தாத்தா அவருக்கு புலி எனப் பெயரிட்டார். அவரது ஆற்றலுக்கேற்ற பெயராக அவர் அதை வைத்திருந்தார். இன்றும் கே.பானுமதி துறைமுகத்தில் அப்பெயர் கொண்டுதான் அறியப்படுகிறார்.அவர் 40 ஆண்டுகளுக்கும் மேலாக கடலோரத்தில் பணிபுரிந்து வருகிறார். குப்பைகளிலிருந்து வருமானத்தை ஈட்டிக் கொள்கிறார். மீன் எச்சங்களை சேகரித்து, பிரித்து விற்பார். ஆனால், தமிழ்நாட்டின் கடலூர் மீன்பிடித் துறைமுகத்தில் பணிபுரியும் புலியும் பல பெண்களும் அரசாங்கக் கொள்கைகளில் தொழிலாளர்களாகக் கருதப்படுவதில்லை. எந்தப் பாதுகாப்பு திட்டத்திலிருந்தும் ஒதுக்கப்படுகின்றனர்.
“எனக்கு கிட்டத்தட்ட 35 வயதாக இருக்கும் போது நான் இங்கு வந்து மீன்களை ஏலம் விட ஆரம்பித்தேன்,” என்கிறார் இப்போது 75 வயதாகும் புலி. நகரின் கிழக்கே அமைந்துள்ள கடலூர் பழைய டவுன் துறைமுகத்தில், கரையைப் படகு வந்தடைந்தவுடன் ஏலம் எடுப்பவர்கள் ஏலம் கேட்பார்கள். அவர்கள் ஒரு படகில் முதலீடு செய்திருந்தால், விற்பனையில் 10 சதவீதத்தை கமிஷனாகப் பெற்றுக் கொள்வார்கள் (சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு, இது ஐந்து சதவீதமாக இருந்தது). பல ஆண்டுகளுக்கு முன்பு புலி துறைமுகத்திற்கு வந்தபோது, அவருடைய உறவினர்கள் அவரை வேலைக்கு அறிமுகப்படுத்தி, இரண்டு படகுகளில் முதலீடு செய்ய சுமார் ரூ.50,000 கடன் கொடுத்தனர்.நீண்ட நேர உழைப்பின் மூலம் அவர் அக்கடனை அடைத்தார். வயது அதிகரித்ததும் ஏலம் விடுவதைப் புலி நிறுத்தினார்.அந்த வேலையை அவரது மகளுக்கு அளித்தார்.
பரபரப்பான துறைமுகம் ஒலிகளால் எதிரொலிக்கிறது. ஏலதாரர்கள் ஏலம் விடுகிறார்கள்., வியாபாரிகள் சலசலப்பாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். பிடித்த மீன்களை ஏற்றுகின்றனர். பனிக்கட்டிகளை இயந்திரங்கள் நசுங்குகின்றன. லாரிகள் வந்து செல்கின்றன. விற்பனையாளர்கள் வியாபாரம் செய்கின்றனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய மீன்பிடித் துறைமுகமான இது, புலியின் கிராமமான சோதிக்குப்பம் மற்றும் நான்கு அண்டை மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்களால் பயன்படுத்தப்படுகிறது. சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பு வரை, இந்த ஐந்து கிராமங்களிலும் மொத்தமாக 256 இயந்திரமயமாக்கப்பட்டப் படகுகள் 822 மோட்டார் பொருத்தப்பட்ட படகுகள் துறைமுகத்தில் இருந்ததாகக் குறிப்பிடுகிறது மத்தியக் கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம். (மிக சமீபத்திய தரவு கிடைக்கவில்லை.)
மீன் கழிவுகளை (செதில்கள், தலைகள், மீன்களின் வால்கள், இறால் ஓடுகள் மற்றும் இறால் ஓடுகள்) சேகரித்து விற்கும் தனது வேலையைப் பற்றிக் குறிப்பிடுகையில், "நான் அதே (துறைமுகத்தில் வேலை பார்க்கத் தொடங்கிய) நேரத்தில் எனது கழார் தொழிலைத் தொடங்கினேன், “ என்கிறார் புலி. மீன் தலை, வால், சிப்பி மற்றும் மீனின் பிற பகுதிகளை சேகரித்து விற்கும் வேலையை அவர் குறிப்பிடுகிறார்.கழிவு மீன் என இதைக் குறிப்பிடுவார்கள். வட்டாரத் தமிழில் கழார் என்று அழைக்கப்படுகிறது. துறைமுகத்திலிருந்து மீன் கழிவுகளைச் சேகரித்துக் கோழித் தீவன உற்பத்தியாளர்களுக்கு விற்கும் சுமார் 10 பெண்களில் புலியும் ஒருவர்.நாமக்கல் போன்ற அண்டை மாவட்டங்களில் இது பெரிய தொழில். முதல் ரூ. கிலோவுக்கு 7 ரூபாயாக அவர் தொழில் தொடங்கியபோது கழாருக்கு விலை இருந்தது. இப்போது கிலோ மீனுக்கு 30 ரூபாய் என்றும் மீன் தலைகள் கிலோவுக்கு 23 ரூபாய் என்றும் நண்டுக் கழார் கிலோவுக்கு 12 ரூபாய் என்றும் கூறுகிறார் புலி.
