தொடர் அழைப்புகளால்தான் ப்ரொமோத் குமார் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டார். “உங்கள் ஆதார் எண்ணை கொடுங்கள் அல்லது உங்கள் எண் இல்லாமலாகிவிடும்,” என்றார் அலைபேசியில் தொடர்பு கொண்டவர்.
2018ம் ஆண்டின் முதல் பாதியிலிருந்து இத்தகைய அழைப்புகள் குமாரின் தேதியோரா கிராமத்தில் வரத் தொடங்கின. மூன்று வருடங்களாக அடையாள ஆவணம் தேவைப்படாமல் அலைபேசி எண்ணை பயன்படுத்தியிருந்தாலும் ஒருநாள் அவர் சைக்கிள் மிதித்து நான்கு கிலோமீட்டர் பயணித்து பர்சாதா சந்தையிலிருந்து ஒரு சிம் கார்டு கடைக்கு சென்றார். “எந்த கேள்விகளும் கேட்கவில்லை. கடைக்காரர் என்னுடைய ஆதாரை வாங்கிக் கொண்டு, ஒரு சிறு கறுப்பு இயந்திரத்தில் ஒரு பொத்தானை இரு முறை அழுத்த சொன்னார். என்னுடைய புகைப்படம் கணிணி திரையில் வந்தது. என்னுடைய சிம் கார்டு முன்பை போல் வேலை செய்யும் என அவர் கூறினார்,” என சம்பவத்தை நினைவுகூருகிறார் குமார்.
எளிமையாக நடந்த அந்த வேலைக்கு பிறகு, குமாரின் ஊதியம் காணாமல் போனது.
தொலைத்தொடர்பு துறை 2005ம் ஆண்டில், சிம் கார்ட் உரிமையாளர்களின் அடையாளத்தை உறுதிபடுத்த வேண்டும் என்றும் ‘இல்லையெனில் பாதுகாப்பு பிரச்சினைகள் நேரலாம்’ என்றும் கூறியிருந்தது . 2014ம் ஆண்டில் தொலைத்தொடர்பு துறை இன்னும் மாற்றங்களை சேர்த்து ஒரு வாடிக்கையாளர் இப்போது ஆதார் எண்ணை மட்டும் கொடுத்தால் போதும் என்கிற நிலையை ஏற்படுத்தியது.
இந்தியாவிலேயே முதல் தொலைத்தொடர்பு நிறுவனமாக 2017 ஜனவரி மாதத்தில் ஏர்டெல் நிறுவனம் கட்டணம் செலுத்தும் வங்கிச் சேவையை அறிமுகப்படுத்தியது. ‘ஒவ்வொரு இந்தியரும் சமமான, பயனுள்ள, நம்பிக்கையான வங்கி அனுபவத்துக்கான வாய்ப்பை பெற்றிருப்பதாக’ அந்த நிறுவனத்தின் இணையதளம் உறுதியளிக்கிறது.
சீதாப்பூர் மாவட்டத்தின் கிராமத்தில் இந்த வளர்ச்சி, குமார் என்ற ஒரு 33 வயது சிறு விவசாயத் தொழிலாளியின் வாழ்க்கையை தலைகீழாக்கி போட்டிருக்கிறது. அவரும் அவர் கிராமத்தின் பலரும் ஏர்டெல் சிம் கார்டுகள் பயன்படுத்தியிருக்கின்றனர்.
சிம் கார்டு சரிபார்ப்பு நடந்தபோது, குமார் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் (MGNREGA) கீழ் குளம் தோண்டும் வேலையிலிருந்தார். ஒரு நாளைக்கு 175 ரூபாய் ஊதியமாக கிடைத்தது. 2016ம் ஆண்டில் 40 நாட்கள் அவர் வேலை பார்த்து அதற்கான ஊதியம் அலகாபாத் கிராமப்புற வங்கிக் கணக்கில் போடப்பட்டிருந்தது. அந்த வங்கிக் கணக்கு அவரின் பணி அட்டையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
“அரசு வேலையில் நல்ல வருமானம் இல்லை. ஆனால் வீட்டருகேயே வேலை கிடைக்கிறது. என் பெற்றோருக்கு வயதாகி விட்டது. அவர்களை பார்த்துக் கொள்ல வேண்டும். என்னுடைய குழந்தைகளிடமும் நேரம் செலவழிக்க வேண்டும்,” என்கிறார் குமார். அவ்வப்போது அவர் தனியார் சாலை கட்டுமான ஒப்பந்ததாரர்களிடமும் வேலை பெறுகிறார். ஒரு நாளைக்கு 200 ரூபாய் கிடைக்கும். அவரின் ஊரை சுற்றி 100 கிலோமீட்டர் தொலைவுக்குள் நடக்கும் கட்டுமான வேலைகளில் ஒரு நாளுக்கு 300 ரூபாய் வரை அவருக்கு கிடைக்கும்.
