள் கிளம்பியபோது, ஹஸனும் அவரது குடும்பமும் பெங்களூரில் உள்ள தங்கள் வீட்டைக் காலி செய்தனர். ஆனால் தனது இயந்திரங்களோடு கடையையும் பணியாளர்கள் தங்கிய அறையையும் அப்படியே வைத்துள்ளார். ஏப்ரல் மற்றும் மே மாத வாடகையை இரண்டு மாத முன்தொகையான ரூ. 10,000-த்தில் கழித்து கொண்டார் உரிமையாளர். திரும்பி வரும் வரை காத்திருக்குமாறும் வந்தபிறகு மே மாதத்திற்கு பிறகான வாடகையை தருகிறேன் என்பதற்கும் அவர் ஒத்துக்கொண்டார்.
செப்டம்பர் மாத முதல் வாரத்தில் பெங்களூருக்கு திரும்பினார் ஹஸன். ஊரடங்கு தளர்த்தப்படாலும், அந்தளவிற்கு வேலை இல்லை என அவர் கூறுகிறார். “நாங்கள் கடையை திறந்தாலும் யாரும் துணி தைக்க இப்போதைக்கு வரப் போவதில்லை. சில காலம் வியாபாரம் மோசமாகவே இருக்கும். எங்களது சிறு தொழில். தினமும் பணம் வராவிட்டால் எங்களால் நகரத்தில் வாழ முடியாது.”
அப்துல் இன்னும் தனது கிராமத்தில்தான் உள்ளார். தனது சேமிப்பைக் கொண்டும் சில நாட்கள் விவசாயக் கூலியாக வேலை பார்த்தும் வீட்டுச் செலவை சமாளித்து வருகிறார். “இப்போது கிராமத்திலும் எந்த வேலையும் இல்லை. அதனால்தான் முதலில் இங்கிருந்துச் சென்றோம். கண்டிப்பாக நாங்கள் பெங்களூரு வருவோம்” என்றார்.
ஆனால் பெங்களூரில் கோவிட்-19 அதிகரித்து வரும் நிலையில், கவலையோடு இருக்கிறார் அப்துல். “ஹஸன்பாய் கூறுவதை வைத்துதான் என் பயணத்தை திட்டமிட வேண்டும். வருமானம் இல்லாமல் நாங்கள் தொடர்ந்து இப்படி இருக்க முடியாது. நீண்ட நாள் தையல் வேலை பார்க்காமல் ஒதுங்கி இருக்கவும் முடியாது. எல்லாம் முடிந்தப் பிறகு நாங்கள் மறுபடியும் வருவோம்.”
தமிழில்: வி கோபி மாவடிராஜா