புலிக்கு 16 வயது இருக்கும் போது நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மீனவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு நான்கு குழந்தைகள் இருந்தன. குப்புசாமி முரடர்.. எனவே சோதிக்குப்பம் பஞ்சாயத்துத் தலைவரான புலியின் தந்தை, குழந்தைகளுடன் வீட்டிற்கு திரும்பும்படி கூறி விட்டார். ஏலதாரராக பணிபுரிந்த தாயை மூன்று வருடங்களில் இழந்தார். "பின்னர் என் உறவினர்கள் என்னை ஏலம் விடச் சொன்னார்கள்," என்று புலி கூறுகிறார். "என் குழந்தைகளுக்கு பணம் தேவைப்பட்டது."
அதிகாலை 4 மணி முதல் மாலை 6 மணி வரை துறைமுகத்தில் இருக்கிறார் அவர். வாசனையைக் குறைக்க முதல் நாள் கழாரில் உப்பு போடப்படுகிறது. இரண்டாவது நாளில் அது காயவைக்கப்பட்டு பைகளில் அடைக்கப்படுகிறது. பைகளை அவர் தலா 4 ரூபாய்க்கு துறைமுகத்தில் வாங்குகிறார். சில சமயங்களில் அவர் 15 ரூபாய் விலைபெறும் சணல் சாக்குகளை மறுபயன்பாடு செய்து கொள்கிறார்.
ஒரு பை கழார் 25 கிலோ எடை இருக்கும் என்கிறார் புலி. முன்னதாக, அவர் வாரத்திற்கு 4-5 பைகளை விற்க முடியும். ஆனால் கோவிட் -19 தொற்றுநோய் மற்றும் சுழல் வலைகள் மீதான தடை ஆகியவற்றுக்குப் பிறகு, மீன் பிடிப்பு மற்றும் வர்த்தகத்தின் அளவு குறைந்துள்ளது. நாமக்கல்லைச் சேர்ந்தவர்களிடம் வாரத்திற்கு இரண்டு பைகளையேனும் இப்போது அவர் விற்று விடுகிறார். வார வருமானம் சுமார் ரூ. 1,250 கிடைக்கிறது.
கடலூர் துறைமுகத்தில் ஏலம் எடுப்பவர்கள், விற்பனையாளர்கள், மீன்களை உலர்த்துபவர்கள் அல்லது கழார் பிரித்தெடுப்பவர்கள் என அனைத்துப் பணிகளிலும் ஈடுபட்டுள்ள பெண்கள் தங்களது அன்றாட வருமானத்தின் நிச்சயமற்ற தன்மையைப் பற்றி பேசுகின்றனர். மீனவ கிராமங்களில் பல இளம் பெண்கள் மீன்பிடியில் இருந்து விலகியிருக்க விரும்புகிறார்கள். இதன் விளைவாக, வயதான பெண்களே அதிகமாக துறைமுகத்தில் வேலை செய்கிறார்கள்.
"கழாருக்காக நான் பணம் எதுவும் கொடுக்கவில்லை" என்கிறார் புலி. "நான் அதை துறைமுகத்தில் மீன் வெட்டும் பெண்களிடமிருந்து சேகரிக்கிறேன்." தினமும், அதிகாலை 4 மணிக்கு, வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப செதில்கள் மற்றும் குடல்களை அகற்றும் விற்பனையாளர்கள் மற்றும் பிறரிடம் இருந்து மீன் கழிவுகளை சேகரிக்கத் தொடங்குகிறார். கழாருக்கு புலி பணம் கொடுக்கவில்லை என்றாலும், சில சமயங்களில் விற்பனையாளர்கள் மற்றும் மீன் வெட்டுபவர்களுக்குக் குளிர்பானம் வாங்கி கொடுப்பார். "அவர்களின் பணியிடத்தை சுத்தம் செய்ய நான் அவர்களுக்கு உதவுகிறேன்," என்று அவர் கூறுகிறார். "அவர்களுடன் பேசுகிறேன். செய்திகளைப் பரிமாறிக் கொள்கிறோம்."
கடலூர் துறைமுகத்தில் உள்ள பெண்கள் நேரடியாக மீன் விற்பனை மற்றும் பதப்படுத்துதல் ஆகியவற்றுடன் தொடர்புடைய பல வேலைகளில் இருக்கின்றனர். மறைமுகமாகவும் பல பணிகளை செய்கின்றனர். ஐஸ், தேநீர் மற்றும் உணவு முதலியவற்றை விற்பது அப்பணிகளில் அடக்கம். அறுவடைக்குப் பிந்தைய மீன்பிடி நடவடிக்கைகளில் 69 சதவிகிதம் பெண்கள் இருப்பதாக தேசிய மீன்பிடிக் கொள்கை 2020 கூறுகிறது. இப்பணிகளைக் கணக்கிட்டால், மீன்பிடித்துறையை பெண்கள் அதிகம் உள்ள துறை என சொல்லலாம்..