2017ம் ஆண்டின் ஆகஸ்டு மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை, 24 நாட்கள் குமார் குளம் தோண்டும் வேலை பார்த்திருக்கிறார். 4200 ரூபாய் ஊதியம் கிடைத்தது. வழக்கமாக ஊதியம், வேலை முடிந்த 15 நாட்களுக்குள் வங்கிக் கணக்குக்கு வந்துவிடும். ஆனால் இம்முறை காணவில்லை. கிராமத்திலிருந்த இன்னும் சிலரின் ஊதியமும் வங்கிக் கணக்குகளில் காணவில்லை.
பணத்தை கண்டுபிடிக்க குமார் அருகிலிருக்கும் விவசாய சங்கத்தின் உதவி உள்ளிட்ட பல்வேறு வழிகளை நாடினார். அவருடைய வேலை நாட்கள் சரியாக குறிப்பெடுக்கப்பட்டதையும் உறுதிப்படுத்தினார். ஒவ்வொரு மாதமும் வங்கிக்கு நேரே சென்றும் விசாரித்து பார்த்தார். ஆறு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் மண்டல அலுவலகத்துக்கு கூட இரண்டு முறை சென்று பார்த்தார். “என் பணம் இருக்கும் கணிணியை பரிசோதித்து பார்க்குமாறு அவர்களிடம் கேட்டுக் கொண்டேன். என் வங்கிக் கணக்குக்கு பணம் அனுப்பிவிட்டதாக அவர்கள் சொன்னார்கள். கணிணி அப்படி சொன்னால், அதுதான் உண்மையாக இருக்க வேண்டும்,” என்கிறார் குமார்.
அரசு கொண்டு வந்திருக்கும் திட்டத்தின் பலன்களை இத்தகைய நேரடி வங்கிக் கணக்குகளுக்கு மாற்றும் முறை 2013ம் வருடத்தின் டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டிருக்கிறது. ‘பலனடைபவர்களை நேரடியாக இலக்குக்குள் கொண்டு வருவதால் முறைகேடுகள் குறைவதாக’ நேரடி பலன் பரிவர்த்தனையின் நோக்கம் விளக்குகிறது.
பரிமாற்றங்களுக்கான பட்டியலில் ஊரக வேலைவாய்ப்பு திட்ட ஊதியம் 2014ம் ஆண்டில் சேர்க்கப்பட்டது. கிராமப்புற வளர்ச்சிக்கான அமைச்சகத்தில் பல்வேறு உத்தரவுகளால் ஊதியம் பெறும் வாய்ப்பு உள்ளவர்கள் வங்கிக் கணக்கில் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டது. அரசு சொல்வதன்படி இந்த முறை பணம் செலுத்தும் வேலையை திறம் கொண்டதாக மாற்றியிருக்கதாகும்.
சிங்கை பொறுத்தவரை, இந்த பணப் பரிவர்த்தனைகள் ”பெரும்பாலும் வறுமை மற்றும் கல்வியின்மையில் இருப்பவர்களுக்காக” அவர்களுக்கே தெரியாத வங்கிக் கணக்குகளில் செய்யப்படுகிறது. இத்தகைய வங்கிக் கணக்குகள் தொடங்குவதற்கான ஒப்புதல், ஆதார் எண்ணை இணைக்கும் சிம் கார்டு சரி பார்ப்பின்போது ஒரு ‘டிக்’ குறியின் எளிமையுடன் வாங்கிக் கொள்ளப்படுகிறது. விளைவாக, பலன்கள் யாவும் இந்த புதிய வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்படுகிறது. இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் ஆதார் எண்ணுடன் கடைசியாக உள்ளிடப்பட்ட வங்கிக் கணக்கு எந்த நேரடிப் பலனையும் பெறுவதற்கான கணக்காக மாற்றிக் கொள்ளும் எளிமையான ஒரு விதிமுறை பின்பற்றித்தான் இவை யாவும் செய்யப்படுகிறது.
”இதுதான் டிஜிட்டல் இந்தியாவின் மாயாஜாலம்,” என்கிறார் சிங். ஊரக வேலைவாய்ப்பு திட்ட அட்டையை வைத்திருக்கும் நபருக்கென நாங்கள் ஒரு வங்கி எண்ணை உள்ளிடுவோம். அந்த கணக்குக்குதான் அந்த பணம் யாவும் செல்கிறதென நாங்கள் நினைத்துக் கொள்ள வேண்டும். ஏதாவது மாற்றம் செய்யப்பட்டால் (ஆதாருடன் ஒரு புதிய வங்கிக் கணக்கு இணைக்கப்பட்டு அந்த கணக்கே ஊதியங்களுக்கான கணக்காக மாற்றப்படுவதுபோல்) எங்களுக்கு தெரியவே வராது. அமைப்பு அதை அனுமதிக்காது.”
