ஃபாட்..!
துப்பாக்கியிலிருந்து பெங் பழத் தோட்டா வெளியேறியதும் கேட்கும் சத்தம் அது. இரண்டும் சேர்ந்து சட்டீஸ்கரின் ஜக்தல்பூர் டவுனில் நடக்கும் கோஞ்சா விழாவின் கொண்டாட்ட காவலராக பெருமை கொள்கிறது.
மூங்கிலால் செய்யப்பட்ட துப்பாக்கியில் ‘பெங்க் ’ பழங்கள் தோட்டாக்களாக பயன்படுத்தப்படுகிறது. கடவுள் ஜகன்னாதரின் ரதத்தை சுற்றி நடத்தப் படும் பிரபல விழாவில் துப்பாக்கிகள் சுடப்படுகின்றன. ஜூலை மாதத்தில் நடத்தப்படும் நிகழ்வு பஸ்தாரிலிருந்து ஆயிரக்கணக்கான மக்களை ஈர்க்கிறது.
“அருகாமை கிராமங்களில் இருந்து கோஞ்சா விழாவுக்கு வரும் மக்கள் நிச்சயமாக ஒரு துப்பாக்கி வாங்குவார்கள்,” என்கிறார் ஜக்தல்பூரில் வசிக்கும் வன்மலி பனிகிரகி. அணிவகுப்பில் துப்பாக்கி ஏந்தப்படாத காலமென ஒன்று அவருக்கு நினைவில்லை.
தோட்டாவாக பயன்படுத்தப்படும் சிறு வட்டமான பசிய மஞ்சள் நிறப் பழம், அருகே உள்ளே காடுகளில் தென்படும் வாலுளுவைக் கொடியில் காய்ப்பது ஆகும்.
கோஞ்சா விழா புரி பகுதியிலும் கொண்டாடப்படுகிறது. ஆணால் துப்பாக்கி மற்றும் பெங்க் பழம் கொண்டு வணக்கம் செலுத்துவது பஸ்தார் பகுதிக்கு மட்டுமே உரிய ஒன்று. ஒரு காலத்தில் காட்டு மிருகங்களை விரட்ட அந்த ரகத் துப்பாக்கி பயன்பட்டிருக்கிறது.
சோன்சாய் பாகெல் 40 வயதுகளை சேர்ந்தவர். மூங்கில் கைவினைஞரான அவர் ஜமவதா கிராமத்தில் வசிக்கிறார். துருவ பழங்குடியான அவர், மனைவியுடன் சேர்ந்து, விழா தொடங்கும் சில வாரங்களுக்கு முன், ஜூன் மாதத்திலிருந்து துப்பாக்கி செய்கிறார். “ஒவ்வொரு வருடமும் விழா தொடங்கும் முன், நாங்கள் துப்பாக்கிகள் தயாரிக்கத் தொடங்குவோம். (முன்னதாகவே) நாங்கள் மூங்கிலை காட்டிலிருந்து சேகரித்து காய வைப்போம்,” என்கிறார் அவர்.
மூங்கில் தண்டை கோடரி மற்றும் கத்தி போன்ற கருவிகள் கொண்டு குழாய் ஆக்கி துப்பாக்கி செய்யப்படுகிறது. பல்வேறு வண்ண இலைகளும் காகிதங்களும் கொண்டு துப்பாக்கி பிறகு அலங்கரிக்கப்படுகிறது.
“பெங்க் பழங்களை காடுகளிலிருந்து பழுத்தவுடன் எடுத்து வருவோம். மார்ச் மாதத்துக்குப் பிறகு பழம் கிடைக்கும். 100 பழங்கள் கிட்டத்தட்ட 10 ரூபாய்க்கு கிடைக்கும்,” என்கிறார் சோன்ஸ்ஸாய். “இது மருத்துவ குணம் கொண்ட பழம். மூட்டு வலிக்கு அதன் எண்ணெய் நல்லது எனச் சொல்வார்கள்.” தோட்டாவை செய்யவும் பயன்படுகிறது.
அப்பகுதியைச் சேர்ந்த பலருக்கு துப்பாக்கிகள் செய்வது வருடாந்திர வருமானத்துக்கு ஆதாரமாக இருக்கிறது. விழாக்காலம் வரும்போது துப்பாக்கி செய்பவர்கள் திடுமென கிராமங்களில் முளைத்துவிடுவார்கள். ஒரு துப்பாக்கி 35-லிருந்து 40 ரூபாய் வரை விற்கப்படும். வீட்டிலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஜக்தால்பூருக்கு சென்று பாகெல் துப்பாக்கிகளை விற்று வருவார். முப்பது வருடங்களுக்கு முன் ஒரு துப்பாக்கியின் விலை 2 ரூபாய் என்கிறார் அவர்.
பாகெல் தனக்கு சொந்தமான நான்கு ஏக்கர் நிலத்தில் நெல் பயிருடுகிறார். ஜமவடா கிராமத்தின் 780 குடும்பங்களில் 87 சதவிகிதம் துர்வா மற்றும் மரியா பழங்குடி சமூகங்களை சேர்ந்தவை (கணக்கெடுப்பு 2011).
கோஞ்சா விழாவின் தொடக்கம் கடவுள் ஜகன்னாதர் பற்றிய கதையைச் சுற்றி அமைந்திருக்கிறது. பஸ்தாரை ஆண்ட சாளுக்கிய மன்னன் புருஷோத்தம் தேவ், ஜகன்னாதருக்கு தங்கமும் வெள்ளியும் காணிக்கையளிக்க பூரிக்கு சென்றான். காணிக்கையில் சந்தோஷமடைந்து, பூரி அரசனின் உத்தரவின்படி ஜகன்னாதர் கோவில் பூசாரிகள் புருஷோத்தமுக்கு 16 சக்கர ரதத்தை அன்பளிப்பாக வழங்கினர்.
பிறகு, சால் மற்றும் தேக்கு மரங்களால் செய்யப்பட்ட ரதம் உடைக்கப்பட்டு, நான்கு சக்கரங்கள் பஸ்தாரிலுள்ள கடவுள் ஜகன்னாதருக்கு காணிக்கையாக அளிக்கப்பட்டது. ரத யாத்திரை அல்லது பஸ்தாரின் கோஞ்சா விழாவுக்கான தொடக்கம் அதுதான். (மிச்ச 12 சக்கர ரதம் தந்தேஷ்வரி மடத்துக்கு அளிக்கப்பட்டது.)
துப்பாக்கியைப் பார்த்த புருஷோத்தம் தேவ், கோஞ்சா விழாவில் அதை பயன்படுத்த அனுமதித்தார். இந்த விழாவில் ஜகன்னாதருக்கு பழுத்த பலாப்பழம் படைக்கப்படுகிறது. ஜக்தால்பூரில் நடக்கும் கோஞ்சா விழாவில், தென்படும் ஏகப்பட்ட பலாப்பழங்கள் கூடுதலாக ஈர்க்கவல்லது.
தமிழில் : ராஜசங்கீதன்