2020ம் ஆண்டின் கொள்கை, கூட்டுறவு, திட்டங்கள் மற்றும் வேலை நிலைமைகளை மேம்படுத்துவதற்கான பிற நடவடிக்கைகள் மூலம் பெண்களின் பங்களிப்பை மீன்பிடியில் அதிகரிக்க வேண்டிய அவசியத்தை ஒப்புக்கொள்கிறது. இருப்பினும், இத்தகைய திட்டங்களின் கவனம் பெரும்பாலும் இயந்திரமயமாக்கல் தொடர்பாகவே இருக்கிறது. மீன்பிடி முடிந்தபிறகு பெண்கள் சந்திக்கும் அன்றாடப் பிரச்சினைகளில் கவனம் செலுத்தப்படுவதில்லை.
மேலும், மீன்பிடியில் பெண்களுக்கு உதவும் நடவடிக்கைகளுக்குப் பதிலாக, கடலோர மாற்றங்கள் மற்றும் மூலதனத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் மீன்பிடி மற்றும் ஏற்றுமதி ஆகியவற்றால் அவர்கள் அதிகம் ஓரங்கட்டப்பட்டுள்ளனர். இம்மாற்றங்கள் பெண்களின் பங்களிப்பை அரிதாகவே அங்கீகரிக்கின்றன. உள்கட்டமைப்பில் அதிகரித்த முதலீடு மற்றும் 1972-ல் கடல்சார் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணைய உருவாக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகள் அவர்கள் ஓரங்கட்டியன. அவை ஏற்றுமதியை மேம்படுத்தியது மற்றும் சிறிய அளவிலான மீன்பிடித்தலை வருமானமில்லாததாக ஆக்கியது. 2004 சுனாமிக்குப் பிறகு புதிய படகுகள் மற்றும் உபகரணங்களில் செய்யப்பட்ட முதலீட்டுடன் இச்செயல்முறை மேலும் வேகம் பெற்றது.
காலப்போக்கில், அதிகமான உள்ளூர் பெண்கள் மீன்பிடிக்குப் பிந்தைய நடவடிக்கைகளில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர். கடலூர் துறைமுகத்தில் உள்ள பெண்கள் தங்கள் பணிகளான விற்பனை, வெட்டுதல், உலர்த்துதல் அல்லது கழிவுகளை அகற்றுதல் போன்ற பணிகளுக்கு போதிய இடவசதி இல்லை என்று கூறுகின்றனர். ஒரு சில பெண் விற்பனையாளர்களுக்கு மட்டுமே அரசு நிறுவனங்களால் ஐஸ் பெட்டிகள் வழங்கப்படுகின்றன. மேலும் சில கிராமங்கள் மற்றும் நகரங்களில் மட்டுமே சந்தைகளில் அவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. பெரும்பாலும், போக்குவரத்து வசதிகள் இல்லாததால், தொலைதூர இடங்களில் மீன்களை விற்க நீண்ட தூரம் அவர்கள் நடந்தே செல்கின்றனர்.
"நான் இங்கே துறைமுகத்தில் ஒரு சிறிய குடிசையில் வசிக்கிறேன். அதனால் எனது வணிகத்திற்கு நான் நெருக்கமாக இருக்கிறேன்" என்று புலி கூறுகிறார். ஆனால் மழை பெய்தால் மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள சோதிக்குப்பம் என்ற இடத்தில் உள்ள தன் மகன் முத்துவின் வீட்டுக்குச் செல்கிறார். துறைமுகத்தில் மீன்பிடிக்கும் தொழிலாளியான 58 வயது முத்து, அவருக்கு தினமும் உணவு கொண்டு வருகிறார். முதியோர் ஓய்வூதியமாக ரூ.1000 மாதந்தோறும அவருக்குக் கிடைக்கிறது. புலி தனது வருவாயில் பெரும்பகுதியை குழந்தைகளுக்கு அனுப்பி விடுகிறார். அவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் இருக்கின்றனர். அனைவரும் 40 வயதுகளிலும் 50 வயதுகளிலும் இருப்பவர்கள். கடலூர் மாவட்ட மீன்வளத் துறையில் பணிபுரிகிறார்கள். "என்னுடன் நான் என்ன கொண்டுச் செல்லப் போகிறேன்?" எனக் கேட்கும் அவர், "ஒன்றுமில்லை," என முடிக்கிறார்.
உ.திவ்யுத்திரனின் ஆதரவுடன்.
தமிழில் : ராஜசங்கீதன்