விழிப்புணர்வு இத்தகை விஷயங்கள் நடப்பதிலிருந்து தடுக்குமா? சிங் சிரிக்கிறார். “என்ன விழிப்புணர்வை ஒருவர் உருவாக்குவார்? ஏர்டெல் சிம் கார்டு பெறுவது குற்றம் என்றா சொல்ல முடியும்? ஒப்புதலின்றி, ஆவணங்களின்றி, வங்கிக் கணக்குகள் தொடங்கப்படுகின்றன. இது ஒரு புதிய வகை காற்று வழியிலான வங்கிச் செயல்பாடு. எப்படி ஒருவரால் போதுமான அளவுக்கு எச்சரிக்கையாக இருக்க முடியும்?ஏர்டெல் வங்கிக் கணக்கு எப்படி கிடைத்ததென குமாருக்கு தெரியவில்லை. “ஒரு சிம் கார்டு வங்கிக் கணக்கை தொடங்குகிறது. பணம் ஆதார் எண்ணுக்கு செல்கிறது,” என்கிறார் அவர். இத்தகைய வங்கிக் கணக்குகளில் பணம் இருப்பதை அறிந்த மற்றவர்கள் சொல்லியதில், 14 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஏர்டெல் அலுவலகத்துக்கு 60 ரூபாய் கொடுத்து ஒரு டெம்போவில் சென்றார் “கடைக்காரர் ஆதார் எண் கேட்டார். பிறகு அவர் ஒரு எண்ணை அழுத்தினார். அது 2100 ரூபாய் என் (ஏர்டெல்) கணக்கில் (குமாரின் ஊதியத்தில் பாதி) இருப்பதாக காட்டியது. நூறு ரூபாயை கையில் கொடுத்துவிட்டு, அந்த பணம்தான் அன்று அவரிடம் இருந்ததாகவும் மிச்சப் பணத்தை வாங்கி இன்னொரு நாள் வருமாறும் சொன்னார்.”
12 நாட்களுக்கு பிறகு (2018 ஜூன் 25) குமார் மீண்டும் சென்று மிச்ச 2000 ரூபாயை பெற்றுக் கொண்டார். குமாரும் பிறரும் ஊதியத்துக்காக ஒன்றிய அலுவலகத்தில் போராடிய பிறகு, திடுமென 1400 ரூபாய் அவர்களின் முந்தைய வங்கிக் கணக்கில் கிடைத்தது. அந்த பணத்தை உடனே கணக்கிலிருந்து எடுத்தார் குமார். நான்கு நாட்களுக்கான 700 ரூபாய் ஊதியம் இன்னும் காணவில்லை.இதற்கிடையில் அவரின் குடும்பம் உறவினர்களிடமிருந்து 5000 ரூபாய் கடன் வாங்கியிருந்தது. கூட்டுக் குடும்பத்தில் ஐந்து உடன் பிறந்தோரிடம் வாழ்ந்ததால் குமாரின் வருமானப் பிரச்சினையை ஓரளவுக்கு சமாளிக்க முடிந்தது. அவருக்கு மூன்று குழந்தைகள். காரணம் தெரியாத தொடர் இருமலால் அவதிப்படுகிறார். “சாப்பிட ஒன்றுமே இல்லை என்கிற கட்டம் இருக்கவில்லை,” என்கிறார் அவரின் 26 வயது மனைவி மீனு தேவி. “ஆனால் அந்த பணம் இருந்திருந்தால் எங்கள் மகளை ஒரு தனியார் மருத்துவரிடம் கொண்டு சென்று அவளின் முதுகு முழுக்க இருக்கும் தோல் வெடிப்புக்கு சிகிச்சை எடுத்திருக்க முடியும்.”
ஏர்டெல் வங்கிக் கணக்கையே குமார் வைத்துக் கொண்டார். இன்னும் 55 ரூபாய் அந்த கணக்கில் இருப்பதாக குறுந்தகவல் அனுப்பப்பட்டிருக்கிறது. வட்டியாக இருக்கலாம். அந்த பணத்தை எடுக்க சென்று கேட்டபோது நூறு ரூபாய் மடங்குகளில் மட்டுமே பணம் எடுக்க முடியுமென சொல்லி இருக்கிறார்கள்.
ஊதியம் அதே கணக்குக்கு மீண்டும் செல்லலாம் என அஞ்சி ஊரக வேலைவாய்ப்பு திட்ட வேலைகளுக்கு செல்வதையே நிறுத்திவிட்டார் குமார்.
இத்தகைய வங்கிக் கணக்குகளை தொடங்கிய விற்பனையாளர்களுக்கு என்ன ஆகும்? ஏர்டெல் கட்டணக் கணக்குக்கான தொடர்பாளர் செய்தியாளரிடம், “அவர்களின் மீது தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன,” எனச் சொல்லியிருக்கிறார்.
தமிழில்: ராஜசங்கீதன்